தண்ணீர் சேமிப்பில் பங்களிக்கும் சத்யவேடு கிராமத்து இளம் பெண்கள்!
தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியான சத்யவேடு பகுதியில் நீர் தட்டுப்பாடு பிரச்சனைக்கு பெப்சிகோ ஃபவுண்டேஷன் – WaterAid இணைந்து தீர்வளித்ததைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த வைஷ்ணவி, சசிரேகா இருவரும் நீர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள்.
சென்னையில் இருந்து 60 கி.மீட்டர் அமைந்துள்ளது சத்யவேடு பகுதி. தமிழக, ஆந்திரா எல்லைப்பகுதியில் அமைந்துள்ள சத்யவேடு தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி.
கிட்டத்தட்ட 52,000 பேர் கொண்ட இந்தப் பகுதியில் விவசாயிகளும் தினக்கூலிகளும் பெருமளவு வசிக்கிறார்கள்.
கோடைக்காலங்களில் இங்கு 42 டிகிரி அளவிற்கு வெப்பநிலை இருக்கும். வறண்ட கிணறுகளுடன் வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும். ஏற்கெனவே தினக்கூலிகளாக வேலை செய்து கிடைக்கும் வருமானத்தில் வாழ்க்கை நடத்தி வரும் மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வந்தது.
குடிநீருக்கும் மற்ற பயன்பாடுகளுக்கும் பெண்கள் பல கிலோமீட்டர் வரை நடந்து சென்று தண்ணீர் சுமந்து வரவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். பள்ளியில் படிக்கும் மாணவிகள் படிப்பை இடைநிறுத்தம் செய்யும் அளவிற்கு தண்ணீர் தட்டுப்பாடு பூதாகரமான பிரச்சனையாக இருந்துள்ளது.
தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுத்திய சவால்கள்
சத்யவேடு பகுதியில் உள்ள கிராமம் ஒன்றைச் சேர்ந்தவர் சசிரேகா. இவர் தனது பெற்றோருடன் தண்ணீர் எடுத்து வரச் செல்வார்.
”என் கிராமத்தில் 50 வீடுகள் இருக்கின்றன. பெரும்பாலானவை குடிசை வீடுகள். ஐந்தாண்டுகளுக்கு முன்னர் உள்ளூர் பஞ்சாயத்து மூலம் கைகளால் அடிக்கும் பம்ப் நிறுவப்பட்டது. ஆனால் அது பழுதாகிவிட்டதால் கோடைக்காலங்களில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குடும்பத்தில் ஒவ்வொருவராக சுழற்சி முறையில் தண்ணீர் எடுத்து வருவோம்,” என்கிறார் சசிரேகா.
சசிரேகா பத்தாம் வகுப்பு முடித்த பிறகு பெற்றோர்களுக்கு உதவுவதற்காக படிப்பை நிறுத்திக்கொண்டார். மருந்து நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். ஆனால் தண்ணீர் கொண்டு வருவதற்காக அடிக்கடி வேலைக்கு செல்ல முடியாமல் விடுப்பு எடுக்கவேண்டியிருந்தது.
அதேபோல், 15 வயது மாணவியான வைஷ்ணவியும் அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாததால் வகுப்பிற்கு அடிக்கடி விடுப்பு எடுக்கவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார்.
வைஷ்ணவி சத்யவேடு பகுதியில் இருந்து 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ராஜகோபாலபுரத்தில் உள்ள ஜில்லா பைரிஷத் பள்ளி மாணவி. அவர் கூறும்போது,
”மாதவிடாய் சமயத்தில் பள்ளிக்குச் செல்லமுடியாது. பெண்களுக்கென பள்ளியில் தனியாக கழிப்பறை வசதி இல்லை. இருக்கும் கழிப்பறை குழாயிலும் தண்ணீர் இருக்காது. மாதவிடாய் சமயத்தில் அசௌகரியமாக உணர்வதால் பள்ளிக்குச் செல்ல முடியாமல் விடுப்பு எடுக்கவேண்டிவரும். இதனால் பாடங்களைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கும்,” என்கிறார்.
வைஷ்ணவி பள்ளிக்குச் செல்லாத நாட்களில் படிக்க முடியாமல் போவது ஒருபுறம் இருக்கு அவரைத் தனியாக வீட்டில் விட்டுச் செல்ல முடியாததால் அவரது பெற்றோர் வேலைக்கு செல்லமுடியாமல் போகும் பரிதாப நிலையும் ஏற்பட்டுள்ளது.
படிக்கும் பருவத்தில் இருக்கும் மாணவர்கள் தண்ணீர் பற்றாக்குறையால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போனது. இத்தனை கஷ்டப்பட்டு நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுத்து வந்தாலும் அது சுத்தமாக இருப்பதில்லை. இதனால் பல்வேறு உடல்நலக் கோளாறுகளும் ஏற்பட்டுள்ளன.
தண்ணீர் தட்டுப்பாடுகளுக்கு தீர்வு
ஆனால் இன்று இந்தப் பகுதியில் நிலை மாறியுள்ளது. பெப்சிகோ ஃபவுண்டேஷன் நிறுவனம் WaterAid India உடன் இணைந்து பள்ளிகள், அங்கன்வாடிகள் மற்றும் கிராமங்களில் காணப்பட்ட தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சனைக்கு தீர்வளித்துள்ளது.
பெப்சிகோ இந்தியா நிறுவனத்தின் அரசாங்க விவகாரங்கள் மற்றும் தொலைதொடர்பு முதன்மை அதிகாரி வீரஜ் சௌஹன் கூறும்போது,
”கிணறுகள் புதுப்பிப்பது, பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு உருவாக்குவது, வீடுகளுக்கு பைப் மூலம் தண்ணீர் விநியோகிப்பது என பெப்சிகோ ஃபவுண்டேஷன் WaterAid உடன் இணைந்து பல்வேறு தீர்வுகளை உருவாக்கியது. மக்கள், குறிப்பாகப் பெண்கள் நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுத்து வருவதால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். இவர்களின் உடல்நலம் பாதிக்கப்படுவதும் வேலைக்கு செல்லவோ குடும்பத்துடன் நேரம் செலவிடவோ முடியாமல் போகிறது,” என்று குறிப்பிட்டார்.
மக்களுக்குத் தண்ணீர் கிடைப்பதற்கான கட்டமைப்பை உருவாக்கியதுடன் அவை முறையாக நிர்வகிக்கப்படவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர் கனெக்ஷன் கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு குடியிருப்பிற்கும் குளிக்க, சமைக்க, துணி துவைக்க என அனைத்திற்கும் தேவையான தண்ணீர் கிடைத்தது.
கிராமத்தில் புதிதாக ஒரு போர்வெல் போடப்பட்டு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் தண்ணீர் சேமிக்கப்பட்டது. ஒவ்வொரு வீட்டிற்கும் பைப்லைன் போடப்பட்டு இணைப்பு கொடுக்கப்பட்டது.
பள்ளிகளில் தண்ணீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டதுடன் மாதவிடாய் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டதாக வைஷ்ணவி தெரிவிக்கிறார்.
சசிரேகா, வைஷ்ணவி இருவருமே நீர் பாதுகாப்பு சாம்பியன் என்றழைக்கப்படுகின்றனர். மோட்டார் பம்ப் இயக்குவது, போர்வெல் சுத்தப்படுத்துவது, நீர் சேமிப்பு, ப்ளம்பிங் என பல்வேறு வேலைகளில் வைஷ்ணவி பயிற்சியும் பெற்றிருக்கிறார்.
நீர் பாதுகாப்பு
வைஷ்ணவி பள்ளி கேபினெட் குழுவில் சிறுமிகள் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். தண்ணீர் இருப்பு தொடர்பாக சிறுமிகள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு இந்தக் குழு தீர்வு காண்கிறது.
அதேபோல் கிராமத்தின் பயனர்கள் குழுவில் உறுப்பினராக உள்ள சசிரேகா தண்ணீர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், நிர்வாகம் போன்றவற்றைக் கையாளும் பொறுப்பை ஏற்றுள்ளார்.
“பள்ளியில் மாணவிகள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து பள்ளி கேபினெட் குழுவின் கவனத்திற்கு கொண்டு சென்று அவை சரிசெய்யப்படுவதை உறுதிசெய்கிறேன். மேலும், பாதுகாப்பான மாதவிடாய் சுகாதார மேலாண்மையில் பயிற்சி பெற்று சக மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன்,” என்கிறார் வைஷ்ணவி.
இத்திட்டத்தின் மூலம் 2.8 மில்லியன் பேர் பயனடைந்துள்ளதாக வீரஜ் தெரிவிக்கிறார். இந்த முயற்சிகளின் வாயிலாக மழைநீர் சேகரிப்பு மூலம் 185 மில்லியன் லிட்டர் தண்ணீரும், ரீசார்ஜ் மூலம் 2300 மில்லியன் லிட்டர் தண்ணீரும் சேமிக்கப்பட்டுள்ளன.
”பயனர் குழுவை மேலும் வலுப்படுத்த விரும்புகிறேன். ஏற்கெனவே வங்கிக் கணக்கு தொடங்கிவிட்டோம். அனைவரிடமும் பணம் திரட்டி வருகிறோம். இதைக் கொண்டு பழுது பார்க்கும் வேலைகள், பராமரிப்புப் பணிகள் போன்றவை மேற்கொள்ளப்படும்,” என்கிறார் சசிரேகா.
வேளாண் துறையில் அதிகாரி ஆகவேண்டும் என்பதும் விவசாய சமூகத்தை மேம்படுத்தவேண்டும் என்பதுமே வைஷ்ணவியின் கனவாக உள்ளது.
ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா