தமிழகத்தில் 22 மாவட்டங்கள் கொரோனா ‘ரெட் மண்டலம்’ என அறிவிப்பு!
இந்தியாவிலே அதிகமாக 22 தமிழக மாவட்டங்கள் சிகப்பு மண்டல ஹாட் ஸ்பாட்டாக கண்டறியப்பட்டுள்ளதால், ஏப்ரல் 20க்குப் பிறகான விதிகள் தளர்த்தல் தமிழகத்துக்கு பொருந்துமா?
கொரோனா நோய் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் போராடிக் கொண்டிருக்கின்றன. ஏறத்தாழ 22 நாட்கள் ஊரடங்கு முடிந்துள்ள நிலையில் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக முடங்கியுள்ளது. தொழில்துறைகளும் இயங்காமல் இருக்கும் நிலையில் ஊரடங்கானது நீட்டிக்கப்பட்டுள்ளது.
மக்களின் இடர்பாடுகளைக் கருத்தில் கொண்டு ஏப்ரல் 20க்குப் பிறகு 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம், மெக்கானிக், எலக்ட்ரீஷியன்கள், ஆன்லைன் டெலிவரி, சமூக இடைவெளிகளுடன் தொழிற்சாலைகள் இயங்கல் மற்றும் அத்தியாவசிய கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி என கட்டுப்பாடுகளுடன் சில அனுமதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் அதிகம் கொரோனா பரவல் உள்ள மாநிலங்களையும் மாவட்டங்களையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :
கோவிட் 19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கானது மே மாதம் 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலகட்டத்தில் விதிகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும், அதில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளக் கூடாது.
மாநிலங்கள் கொடுக்கும் தரவுகளின் அடிப்படையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கைகளைக் கொண்டு மாவட்டங்களை ‘ஹாட் ஸ்பாட்’, ‘ஹாட் ஸ்பாட் இல்லாதவை’ எனப் பிரிக்கப்பட்டுள்ளன.
ஹாட் ஸ்பாட் (சிவப்பு மண்டலம்) என்றால் – அதிக கவனம் தேவைப்படும் மாவட்டங்கள்/நகரங்கள். இங்கு அதிக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை/பரவல் விகிதம் உயர்வு.
தமிழகத்தின், சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, ஈரோடு, வேலூர், திண்டுக்கல், விழுப்புரம், திருப்பூர், தேனி, நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, தூத்துக்குடி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, கடலூர், திருவள்ளூர், திருவாரூர், சேலம், நாகை ஆகிய மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 170 ஹாட்ஸ்பாட் மாவட்டங்களில் தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையாக 22 மாவட்டங்கள் ரெட் மண்டலத்தில் உள்ளன என்பது கவனிக்கப்பட வேண்டியவை.
மேலும், தஞ்சை, திருவண்ணாமலை, காஞ்சி, சிவகங்கை, நீலகிரி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட் அல்லாத மாவட்டங்கள் என்றாலும் ஆரஞ்சு மண்டலமாக கருதப்படுகிறது.
இந்த மாவட்டங்கள் எப்போது வேண்டுமானால் ரெட் மண்டலமாக மாற வாய்ப்பு இருப்பதால் கூடுதல் கவனம் தேவை என்றும் மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 28 நாட்களுக்குள் புதிதாக எந்த கொரோனா நோயாளியும் வராத பட்சத்தில் அது பச்சை மண்டலம் அதாவது பாதுகாப்பாக மண்டலமாக கருதப்படும்.
சிவப்பு மண்டலத்தில் அதாவது ஹாட் ஸ்பாட் மாவட்டங்களில் ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகான ஊரடங்கு தளர்வில் விலக்கு அளிக்கப்படுமா?
15க்கும் மேற்பட்ட கொரோனா உறுதிபடுத்தப்பட்ட நோயாளிகளின் அடிப்படையில் சிவப்பு மண்டலம் என மாவட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட அலுவலகமோ, தொழிற்சாலையோ இயங்க வேண்டுமானால் அது பாதுகாக்கப்பட்ட அதிதீவிர மையமாக இல்லாமல் இருக்க வேண்டும். அந்தப் பகுதியை சுற்றி கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் இருக்கக் கூடாது என்பதே விதிமுறைகள் கூறுகின்றன.
அப்படி பார்க்கும்போது இந்த இடங்களில் சுகாதாரத் துறையின் வழிமுறைகள் மற்றும் ஆய்வுகள் முடிந்த பின்னரே தனிமனித சுகாதாரம் மற்றும் சமூக இடைவெளிகளுடன் இயங்க முடியும். இந்த விதிகளுக்குள் அடங்காத பகுதிகளில் மே 3ம் தேதி வரையில் தற்போதைய நிலையிலேயே ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.