நெமிலி கிராம மக்களின் திறன்களுக்கு வாய்ப்பளிக்கும் சாஸ் நிறுவனம் Draup!
கிராமப்புறங்களில் உள்ள தனித்துவமான திறன்களுக்கு முக்கியத்துவமும் வாய்ப்பும் அளிக்கும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த SaaS தளம் Draup நெமிலியில் மையம் அமைத்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
கொசஸ்தலை ஆற்றங்கரைப் பகுதியில் நெற்பயிர்களுடன் பசுமையாக காட்சியளிக்கும் இடம் நெமிலி. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இங்கு விவசாயிகளும் நெசவாளர்களும் வசித்து வந்தனர்.
ரம்மியமாகக் காட்சியளிக்கும் இந்தப் பகுதி கண்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் இருந்தபோதும் இங்குள்ள பட்டதாரிகளின் திறன்கள் பலரது கவனத்தை ஈர்க்கவில்லை. அறிவியல், கலை, பொறியியல் என பட்டப்படிப்பு முடித்த திறன்மிக்க இளைஞர்கள் நல்ல சம்பளத்துடன்கூடிய வேலைகளைத் தேடி மற்ற நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வந்தனர்.
நெமிலி பகுதியின் மக்கள்தொகை வெறும் 12,000 மட்டுமே. இங்குள்ள திறமைசாலிகளுக்கு வாய்ப்பளிப்பதற்காக 2018-ம் ஆண்டு இங்கு ஒரு மையத்தை அமைத்தது செயற்கை நுண்ணறிவு சார்ந்த SaaS தளமான Draup.
“நெமிலியில் மட்டுமல்ல, இந்தியாவின் கிராமப்புறங்கள் முழுவதும் ஏராளமான திறமைசாலிகள் உள்ளனர். இவர்களுக்கு நேரடியாக Draup நிறுவனத்தில் பணிவாய்ப்பு வழங்கவேண்டும்; அல்லது மற்ற நிறுவனங்களில் பணி வாய்ப்புகள் பெறத் தேவையான திறன் பயிற்சியளித்து முன்னேற வழிகாட்டவேண்டும். இதுவே எங்களது முக்கியக் குறிக்கோள்,” என்கிறார் Draup சிஇஓ விஜய் சுவாமிநாதன்.
இண்டஸ்ட்ரியல் என்ஜினியரிங் அணுகுமுறை
நெமிலியைச் சுற்றி கிட்டத்தட்ட 81 கிராமங்கள் உள்ளன. இதில் ஒன்றான அகவலம் கிராமத்தில் Draup அலுவலகம் அமைந்துள்ளது. இங்கிருந்து ஆராய்ச்சி, பிராடக்ட், பிராடக்ட் மூலம் வாடிக்கையாளர்கள் வெற்றிடைய உதவுதல், வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளித்தல் போன்ற செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
Draup நிறுவனத்தில் ஆய்வு என்பது செயல்முறை சார்ந்தது. தீர்வு காணப்படவேண்டிய ஒவ்வொரு சிக்கலும் இண்டஸ்ட்ரியல் என்ஜினியர் கண்ணோட்டத்தில் அணுகப்படுகின்றன. ஒவ்வொன்றும் சிறு சிறு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. இவை மேலும் நுணுக்கமாக பிரிக்கப்பட்டு மிகவும் கவனமாக செயல்முறைகள் பின்பற்றப்படுகின்றன. இவை அனைத்தும் வலுவான தொழில்நுட்பம் மற்றும் தானியங்கல் கட்டமைப்பு கொண்டு செயல்படுத்தப்படுகின்றன.
இந்த மாதிரியைப் பின்பற்றி ஒரே ஒரு ஆய்வு செயல்முறையுடன் தொடங்கப்பட்டு 50 செயல்முறைகளும் 100-க்கும் அதிகமான துணை செயல்முறைகளாக விரிவடைந்துள்ளது.
இந்த அறிக்கைகள் மூலம் கிடைக்கப்படும் தகவல்கள் Draup நிறுவனத்தின் மற்ற செயல்பாடுகளுக்கு மிகப்பெரிய அளவில் உதவுகின்றன. அதுமட்டுமல்லாது உலகளவில் சேவையளிக்கவும் உதவுகின்றன. சிறு நகரில் இருந்து செயல்படும் குழுவினர் லண்டன், நியூயார்க், பாரீஸ் என உலகளவில் சேவையளிக்கின்றனர்.
நெமிலியில் மையம் அமைத்ததில் இருந்து Draup தளத்தின் திறன் பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஒவ்வொரு வாரமும் கிட்டத்தட்ட 12 மில்லியன் தரவு புள்ளிகள் பிராசஸ் செய்யப்படுகின்றன. உயர்தர ஆர்&டி, உலகளாவிய நிறுவனங்கள் டிஜிட்டலுக்கு மாறும் முயற்சிகள் போன்றவை இந்தத் தரவுகளில் அடங்கும்.
உள்ளூர் திறன்களுக்கு வாய்ப்பு
இந்தியாவின் கிராமப்புறங்களில் சிறந்த திறன்மிக்கவர்கள் கிடைப்பார்களா என்கிற சந்தேகம் எழுவதன் காரணமாகவே கார்ப்பரேட் நிறுவனங்கள் கிராமப்புறங்களில் திறன்களைத் தேடுவதில்லை. ஆனால், Draup 2017-ம் ஆண்டு பெங்களூருவில் மையம் அமைத்தபோது 20 உறுப்பினர்கள் அடங்கிய ஆய்வுக் குழுவில் பெரும்பாலானோர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.
நாட்டின் கிராமப்புறங்களில் திறன்மிக்கவர்கள் ஏராளமானோர் இருப்பதை இவர்களது பங்களிப்பு உணர்த்துகிறது. இந்தப் புரிதல் காரணமாகவே Draup குழு நெமிலியில் மையம் திறந்தது.
“திறன்களை இங்கு கொண்டு வருவதற்கு பதிலாக அங்கேயே வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கலாம் என்று சிந்தித்தோம்,” என்கிறார் Draup இணை நிறுவனர் மற்றும் சிஓஓ வம்சி திருக்கலா.
இந்தப் பகுதியில் Draup நிறுவனம் மிகப்பெரிய அளவில் பலருக்கு பணி வாய்ப்பு வழங்கியதுடன் உள்ளூர் வளங்களை சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது.
சுற்றியுள்ள கல்லூரிகளுடன் இணைந்து மாணவர்களுக்கு கட்டணத்துடன்கூடிய இன்டர்ஷிப் வழங்கவும் ஆர்வமுள்ள மாணவர்களுக்குக் குறுகிய கால அடிப்படையில் பணிச்சூழல் அனுபவம் வழங்கவும் Draup ஏற்பாடு செய்துள்ளது. இதில் சிறப்பாகத் திறனை வெளிப்படுத்துபவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. பெருந்தொற்று சமயத்தில் இக்குழு 200-க்கும் மேற்பட்ட இன்டெர்ன்களுடன் பணியாற்றியுள்ளது.
கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம்
மற்ற கார்ப்பரேட்களுக்கு இணையான கலாச்சாரத்தை நெமிலி மையத்தில் உருவாக்குவதற்கு Draup முக்கியத்துவம் அளித்துள்ளது.
“Draup நிறுவனத்தின் சமமான அதிகாரப் படிநிலை அமைப்பு மூத்த தலைவர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பை எனக்குக் கொடுத்தது. அவர்களது புதுமையான அணுகுமுறைகளைக் கற்றுக்கொள்ள முடிந்தது. எந்தவித தயக்கமும் இன்றி என்னுடைய கருத்துக்களை என்னால் முன்வைக்க முடிகிறது. இதனால் என்னுடைய தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது,” என்கிறார் சீனியர் ஆய்வாளர் தமிழ் மணி.
புதிதாக பணியில் சேரும் ஊழியருக்கு பணிச்சூழலில் சிறப்பாகப் பொருந்தத் தேவையான அனைத்து பயிற்சிகளும் பிரத்யேகமாக வழங்கப்படுகிறது. ஏற்கெனவே பணிபுரியும் ஊழியர்கள் பணியில் இருந்துகொண்டே தொடர்ந்து கற்றுக்கொள்கிறார்கள்.
”பலர் வேலை செய்துகொண்டே நுணுக்கங்களை சிறப்பாகக் கற்றுக் கொண்டுள்ளனர்; திறனை மேம்படுத்திக் கொண்டுள்ளனர்; புதிய பொறுப்புகளை ஏற்றுள்ளனர். இதற்கு பலரது வெற்றிக் கதைகளை உதாரணமாக சுட்டிக்காட்டலாம். எங்கள் கனவு நனவானது போன்ற உணர்வை இதுபோன்ற தருணங்கள் ஏற்படுத்தும்,” என்கிறார் நெமிலி மையத்தின் தலைவர் விஷ்ணு சங்கர்.
நெமிலியில் புதிய பிராடக்ட் குழு ஒன்று பிராடக்ட் திட்டமிடல், மேம்பாடு மற்றும் சோதனை போன்ற நடவடிக்கைகளுக்காக பெங்களூருவில் உள்ள தொழில்நுட்பக் குழுவுடன் கைகோர்த்துள்ளது.
பனப்பாக்கத்தைச் சேர்ந்த பவித்ரா கோபால் மையத்தில் சேர்ந்தபோது ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் குறித்து அதிகம் அறிந்திருக்கவில்லை. பல பிராஜெக்டுகளில் ஆய்வுப் பணிகளில் பங்களிக்கத் தொடங்கினார். இந்த அனுபவம் வாயிலாக தனக்குத் தொழில்நுட்பம் மற்றும் பிராடக்ட் டெவலப்மெண்ட் பணிகளில் ஆர்வம் இருப்பதைப் புரிந்துகொண்டார். ஆறு மாதங்களில் பிராடக்ட் பணிகளுக்கு மாறினார்.
இன்று இவர் இணை தரவு ஆய்வாளராக பணியாற்றுகிறார். Draup மற்ற அலுவலகங்களில் உள்ள டெவலப்பர்ஸ் மற்றும் தரவு விஞ்ஞானிகளுடன் இணைந்து பணியாற்றுகிறார்.
“Draup நிறுவனத்தில் தினமும் புதிதாகக் கற்றுக்கொண்டே இருப்பது எனக்கு மிகவும் பிடித்த அம்சம். Draup நிறுவனத்துடன் சேர்ந்து நானும் தனிப்பட்ட முறையில் வளர்ச்சியடைந்து ஒரு நாள் சொந்தமாக பிராடக்டை உருவாக்க விரும்புகிறேன்,” என்கிறார்.
நெமிலி மையத்தில் திறந்தவெளி உள்ளது. இங்கு ஊழியர்கள் மாலை வேளைகளில் கிரிக்கெட் விளையாடுவது, தோட்ட வேலைகள் செய்வது, சுவர் ஓவியம் வரைவது போன்ற பொழுதுபோக்குகளுக்கு நேரம் செலவிடுகிறார்கள். குழுவினர் ஒரே குடும்பமாக பண்டிகைகளைக் கொண்டாடுகிறார்கள். மையத்தில் உள்ள வளர்ப்பு நாய்கள் செல்லப்பிராணிகளை விரும்புவோர் ரிலாக்ஸ் செய்துகொள்ள உதவுகிறது.
பெண்களின் பங்களிப்பு
Draup ஊழியர்களில் 75 சதவீதம் பேர் பெண்கள். இவர்கள் அனைத்து பொறுப்புகளிலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
“பெண்கள் அதிகளவில் பணிபுரிவது பலனளிக்கிறது. நிறுவனத்தில் பாலின சமத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டியது அவசியம். இதனால் மாறுபட்ட கண்ணோட்டங்கள் ஊக்குவிக்கப்படும். குழுக்களிடையே தகவல் தொடர்பு திறம்பட நிர்வகிக்கப்படும். பணியிடத்தில் நேர்மறையான சூழல் உருவாகும்,” என்கிறார் வம்சி.
நெமிலியில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு கிட்டத்தட்ட 2,000 குடும்பங்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது Draup நிறுவனம். இவர்கள் திறமைசாலிகள். ஆனால் சமூக கட்டுப்பாடுகள் காரணமாக கிராமங்களை விட்டு வெளியேற முடியவில்லை. Draup போன்ற நிறுவனம் உள்ளூரிலேயே வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதனால் இந்தப் பெண்கள் சமூக தடைகளைத் தகர்த்தெறிந்துவிட்டு வருவாய் ஈட்டுகின்றனர்.
சீனியர் ரிசர்ச் எக்சிக்யூடிவ் ரபியா பேகம் அரக்கோணத்தில் வசிக்கிறார். தினமும் 38 கி.மீட்டர் பயணம் செய்து நெமிலி மையத்தை வந்தடைகிறார். அவர் கூறும்போது,
“நெமிலியில் Draup மையம் திறக்கப்படாமல் இருந்திருந்தால் என்னுடைய பணி வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கும். பெரும்பாலான பணி வாய்ப்புகள் தொலை தூர நகரங்களில் மட்டுமே இருக்கும் நிலையில் என்னால் வேலைக்கு சென்றிருக்க முடியாது,” என்கிறார்.
கோமளாதேவி, ரிசர்ச் எக்சிக்யூடிவ் II சொந்த ஊருக்கு அருகில் இருப்பதால் Draup மையத்தில் சேர்ந்துள்ளார்.
“பல பெண்கள் பணி வாழ்க்கையில் சிறப்பிக்க Draup நெமிலி மையம் வாய்ப்பளித்துள்ளது. மற்ற ஸ்டார்ட் அப்’கள் கிராமப்புறங்களில் செயல்படுவதற்கு இந்நிறுவனம் ஒரு நல்ல முன்னுதாரணமாக உள்ளது. இதனால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்,” என்கிறார்.
சவால்களும் வருங்காலத் திட்டங்களும்
மூன்றாண்டுகளில் நெமிலி மையம் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் வளர்ச்சியடைந்துள்ளது. பெருந்தொற்று சமயத்தில் பெரும்பாலான குழுவினர் தொலைதூர கிராமங்களில் இருந்தே வேலை செய்தனர். இணைய வசதி மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இருப்பினும் இவர்களது திறன் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை.
”இணைய இணைப்பிற்காக மக்கள் விவசாய நிலத்திலும் மொட்டை மாடியிலும் வீட்டிற்கு வெளியிலும் இருந்து வேலை செய்தார்கள். ஊழியர்களின் இந்த மனநிலைதான் எங்களைத் தொடர்ந்து உந்துதல் அளித்து வருகிறது,” என்கிறார் விஷ்ணு.
Draup வளர்ச்சிக்கு நெமிலி மையத்தின் ஆய்வுக் குழு கணிசமான அளவு பங்களித்துள்ளது. இரண்டு பேருடன் தொடங்கப்பட்டு இன்று 300 பேர் கொண்ட வலுவான குழுவாக ஆய்வுக் குழு அமைந்துள்ளது. இதுபோன்று பல மையங்களை இந்தியா முழுவதும் அமைப்பதே இவர்களது நீண்ட கால திட்டம்.
”எங்கள் மையம் 1,000 பேருடன் செயல்படவேண்டும் என்று விரும்புகிறோம். இந்த நோக்கத்தை ஒட்டி 300 ஊழியர்கள் செயல்படும் வகையில் ஒரு அலுவலகம் சமீபத்தில் கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து வளர்ச்சியடைவோம் என்று நம்புகிறோம். கிராமத்தில் இருந்து உலகத் தரம் வாய்ந்த டேட்டா சயின்ஸ் குழுவை உருவாக்குவதே எங்கள் இலக்கு,” என்கிறார் விஜய்.
Draup நிறுவனத்திற்கு நெமிலியைச் சேர்ந்த உள்ளூர்வாசிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது மேலும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது. திறன்மிக்க மேலும் பலருக்கு வாய்ப்பளித்து புதிய மைல்கற்களை எட்ட Draup திட்டமிட்டுள்ளது. அதேபோல் வரும் நாட்களில் நெமிலியில் உள்ள பொறியியல் குழுவை விரிவுபடுத்தவும் Draup திட்டமிட்டுள்ளது.
(இது ஒரு ப்ராண்ட் ஸ்டோரி ஆகும். இவர்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள, வேலைவாய்ப்புகள் குறித்து தெரிந்து கொள்ள: Draup )