10 நிமிட டெலிவரி சேவையை அறிமுகம் செய்யும் Zomato: எப்படி சாத்தியம் என பலர் கருத்து!
10 நிமிட டெலிவரி சேவை வசதியை அறிமுகம் செய்ய இருப்பதாக ஜொமேட்டோ அறிவித்துள்ளது. டெலிவரி ஊழியர்களுக்கு எந்த வித தேவையில்லாத அழுத்தமும் இல்லாததை உறுதி செய்வோம் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
குருகிராமைச் சேர்ந்த உணவு நுட்ப ஜாம்பவான் நிறுவனமான ஜொமேட்டோ, விரைவில் 10 நிமிட டெலிவரி சேவையை அறிமுகம் செய்ய இருப்பதாகக் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வலைப்பதிவில் ஜொமேட்டோ இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ., தீபிந்தர் கோயல்,
“விரைவு டெலிவரி வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக, டெலிவரி பங்குதாரர்கள் மீது உணவை வேகமாக வழங்க எந்தவித அழுத்தமும் அளிக்க மாட்டோம். தாமதமான டெலிவரிக்காக தண்டிக்கவும் மாட்டோம்,” என்று தெரிவித்துள்ளார்.
பெரிய அளவில் 10 நிமிட உணவு டெலிவரி வசதியை வேறு எந்த உணவு டெலிவரி சேவை நிறுவனமும் இதுவரை சாத்தியமாக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஜொமேட்டோ இன்ஸ்டண்ட் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சேவை தான் முதலாவதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். எனினும், இந்த வசதி எப்போது அறிமுகம் ஆகும் என்பது குறிப்பிடப்பவில்லை.
தீபிந்தர் தனது வலைப்பதிவில் 10 நிமிட டெலிவரி வசதிக்கான திட்டத்தை விளக்கியுள்ளார். தேவை கணிப்பு மற்றும் உள்ளூர் தன்மைக்கேற்ப பல்வேறு ரெஸ்டாரண்ட்களில் இருந்து சிறந்த 20 அல்லது 30 உணவுகள் கொண்ட பினிஷிங் மையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
நீண்ட நேரம் காத்திருக்க வாடிக்கையாளர்கள் தயாராக இல்லாததே இந்த சேவையை அறிமுகம் செய்வதற்கான காரணங்களில் ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், 30 நிமிட காத்திருப்புக் காலம் என்பது மிகவும் மெதுவானது மற்றும் காலாவதியானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
"வேகமான சேவை அடிப்படையில் ரெஸ்டாரண்ட்களை தேர்வு செய்வதே ஜொமேட்டோ செயலியில் அதிகம் நாடப்படும் அம்சங்களில் ஒன்றாக இருப்பதாகவும்,” தெரிவித்துள்ளார்.
ஜொமேட்டோ இன்ஸ்டண்ட் சேவையின் முக்கிய அம்சங்களாக குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:
- வீட்டு உணவு போலவே விலை குறைவானது. (கிட்டத்தட்ட)
- உயர் தரமான உணவு
- உலகத்தரம் வாய்ந்த தூய்மை நெறிமுறைகள்
- மிகக் குறைந்த பிளாஸ்டிக் பேக்
- விரைவான / எளிதான நுகர்வுக்கான வசதியான பேக்
- பின் தொடரக்கூடிய விநியோகச் சங்கிலி (v2)
- டெலிவரி பங்குதாரர்கள் பாதுகாப்பு
- ரெஸ்டாரண்ட் பங்குதாரர்களுடன் ஆழமான கூட்டுறவு
தீபிந்தரின் டிவீட் ஏற்கனவே பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மூத்த பத்திரிகையாளரும், ’தி ஆதார் எபெக்ட்’ புத்தக ஆசிரியருமான என்.எஸ்.ராம்நாத், சில ஆண்டுகளுக்கு முன் உபெர் நியூயார்க்கில் அறிமுகம் செய்த சேவையில் இருந்து இது வேறுபட்டிருக்கும் என்று கூறியுள்ளார்.
வலைப்பதிவு துவக்கத்தில் டெலிவரி பங்குதாரர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்க மாடோம் எனத் தெளிவுபடுத்தியிருப்பதை மீறி, பங்குதாரர்கள் 10 நிமிட வாக்குறுதியை நிறைவேற்ற தாறுமாறாக வாகத்தை ஓட்டிச்செல்ல நேரிடலாம் என பலரும் கூறியுள்ளனர்.
ஜொமேட்டோவின் 10 நிமிட சேவை எப்படி இருக்கும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும் எனும் நிலையில் அனைவரது பார்வையும் நிறுவனத்தின் பங்கு விலை தாக்கம் எப்படி இருக்கும் என்பதில் உள்ளது.
ஆங்கிலத்தில்: சிந்து காஷ்யப் | தமிழில்: சைபர் சிம்மன்