10 நாள், 40 மணிநேரம், 4000 கட்டணம்; பரோட்டா மாஸ்டராக கோச்சிங் தரும் இளைஞர்!
பரோட்டா போடக்கூட கோச்சிங் கிளாஸ் இருக்கு தெரியுமா?
ஆடல், பாடல், ஓவியம் கற்று கொடுக்கும் பயிற்சிமையங்களை கேள்விபட்டீருப்பீர்கள். பட்டம் படித்துமுடித்த பின் எழுதும் அரசுத் தேர்வுகளுக்கும், பட்டம் படிக்கும் முன்னே எழுதப்படும் நுழைவுத் தேர்வுகளுக்கும் பயிற்சி மையங்களை கேள்விபட்டீருப்பீர்கள். ஆனால், பரோட்டா செய்வது எப்படி என்பதை கற்றுக் கொடுக்கும் பயிற்சி மையம் பற்றி கேள்விபட்டீருப்பீர்களா?
உலக வரலாற்றிலே முதன் முறையாக புது முயற்சியாக, மைதா மாவை அடித்து துவம்சம் செய்து வெளேரேன்ற பரோட்டா செய்வது எப்படி என்பதற்கு 10 நாள் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது தெரியுமா?
அடடே ஆச்சரியக்குறியிடும் அளவிற்கான இந்த செம்ம மேட்டரை மதுரைக்காரய்ங்கள தவிர எவரேனும் செய்திருக்கமுடியுமா என்ன?
யெஸ், பரோட்டாவின் வீச்சலுக்கும், சால்னா வாசத்திற்கும் இடையே பிறந்து வளர்ந்த மதுரையைச் சேர்ந்த முகமது காசிம் என்பவரால் தொடங்கப்பட்டுள்ளது, ‘செல்ஃபி பரோட்டா கோச்சிங் சென்டர்.'
கடந்த 2017ம் ஆண்டு மதுரை ஐய்யர் பங்களா பகுதியில் தொடங்கப்பட்ட ‘செல்ஃபி பரோட்டா கோச்சிங் சென்டர்', வெற்றிகரமாய் 4வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
பரோட்டா கோச்சிங் சென்டர் பயிற்சி மையம் தொடங்குவதற்கு பின்னுள்ள கதைகளை யுவர்ஸ்டோரியிடம் பகிரத் தொடங்கினார் காசிம்.
‘‘என் தாத்தா பல ஆண்டுகளுக்கு முன்பு சிக்கந்தர் சாவடியில் சிறிய ஓட்டலைத் தொடங்கினார். அந்த காலத்தில் பரோட்டாவுக்கு சாம்பார் தான் சைடு டிஷ். மக்கள் காரச்சாரமான உணவுகளை விரும்பத் தொடங்கியதில், சிக்கன் மசாலா மற்றும் சால்னா பிரத்யேக சைடு டிஷ்களாக மாறியது. சிறு வயதிலிருந்தே ஓட்டலுக்குள்ளே தான் வளர்ந்ததால், 8வது படிக்கும்போதே பரோட்டா மாஸ்டராகிட்டேன்,'' என்றார் காசிம்.
பரோட்டா வீசுவதில் அவர் வல்லவராக திகழ்ந்தாலும், பரோட்டாவின் சோடியான சால்னாவை பக்குவமாய் வைப்பதில் சிக்கல் இருந்துள்ளது. எக்கச்சக்க மாஸ்டர்களிடம் சால்னாவின் சீக்ரெட்டை கற்றுகொள்ள முயன்ற போதும் எவரும் கற்று கொடுக்க முன்வரவில்லை. அதனால், சால்னா வைக்க கற்றுகொள்ள ஓட்டல் கடை ஒன்றில் பணிக்கு சேர்ந்துள்ளார். பணிக்கு சேர்ந்து நான்கு மாதங்களாகியும் சால்னா வைக்கக் கற்றுகொடுக்கவில்லை என்று கூறினார் காசிம்.
‘‘பரோட்டா மாஸ்டருக்கு ஒரு நாள் சம்பளமாக ரூ.800 முதல் 1200ரூபாய் வரை வழங்கப்படுகிறது. நல்ல சம்பளம் கிடைக்ககூடிய வேலை வாய்ப்பு அதிகமுள்ள ஒரு தொழில் இது. ஆனால், நடைமுறையில் ஆட்பற்றாக்குறை தான் அதிகமுள்ளது.
நியூஸ் பேப்பரிலே பாத்தீங்கனாலே தினமும் பரோட்டா மாஸ்டர் வான்டட்னு விளம்பரமிருக்கும். எங்களுடைய ஓட்டலுக்கும் மாஸ்டர்கள் கிடைக்கவில்லை. தொழிலுக்கு அறிமுகமற்ற ஒருவரை அழைத்து வந்து, அவருக்கு எளிமையா முறைப்படி சொல்லி கொடுத்தா, அவங்களே ஓட்டல் ஆரம்பிச்சுட்டு போயிருவாங்க.
ரொம்ப குறுகிய காலத்தில் சூட்சமங்களை எல்லாம் எளிமையாக என்னால் சொல்லிக்கொடுக்க முடியுதுனு புரிந்து கொண்டேன். அப்போ, இதை ஏன் மத்தவங்களுக்கு சொல்லிக் கொடுக்கும் பயிற்சி மையம் ஆரம்பிக்கக்கூடாதுனு தோணியது. சாதாரணமா யாருகிட்டயாவது போயி, நான் பரோட்டா எப்படி செய்யுறதுனு கிளாஸ் எடுக்க போறேன் சொன்னா கிண்டல் செய்து ‘யார்ரா இவன்'னு சொல்வாங்க தானே! அந்த மாதிரி நிறைய எதிர்மறை கருத்துகளை எதிர்கொண்டேன்.
ஆனா, அதையெல்லாம் நான் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. ஏன்ன, எனக்கு கத்து கொடுக்க பிடிக்கும். தொடர்ச்சியா ஓட்டலில் நின்று வேலை பார்க்குற எனக்கு கிளாஸ் எடுக்குறது ஒருவித ரிலாக்சேஷனை கொடுத்தது.
“பரோட்டா செய்யக் கத்துக்கொள்பவர்களால், நிச்சயம் சுயதொழில் செய்து பிழைச்சுக்க முடியும் எனக்கு முழு நம்பிக்கையிருந்தது,'' என்று அவர் கூறுகையிலே மனதிற்கு பிடித்த வேலையை செய்வதில் கிடைக்கும் ஆனந்தம் வெளிப்பட்டது.
நாலுபேருக்கு சொல்லிகொடுத்தா நல்ல சம்பளம் வாங்குவார்கள் என்ற எண்ணத்திலே கோச்சிங் சென்டரை ஆரம்பித்தேன்.
வெறும் 90 ரூபாய் செலவில் கோச்சிங் சென்டரை தொடங்கினேன். ‘தொழிற்கல்வி - பரோட்டா செய்ய கற்று கொடுக்கப்படும்'னு என் போன் நம்பர் மட்டும் போட்டு பிரிண்ட் அவுட் எடுத்து ஊரு முழுக்க, ஒட்டினேன். ஒட்டும் போதே நிறைய பேரு கேலி பண்ணாங்க. ஆனா, நோட்டீஸ் ஒட்டிய ஒரே வாரத்தில் 25 பேரு போன் பண்ணாங்க. அதில் 10பேர் பயிற்சி எடுத்துக்கத் தயாராக இருந்தாங்க.
அப்போ, நான் பயிற்சி மையமெல்லாம் ஆரம்பிக்கல. கத்துக்க நினைக்கிறவங்க இடத்துக்கே போய் சொல்லி கொடுக்கலாம்னு நினைத்திருந்தேன். அப்புறம், அந்த 10 பேரையும் 1000ரூபாய் கொண்டு வரச் சொல்லி ஒரு இடத்தை வாடகைக்கு பிடித்து, வகுப்பை துவக்கினேன்.
அந்த 10 பேரில் ஆரம்பமான பயிற்சி மையத்திலிருந்து இன்றுவரை 1000-க்கும் அதிகமானோர் பயிற்சி பெற்று வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் பணிபுரிந்து வருகின்றனர், என்று மாணவர்களின் வெற்றியில் களிப்படையும் ஆசானாக பெருமையுடன் பகிர்ந்தார் காசிம்.
10 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட பயிற்சி மையம் கொஞ்சம் கொஞ்சமாய் மெருகேறியது. காலை 2 மணிநேரம், மாலை 2மணி நேரம் என 40 மணிநேரங்கள் கொண்ட 10நாள் பயிற்சி வகுப்பிற்கு ரூ.4000 கட்டணம்.
மாணவர் சேர்க்கையும் அதிகரித்தது. 80% செய்முறை வகுப்பு, 20% தியரி படிப்பு கொண்ட பாடத்திட்டமாகக் கொண்ட பயிற்சி ஆகியதால், மைதா வாங்கும் செலவே பெரும் செலவாகியுள்ளது. அந்த சமயத்தில் ‘நாகா' நிறுவனத்தை அணுகியுள்ளார் காசிம். அவரின் முயற்சிக்கும் நாகா நிறுவனமும் கைகோர்த்தது. அதன்படி, ‘நாகா ஸ்கில் டெவலப்மென்ட் சென்டர்' உடன் இணைந்து செயல்படத் தொடங்கியது ‘செல்ஃபி பரோட்டா கோச்சிங் சென்டர்'.
‘‘மைதாவில் எவ்வளவு தண்ணீ ஊத்தி பிசையனும். எவ்வளவு எண்ணெய் சேர்க்கனும். எப்படி பிசைந்தால் சாஃப்ட்டா வரும்னு முதலில் மைதா பற்றிய புரிதலை ஏற்படுத்துவேன். அதன் பிறகு தான், பரோட்டா எப்படி செய்யுறதுனு சொல்லிக் கொடுப்பேன். தோசை கல்லின் சூடு எவ்வளவு இருக்கனும், பரேட்டா ஹார்ட்டா இருந்தா என்ன பண்ணனும்னு சில சீக்ரெட்ஸ்களை சொல்லிக் கொடுப்பேன்.
டெய்லி பக்கத்திலிருந்து பரோட்டா போட கற்று கொடுப்பதால், ஈஸியா கத்துப்பாங்க. கேட்டரிங் காலேஜ்ல தியரி தான் அதிகமிருக்கும். அப்படியும், சில பேர் ஈஸியா கத்துக்குவாங்க. சிலருக்கு கற்றுக் கொள்ள நாள்தேவைப்படும். அதுக்காக 10 நாளுக்கு மேல் கற்று கொடுப்பதற்கு எந்த கட்டணமும் வாங்கமாட்டேன்.
பரோட்டாவுடன் சேர்ந்து கோழி சால்னா எப்படி வைப்பதும் சொல்லிக் கொடுப்பேன். நார்மல் பரோட்டா தவிர்த்து, வெஜ் பரோட்டா, சில்லி பரோட்டா, பன் பரோட்டா, எண்ணெய் பரோட்டா, வீச்சு பரோட்டா, சிலோன் பரோட்டா, ரோல் பரோட்டா என 12 வகையான புரோட்டாக்களை போட கத்துக்கொடுக்கிறேன். அடிஷனால தோசை ஊத்துறக்கும் சொல்லிக் கொடுக்கிறேன்.
பயிற்சியில் சேர்வதற்கு எந்த வயது வரம்புமில்லை, கல்வி தகுதியுமில்லை. ஆண், பெண் பேதமின்றி யாரு வேணும்னாலும் வந்து கற்றுக்கலாம். நிறைய பெண்களும் ஆர்வமாக கற்று கொள்கிறார்கள். வீட்டுக்கு முன்னாடியே இட்லி கடை போட்டு நடத்திட்டு இருப்பாங்க. அப்படியே 1கிலோ மைதா போட்டு பரோட்டாவும் போடலாம்னு பயிற்சி எடுத்துக்க வருவாங்க.
அப்படி, ஒரு முறை மதுரை வில்லாபுரத்திலிருந்து பயிற்சிக்கு வந்தாங்க. அவுங்க, இட்லி வியாபாரம் செய்திட்டு இருந்தாங்க. நிறைய கஸ்டமர் புரோட்டா கேட்டு வருவதால், பயிற்சி எடுத்துக்கிட்டாங்க. 1 கிலோ மாவுல சப்போர்டுக்கு பரோட்டா போட்டாங்க. இப்ப அதுவே மெயின் பிசினஸாகிவிட்டது. இதுபோன்ற நிறைய நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடந்திருக்கு.
கொரோனா சமயத்தில் நகை ஆசாரி ஒருத்தர் வந்து ட்ரையினிங் எடுத்தாரு. பயிற்சி முடிந்ததும் லாக்டவுன் போட்டுட்டாங்க. வீட்டிற்கு வருமானமே இல்லாம போயிருச்சு. அந்த பையனோட அம்மா பரோட்டா போட கத்துக்கிட்டலடா நீ, வீட்டு வாசலில் பரோட்டா போட்டு விற்கலாம்னு சொல்லியிருக்காங்க. அப்படி ஆரம்பிச்சது, இன்னிக்கு அட்வான்ஸ் புக் பண்ணி கஸ்டமர்கள் பரோட்டா வாங்கிட்டு போறாங்க.
கரூரில் இருந்து ஒரு பையன் வந்தார். நிச்சயம் முடிந்த பையன். கல்யாணத்துக்கு முன்னாடி ஒழுங்கா ஒரு வேலைக்கு போனதான் கல்யாணம் என்கிற சூழலில், நம்மகிட்ட பயிற்சி எடுத்துக்க வந்தாரு. பயிற்சி முடிந்தவுடன் ஓட்டலில் வேலைக்கு சேர்ந்து முதல் பத்திரிக்கை எனக்கு வச்சாங்க. ஒவ்வொரு மாதமும் இவ்வளவு சந்தோஷங்களுடன் எனக்கு ரூ.30,000 வருவாயும் கிடைக்கிறது.
இதுவரை தமிழ்நாட்டிலுள்ள எல்லா மாவட்டங்களிலிருந்தும், கேரளாவிலிருந்தும் கூட பயிற்சி எடுத்துக்க வந்திருக்காங்க. மாதத்திற்கு 30பேர் நியூ அட்மிஷன் கிடைக்கும். வக்கீல், செஃப், கேட்டரிங் முடித்த பசங்க, ஐடி பசங்கனு பல தரப்பட்ட மக்கள் வந்து கற்றுக்கொள்கிறார்கள்.
லாக்டவுன் சமயத்தில் அதிகம் ஸ்ட்ரெஸ்-ஆ இருக்குனு ஐடில வொர்க் பண்ற ஒரு பையன் வந்து கத்துகிட்டாரு. அடுத்தகட்டமாய், பரோட்டாவுடன் சேர்ந்து பிரியாணியும், சைனீஸ் உணவு வகைகளான ப்ரைடு ரைஸ், நூடுல்ஸ் செய்யுறதுக்கும் கற்று கொடுக்க போகிறோம். அதேபோல், மதுரையில் உள்ளதை போல் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் தூத்துகுடியில் பயிற்சி மையத்தை திறக்க திட்டமிட்டுள்ளோம்,'' என்று எதிர்கால திட்டங்களை கூறி முடித்தார் காசிம்.
உங்களுக்கும் புரோட்டாமாஸ்டராக விருப்பமா? முகமது காசிமின் தொலைபேசி எண் : 9788525064