எதற்கு முன்னுரிமை? - உணவு முதல் பழக்கங்கள் வரை 2023ல் மனநலனுக்கு 10 டிப்ஸ்!
2023-ஆம் ஆண்டில் மன ஆரோக்கியத்திற்கு நாம் எவ்வாறு முன்னுரிமை அளிக்க முடியும் என்பதை உண்மையிலேயே புரிந்துகொள்ள, நம்மை நாம் காலத்தில் பின்னோக்கி அழைத்து செல்ல வேண்டும். அதாவது, இந்திய தத்துவத்திலும் உளவியலின் பிராதன மூன்று குணங்களான சத்துவ குணம், ராஜஸ குணம், தமஸ குணம் ஆகியவற்றை அறிதல் இங்கே அவசியம்.
ஆயுர்வேதத்தில், மனம் மற்றும் உடல் இணைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மேலும், உடலியல் மற்றும் உளவியல் எவ்வாறு ஒன்றின்மீது ஒன்று தாக்கத்தை ஏற்படுத்துகின்றது, உடலியலில் உளவியலும், உளவியலில் உடலியலும் எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளது புரிந்துகொள்ள வேண்டும்.
சமீபத்திய ஆண்டுகளில், மன - உடல் இணைப்பு குறித்து விரிவான ஆராய்ச்சிகள் வெளிவந்துள்ளன. மேலும், மனத்தடைகளைப் புரிந்துகொள்வது எப்படி என்கிற ஆய்வுகளும் வரிசைகட்டுகின்றன.
ஆகவே, 2023ம் ஆண்டில் மன ஆரோக்கியத்திற்கு நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டியுள்ளதால், நாம் காலத்தால் பின்னோக்கிச் சென்று சத்துவ குணம் பற்றிய உண்மையான அர்த்தத்திற்குச் செல்வது அவசியம் என்கிறார் வாழ்வியல் நிபுணர் தீபா கண்ணன். அவரது வழிகாட்டுதல் அப்படியே இங்கே...
சத்துவம் என்றால் என்ன?
இயற்கையிலும் நமக்குள்ளும் உள்ள அனைத்தும் சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் உள்ளிட்ட மூன்று வெவ்வேறு சக்தி நிலைகளின் கலவையாகும் என்று நம்பப்படுகிறது. நாம் தமஸ குணத்தைக் கொண்டவர்கள் என்றால் பொதுவாக, நாம் சோம்பேறித்தனம், மந்தம், சண்டையிடும் கோபாவேசம், உணர்ச்சியற்ற நிலை அல்லது பயப்படும் குணங்களில் இருக்கிறோம் என்று பொருள்.
நாம் கோபப்படும்போது, அடுத்தவர் மேல் பொறாமை கொள்ளும்போது, எதெற்கெடுத்தாலும் முன்கோபப்படும்போது, பொருளாசைப் பிடித்து அலையும்போது, கொடூரமாக ஈவு இரக்கமின்றி நடந்து கொள்ளும்போது, பொறுமையில்லாமல் பரபரப்பாக இருக்கும்போது, விமர்சனம் செய்யும்போது, சகிப்புத்தன்மை கிஞ்சித்தும் இல்லாதபோது, பிறரை புண்படுத்தும்போது நாம் ராஜஸ குணம் கொண்டவர்களாக இருக்கின்றோம்.
மாறாக, மனச் சமநிலை, ஸ்திரத்தன்மை, சாந்தத்தன்மை, அமைதியான குணங்களில் இருக்கும்போது நாம் சத்துவ குணத்தில் இருக்கின்றோம். ஆயுர்வேதத்திலும் யோகாவிலும் நம்மை இத்தகைய நற்குணமான சத்துவம் நோக்கி இட்டுச் செல்வதே பிரதானமாகக் கூறப்பட்டுள்ளது.
2023-ஆம் ஆண்டில் மனம் மற்றும் உடல் சமநிலை மற்றும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் முன்னுரிமை அளிப்பதற்கான நடவடிக்கைகள்:
யோகா மற்றும் ஆயுர்வேதத்தின் அனைத்து அம்சங்களும் கருவிகளும் சமநிலையை நோக்கிய படிகள் என்றே கூற வேண்டும். மேலும் இவை நமது மன ஆரோக்கியத்திற்கு துணைபுரிகின்றன. தன்னைத்தானே நேசித்தல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பேணுவதற்கான அக்கறை ஆகியவற்றை பராமரிப்பதில் உள்ள அழகான விஷயம் என்னவெனில், இவற்றுக்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.
1. மதிய உணவை நண்பகலில் எடுத்துக் கொள்ளுங்கள். நண்பகலில் உடலின் உஷ்ணம் வலுவாக இருக்கும். அந்த நேரத்தில் நாம் சாப்பிடும் எந்த விஷயமும் உடலில் சரியாக சிதைக்கப்பட்டு ஜீரண பாகங்கள் நன்றாக வேலை செய்து நம் உடலுக்கு ஊட்டமளிக்கும்.
காலை முழுவதும் பட்டினி கிடப்பதைத் தவிர்க்கவும். உடல் சக்தியை தூண்டுவதற்கும், நண்பகலில் பெரிய உணவுக்கு உங்கள் உடலைத் தயார்படுத்துவதற்கும் லேசான காலை உணவை உண்பது அவசியம். முழு தானியங்கள், புரதங்கள், பசுமைக் காய்கறிகள் மற்றும் புதிய மசாலா மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளுடன் சமைக்கப்பட்ட மற்றொரு காய்கறியுடன் உணவை சாப்பிட்டு சமநிலை பேணவும்.
யாராவது மனக்கவலை அல்லது மனநல பாதிப்பு அறிகுறிகளுடன் என்னிடம் வரும்போது, அவர்களின் உணவு சமநிலையற்றதாக இருப்பதையும் அவர்கள் நேரம் தவறி சாப்பிடும் பழக்கமுள்ளவர்கள் என்பதையும் கண்டறிந்துள்ளேன். இத்தகைய பழக்கங்களால் அவர்களது ரத்தத்தில் சர்க்கரையின் அளவில் சமநிலை குலைகிறது, இதனால் சுரப்பிகள் செயலாற்றுவதில் சமநிலை குலைகின்றது. இதனால், மன ஆரோக்கியமும் பாதிக்கப்படுகின்றது.
2. உங்களுக்கு ஓய்வு நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள். அதிக வேலைகளை ஒரே சமயத்தில் செய்வதைத் தவிர்க்கவும். ஒவ்வொரு நாளும் உங்கள் வேலைப்பளு அதிகம்தான் என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். உங்களுக்கான வேலைகள் குறித்த அட்டவணையை தயாரித்துக் கொள்ளுங்கள். இதனால் செய்ய வேண்டிய வேலையை மனக்கணக்காக உங்கள் மனதில் பட்டியல் போட்டு வைக்கும் மன அழுத்தம் தரும் நிலையைத் தவிர்க்கலாம்.
உங்கள் உணவுக்கான நேரத்தைத் திட்டமிடுங்கள். ஒரு சிறு தியானத்திற்கான நேரத்தை ஒதுக்குதல், இளைப்பாறல், நீங்கள் முடிக்க வேண்டிய பணி உள்ளிட்டவற்றோடு உங்களுக்காக நீங்கள் செலவிடும் நேரத்தையும் திட்டமிடுங்கள். இது மிகவும் எளிமையானதாகத் தெரிகிறது. ஆனால், இது மனதை நிதானப்படுத்த மிகவும் சக்திவாய்ந்த வழியாகும். ஓய்வெடுக்க ஏது நேரம் இன்னும் நிறைய இருக்கின்றது என்று நினைக்கிறோம். இருப்பினும், ஒவ்வொரு நாளும் 10-15 நிமிட தியானத்தைத் திட்டமிடுவது சாத்தியமற்றது அல்ல. நமக்குத் தேர்வு செய்ய நிறைய உள்ளன!
3. சூழ்நிலைகளையும் மக்களையும் எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளுங்கள். 2022-ஆம் ஆண்டின் இறுதியில் நான் ஆழ்ந்த மனச்சோர்வின் கட்டத்தை கடந்து வந்தபோது நான் கற்றுக்கொண்ட மிகவும் மதிப்புமிக்க பாடங்களில் ஒன்று, ‘என்னைச் சுற்றியுள்ளவர்களை மாற்றுவது என் கையில் இல்லை’ என்ற பாடத்தையே.
இருப்பினும், நாம் சமநிலையில் இருக்க விரும்பினால் அடுத்தவரின் கோபம் அல்லது உணர்ச்சிக் கொந்தளிப்பு போன்ற சமநிலை குலைவுகளுக்குப் நாம் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை. நாம் அமைதியாக இருக்க முடிவு செய்துள்ளோம் என்பதை மென்மையான வழியில் தெளிவுபடுத்தலாம்.
4. நல்ல மன ஆரோக்கியம் என்று வரும்போது நடைபயிற்சியின் சக்தி மகத்தானது. நடைபயிற்சி என்பது ஒரு சீரான இயக்கமாகும். இது சிறந்த ரத்த ஓட்டத்தை நமக்கு அளிக்கின்றது. இது நச்சுத்தன்மையை அகற்றி சீரான ஹார்மோன்களுக்கு சாதகமாக பங்களிக்கிறது. ஓட்டப்பயிற்சி என்று சிலர் கேட்கலாம். ஆனால், மனப்பதற்றத்துடன் போராடுபவர்களுக்கு ஓடுதல் பயனளிக்காது. மேலும் வாதத்தை இது அதிகரிக்கும். எனவே, ஓட்டம் போல் அல்லாமல் நடைப்பயிற்சி மற்றும் மலையேற்றப் பயிற்சிகள் பெரிய அளவில் நன்மை பயக்கும்.
காலையில் எழுந்து கடைகளுக்கு செல்ல நடப்பது அல்லது வாக்கிங் செல்வது போன்றவை மிகப் பெரிய பலன்களைத் தரக்கூடியது, வெறும் உடல் ரீதியான பயன்கள் அல்லாமல் மன ஓட்டத்தை சீரமைக்கும் பணியையும் அதிகாலை நடைப்பயிற்சி செய்கின்றது.
5. உணவு எடுத்துக்கொள்ளும் நேரத்தையும் உறங்கும் நேரத்தையும் ஒரு நிலையான கால எல்லைக்குள் கொண்டு வாருங்கள். அது உடலிலேயே இயற்கையாக இருக்கும் கடிகாரத்தை இயக்குவதன் மூலம் உடல் லயத்தை சீராக வைத்திருக்கும். நமது உடலும் மனமும் ஒளி மற்றும் இருளிலிருந்தும் உணவு நேரத்தையும் உறக்க நேரத்தையும் எப்படி முறைப்பபடுத்துகிறோம் என்பதிலிருந்தும் சங்கேதங்களைப் பெற்று உடல் தன் சமநிலையைப் பேணுகின்றது. இது ஒரு பெரிய விஷயமாகத் தெரியவில்லை.
ஏனெனில், பலர் வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு நேரங்களை சாப்பிடவும் உறங்கவும் ஒதுக்குகின்றனர். ஆனால், எல்லோரும் செய்வது, பொதுவான பழக்கம், வழக்கமாகிப் போன பழக்கத்தை நாம் நார்மல் என்று எடுத்துக் கொள்ளுதல் கூடாது. நடைபயிற்சிக்கு நேரம் ஒதுக்குவது, உணவு நேரம் மற்றும் படுக்கை நேரத்தை உறுதிப்படுத்துவது போன்ற பெரிய தலையீடுகளுடன் தொடங்க உங்கள் மனம் இடம் கொடுக்கவில்லை என்றாலும், உங்கள் மன ஆரோக்கியம் அதற்கு பெரிதும் நன்றி தெரிவிக்கும்.
6. இது சர்ச்சைக்குரியதாகவோ அல்லது ஏமாற்றமளிப்பதாகவோ தோன்றலாம். ஆனால், வெங்காயம் மற்றும் பூண்டு தினமும் பரிந்துரைக்கப்படாததற்கான காரணம் என்னவென்றால், அவை மனதை ஸ்திரத்தன்மை மற்றும் சமநிலையிலிருந்து விலக்கி வைக்கின்றன. பூண்டு, வெங்காயம் இல்லாமல் சமைப்பது அல்லது சாப்பிடுவது நடைமுறைக்கு ஒவ்வாதது அல்லது சாத்தியமேயற்றது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், நீங்கள் என்ன முயற்சி செய்யலாம் என்பதைப் பற்றி சிந்திக்க சிறிது நேரம் ஒதுக்குங்கள். சோதனை முயற்சியாக வெங்காயம், பூண்டு இல்லாத இரவு உணவை முயற்சித்துப் பார்த்தால் உறக்கம் நிம்மதியாக இருக்கும். அல்லது வெங்காயத்தை பச்சையாக சாலடாக சாப்பிடுவதையும் நீங்கள் தவிர்க்கலாம். ஆனால், கோபமும் ஆத்திரமும் வரும் நேரங்களின்போது அன்றைய உணவில் வெங்காயம், பூண்டு இவற்றைத் தவிர்த்துக் கொள்ள முயற்சி செய்து பார்க்கலாமே.
7. படுக்கையில் படுத்திருக்கும்போது வயிறு உள்ளிழுத்து மூச்சுப் பயிற்சி செய்யலாம். மல்லாந்து படுத்தபடியே நீங்கள் மூச்சுக்காற்றை உள்ளிழுக்கும் போது வயிற்றுப்பகுதி லேசாக மேலெழும்புமாறும் மூச்சுக்காற்றை வெளியே விடும்போது வயிற்றுப்பகுதியை லேசாக உள்ளிழுத்தும் பயிற்சி செய்யும்போது அடிவயிற்றின் திரவ தளர்வையும் கவனிக்க முயற்சிக்கவும். நீங்கள் மூச்சை உள்ளிழுக்கும்போது உங்கள் மூக்கில் உள்ள காற்றின் குளிர்ச்சியையும், நீங்கள் மூச்சுக்காற்றை வெளியேற்றும்போது உங்கள் மூக்கில் உள்ள காற்றின் வெப்பத்தையும் கவனியுங்கள்.
அடுத்து, சுவாசத்தை ஒத்திசைக்க முயற்சிக்கவும், உங்கள் மூச்சு உள்ளிழுக்கப்படும்போது உங்கள் அடிவயிற்றின் எழுச்சியையும், மூச்சை வெளியேற்றும்போது அடிவயிறு உள்ளிழுக்கப்படுவதையும் கவனிக்கவும். இந்த யோகாவை பகலில் கூட தரையில் படுத்துக்கொண்டு செய்வது ஒரு சிறந்த நடைமுறையாகும். இது நரம்பு மண்டலத்தை மெதுவாக்குகிறது, சமநிலை மற்றும் அமைதியைக் கொடுக்கின்றது.
8. இரவு உணவிற்குப் பிறகு இயற்கையுடன் 10 நிமிடங்கள் செலவிடுங்கள். நீங்கள் எவ்வளவு வேகமாக நடக்கிறீர்கள் என்பதில் கவனம் செலுத்தாமல் இரவு உணவுக்குப் பிறகு அமைதியான நடைபயிற்சி செய்வது நாளின் குழப்பத்திலிருந்து மெதுவாக விலகி ஆழமாக ஓய்வெடுக்க உதவுகிறது. மெதுவாக நடப்பதில் கவனம் செலுத்துங்கள், உங்கள் கால்களுக்குக் கீழே உள்ள தரையைக் கவனியுங்கள், உங்கள் சுவாசத்தை மெதுவாக்குங்கள், இயற்கையைக் கவனிக்க ஒரு கணம் நிறுத்துங்கள், நாம் இயற்கையின் ஒரு பகுதி என்ற உணர்வில் நனையுங்கள். இயற்கைக்கும் நமக்கும் இடையே ஆழமான நல்லிணக்கம் உள்ளது. இயற்கையைப் போலவே நாமும் இருக்க முடியும், இதுதான் ஆயுர்வேதத்தின் சாராம்சம்.
9. யோகக் கலையின் சரியான வடிவத்தைத் தேர்ந்தெடுக்கவும். இதை மனநலத்தின் பின்னணியில் நான் குறிப்பிட வேண்டும். ஏனென்றால், யோகா என்பது ஒருபோதும் வியர்க்க விறுவிறுக்க செய்வதும் அல்ல. இது ஒப்பீடு பற்றியதும் அல்ல. உங்கள் உடலிலிருந்து வியர்வையை கசக்கிப் பிழிவதுதான் யோகா அன்று அது யோகாவல்ல. இருப்பினும், அமைதியான, மென்மையான, சுவாசத்துடன் ஒன்றிணைந்ததோடு சுயத்தையும் ஏற்றுக்கொள்வது பற்றிய ஒரு பயிற்சியில் பெரும் சக்தி உள்ளது. அத்தகைய ஆசிரியரை அல்லது வகுப்பைக் கண்டுபிடிப்பது உண்மையில் முன்னுரிமை அளிக்க வேண்டிய ஒன்று.
10. அத்தியாவசிய எண்ணெய்கள் மன ஆரோக்கியத்திற்கு நிறைய நன்மைகள் செய்கின்றன. அவை ஒரு அற்புதமான துணைக் கருவிகளாகும். சிறந்த மன ஆரோக்கியத்துக்கான விஷயங்களை ஆதரிக்கும் பிற எளிய பயிற்சிகளையும் பூர்த்தி செய்கின்றன. மன ஆரோக்கியத்துக்கு துணைபுரிய குறிப்பிட்ட அத்தியாவசிய எண்ணெய்களைப் பற்றி நீங்கள் படிக்க முடியும் என்றாலும், உள்ளுணர்வு தேர்வை நான் உண்மையிலேயே நம்புகிறேன். இதில் உங்களுக்கு வழிகாட்ட உங்கள் உள்ளுணர்வே உதவும் என்பதையும் நான் பரிந்துரைக்கின்றேன்.
இருந்தாலும் ஒரு வழிகாட்டியாக நான் பரிந்துரைப்பது என்னவெனில் வாதம், பித்தம், கபம் இவற்றில் வாதம் பிரதானமாக உள்ளவர்களுக்கும் அல்லது மனக்கவலை, பதற்றம் அதிகம் அடையக் கூடியவர்களுக்கும் நான் வெட்டி வேர் தைலத்தையும் சாம்பிராணியையும் பரிந்துரைக்கின்றேன். பித்த ஆதிக்கம் உள்ளவர்கள் அல்லது கோபத்திற்கு ஆளாகக் கூடியவர்கள் ரோஜா, சந்தனம் அல்லது பச்சோலி மூலம் பயனடைவார்கள். அதிக கபம் ஆதிக்கம் உள்ளவர்கள் மற்றும் மனச்சோர்வுக்கு ஆளாகக் கூடியவர்கள் யூகலிப்டஸ் அல்லது இஞ்சி மூலம் பயனடைவார்கள்.
நம்முடைய பூர்விக ஞான மரபு நம்மை உற்சாகத்துடனும் ஆரோக்கியத்துடனும் வைத்துக் கொள்ள ஏகப்பட்ட சாதனங்களைக் கொண்டுள்ளது. நாம் எங்கிருந்து தொடங்குகின்றோம் என்பது முக்கியமல்ல; ஆனால், சத்துவ மனோநிலையை எய்துவதை நோக்கி நகர்வோம்.
Edited by Induja Raghunathan