#100UNICORNS | ‘யுனிக்’ கதை 32 - Pine Labs: ஃபின்டெக் வெற்றிக் கதைகளில் தனி ரகம்!
உங்கள் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை ஸ்வைப் செய்யும் ‘பைன் லேப்ஸ்’ PoS மெஷினுக்குப் பின்னால் மகத்தான வெற்றிக் கதை புதைந்துள்ளது.
சிறு வணிகங்களும் நுகர்வோர்களும் வேகமாக டிஜிட்டல் வர்த்தகத்தை தழுவி வருகின்றனர். குறிப்பாக, ‘பே லேட்டர்’ சேவையானது அபரிமிதமான முன்னேற்றம் கண்டுவருகிறது. பொதுவாக வணிகங்களில் நேரடி பணம் செலுத்தும் சேவை என்பது குழப்பம் நிறைந்த ஒன்றாக இப்போது வரை உள்ளது. ஏனென்றால், கணக்கு வழக்குகளில் இருக்கும் சிக்கல்கள் அப்படி. நிலைகள் மாறியதும் வங்கி வசதிகள் வந்தன, கார்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. டெபிட், கிரெடிட் என கார்டுகளிலும் சிக்கல்கள் இருந்தன. இப்படியான சிக்கல்களுக்கு தீர்வாக கொண்டுவரப்பட்ட ஒரு நிறுவனமே இந்த அத்தியாயத்தில் நாம் பார்க்கப்போகும் யூனிகார்ன் பார்வை.
யூனிகார்ன் நிறுவனத்தின் பெயர் ‘பைன் லேப்ஸ்’ (
). இந்த யூனிகார்ன் தொடரில் இதுவரை நாம் பார்த்த நிறுவனங்கள் பெரும்பாலும், 2000-க்கு பிறகு நிறுவப்பட்ட ஸ்டார்அப்களாக இருந்தன. அவற்றை போலவே பைன் லேப்ஸும் ஸ்டார்ட் அப் நிறுவனமே. ஆனால், மற்ற நிறுவனங்களில் இருந்து பைன் லேப்ஸ் வேறுபட சில விஷயங்கள் உள்ளன.ஆம், பைன் லேப்ஸ் ஆரம்பிக்கப்பட்டபோது அது ஸ்டார்ட் அப் கிடையாது. ஆனால், சந்தையின் தேவைகளும், தேவையை பூர்த்தி செய்ய பைன் லேப்ஸ் எடுத்த முயற்சிகளும், கிடைத்த வெற்றியும் ஸ்டார்ட்அப் என்ற அந்தஸ்தை பைன் லேப்ஸுக்கு பெற்றுத் தந்தது என்றால் நம்ப முடிகிறதா..? நம்ப முடையவில்லை என்றாலும் அதுவே அதன் வரலாறு.
பைன் லேப்ஸ் மொத்தம் 3 நண்பர்களால் இணைந்து நிறுவப்பட்டது. அந்த மூன்று நண்பர்கள் லோக்வீர் கபூர், ராஜுல் கர்க் மற்றும் தருண் உபாத்யாய். தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவு மீது மூவரும் கொண்டிருந்த ஆர்வமே ‘பைன் லேப்ஸ்’ உருவாக வழிவகுத்தது.
லோக்வீர் கபூர்
கான்பூர் ஐஐடியில் பிடெக் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், பெங்களூர் ஐஐஎம்மில் எம்பிஏ முடித்தவர் லோக்வீர் கபூர். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் நிதி மேலாண்மை மற்றும் வணிக மேம்பாடு ஆகிய துறைகளில் நீண்ட அனுபவம் கொண்டவர்.
ராஜுல் கர்க்
டெல்லி ஐஐடியில் கணினி அறிவியலில் பிடெக் முடித்த ராஜுல் கர்க், லியோ கேபிடல் ஹோல்டிங்ஸின் இணை நிறுவனரும்கூட.
தருண் உபாத்யாய்
டெல்லி ஐஐடியில் எம்.எஸ்சி கம்பியூட்டர் அப்ளிகேஷன் முடித்தவர் தருண். Gallop.ai, hCentive மற்றும் GlobalLogic உள்ளிட்ட நிறுவனங்களும் தருணுக்கு சொந்தமாக உள்ளன.
இந்த மூவரும் இணைந்தே பைன் லேப்ஸை நிறுவினர். பைன் லேப்ஸ் என்பது விசா, மாஸ்டர் கார்டு அல்லது அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் போன்று உங்கள் பர்ஸ்களில் இருக்கும் கார்டு கிடையாது. ஆனால், மேலே சொன்ன இந்த கார்டுகளை நீங்கள் எப்போதாவது ஷாப்பிங் செய்யும்போது, ஏதாவது பணம் செலுத்த ஸ்வைப் செய்திருந்தால், நிச்சயம் பைன் லேப்ஸை பார்த்திருக்க முடியும்; பயன்படுத்திருக்க முடியும்.
கார்டை ஸ்வைப் செய்ய பயன்படும் PoS இயந்திரமானது பெரும்பாலும் பைன் லேப்ஸுக்கு சொந்தமானதாக இருக்க முடியும். கார்டை ஸ்வைப் செய்ய பயன்படும் PoS இயந்திரம் தயாரிக்கும் நிறுவனமே பைன் லேப்ஸ்.
நிறுவனத்தின் பயணம்
பைன் லேப்ஸின் வருவாய் என்பது PoS இயந்திரத்தை விற்பதில் இருந்தே இருக்கிறது. PoS இயந்திர விற்பனை மட்டுமல்ல, பைன் லேப்ஸ் தனியாக பேமென்ட் கேட்வே வைத்துள்ளது. பேமென்ட் கேட்வே என்பதை எளிதாக சொல்வதென்றால், ஆன்லைன் பணம் செலுத்தும் நிறுவனம். நாம் பொருட்களை வாங்கும் தளங்களில் நாம் வைத்திருக்கும் வங்கியில் இருந்து சில சமயங்களில் நேரடியாக ஆன்லைனில் பணம் செலுத்த முடியாது. அப்படியான நேரத்தில் இதுபோன்ற ஆன்லைன் பேமென்ட் கேட்வே நிறுவனத்தின் உதவியுடன் பணம் செலுத்துகிறோம். அப்படியான நிறுவனம்தான் பைன் லேப்ஸ்.
ஆனால், ஆரம்பத்தில் PoS இயந்திர விற்பனை நிறுவனமாக பைன் லேப்ஸ் தொடங்கப்படவில்லை. பெட்ரோலியம் ஆட்டோமேஷன் நிறுவனமாகத் தான் பைன் லேப்ஸின் தொடக்கம் இருந்தது. பெட்ரோல் பம்புகள் டிஜிட்டல் மயமாகிக்கொண்டிருந்த நேரத்தில், பைன் லேப்ஸ் 1998-ல் கார்டு அடிப்படையிலான பணம் செலுத்துவதற்கான தீர்வை வழங்கியது.
1998-ம் ஆண்டின் தொடக்கத்தில், இந்தியாவில் பெட்ரோல் பம்புகள் டிஜிட்டல் மயமாகிக்கொண்டிருந்த நேரத்தில், பணம் செலுத்தும் (பேமென்ட் சொல்யூஷன்) தீர்வுகளுக்கான தேவை அதிகரித்து வந்தது. குறிப்பாக, பெட்ரோலிய சில்லறை விற்பனையில் தேவை அதிகமாக இருந்தது. இதைப் புரிந்துகொண்ட பைன் லேப்ஸ் அப்போதே பெட்ரோல் நிரப்ப வருபவர்களாக பெட்ரோ கார்டுகள் வழங்குவது, அதை கொண்டு பெட்ரோல் நிரப்புவது, லாயல்டி பாயின்ட்ஸ் அடிப்படையில் பெட்ரோல் நிரப்ப உதவுவது போன்ற பணிகளை செய்தது.
இது வரவேற்பை பெற்றது. இதனால் பல ஆண்டுகளாக பெட்ரோலியப் பொருட்களை சில்லறை விற்பனை செய்துவந்த ஃபியூச்சர் குரூப், ரிலையன்ஸ் மற்றும் டிமார்ட் போன்ற சில்லறை விற்பனையாளர்கள் டிஜிட்டல் பேமென்டுகளுக்கு மாறியது. 2004 வரை பைன் லேப்ஸின் பயணம் இப்படியாக இருந்தது.
வெளியேற்றமும் சம்பவங்களும்
2004-ல் ராஜுல் கர்க் மற்றும் தருண் உபாத்யாய் ஆகியோர் பைன் லேப்ஸிலிருந்து வெளியேற முடிவு செய்தனர். பொதுவாக, ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் இருந்து அதன் நிறுவனர்கள் வெளியேறுவது என்பது அந்த நிறுவனத்தின் அஸ்திவாரத்தை அசைத்து பார்ப்பது போன்றது. பல நிறுவனங்கள் இப்படியான சூழலில் திவாலாகியுள்ளன. ஆனால், பைன் லேப்ஸ் அப்படியாகவில்லை. சொல்லப்போனால் இதற்குப் பிறகான நாட்களே பைன் லேப்ஸின் ரியல் சம்பவங்கள் நடந்தது.
கோடிகளை குவித்தது இதற்கு பிறகே எனலாம். இவற்றுக்கு அனைத்துக்கும் காரணம் லோக்வீர் கபூர் எனும் ஒற்றை மனிதன். ராஜுல் கர்க் மற்றும் தருண் உபாத்யாய் வெளியேறிய பிறகு லோக்வீர் கபூர் பைன் லேப்ஸின் சிஇஓ-வாக பதவியேற்றார்.
2000 ஆண்டுகளின் தொடக்கத்தில் இருந்தே வங்கி அமைப்புகளின் தொழில்நுட்ப சலுகைகள் குறித்த தீவிர ஆய்வில் இருந்த லோக்வீர் கபூர் பைன் லேப்ஸை பெட்ரோகார்டுகள் மற்றும் லாயல்டி பாயிண்ட்ஸ் வழங்குவதை தாண்டி டிஜிட்டல் பேமென்ட்ஸ் துறைக்கு கொண்டு சென்று ஃபின்டெக் நிறுவனமாக மாற்றினார்.
எண்ணற்ற சேவைகள் லோக்வீர் கபூரின் வழிநடத்தலால் பைன் லேப்ஸ் வழங்க தொடங்கியது. அவற்றில் ஒன்று PoS இயந்திரம். டெபிட் மற்றும் கிரெடிட் போன்ற கார்டை ஸ்வைப் செய்ய பயன்படும் PoS இயந்திரம் லோக்வீர் கபூரின் மேற்பார்வையில் உருவானது. பெட்ரோல் பம்புகள் முதல் சிறு மளிகை கடை வரை பணம் செலுத்த தீர்வுகளை எதிர்கொண்ட நேரத்தில் பைன் லேப்ஸ் வெளியிட்ட PoS இயந்திரம் வணிக நிறுவனங்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. இப்போது சிறு வணிகங்கள் முதல் பெரிய பல்பொருள் அங்காடிகள் வரை PoS இயந்திரம் இல்லாமல் பார்க்க முடியாது.
PoS இயந்திரம் தயாரித்ததோடு நில்லாமல், அதன் மூலம் சேவைகளை எளிதாக்குவதற்காக பல முக்கிய வங்கிகளுடன் கூட்டணியை உருவாக்கினார் லோக்வீர். இதனால் ஒருகட்டத்தில் பல வங்கிகளுக்கு தொழில்நுட்ப பங்காளியாக மாறியது பைன் லேப்ஸ். இதனால், வங்கிகள், பைன் லேப்ஸை வணிகர்களுக்குப் பரிந்துரைத்தன.
அசுர வளர்ச்சி நோக்கி...
சிறிய சிறிய முதலீடுகள் அதற்கு தகுந்த மாற்றங்கள் என 2012-ம் ஆண்டின் தொடக்கம் வரை சீரான வளர்ச்சியை நோக்கி நகர்ந்த பைன் லேப்ஸ் அதற்கு பிறகு அசுர வளர்ச்சி கண்டது. ஆம், 2012-ம் ஆண்டில் பைன் லேப்ஸுக்கு அடுத்த பெரிய ஊக்கம் கிடைத்தது. டெபிட் கார்டுகளில் பாதுகாப்பை அதிகரிக்க வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஓர் உத்தரவை பிறப்பித்தது. இதன் விளைவாக ஆஃப்லைன் பரிவர்த்தனைகளை முடிக்க நான்கு இலக்க பின் (PIN) பயன்படுத்தப்பட்டது. இது இந்தியாவில் டெபிட் கார்டு பயன்பாட்டை அதிகரித்ததுடன், பைன் லேப்ஸின் பிஓஎஸ் இயந்திரங்களுக்கான தேவையையும் அதிகரித்தது.
உதாரணத்துக்கு, அந்த நேரத்தில் வங்கிகளின் தரவு குறித்த ஆய்வறிக்கைகள், ‘டெபிட் கார்டு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 2008-ல் 150 மில்லியனில் இருந்து 2013-ல் 400 மில்லியனாக அதிகரித்தது’ என்று தெரிவிக்கின்றன. இந்த மாற்றம் பைன் லேப்ஸ்க்கான மாற்றம் என்பது போல் இருந்தது.
டெபிட் கார்டுகள் மிகவும் பிரபலமடைந்ததால், வணிகர்களும் பணம் செலுத்தும் செயல்முறை எவ்வாறு செயல்படுகிறது மற்றும் அதை எவ்வாறு சிறப்பாகச் செய்யலாம் என்பதில் ஆர்வம் காட்டத் தொடங்கியது பைன் லேப்ஸ். வெகு விரைவாக இ-காமர்ஸ் மற்றும் ஆன்லைன் பேமென்டுகளும் இந்தியாவில் பிரபலமாக தொடங்கின.
ஆன்லைன் பேமென்டுகளின் பயன்பாட்டை புரிந்துகொண்ட இந்தியர்கள் விரைவாக அவற்றுக்கு மாறத் தொடங்கினர். இதனால், 2013-14-ம் ஆண்டில், கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளில் 30 சதவிகிதம் மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளில் 15 சதவிகிதம் ஆன்லைன் மூலமாக நடந்தது என்கிறது ஒரு தரவு.
இவற்றையெல்லாம் உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்த லோக்வீர், ஆப்லைனில் இயங்கிக்கொண்டிருந்த PoS இயந்திர செயல்பாடுகளில் இன்னும் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவர முடியும் என்பதை சிந்திக்க தொடங்கினார். விளைவு, ஆஃப்லைன் வணிகர்களுக்காக கிளவுட் தொழில்நுட்ப அடிப்படையிலான கட்டணத் தளத்தை உருவாக்கியது பைன் லேப்ஸ்.
கிளவுட் தொழில்நுட்பம்
இதனை எளிய முறையில் குறிப்பிட வேண்டுமென்றால், நாம் கணினி பயன்படுத்தும்போது டேட்டாக்களை ஹார்டு டிஸ்க் அல்லது பென் ட்ரைவ்வில் சேகரித்து வைத்துகொள்வோம். இது மாதிரியான எக்ஸ்ட்ரா பொருள் எதுவும் இல்லாமல், இன்டர்நெட்டை பயன்படுத்தி டேட்டாக்களை சேகரித்து வைத்துகொள்ள பயன்படும் ஒரு தொழில்நுட்பம்தான் இந்த கிளவுட் தொழில்நுட்பம்.
கிளவுட் அடிப்படையிலான தளமாக டெபிட், கிரெடிட், கிஃப்ட், லாயல்டி மற்றும் பின்னர் யுனைடெட் பேமென்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) மற்றும் மொபைல் வாலட்களிலும் பணம் செலுத்தும் சேவைகளை தங்களது PoS இயந்திரங்கள் மூலமாக ஆப்லைனிலும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது பைன் லேப்ஸ். இதன்பிறகு பைன் லேப்ஸ் கண்ட முன்னேற்றம் அளப்பரியது. விரைவில் 'யூனிகார்ன்' அந்தஸ்த்தை பெற்ற நிறுவனமாக உயர்ந்ததுடன் வெளிநாடுகளிலும் தங்களது சேவைகளை விரிவுபடுத்தியது.
ஈர்த்த முதலீடுகள்...
எஸ்பிஐ வங்கி, மாஸ்டர்கார்டு, பிளிப்கார்ட் போன்ற பல முன்னணி நிறுவனங்களின் கோடிகளில் குவித்த முதலீடுகள் காரணமாக பைன் லேப்ஸின் (செப்டம்பர் 2023 நிலவரப்படி) மதிப்பு 5 பில்லியன் அமெரிக்க டாலர்.
மத்திய கிழக்கு நாடுகள் உட்பட இந்தியாவுக்கு வெளியே உள்ள சந்தைகளை கைப்பற்ற பைன் லேப்ஸ் கணிசமாக வளர்ந்துள்ளது. குறிப்பாக, இந்தியாவில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வணிகர்களை வாடிக்கையாளர்களாகக் கொண்டுள்ள பைன் லேப்ஸ், 3.3 லட்சத்திற்கும் அதிகமான PoS டெர்மினல்களை விற்பனை செய்துள்ளது.
பைன் லேப்ஸின் முன்னேற்றத்துக்கு முக்கியக் காரணம், காலத்துக்கு ஏற்ப புதிய தொழில்நுட்பங்களை ஏற்ப மாறிக்கொள்வது. அதனால், ஸ்டார்ட் அப் நிறுவனமாக தொடங்கப்படாமல் இருந்தாலும், 20 வருடங்களுக்கு மேல் சந்தையில் செயல்பட்டாலும் எப்போதும் வெளிப்படுத்தி வரும் புதுமை மற்றும் சுறுசுறுப்பு காரணமாக, பைன் லேப்ஸில் ஒரு ஸ்டார்ட்அப்பின் டிஎன்ஏ இன்னும் இருக்கிறது என்கிறார் அதன் முன்னாள் சிஇஓ லோக்வீர் கபூர்.
ஆம், லோக்வீர் கபூர் பைன் லேப்ஸின் சிஇஓ பதவியை துறந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போது விக்கி பிந்த்ரா என்பவர்தான் புதிய சிஇஓ. 2018-2019 நிதியாண்டில் சில சரிவுகளை கண்டாலும் நம்பிக்கையுடன் புது தெம்புடன் புதிய நடைபோட்டு வருகிறது பைன் லேப்ஸ்.