#100UNICORNS | ‘யுனிக்’ கதை 35 - HighRadius: சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்தும் சஷி நரஹரி உருவாக்கிய நிறுவனம்!
சஷி நரஹரி எனும் ஆளுமையால் தொடங்கியதில் இருந்து தற்போது வரை எந்த சரிவும் இல்லாமல், உச்சத்தை மட்டும் சந்தித்து கொண்டிருக்கிறது ‘ஹைரேடியஸ்’.
யூனிகார்ன் கிளப்பில் உள்ள நிறுவனங்களில் அதிக மதிப்பும் எண்ணிக்கையையும் கொண்ட நிறுவனங்கள் என்றால், அவை ‘Saas’ யூனிகார்ன் நிறுவனங்கள்தான். ஃப்ரெஷ்வொர்க், ஐசெர்டிஸ், துருவா போன்ற சாஸ் நிறுவனங்களை பற்றி நம் யூனிகார்ன் தொடரில் அலசியுள்ளோம். இப்போது நாம் பார்க்கப்போகும் நிறுவனமும் சாஸ் நிறுவனமே. ஆனால், மற்ற சாஸ் நிறுவனங்களை விட அதிக மதிப்புக் கொண்ட நிறுவனம்.
ஒரு நிறுவனத்துக்குத் தேவையான சாஃப்ட்வேரை தயார் செய்து, அவற்றை அந்த நிறுவனத்திடம் விற்றுவிடாமல், மாதந்தோறும் எவ்வளவுக்கு பயன்படுத்துகிறார்களோ அதற்குரிய பணத்தை மட்டும் கட்டணமாக பெறுவதே சாஸ் (Software as a Service - SaaS) தொழில்நுட்பம். இந்த தொழில்நுட்பத்தை கொண்டும், AI தொழில்நுட்பத்தை கொண்டும் 2020ல் யூனிகார்ன் அந்தஸ்த்தை எட்டிய முதல் நிறுவனம்தான் ‘ஹைரேடியஸ்’ (HighRadius).
ஹைரேடியஸ் வணிகங்களில் உள்ள நிதி ரீதியான சிக்கலை தீர்க்கும் ஒரு ஃபின்டெக் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தோன்றியதற்கும், சாஸ் உலகில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றதற்கும் ஒற்றை நபரே முழுக் காரணம். அவர்தான் சஷி நரஹரி.
சஷி நரஹரி ஒரு ஐஐடியன். ஐஐடி மெட்ராசில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர். சென்னையில் பட்டம் பெற்ற பின் மாஸ்டர்ஸ் படிப்புக்காக அமெரிக்காவுக்கு சென்றார். அமெரிக்காவின் மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் முதுகலை பட்டம் பெற்ற பின், எல்லா ஐஐடியன் செய்வதை போல் இவரும் வெளிநாட்டு வாழ்க்கையையே தேர்வு செய்தார்.
ஆரக்கிள் நிறுவனத்தில் முதல் வேலை கிடைத்தது. SAP ஆலோசகராக பணி. இந்தப் பணி திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், அனுபவத்தை பெறவும் உதவிய அதேநேரத்தில் அவரின் பிசினஸ் கனவுக்கு தீனி போட்டது.
பிசினஸ் ஐடியா கொடுத்த வேலை
SAP ஆலோசகராக பணிபுரிந்த சமயத்தில் பி2பி கட்டணச் சந்தையில் ஒரு பெரிய இடைவெளியைக் கவனித்துள்ளார் சஷி நரஹரி. பி2பி பரிவர்த்தனையின் இரு பக்கங்கள் என்றால், பெறத்தக்க கணக்குகள் (Accounts Receivable) மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள் (Accounts Payable) இவைதான். இவற்றில் செலுத்த வேண்டிய கணக்கு குறித்து சிக்கல்களுக்கு தீர்வுகள் எல்லா இடங்களிலும் இருந்தன. ஆனால், பெறத்தக்க கணக்குகளை கையாள கருவிகளைக் கையாள வேண்டியிருந்தது.
சந்தையின் தேவையை உணர்ந்துகொண்ட சஷி நரஹரி தனது அனுபவத்தை கொண்டு சிக்கலுக்கு தீர்வாக சாஸ் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு தனது நண்பருடன் சேர்ந்து 2006-ல் ஹைரேடியஸ் (HighRadius) நிறுவனத்தை தொடங்கினார். அமெரிக்காவின் ஹூஸ்டனை தலைமையிடமாகக் கொண்டு ஹைரேடியஸ் தொடங்கப்பட்டது. பிற்காலத்தில் இரண்டாம் தலைமையிடமாக ஹைரேடியஸ் அலுவலகம் இந்தியாவின் ஹைதராபாத்திலும் தொடங்கப்பட்டது.
ஹைரேடியஸ் என்ன செய்கிறது?
சாஸ் தொழில்நுட்பத்தை கொண்டு பணம் செலுத்தும் செயல்முறைகளை தானியங்குபடுத்துவதே (ஆட்டோமேஷன்) ஹைரேடியஸ் நிறுவனத்தின் பணி. இன்னும் தெளிவாக கூறுவதென்றால், ஏஐ தொழில்நுட்பத்தை கொண்டு வணிக நிறுவனங்களின் ஆர்டர்-டு-கேஷ் செயல்முறையை எளிதாக்குவது. அதாவது, ஏஐ தொழில்நுட்பத்தை கொண்டு வணிக நிறுவனங்கள் தங்களுக்கு கிடைக்கும் ஆன்லைன் பேமென்ட்களை விரைவாக பணமாக பெற உதவுவதே ஹைரேடியஸ் நிறுவனத்தின் பணி.
உதாரணமாக, நீங்கள் உங்கள் வாடிக்கையாளர் ஒருவருக்கு ஆன்லைன் பேமென்ட் அல்லது கடன் என நிதி ரீதியாக பில்லிங் செய்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். அப்படி செய்யும்போது சராசரியாக பில்லிங் நேரத்திலிருந்து சராசரியாக 45 நாட்களில் தான் வாடிக்கையாளருக்கு அது பணமாக கிடைக்கும். ஆனால், ஹைரேடியஸ் இதனை தொழில்நுட்ப ரீதியாக அணுகி வாடிக்கையாளருக்கு கிடைக்க வேண்டிய பணத்தை விரைவாக கிடைக்க வைக்கிறது.
தனது ஏஐ தொழில்நுட்பத்தை கொண்டு வாடிக்கையாளருக்கு கிடைத்துள்ள ஆன்லைன் பேமென்ட் அல்லது கடன் குறித்து தகவல்களை திரட்டி உடனடியாக அதனை வங்கிகளுக்கு கொண்டுச் சென்று பணமாக மாற்ற உதவுகிறது. இதற்காக ஹைரேடியஸ் பிரத்யேக சாப்ட்வேரை உருவாக்கியுள்ளது.
ஹைரேடியஸின் தனித்துவமான ஐடியா அதற்கு வாடிக்கையாளர்களை பெற்றுக் கொடுத்தது. ஹைரேடியஸின் வாடிக்கையாளர்கள் சாதாரணவை அல்ல. Forbes Global 2000 நிறுவனங்களில் இடம்பெற்ற 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்களே ஹைரேடியஸின் வாடிக்கையாளர்கள். உதாரணத்துக்கு வால்மார்ட், நைக்கி மற்றும் ப்ராக்டர் & கேம்பிள், அடிடாஸ், கார்கில், டானோன், ஜான்சன் & ஜான்சன், ஸ்டார்பக்ஸ் போன்ற டாப் கம்பெனிகள் தான் ஹைரேடியஸின் வாடிக்கையாளர்கள்.
ஆரம்பத்தில் இதுபோன்ற டாப் கம்பெனிகளுக்கே வேலை பார்த்து வந்துள்ளது. இதனால்தான் ஹைரேடியஸ் தொடங்கப்பட்ட காலத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனமாக இல்லாத நிலையில், தனது வளர்ச்சியை தொடர்ச்சியாக மேம்படுத்தி ஸ்டார்ட் அப் அந்தஸ்த்தை எட்டிப் பிடித்தது.
சவால்களும் வளர்ச்சியும்
ஆரம்ப ஆண்டுகளில், ஹைரேடியஸ் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் ஊழியர் பற்றாக்குறை, வாடிக்கையாளர்களிடம் நம்பகத்தன்மை பெறுவது போன்ற பல சிக்கல்களை எதிர்கொண்டது.
ஹைரேடியஸ் எதிர்கொண்ட சவால்களில் முக்கியமானது தனது சாப்ட்வேரை உருவாக்குவதை விட, அதனை கொண்டு நிதி நிர்வாகத்தில் ஒரு புதிய அணுகுமுறையை கடைப்பிடிக்க முடியும் என்று வணிகங்களை நம்ப வைப்பதுதான். ஏனென்றால், பழமைவாத அணுகுமுறைக்கு பெயர் பெற்றது நிதித்துறை.
கட்டணங்களை ஆட்டோமேஷன் தொழில்நுட்பம் மூலம் பணமாக மாற்ற முடியும் என்பதை நிறுவனங்கள் நம்ப தயாராக இல்லை. எனினும், தனது ஐடியா மீது கொண்டிருந்த நம்பிக்கையை நிறுவனங்களிடம் எடுத்துரைத்து மாற்றத்தை சாத்தியப்படுத்தினார் சஷி நரஹரி.
அதனால்தான் ஐரோப்பா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு என பல பிராந்தியங்களில் ஹைரேடியஸ் சீக்கிரமாக புகழைப் பெற்றது. அதேநேரம் முதலீடுகளையும் பெற்றது. பூட்ஸ்ட்ராப்பிங் நிறுவனமாக தொடங்கப்பட்டு 2020 வாக்கில்தான் முதலீடுகளை பெற ஆரம்பித்தது. 2020-ல் 125 டாலர் மில்லியன் நிதி திரட்டி அந்த வருடத்தில் முதல் யூனிகார்ன் நிறுவனமாக யூனிகார்ன் கிளப்பில் அடியெடுத்து வைத்தது ஹைரேடியஸ்.
அமெரிக்காவின் ஹூஸ்டன், இந்தியாவின் ஹைதராபாத், நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம், இங்கிலாந்தின் லண்டன் ஆகிய இடங்களில் ஹைரேடியஸுக்கு அலுவலங்கள் உள்ளன. 1,000-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டுள்ளது.
காலத்துக்கு ஏற்ப வணிகங்களுக்கான நிதி செயல்பாடுகளை ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்தை எளிதாக்கி வரும் ஹைரேடியஸ் இன்றைய காலத்தில் தவிர்க்க முடியாத நிறுவனமாக உள்ளது. இதனால்தான் தொடங்கியதில் இருந்து தற்போது வரை எந்த சரிவும் இல்லாமல், உச்சத்தை மட்டும் சந்தித்து கொண்டிருக்கிறது ஹைரேடியஸ்.
ஓர் இந்தியர் தொடங்கிய நிறுவனமாக ஹைரேடியஸ் சந்தித்து கொண்டிருக்கும் வளர்ச்சி இந்தியர்களாகிய நம் அனைவருக்கும் பெருமிதம் கொடுக்கக் கூடியதுதான்.
யுனிக் கதைகள் தொடரும்...
#100UNICORNS | ‘யுனிக்’ கதை 34 - Uncademy: பூஜ்ஜியத்தில் தொடங்கி ராஜ்ஜியம் ஆக்கிய கெளரவ் முன்ஜல்!