#100Unicorns | 'யுனிக்' கதை 05 | Ola : மோசமான அனுபவத்தில் ‘ஐடியா’ பிடித்து ஆசமான வெற்றிபெற்ற பாவிஷ் அகர்வால்!
ஆண்டாண்டுகளாக இருக்கும் கேப் சேவையை, ஒருவித சொகுசு அம்சங்களுடன், கையிலுள்ள போனில் பட்டனை தட்டினால், குறிப்பிட்ட தொகைக்கு கார் வீட்டு வாசலில் வந்து நிற்கும் வசதியை ஏற்படுத்திய Ola இந்தியர்களுக்கு ஒரு புதிய அனுபமாக இருந்தது.
#100Unicorns | 'யுனிக் கதை 05 | OLA
’ஓலா...’ இந்தப் பெயர் இன்று நம்மில் பலருக்கும் மிகவும் நெருக்கம். சென்னை போன்ற பெரு நகரங்களில் வசிப்பவர்கள் ஒருமுறையேனும் ஓலா கேப்ஸ் மூலம் பயணித்திருப்போம். இன்று இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் 250 பெரிய மற்றும் சிறிய நகரங்களிலும் ஓலா சாம்ராஜ்ஜியம் கொடிகட்டி பறந்துவருகிறது.
வாடகைக் காரில் இருந்து எலெக்ட்ரிக் வாகன விற்பனை என ஓலாவின் வளர்ச்சி என்பது சமீப காலத்தில் நம் அனைவரும் கண்கூடாக கண்டுவருகிறோம். ஆனால், இவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியம் ஒரு சிறிய சம்பவத்தால் விளைந்தது என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. அந்த உத்வேகம் அளிக்கக்கூடிய கதையை தெரிந்துகொள்ளும் முன், ஓலா உருவாகக் காரணமாக இருந்த இருவரைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
பாவிஷ் அகர்வால் மற்றும் அங்கித் பாடி இணைந்து நிறுவியதுதான் ஓலா. இருவருக்கும் உள்ள ஓர் ஒற்றுமை, இருவரும் ஐஐடி பாம்பேயில் படித்தவர்கள். இந்தப் புள்ளிதான் இருவரையும் இணைத்தது என்றாலும் இருவருமே வெவ்வேறு பாடப்பிரிவுகளை பயின்றவர்கள்.
ஐஐடி பாம்பேயில் பாவிஷ் கணினி அறிவியல் படிப்பு என்றால், அங்கித், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பு. 2008ல் இருவரும் ஐஐடியில் வெளியேறிய பிறகு கல்லூரியில் கிடைத்த நட்பால் பெங்களூருவில் பணிபுரிந்துவந்தனர். பாவிஷ், பெங்களூரில் மைக்ரோசாஃப்ட் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றினார்.
“நம் அனைவருக்குள்ளும் ஒரு தொழில்முனைவோர் ஒளிந்திருக்கிறார். தொழில்முனைவோர்களை இயக்குவது அச்சம் அல்ல, தாக்கத்தை ஏற்படுத்தவல்ல ஐடியாக்களால் இயங்குபவர்கள் அவர்கள்!”
மோசமான அனுபவத்தால் உதித்த யோசனை:
பொதுவாகவே ஸ்டார்ட்-அப் தொடங்கும் நிறுவனர்கள், தங்களின் சொந்த கசப்பான ஒரு அனுபவத்தால், அதற்குத்தீர்வு காணவே நிருவனம் தொடங்கியதாக கூருவது வழக்கம். அது ‘ஒலா’ நிறுவனத்துக்கும் பொருந்தும்.
2010 காலகட்டம் அது. வேலை விஷயமாக, பாவிஷ் பெங்களூரில் இருந்து பந்திப்பூருக்கு வாடகை காரில் பயணம் செய்தார். ஆனால், அந்தப் பயணம் அவர் எதிர்பார்த்தது போல் அமையவில்லை. வாடகை கார் ஓட்டுநரின் மோசமான செயலால் அந்தப் பயணம் பாவிஷுக்கு வேறொரு அனுபவத்தை ஏற்படுத்தியது.
பெங்களூரில் இருந்து பந்திப்பூருக்குச் செல்ல ஆரம்பத்தில் ஒப்புக்கொண்ட தொகையை விட, வழியில் செல்லும்போது அதிகத் தொகை கேட்டுள்ளார் ட்ரைவர். அதைக் கொடுக்க மறுக்க, பாவிஷை பயணத்தின் பாதியிலேயே இறக்கிவிட்டு சென்றுவிட்டார் அந்த ஓட்டுநர். பஞ்சாப்பின் லூதியானாவில் பிறந்து வளர்ந்த பாவிஷுக்கு கன்னட மொழியும் கைகொடுக்கத் தவற, அன்றைய தினம் ஒரு கசப்பான அனுபவத்தை எதிர்கொண்டுள்ளார்.
ஆனால், அந்த ஆத்திரமான அனுபவம்தான் ’ஓலா’ என்னும் சாம்ராஜ்ஜியம் உருவாக தொடக்கப்புள்ளியாக அமைந்துள்ளது.
ஆம், அன்றைய தினம் நடந்த சம்பவத்தால் கார்களை முன்பதிவு செய்யும் பல பயணிகள் எதிர்கொள்ளும் அவலநிலையை உணர்ந்துகொண்ட அவருக்கு, குறைந்த கட்டணத்தில் சிறந்த வாடிக்கையாளர் சேவையுடன் வாடகை கார் நிறுவனம் தொடங்கினால் என்ன என்ற ஐடியாவைக் கொடுத்துள்ளது. இந்த யோசனையை தனது சகா அங்கித் உடன் பகிர்ந்துகொள்ள, அந்த நேரத்தில் ஒரு கார் முன்பதிவு செய்வது கடினமான விஷயம் என்பதை அவரும் உணர்ந்துள்ளார்.
விளைவு, ஒரு தொழில்நுட்ப வல்லுநர் (பாவிஷ்) மற்றும் பொறியாளர் (அங்கித்) என்ற முறையில் இருவரும் தங்களது யோசனையை செயல்படுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்தனர். ஆராய்ச்சியின் முடிவு ஆன்லைன் மூலம் கார் புக்கிங் செய்வது என்ற எண்ண வடிவமாக வந்துசேர, அதுவே 2010ன் இறுதியில் ‘Ola Trips’ என ஒரு ஆன்லைன் வெசைட்டாக தொடங்க வழிவகுத்தது.
2012-ல் தான் ’
' ஒரு மொபைல் அப்ளிகேஷனாக (ஆப்) வந்தாலும், அதற்கு முன்னதாக இரண்டு வருடங்கள் வெப்சைட் உதவியால் பயணிகளை ஈர்த்தனர்.ஓலா என்பது ஸ்பானிஷ் வார்த்தையான "ஹோலா" என்பதிலிருந்து உருவானது. அதாவது "ஹலோ". தங்கள் சேவைகள் எளிமையானவை மற்றும் இனிமையானவை என்று தெரிவிக்கவே இந்தப் பெயரைக் கொண்டு நிறுவனத்தை தொடங்கினார்கள்.
“நாம் எதிர்கொள்ளும் சவாலே ‘திறமை’தான்; திறமையாளர்களைக் கண்டறிந்து ஒரு டீமை உருவாக்க காலமும் உழைப்பும் தேவை.”
சவால்கள் நிறைய பயணம்:
ஓலாவின் சூத்திரதாரிகளாக பாவிஷ் மற்றும் அங்கித் இருந்தாலும், ஆரம்ப காலகட்டத்தில் அவர்கள் இருவருக்கும் உதவியர்கள் பலர். உஷா லௌடோங்பாம், பாவிஷுக்கு நிறுவனத்தின் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் விஷனுக்கு உதவ, அஜிங்க்யா போத்தார் என்பவர் ஓலாவின் முதல் ஆண்ட்ராய்டு ஆப்-ஐ தொடங்கினார். குஷால் போகடியே என்பவர் iOS அப்ளிகேஷனை ஏற்படுத்திக் கொடுக்க, முதலில் பெங்களூரு மற்றும் மும்பையைத் தளமாக கொண்டு ''ஓலா டிரிப்ஸ்'' டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் ஆஃப்ரேட்டராக உதயமானது.
ஆரம்பித்த எட்டு ஆண்டுகளில் 110 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டி பில்லியன் டாலர் மதிப்புள்ள ஸ்டார்ட்அப் நிறுவனமாக அறியப்பட்டாலும், ஆரம்பத்தில் ஓலாவை சந்தையில் நிலைநிறுத்த பாவிஷ் மற்றும் அங்கித் இருவரும் பல சவால்களை சமாளிக்க வேண்டியிருந்தது.
பாவிஷ் பெங்களூருவில் இருந்துகொண்டு ட்ரிப் பிடிக்கும் முயற்சியில் இருந்தால், அதே நேரத்தில் அங்கித் மும்பையில் ஐஐடி-பாம்பேக்கு அருகிலுள்ள ஒரு பழைய குடியிருப்பில் தங்கி கோடிங் பணிகளைக் கவனிப்பார். இன்னும் சில சமயங்களில் ஓட்டுநர்கள் பணிக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. அந்த நேரங்களில் பாவிஷே ஓட்டுநராக செயல்பட வேண்டிய தேவையும் இருந்துள்ளது. அதேபோல், அங்கித் தொடர்ந்து 48 மணிநேரம் கோடிங் பணிகளை கவனிக்க வேண்டிய நிலையும் இருந்துள்ளது.
இதுபோன்ற வேலைப்பளு இருவரின் உற்சாகத்தைக் கொஞ்சம்கூட குறைக்கவில்லை. இருவரும் இரவு பகல் என எல்லா நேரங்களிலும் உழைத்தனர். ஒருகட்டத்தில் ஓலா ட்ரிப்ஸின் உண்மையான சந்தை என்ன என்பதை இருவரும் முழுமையாக உணர்ந்தனர். அதுவே டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் சேவையில் இருந்து விரைவாக 'ஓலா' சவாரி-ஹைலிங் சேவைத் தொடங்க வழிவகுத்தது.
'ஓலா ட்ரிப்ஸ்' 'Ola Cabs' என உருமாறியது. இறுதியில், மக்கள் அவர்களின் முயற்சிகளை அங்கீகரிக்கத் தொடங்கினர். அதேநேரம், இரண்டு ஆண்டுகள் உழைப்பின் பயனாக முதலீடுகளும் ஓலாவை நோக்கி வரத் தொடங்கின. மும்பையில் இருந்து பெங்களூருக்கு தளத்தை மாற்ற, இதன்பின் நடந்தவை அனைத்தும் வரலாறு...
“உங்கள் நிறுவனத்தை உருவாக்க குறுக்கு வழிகளில் செல்லாதீர்கள்... நல்ல பாதையில் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்!”
ஐந்தாவது யூனிகார்ன்:
ஆண்டாண்டுகளாக இருக்கும் கேப் சேவையை, ஒருவித சொகுசு அம்சங்களுடன், கையிலுள்ள போனில் பட்டனை தட்டினால், குறிப்பிட்ட தொகைக்கு கார் வீட்டு வாசலில் வந்து நிற்பது இந்தியர்களுக்கு ஒரு புதிய அனுபமாக இருந்தது.
2018-ம் ஆண்டுக்குள், 168 நகரங்களில் சேவைகளை வழங்கி 110 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டிய ஓலா கேப்ஸ், இந்தியாவின் ஐந்தாவது யூனிகார்ன் நிறுவனமாக 5 பில்லியன் டாலர் மதிப்பீட்டில், இப்போது உலகம் முழுவதும் 250 நகரங்களில் சேவைகளை வழங்கி வருகிறது. ஒவ்வொரு நாளும் 2 லட்சத்துக்கும் அதிகமான புக்கிங் பெற்று இந்திய கேப்ஸ் நிறுவனங்களில் ஓலா ஓர் ஆதிக்க சக்தியாக விளங்கி வருகிறது.
ஒரு நிறுவனம் பெரிதாக பேசப்பட்டால், அதற்கு போட்டி நிறுவனம் உண்டாகும் அல்லவா? ஓலாவுக்கும் அப்படித்தான் போட்டி நிறுவனங்கள் பல உள்ளன. குறிப்பாக உபெர் (Uber), ஓலாவின் பலமான போட்டி நிறுவனமாகும். அதேபோல், Carzonrent மற்றும் Zoomcar போன்றவை கண்ணுக்கு தெரியாத வகையிலும் ஓலாவுக்கு கடும் போட்டியைக் கொடுத்தன.
ஆனால், இந்த நிறுவனங்களில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு பல சேவைகளை வழங்கியது ஓலா. பட்ஜெட், லக்ஸரி பயண விருப்பங்கள் முதல் தள்ளுபடி ஆபர்களையும் அளித்தது.
மேலும், மோட்டார் பைக்குகள் மற்றும் ஆட்டோ ரிக்ஷா (Ola Auto) சேவைகளை குறைந்த விலையில் கொடுத்துடன், ஒரே பயணத்தில் இருவர் மூவர் என ஷேரிங் செய்யும் பயண விருப்பங்களையும் கொடுத்து இந்தியா உட்பட பல நாடுகளில் நடுத்தர மக்களின் அன்றாட வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியது ஓலா.
ஒரு மோசமான அனுபவம் ஒரு பெரிய சாம்ராஜ்ஜயத்தை ஏற்படுத்த வழிவகுத்துள்ளது. ஓலாவின் வெற்றிப்பயணத்தில் பாவிஷின் பங்களிப்பு அதிகம். இதனால் அவரே, அதற்கான பயனையும் அதிகம் எடுத்துள்ளார் எனலாம். டிசம்பர் 2019 புள்ளிவிவரங்களின்படி, பாவிஷ் அகர்வாலின் நிகர மதிப்பு ரூ.3,135 கோடி.
ஒரு தொழில்முனைவோரின் வளர்ச்சி என்பது, ஒரேயொரு நிறுவனத்தை தொடங்கி அதில் வெற்றி காண்பது என்பதோடு நின்றுவிடாது என்பதற்கு பாவிஷும் ஓலாவும் சிறந்த உதாரணம்.
சில ஆண்டுகள் முன்பு FoodPanda இந்தியாவை வாங்கிய பாவிஷ், அடுத்தகட்ட பாய்ச்சலாக இந்தியாவில் வளர்ந்து வரும் மின்சார வாகனப் பிரிவிலும் கால்பதித்தார்.
ஓலா எலக்ட்ரிக் பைக் நிறுவனத்தைத் தொடங்கி, அதிலும் வெற்றிகண்டுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ’ஓலா எலக்ட்ரிக் பைக்’ நிறுவனமும் யூனிகார்ன் கிளப்பில் நுழைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சரி, இந்த அளவுக்கு முதலீட்டை எப்படி ஓலா திரட்டி வளர்ந்தது?
இந்தக் கேள்வியை பாவிஷிடம் முன்வைத்தால் அவர் சொல்லும் பதில் நமக்கு வேறொரு கோணத்தில் எந்த ஒரு தொழிலையும் அணுக வைக்க நிச்சயம் உதவி செய்யும்.
“முதலீட்டை அதிகரிப்பது கடினமான ஒன்றல்ல. ஒரு சிறந்த டீமை உருவாக்குவதும், அந்த டீமுடன் நிறுவனத்தை வளரவைப்பதுதான் கடினமான ஒன்று...” என்கிறார்.
யூனிகார்ன்ஸ் தொடரும்...!
(கட்டுரை தொகுப்பு உதவி: ஜெய்)