‘உலகம் என் வீடு; மக்கள் எனது பெற்றோர்; சேவை செய்வது என் மதம்’ - பத்மஸ்ரீ விருது பெற்ற 125 வயது சுவாமி சிவானந்தா!
குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில், 125 வயதான யோகா பயிற்சியாளர் சுவாமி சிவானந்தா திடீரென பிரதமர் நரேந்திர மோடியின் காலில் விழுந்து வணங்கிய நிலையில், பிரதமரும் அவரது காலில் வணங்கிய நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியது.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில், 125 வயதான யோகா பயிற்சியாளர் சுவாமி சிவானந்தா திடீரென பிரதமர் நரேந்திர மோடியின் காலில் விழுந்து வணங்கிய நிலையில், பிரதமரும் அவரது காலில் வணங்கிய நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியது.
இந்தியாவின் உயரிய விருதுகளில் பத்ம ஸ்ரீ விருதும் ஒன்று. கலை, சமூகப்பணி, பொதுநலன், அறிவியல், பொறியியல், வர்த்தகம், விளையாட்டு, குடிமைப் பணிகள், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி என பல்வேறு துறைகளில் சிறந்து விளக்குபவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு, பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ ஆகிய 3 பிரிவுகளின் கீழ் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு மொத்த 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் 34 பேர் பெண்கள், 13 பேருக்கு அவர்களது இறப்பிற்கு பிறகு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்ம விபூஷண் விருது 4 பேருக்கும் பத்ம பூஷண் 17 பேருக்கும் பத்ம ஸ்ரீ 107 பேருக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில் அதிகம் கவனம் ஈர்த்த பெயர் சுவாமி சிவானந்தா, அதற்கான காரணம் என்ன, யார் இவர் என விரிவாக பார்க்கலாம்...
யார் இந்த சுவாமி சிவானந்தா?
இந்தியா பிரிக்கப்படுவதற்கு முன்பு தற்போது வங்க தேசத்தில் உள்ள சில்ஹெட் மாவட்டத்தில் ஆகஸ்ட் 8, 1896 இல் பிறந்தார் சிவானந்தா, தனது ஆறு வயதில் தனது தாயையும் தந்தையையும் இழந்தார். அதன் பின்னர், மேற்கு வங்காளத்தில் உள்ள நபத்வீப்பில் குரு ஓம்காரானந்த கோஸ்வாமி அவர்களால் யோகா உள்ளிட்ட ஆன்மீகக் கல்வியைப் பெற்றார்.
இளம் வயதிலேயே பெற்றோரை இழந்ததாலும், யோகா போன்ற ஆன்மீக வழியில் பயணித்ததாலும் சிவானந்தாவின் கொள்கை சிறப்பானதாக உள்ளது.
"உலகம் என் வீடு, அதன் மக்கள் என் தந்தை மற்றும் தாய், அவர்களை நேசிப்பதும் சேவை செய்வதும் என் மதம்," என்பதை தனது கொள்கையாக கொண்டுள்ளார்.
யோகா பயிற்சியாளராக உள்ள சுவாமி சிவானந்தா, கடந்த 50 ஆண்டுகளாக, பூரியில் உள்ள தொழுநோயால் பாதிக்கப்பட்ட 400-600 பிச்சைக்காரர்களுக்கு சேவை செய்து வருகிறார். சுவாமி சிவானந்தாவின் ஆரோக்கியமான மற்றும் நீண்ட ஆயுள் உலகம் அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
யோகா பயிற்சி காரணமாக இதுவரை பெரிதாக சிகிச்சை எடுத்துக்கொள்ளாத சிவானந்தா, தனது 125 வயதில் தடுப்பூசி போட்ட பிறகு, மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறார்.
125 வயதிலும் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வரும் சுவாமி சிவானந்தாவை இந்தியா அளவில் புகழ் பெற்ற பல மருத்துவமனை நிபுணர்களும் முழு உடல் பரிசோதனை செய்து பார்த்துள்ளனர். அவரது வாழ்க்கை முறையைக் கவனிப்பதற்காக, அவரது முக்கிய உறுப்புகள் மற்றும் அமைப்புகளின் கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டு நிலையை மதிப்பிட்டுள்ளனர்.
மேலும், தனது ஆரோக்கியம் மற்றும் ஆயுள் நீட்டிற்கு யோகாவை தினமும் பயிற்சி செய்து வருவதே காரணம் என பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளார்.
2019ம் ஆண்டு பெங்களூருவில் ஜூன் 21ம் தேதி, உலக யோகா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் யோகா ரத்னா விருது வழங்கப்பட்டது. 30 நவம்பர் 2019 அன்று சமூகத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக ரெஸ்பெக்ட் ஏஜ் இன்டர்நேஷனல் மூலம் அவருக்கு பசுந்தரா ரத்னா விருதினை வழங்கியது.
பிரதமர் காலில் விழுந்து வணங்கிய சுவாமி சிவானந்தா:
நேற்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு பத்ம விருதுகளை வழங்கினார். யோகா துறையில் ஆற்றிய பங்களிப்பிற்காக 125 வயதான யோகா பயிற்சியாளர் சுவாமி சிவானந்தாவிற்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
விருது பெற வந்த 125 வயது யோகா பயிற்சியாளர் சிவானந்தா, திடீரென பிரதமர் மோடியின் காலில் விழுந்து வணங்கினார். இதனை எதிர்பார்க்காத பிரதமர் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தார். பின்னர், உடனடியாக தனது இருக்கையில் இருந்து எழுந்த பிரதமர் பதிலுக்கு சுவாமி சிவானந்தாவின் காலில் விழுந்து ணங்கினார்.
மேலும், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அவையில் இருந்த அணைவரையும் வணங்கும் வகையில் தரையில் முழங்காலிட்டு சுவாமி சிவானந்தா வணங்கினார். இதனைக் கண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும், தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து, சுவாமி சிவானந்தாவை எழுந்து நிற்கவைத்தார். பின்னர் அவரிடம் பத்ம ஸ்ரீ விருதினை வழங்கி கெளரவித்தார்.
125 வயதில் விருது பெற்ற சிவானந்தா, இந்திய வரலாற்றிலேயே பத்ம விருது வென்றவர்களில் மிக வயதானவர் ஆவார். மேலும், அவருடைய இந்த சாதனைக்காக 'யோக் சேவக்' என்றும் வர்ணிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.