சுவையான சமையல் செய்முறை குறிப்புகளுடன் அதற்குத் தேவையான பொருட்களை விற்கும் ’AwesomeChef ’

சுவையான சமையல் செய்முறை குறிப்புகளுடன் அதற்குத் தேவையான பொருட்களை விற்கும் ’AwesomeChef ’

Tuesday December 20, 2016,

5 min Read

”என்னுடைய மூன்று வயது குழந்தையே அவனையறியாமல் எங்களது தொழில்முனைவுத் திட்டத்திற்கான விதையை விதைத்தான். அவன் அதிகச் சுட்டி. நாங்கள் முழுநேர பணியில் இருந்ததால், கடைகளுக்குச் செல்லவோ, உணவகங்களில் சாப்பிடவோ அரிதாக இருந்தது. நல்ல உணவு என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். புதுப்புது உணவு வகைகளை சமைக்க முயற்சி செய்வேன். அதை வலைதளத்தில் ஆர்வமாக பதிவிடுவேன்,”
கணவர் ப்ரவீண் குமார் உடன் அஞ்சலி ஆனந்த்

கணவர் ப்ரவீண் குமார் உடன் அஞ்சலி ஆனந்த்


என்று தொடங்கினார் வணிகவியல் துறையில் பட்டம் பெற்ற அஞ்சலி ஆனந்த். முழுநேர அக்கவுண்ட்ஸ் பணியில் இருந்த அஞ்சலி எட்டு ஆண்டுகளாக அவரது கணவர் ப்ரவீண் குமார் உடன் நடத்தி வந்த உணவு வலைதளம் www.awesomecuisine.com. இதில் தனது ரெசிப்பிக்களை பதிவிடுவார் அவர். இத்தளத்தை பயன்படுத்திய பலர், சில சமையல் குறிப்புகளுக்குத் தேவையான ஒரு சில பொருட்களை வாங்குவதில் சிரமம் இருப்பதாகவும் விலை உயர்ந்ததாக இருப்பதாகவும் அஞ்சலியிடம் தெரிவித்தனர். ஒரு புதிய சமையல் குறிப்பை முயற்சி செய்ய அதற்குத் தேவையான பொருளை குறைந்தபட்சம் 50 கிராம் அல்லது 100 மி.லி போன்ற அளவுகளில் மட்டுமே வாங்க முடிவதால் சிரமமாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் கூறினர். சில நேரம் அந்த பொருட்கள் பயன்பாட்டிற்கு உகந்த நாட்களுக்குள் உபயோகப்படுத்த முடியாமல் போய்விடுவதால் அதில் பெரும்பாலான பகுதி வீணாகிவிடுகிறது என்பதை கருத்துகளாக பெற்றனர் அஞ்சலி மற்றும் அவரது கணவர். இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக இந்த தம்பதி உருவாக்கியதுதான் ஆசம்செஃப்’ (Awesome Chef) எனும் புதிய முயற்சி.

சந்தை மற்றும் ’Awesome Chef ’ செயல்பாடுகள்

மாஸ்டர்செஃப், கிச்சன் சூப்பர்ஸ்டார்ஸ் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாலும் பிரபலமான செஃப்களான வெங்கடேஷ் பட், சஞ்சீவ் கபூர், ஜெமி ஆலிவர் போன்றோர்களாலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் புதிய சமையல் வகைகளை முயற்சிப்பதில் பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.

சமையல் திறமையை வளர்த்துக்கொள்ள இன்று ஆண்களும் குழந்தைகளும் அதிக அளவில் விரும்புகின்றனர். பதப்படுத்தப்பட்ட உணவுக்கான தேவை சந்தையில் இருப்பினும் தாங்கள் எப்படிப்பட்ட உணவு வகையை சாப்பிடுகிறார்கள் என்பதில் மக்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியர்கள் வீட்டில் சமைத்து சாப்பிடுவதையே விரும்புகின்றனர். ஆனால் வீட்டில் சமைப்பது அதிக நேரம் எடுப்பதாகவும் கடினமாக இருப்பதாகவும் பலர் குறிப்பாக இளம் வயதினர் கருதுகின்றனர், என்று சந்தையின் தேவையை விளக்கினார் அஞ்சலி. 

image


ஒரு புதிய உணவு வகையைச் செய்ய வேண்டுமானால் ஒவ்வொரு கடையாக சென்று தேவையான பொருட்களை வாங்கவேண்டும். மேலும் குறைந்தபட்ச அளவு காரணமாக தேவையான அளவிற்கு அதிகமாக வேறு வழியின்றி வாங்கவேண்டிய நிலைமை உள்ளது. அவ்வாறு முயற்சித்தாலும் அந்த குறிப்பிட்ட உணவின் சுவை மாறுபட்டிருக்கும். அனுபவமின்றி புதிதாக சமையல் செய்பவர்களுக்கு மேலும் கடினமாக இது இருக்கிறது. இப்படிப்பட்ட தேவைகளுக்கென பிரத்யேகமாக உருவானதுதான் Awesome Chef. 

”ஒரு குறிப்பிட்ட உணவு வகையைச் செய்யத் தேவையான பொருட்கள் மிகச்சரியான அளவுகளில் எங்களது கிட்டில் கிடைக்கும். அந்த பொருட்களை மொத்தமாக வாங்கிவந்து தேவையான அளவுகளில் பிரித்து நாங்கள் பேக் செய்வதால் சமைப்பதற்கேற்ப சுலபமாக இருக்கும்,” என்கிறார் அஞ்சலி.

சேவை மற்றும் தனித்துவம்

அனுபவமின்றி சமைப்பவர்களுக்குக்கூட எளிதில் புரியும் விதமான குறிப்புகள் இவர்களின் தளத்தில் உள்ளது. இதனால் ஒவ்வொரு முறையும் உணவின் சுவை குறையாமல் அப்படியே உள்ளது இதன் சிறப்பம்சம். அதே சமயம் ஒவ்வொரு பொருளையும் வாடிக்கையாளரின் கண்ணெதிரே காட்டுவதால் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் மறைமுகமான பொருட்கள் எதுவும் இதில் சேர்க்கப்படவில்லை என்பதை வாடிக்கையாளர்கள் நம்பலாம் என்கிறார் அஞ்சலி.

இரண்டிலிருந்து மூன்று நபர்களுக்கு சமைப்பதற்குத் தேவையான பொருட்களின் விலை 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை ஆகும். வெவ்வேறு வித உணவு வகைகளை வாடிக்கையாளர்கள் எந்தவித சிரமமும் இன்றி முயற்சி செய்வதற்கு ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கித் தருகிறார்கள். தற்போது சென்னையில் மட்டும் இவர்கள் இயங்கி வருகின்றனர். 

வரவேற்பு

இவர்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவர்களின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் குழந்தைகள். Awesome Chef மூலம் பொருட்களை வாங்கி, செய்முறையை பின்பற்றி, புதிய உணவு வகைகளை முயற்சித்து தங்கள் பெற்றோருக்கு விருந்து படைக்கின்றனர் பல குழந்தைகள். தாய் கரி, பீநட் நூடுல்ஸ், சீஸ் போண்டா என்று பல விதவிதமான உலக உணவுவகைகள், இனிப்புகள், சாலட்கள், பாஸ்தா வகைகள் என்று எல்லாம் செய்முறையோடு தேவையான பொருட்களுடன் இந்த தளத்தில் விற்பனைக்கு உள்ளது. 

”வெளியில் உணவகங்களுக்குச் சென்று சாப்பிடும் முறையை முற்றிலுமாக அகற்றிவிட முடியாது. ஆனால் அதற்கான செலவு அதிகரித்து வருவதால் இந்த புதிய யோசனையை பலரும் வரவேற்று ஆதரிக்கின்றனர்,” என்றார் அஞ்சலி.
image


முதலீடு, பிரச்சனைகள் மற்றும் சவால்கள்

முதலீடு விஷயத்தில் மிகப்பெரிய சவாலை சந்தித்ததாக சொன்னார் அஞ்சலி. 

”எங்களது நோக்கம் மிகத் தெளிவாக இருந்தது. வீட்டிலிருந்து செய்யும் சேவையாக இல்லாமல் ஒரு ப்ராண்டை உருவாக்க விரும்பினோம். இதற்கு கணிசமான முதலீடு அவசியம். தற்போது சுய நிதியில் எங்கள் நிறுவனம் இயங்கி வருகிறது.”

யோசனையை பரிசோதனை செய்வது, பொருட்களை வாங்குவது, பேக் செய்வது, ப்ராண்டை உருவாக்குது உள்ளிட்ட பலவற்றில் பிரச்சனைகளை சந்தித்தோம். நாங்கள் செய்த அனைத்துமே புதிதாகவும் சவால் நிறைந்ததாகவும் இருந்தது. இதில் ஒரு சில சவால்கள் உடனடியாக சரிசெய்யும் வண்ணம் இருந்தது. வேறு சில சவால்களை சரிசெய்ய கூடுதல் கால அவகாசம் தேவைப்பட்டது. கார்ப்பரேட் சூழலிலிருந்து மாறி இப்படிப்பட்ட தொழில் சூழலை ஏற்றுக்கொள்ள சிறிது காலம் பிடித்தது என்று பகிர்ந்தார் அஞ்சலி. 

வழியை மாற்றியமைத்து புதிய மனிதர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவது, பிரச்சனைகள் வருவதற்கு முன் எதிர்பார்த்து தீர்வுகள் காண்பது, தெளிவற்ற சூழலில் பணிபுரிவது போன்ற பல மிகப்பெரிய மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்றார் அஞ்சலி. தொழில்முனைவில் அனுபவமுள்ள கணவர் ப்ரவீண் குமார் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அவருக்கு உதவியிருக்கிறார்.

”மார்க்கெட்டிங் செய்வதுதான் மிகப்பெரிய சவாலாக இருந்தது. சுய நிதியில் இயங்குவதால் குறைவான நிதி வசதியே உள்ளது. இதைக்கொண்டு ஒரு சில மார்க்கெட்டிங் நடவடிக்கைகளின் மூலம் எங்களது சேவை குறித்த விழிப்புணர்வை செய்து வருகிறோம். சென்னையைப் பொருத்தவரை இந்த யோசனை புதிது என்பதால் வாடிக்கையாளர்களை சந்திக்கையில் பல விஷயங்களை எடுத்துரைக்கவேண்டி உள்ளது.”

குழு விவரம், வருங்கால திட்டங்கள்

கணவன் மனைவி என இருவரும் அடங்கிய குழு கொண்டு இயங்குகிறது Awesome Chef. அஞ்சலி இணை நிறுவனராக இருக்கிறார். எழுத்து அனுபவமிக்கவர், தளத்தை உருவாக்குவது, மேம்படுத்துவது போன்ற பணிகளும் தளத்தில் வெளியிடப்படும் உணவு முறைகளை பரிசோதிக்கும் பணிகளும் இவரது மேற்பார்வையில் இயங்கிவருகிறது. 

அஞ்சலியில் கணவர் ப்ரவீண் குமார் இதன் நிறுவனர். 2009-ல் ’வைல்ட் க்ரீக்’ எனும் நிறுவனத்தை தொடங்குவதற்கு முன்பு இரண்டு சிறந்த இணைய நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். இணையதளம் சார்ந்த துறையில் பத்து ஆண்டுகள் அனுபவமிக்கவர். Awesome Chef  நிறுவனத்தின் உருவாக்கம், நடைமுறைப்படுத்துதல் போன்ற அனைத்து அன்றாட நடவடிக்கைகள் இவரது பொறுப்பில் உள்ளன. வலைதளங்கள் உருவாக்குவதில் ஆழ்ந்த அனுபவமிக்கவர். நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து அதன் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறார்.

பொருட்களை கொண்டு சேர்க்க மார்க்கெட்டிங் ஊழியர்களை நியமிக்க உள்ளனர். மேலும் ஒரு செஃப் இவர்களுடன் இணைய உள்ளார். இவர்களுக்கு என்று ஆலோசகர்கள் எவரும் இல்லை. எனினும் நிகெல்லா லாசன், விகாஸ் கண்ணா, ஜெமி ஆலிவர், அந்தோனி போர்டெய்ன், கெய்லிக்வாங் உள்ளிட்ட உலகளவில் பிரசித்தி பெற்ற பல செஃப்களை முன்மாதிரியாக கொண்டுள்ளனர்.

10 முதல் 16 வயது வரையிலுள்ளவர்கள் அவர்களின் உணவில் என்னென்ன இருக்கிறது, எப்படி தயாரிக்கப்படுகிறது, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் எவை போன்றவற்றைத் தெரிந்துகொள்ளவேண்டும். ஏனெனில் இவர்கள்தான் அடுத்த தலைமுறையினருக்கு வழிகாட்டவேண்டும். இதன் காரணமாகவே இவர்களின் ரெசிபிக்கள் அனைத்தும் 10 வயது குழந்தையாக இருந்தாலும் அல்லது 40 வயதில் அனுபவமின்றி முதல் முறையாக சமைப்பவராக இருந்தாலும் எளிதாக முயற்சிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எப்போதும் பெண்கள் மட்டுமே செய்யவேண்டிய தினசரி வேலையாக அல்லாமல் சமையல் குறித்த தகவல்கள் அனைவருக்கும் எளிதாக கிடைக்க விரும்பினார்கள் அஞ்சலியும் அவரது கணவரும்.

“உணவு எங்கிருந்து கிடைக்கிறது, எப்படி சமைப்பது, உடல்நலத்தை எப்படி பாதிக்கிறது போன்ற அடிப்படைத் தகவல்களை பள்ளியில் பயிலும் அனைத்து குழந்தைகளும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். படிப்பது எழுதுவது போலவே இந்த வாழ்க்கைத் திறனும் முக்கியமானதாகும். ஆனால் கடந்த சில தலைமுறைகளாகவே இதை நாம் கற்றுக்கொள்ள தவறிவிட்டோம். குழந்தைகளுக்கு கட்டாயம் இது குறித்து கற்றுத்தர வேண்டும்,”

என்ற செஃப் ஜெமி ஆலிவரின் வார்த்தைகள் முற்றிலும் உண்மை, என்று கூறும் அஞ்சலி இதை நோக்கியே தங்கள் தொழில் பயணமும் இருப்பதாக கூறி விடைபெற்றார். 

இணையதள முகவரி: AwesomeChef