பாறை இடுக்கில் சிக்கிய இளைஞர் மீட்பு; ராணுவத்திற்கு உதவிய சென்னை ட்ரோன் நிறுவனம்!
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் பாறை இடுக்கில் சிக்கிய இளைஞரை இந்திய ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர். இந்தியாவையே பரபரப்பில் ஆழ்த்திய இந்த சம்பவத்தில் ட்ரான் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று தன்னுடைய பங்களிப்பை செலுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் பாறை இடுக்கில் சிக்கிய இளைஞரை இந்திய ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர். இந்தியாவையே பரபரப்பில் ஆழ்த்திய இந்த சம்பவத்தில் ட்ரோன் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று தன்னுடைய பங்களிப்பை செலுத்தியுள்ளது.
பாறை இடுக்கில் சிக்கிய இளைஞர்:
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மழப்புழாவில் உள்ள குரும்பாச்சி என்ற மலைக்கு பாபு என்ற 23 வயது இளைஞர் தனது 3 நண்பர்களுடன் சென்றுள்ளார். மலையேற்றத்தின் போது நடுவழியில் கால் தவறியதில் பாபு உருண்டு விழுந்து, அதிர்ஷ்டவசமாக பாறை இடுக்கில் இருந்த சிறிய குகையில் சிக்கிக் கொண்டார். இதில் அவரது கால்களில் சிராய்ப்பு ஏற்பட்டது. அவரை மீட்க தீயணைப்பு வீரர்கள் 2 நாட்களாக முயற்சி செய்தனர்.
ஆனால், அவர்களால் பாபு சிக்கியுள்ள இடத்தை அடையாளம் காண முடியவில்லை. இதை தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தொடங்கியது. நீண்ட நேரத்திற்கு பின் பாபு சிக்கியுள்ள இடத்தை ஹெலிகாப்டர் மூலம் கண்டறிந்தனர். ஆனால், ஹெலிகாப்டர் மூலமாக இளைஞரை மீட்கும் முயற்சி தோல்வி அடைந்தது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், இந்திய ராணுவத்திடம் உதவி கோரினார்.
இதனையடுத்து, கடந்த செவ்வாய் கிழமை வெலிங்டன்னில் இருந்தும், இன்று பெங்களூருவில் இருந்தும் விரைந்த மலையேற்ற பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள் பாறை இடுக்கில் சிக்கியிருந்த பாபுவை பத்திரமாக மீட்டனர்.
கிட்டதட்ட 2 நாட்களாக உணவு, தண்ணீர் இன்றி தவித்து வந்த பாபு, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
தன்னை மீட்ட இந்திய ராணுவப்படையினருக்கு உருக்கமாக நன்றி தெரிவித்த பாபு, ராணுவ வீரர்களை முத்தமிட்டு தான் உயிர் தப்பிய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இளைஞரை மீட்க உதவிய ட்ரோன் ஸ்டார்ட் அப்:
இந்தியாவிலேயே ட்ரோன் சேவையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் கருடா ஏரோஸ்பேஸ் என்ற சென்னை ஸ்டார்ட் அப் நிறுவனமும் பாறையில் சிக்கிய இளைஞரை மீட்க முக்கியப் பங்காற்றியுள்ளது. இந்நிறுவனம் விவசாயம், பாதுகாப்பு, வன விலங்கு கண்காணிப்பு, மீட்புப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கும் ட்ரோன் சேவை வழங்கி வருகிறது.
இந்நிலையில், தற்போது இந்தியாவே எதிர்பார்த்த இளைஞர் பாபுவின் மீட்பு விவகாரத்திலும் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவன ட்ரோன்கள் தனது பங்களிப்பை செலுத்தியுள்ளது. இந்த மீட்பு பணிக்காக கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் இரண்டு ட்ரோன்கள் மற்றும் அதனை இயக்க இரண்டு பைலட்டுகளை அனுப்பிவைத்தது. அவர்கள் ட்ரோன்களை பறக்கவிட்டு, பாபு சிக்கியுள்ள பகுதியை சரியாகக் கண்டுபிடித்தனர்.
மேலும், 48 மணி நேரத்திற்கும் மேலாக உணவு, தண்ணீர் இன்றி தவித்து வந்த பாபுவுக்கு, 15 கிலோ வரை எடையை தாங்கக் கூடிய ட்ரோன் மூலமாக உணவு மற்றும் குடிநீரையும் ராணுவத்தினர் அனுப்பிவைத்தனர்.
பாபுவை இந்திய ராணுவப் படையினர் கயிறு மூலம் மீட்கத் திட்டமிட்டனர். எனவே, 2.5 மிமீ தடிமன் கொண்ட பிளாட்டினா + நைலான் ஸ்டீல் கேபிள் கருடாவின் தனித்துவமான ஸ்டிரிங்கிங் ட்ரோன் மூலமாக பாறை இடுக்கில் சிக்கியுள்ள பாபுவிடம் கொண்டு சேர்க்கப்பட்டது. இதன் மூலமாக மலை முகட்டில் இருந்து இறங்கிய ராணுவ வீரர்கள், பாபுவை பத்திரமாக மீட்டனர்.
எல்&டி மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் போன்ற வாடிக்கையாளர்களுக்கு வயர் ஸ்டிரிங் ஆபரேஷன்கள் மற்றும் நீண்ட உயர் அழுத்த கம்பிகளை இணைப்பது போன்ற பணிகளில் கருடா ஸ்ட்ரிங்கிங் ட்ரோன் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு: கனிமொழி