'கம்ப்யூட்டர் பெண்கள் 1' - கணினி தேவதை ‘அடா லவ்லேஸ்’
கம்ப்யூட்டர் என்பது கருத்தாக்கமாக இருந்த காலத்தில் கம்ப்யூட்டருக்கான முதல் புரோகிராமை எழுதிய முன்னோடி அடா லவ்லேஸ்.
’கம்ப்யூட்டர் பெண்கள்’ - 1
அடா லவ்லேசின் (Ada Lovelace) தோற்றத்தைப் பார்த்தால், விக்டோரியா காலத்து பேரழகி என நினைக்கத்தோன்றும். அடா அழகி மட்டும் அல்ல, அறிவாளி என்பதும் தான் விஷயம். ஆம், கம்ப்யூட்டர் உலகின் முதல் புரோகிராமிங்கை உருவாக்குத்தந்தவராக அவர் அறியப்படுகிறார்.
உலகின் முதல் கம்ப்யூட்டர் நடைமுறையில் உருவாக்கப்படாமல் கருத்தாக்கமாகவே இருந்த காலத்தில் அந்த இயந்திரத்திற்கான புரோகிராமை அடா உருவாக்கிக் கொடுத்தார் என்பது தான் இன்னும் சிறப்பு. கணிதத்தில் அவருக்கு இருந்த திறமையும், எதிர்கால இயந்திரமான கம்ப்யூட்டரின் தேவை மற்றும் பயன்பாடு குறித்து அவருக்கு இருந்த தொலைநோக்கான புரிதலுமே இதற்கு அடிப்படையாக அமைந்தது.
அடாவையும், கம்ப்யூட்டர் உருவாக்கத்தில் அவரது பங்களிப்பையும் தெரிந்து கொள்ள விக்டோரியா காலத்திற்கு திரும்பிச்செல்ல வேண்டும்.
இங்கிலாந்து விக்டோரியா காலத்தில் அடியெடுத்து வைக்கத் தயாராகிக் கொண்டிருந்த நிலையில், 1815ம் ஆண்டு, அகஸ்டா அடா பைரனாக அடா பிறந்தார். அடாவின் தந்தை வேறு யாருமல்ல, உலகமே கொண்டாடிய ஆங்கில கவிஞர் லார்டு பைரன் தான். காவியக் கவிஞராக அறியப்பட்ட பைரன், தனிவாழ்க்கையில் கோபாவேசமான சிக்கலான மனிதராக இருந்தார்.
எனவே, அடாவின் அம்மா ஆனி இஸ்பெல்லா, அடா பிறந்த ஒரு மாதத்தில் கணவரிடம் இருந்து பிரிந்து மகளோடு தனியே வாழத்துவங்கி விட்டார். ஆனி துணிச்சல் மிக்கவராக மட்டும் அல்லாமல் நன்கு படித்தவராகவும் இருந்தார். இலக்கியம், தத்துவம், அறிவியல் மற்றும் கணிதத்தில் அவருக்கு நல்ல பரிட்சியம் இருந்தது. மகள் அப்பாவை போல கற்பனாவாதியாக இருக்கக் கூடாது என நினைத்த ஆனி, அடாவுக்கு கணிதம், இசை, பிரெஞ்சு மொழி ஆகிய பாடங்களை கற்றுத்தந்தார்.
ஆனால், அடா தந்தையிடம் இருந்து கற்பனை வளத்தை வரித்துக்கொண்டிருந்தார். இருப்பினும் அவரது கற்பனை புனைவுலகில் மையம் கொள்ளாமல் அறிவியல் வானில் சிறகடித்து பறந்தது. தாய் மற்றும் தாதியர் அரவணைப்பில் வளர்ந்த அடா, பத்து வயது சிறுமியாக இருந்த போது பறப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். பறக்கும் இயந்திரங்கள் அவரை வசீகரித்தன. அதிலும் குறிப்பாக கடல் கடந்து ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று வந்த பிறகு அவருக்கு பறக்கும் இயந்திரங்கள் மீதான ஆர்வம் அதிகமானது.
புதிய கண்டுபிடிப்புகளின் வடிவமைப்புப் படங்களை விரிவாக அலசி ஆராய்ந்தவர் அறிவியல் சஞ்சிகைகளையும் தேடித்தேடிப் படித்தார். நீராவி இயந்திரம் கொண்டு இயங்கிய பறக்கும் இயந்திரத்தை தன்னால் வடிவமைக்க முடியும் என்று நம்பியவர் இதற்காக பறவைகளின் உடலமைப்பையும் ஆய்வு செய்வதில் ஈடுபட்டார்.
பொதுவாக பெண்கள் கல்வி கற்பது அதிகம் ஊக்குவிக்கப்படாத காலகட்டத்தில் அடா முதல் தரமான கல்வியை பெற்றார். ஆசிரியர்கள் வீடு தேடி வந்து அவருக்கு பாடம் நடத்தினர். இந்த வரிசையில், ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மேரி சோமர்வில்லே என்பவர் ஆசிரியராக அமைந்தார். இதை அடாவின் அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.
ஏனெனில், வானவியல் மற்றும் கணிதத்தில் வல்லுனராக இருந்தவர், புகழ்பெற்ற கணித மேதை லாப்லஸ் எழுதிய ’தி மெக்கானிசம் ஆப் ஹெவன்ஸ்’ புத்தகத்தை ஐந்து பாகங்களாக மொழிபெயர்த்திருந்தார்.
அடாவுக்கு மேரி, கணித நுட்பங்களை கற்றுத்தந்தோடு, சார்லஸ் பேபேஜ் (Charles Babbage) எனும் கணித மேதையை அறிமுகம் செய்து வைத்தார். நவீன கம்ப்யூட்டருக்கான கருத்தாக்கத்தை முதன் முதலில் முன்வைத்தவராக இன்றளவும் கொண்டாடப்படும் பேபேஜ், தனது கருத்தாக்கத்தில் இருந்த இயந்திரத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது தான், அடாவுக்கு அறிமுகம் ஆனார்.
அப்போது சார்லஸ் பேபேஜுக்கு 42 வயது. அடாவுக்கு 17 வயது. இந்த வயது வேறுபாட்டை மீறி இருவரும் நல்ல நண்பர்களாயினர். கணிதமே அவர்களை இணைக்கும் பாலமாக அமைந்தது. பேபேஜ் இளம் அடாவுக்கு நண்பராகவும் இருந்தார், வழிகாட்டியாகவும் விளங்கினார்.
1833 ஆண்டு லண்டனில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சி ஒன்றில் தான் பேபேஜை அடா முதலில் சந்தித்தார். விருந்து நிகழ்ச்சிக்கே உரிய கேளிக்கைகளுக்கு நடுவே, பேபேஜ் தான் உருவாக்கிக் கொண்டிருக்கும் நவீன இயந்திரம் பற்றி விவரித்துக்கொண்டிருந்தார். எண்ணற்ற சக்கரங்களைக் கொண்டிருந்த அந்த இயந்திரம் துல்லியமாக கணக்குகளை போடும் திறன் கொண்டிருக்கும் என அவர் கூறினார். இந்த இயந்திரத்தை உருவாக்குவதற்காக அரசின் நிதியுதவியையும் பெற்றிருந்தார்.
விருந்தில் பங்கேற்றவர்களில் எத்தனை பேரை பேபேஜின் இயந்திரம் கவர்ந்தது எனத்தெரியாது. ஆனால் இளம் அடா, பேபேஜ் இயந்திரத்தின் பால் ஈர்க்கப்பட்டார். அடுத்து சில நாட்களில் அடாவின் அம்மா அவரை பேபேஜ் வீட்டிற்கே அழைத்துச்சென்றார். ’டிபரன்ஸ் இஞ்ஜின்’ (Difference Engine) எனும் பெயரில் தான் உருவாக்கிக் கொண்டிருந்த இயந்திரத்தின் முன்னோட்ட வடிவை பேபேஜ் இளம் அடாவுக்கு காண்பித்து அதன் செயல்பாடுகளை விளக்கினார்.
பேபேஜ் இயந்திரம் இன்னும் முடிக்கப்படாத நிலையில் அதன் சாத்தியத்தை புரிந்து கொண்டவராக அடா இருந்தது தான் வியப்பு. இந்த ஆர்வத்தால் அவர் பேபேஜுடன் தொடர்ந்து கடிதப் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்தார். கணிதம் பற்றியும், கணக்குகளை போடக்கூடிய இயந்திரம் பற்றியும் அவர்கள் கடிதம் மூலம் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர்.
இதனிடையே பேபேஜ் இந்த இயந்திரத்தை முழுவதும் உருவாக்காமலே அடுத்த இயந்திரமான ’அனல்டிகல் இஞ்ஜினை’ (Analytical Engine.) உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதனால் அவருக்கு நிதி அளித்த அரசு தரப்பு அதிருப்தி அடைந்தாலும், பேபேஜின் புதிய இயந்திரம் முந்தைய இயந்திரத்தில் இருந்து பெரும் பாய்ச்சலாக இருந்தது.
கணக்கிடும் பகுதி, இணைப்பு பகுதி மற்றும் ஒருங்கிணைந்த நினைவுத்திறன் உள்ளிட்டவற்றை கொண்ட அந்த இயந்திரம், நவீன கம்ப்யூட்டருக்கான அடிப்படைகளைக் கொண்டதாக இருந்தது தான் கவனிக்கத்தக்க விஷயம்.
அந்த காலகட்டத்தில் அறிமுகம் ஆகியிருந்த ஜக்கர்டு லூம் (Jacquard loom) விசைத்தறி பன்ச் கார்டு முறையில் தானாக நெசவு செய்தது போல பேபேஜின் இயந்திரம் பன்ச் கார்டு முறையில் கணக்குகளை போடும் வகையில் கட்டளை பெறக்கூடியதாக இருந்தது. ஆனால், பேபேஜால் இந்த இயந்திரத்தையும் முழுவதுமாக உருவாக்க முடியவில்லை.
அனல்டிகல் இஞ்ஜினை உருவாக்குவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக பேபேஜ் லூயிகி மெனாபிரியா (Luigi Federico Menabrea) எனும் கணித மேதையை சந்தித்திருந்தார். அவர் இந்த இயந்திரம் பற்றிய அறிமுகக் கட்டுரையை எழுதுவதாக ஒப்புக்கொண்டு பிரெஞ்சு மொழி அறிவியல் சஞ்சிகையில் அதை வெளியிடவும் செய்தார்.
அனல்டிகல் இஞ்ஜின் கருத்தாக்கத்திலும் அதிக அக்கரைக் கொண்டிருந்த அடா, இந்த கட்டுரையை பிரெஞ்சு மொழியில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். கட்டுரையுடன் அடிக்குறிப்புகளாக தனது கருத்துக்கள், விளக்கத்தையும் இணைத்திருந்தார்.
எனவே, மூலக் கட்டுரையை விட அடாவின் கட்டுரை மும்மடங்கு பெரிதாக இருந்தது. அந்த அளவு அடிக்குறிப்புகள் அடர்த்தியாக இருந்தன. (இதனிடையே அடாவுக்கு திருமணம் ஆகியிருந்தது. திருமணத்திற்கு இன் லவ்லேஸ் எனும் பெயர் அவருடன் ஒட்டிக்கொண்டது. அடாவின் கணவர், அவரது கணித ஆர்வத்தை ஊக்குவிக்கக் கூடியவராக இருந்தது அவரது அதிர்ஷடமாக அமைந்தது).
1843ல் வெளியான இந்தகட்டுரையின் அடிக்குறிப்புகளில் தான், கம்ப்யூட்டர் உலகிற்கான அடாவின் பங்களிப்பு அடங்கியிருக்கிறது. ஆம், அனல்டிகல் இஞ்ஜின் கருத்தாக்கம், செயல்பாடுகளை அடா அத்தனை அழகாக விளக்கியிருந்தார்.
ஜக்கார்டு நெசவு இயந்திரத்தின் அடிப்படையைக் கொண்டு, பேபேஜின் இயந்திரம் செய்யக்கூடிய மாயங்களை அவர் வர்ணித்திருந்தார். ஜக்கார்டு இயந்திரம் எப்படி, துணிகள் மீது எண்ணற்ற வடிவமைப்பை நெய்யக்கூடியதோ அதே போல, பேஜேஜின் இயந்திரம் அல்ஜீப்ரா உள்ளிட்ட கணிதவியல் சமன்பாடுகளை நிறைவேற்றித்தரக்கூடியது என அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், குறிப்பிட்ட வகையான கணிதவியல் சமன்பாடுகளை நிறைவேற்ற இந்த இயந்திரம் எவ்வாறு உதவும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதற்கு உதாரணமாக அவர் எடுத்துக்கொண்ட பெர்னல்லி எண்கள் (Bernoulli numbers) உருவாக்குவதற்கான வழிமுறைகளையும் விரிவாக எழுதியிருந்தார்.
ஒரு இயந்திரம் செயல்படுத்தத் தேவையான ஆணைகளை தெளிவாகக் கொண்டிருந்த இந்த குறிப்பு உண்மையில், ஒரு கம்ப்யூட்டருக்கான ஆணைத்தொடர் என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். இதன் காரணமாகவே, இந்த ஆணைத்தொடர் வரிசையை எழுதிய அடா லவ்லேஸ் உலகின் முதல் புரோகிராமராக அறியப்படுகிறார்.
”கணிதத்தில் இருந்து உருவான செயல்முறைகளின் அறிவியல் தன்னளவிலே அறிவியல் என்பதோடு, தனக்கான புரியாத உண்மையையும், மதிப்பையும் கொண்டிருக்கிறது,” என அடா இந்த குறிப்புகளுடன் எழுதியிருந்தார்.
கணிதத்தில் இருந்து பிரித்தெடுத்து கிட்டத்த கம்ப்யூட்டர் அறிவியலை அடா அப்போது உருவாக்க முயற்சித்ததாக இப்போது கொண்டாடப்படுகிறார்.
பேபேஜ் கருத்தாக்கத்தில் இருந்ததையும் கடந்து அவரது இயந்திரத்தின் சாத்தியங்களை அடாவால் நினைத்துப்பார்க்க முடிந்ததாகவும் அவரது அடிக்குறிப்புகளை ஆய்வு செய்பவர்கள் வியந்து போய் கூறுகின்றனர்.
ஆக, கம்ப்யூட்டர் எனும் இயந்திரமே உருவாக்கப்படாத ஒரு காலகட்டத்தில் நின்று கொண்டு, கணிதவியல் சமன்பாடுகளை உள்ளீடாக பெறும் வகையிலான இயந்திரம் ஆணைத் தொடர்களுக்கு ஏற்ப கணக்கு போடுவதை கடந்து பல விஷயங்களை செய்யக்கூடிய திறன் கொண்டிருக்கும் என நினைத்துப்பார்த்த தொலநோக்கிற்காக அடா கொண்டாடப்பட வேண்டியவராகிறார்.
அதனால் தான் அவரை பேபேஜ் ’தேவதை’ என வர்ணித்தார். கம்ப்யூட்டர் தேவதை!
உலகின் முதல் புரோகிராமராக இருந்தும், கம்ப்யூட்டர் துறைக்கான அடா லவ்லெஸ் பங்களிப்பு மிக தாமதமாகவே உணரப்பட்டது. அடா லவ்லேஸ் பங்களிப்பு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் அவரது பெயரில் ’அடா லவ்லேஸ் தினம்’ கொண்டாடப்படுகிறது. அவரது பெயரில் ஒரு புரோகிராமிங் மொழியும் இருக்கிறது. அடா லவ்லேஸ் தொடர்பாக எண்ணற்ற வாழ்க்கை வரலாறு நூல்களும் வெளியாகியுள்ளன. அடாவை கொண்டாடும் வகையிலான இணையதளங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
கம்ப்யூட்டர் பெண்கள் தொடர்வார்கள்...