45 ரூபாயில் 100 கிமீ பயணம்: சென்னையை கலக்க வரும் இ-ஆட்டோக்கள்!
காற்று மாசுபடுவதை தடுத்து, பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் முயற்சிக்காக, ரூ.100 கோடி நிதி முதலீட்டுடன் ’எம் ஆட்டோ’ நிறுவனம், சென்னையில் மட்டும் 4000 மின்சார ஆட்டோக்களை அறிமுகப்படுத்த உள்ளது.
சுற்றுச்சூழல் மாசு என்பது உலகம் முழுவதும் உள்ள மிகப்பெரிய பிரச்சினை. இதனை எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்து உலகளவில் பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்தியாவிலும் சுற்றுச்சூழல் மாசு என்பது மிக அதிகமாகவே உள்ளது.
திடக்கழிவு, திரவக்கழிவு என இருவகையான கழிவுகள் பூமியை மாசுப் படுத்துகின்றன. இவற்றை விட மிக அபாயகரமான மாசு, காற்று மாசு. இதற்குக் காரணம் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் புகை மட்டும் மல்ல, நம் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையும்கூடத் தான். உண்மையை சொல்வதென்றால், வாகனங்களில் இருந்து வெளியேற்றப்படும் புகை தான் அதிக காற்று மாசை ஏற்படுத்துகிறது.
இதனை கட்டுப்படுத்த நிறைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மோட்டார் வாகனச் சட்டத்தில் இதற்காக நிறைய சட்டங்கள் உள்ளன. அதன்படி புதிதாக தயாரிக்கப்படும், இருசக்கர வாகனம், கார், ஆட்டோ போன்றவைகளுக்கு நிறைய அளவுகோள்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படியே ஒரு வாகனம் தயாரிக்கப்பட்டாலும், அவ்வாகனங்களின் எரிப்பொருள் பெட்ரோல் மற்றும் டீசலாக இருப்பதால் காற்று மாசை கட்டுப்படுத்துவது சிரமமாகத் தான் உள்ளது.
இந்தச் சூழ்நிலையில் தான், இந்தப் பிரச்சினைக்கு மாற்று ஏற்பாடாக மின்சார வாகனங்கள் அறிமுகப் படுத்தப்பட்டு வருகின்றன. மத்திய, மாநில அரசுகளே அவ்வகை வாகனங்களுக்கு மானியம் வழங்கி ஊக்கப்படுத்தி வருகின்றது. இதுவரை மின்சாரத்தால் இயங்கக்கூடிய பேட்டரி பைக் மற்றும் கார்கள் தான் சந்தையில் இருக்கின்றன.
முதல் முறையாக எலக்ட்ரிக் ஆட்டோக்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையைச் சேர்ந்த 'M Auto' நிறுவனம் இதனை செய்யும் பொறுப்பை ஏற்றுள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துபாய் சென்றிருந்த போது, அவர் முன்னிலையில் இதற்கான புரிந்துணர்வு செய்யப்பட்டது.
எம் ஆட்டோ நிறுவனம், துபாயை சேர்ந்த KMC குழுமத்திடன் இருந்து 100 கோடி ரூபாய் நிதி பெற்று, இத்திட்டத்தை சென்னையில் விரைவில் துவங்க உள்ளது. இங்கேயே தொழிற்சாலை அமைத்து வருடத்திற்கு 4000 மின்சார ஆட்டோக்களை அந்நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இந்தத் திட்டத்தில் உள்ள முக்கிய அம்சம் என்னவெனில், எம் ஆட்டோ நிறுவனம் புதிதாக ஒரு ஆட்டோவைக் கூட தயாரிக்கப் போவதில்லை. பழைய பெட்ரோல் ஆட்டோக்களை மின்சார ஆட்டோக்களாக அவர்கள் மாற்றித்தரப் போகிறார்கள். இதில் இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த மின்சார ஆட்டோக்களை ஓட்டப்போவது முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே.
எனேவே ஒருபுறம் சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்துவதுடன், மறுபுறம் பெண்கள் மேம்பாட்டிற்கும் வழி வகுத்துள்ளது எம் ஆட்டோ நிறுவனம்.
ஒரு வருடத்துக்கு தயாரிக்கப்படும் 4000 ஆட்டோக்களும் பெண்கள் வசமே ஒப்படைக்கப்படும். முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இதுவும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
"ஒவ்வொரு ஆட்டோவிலும் ஒரு பாதுகாப்பு பொத்தான், டிரைவருக்கான கவச பெல்ட், சிசிடிவி கேமரா ஆகியவை இடம்பெற்றிருக்கும். இதன் மூலம் பயணி மற்றும் டிரைவரின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். இந்த ஆட்டோ பெட்ரோல் ஆட்டோவை போலவே இயங்கும். மூன்று பயணிகளும், ஒரு டிரைவரும் இந்த ஆட்டோவில் பயணிக்கலாம். அதிகபட்சம் வேகம் 70 கிலோ மீட்டராகும். ஒருமுறை முழுதாக சார்ஜ் போட்டால் சுமார் 100 கிலோ மீட்டர் வரை இந்த ஆட்டோ மைலேஜ் கொடுக்கும்," என்கிறார் எம் ஆட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி யாஸ்மின் ஜவஹர் அலி.
எம் ஆட்டோ நிறுவனம் சென்னையில் தனது தொழிற்சாலையை தொடங்குவதன் மூலம் மறைமுகமாகவும், நேரடியாகவும் என மொத்தமாக பத்தாயிரம் பேருக்கும் மேல் வேலை கிடைக்கும். தொழிற்சாலை தொழில்நுட்ப ஊழியர்கள் முதற்கொண்டு, ஆட்டோ ஓட்டுவது வரை அனைவருமே பெண்கள் தான்.
சமீபத்தில் ஆஸ்திரேலிய அரசின் பிரதிநிதிகள் சென்னை வந்திருந்த போது எம் ஆட்டோ நிறுவனத்தின் 10 ஆட்டோக்களில் சவாரி செய்தனர். அதில் ஒன்று மின்சார ஆட்டோ. அவர்களது பயணம் மிக ஜாலியாக இருந்ததாகவே அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்த ஆட்டோக்களின் மூலம் பொதுமக்களும் அதிக பயன் அடைவார்கள். ஏனென்றால் இந்த ஆட்டோக்களின் கட்டணம் மிகவும் குறைவு. சாதாரண ஆட்டோக்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது ரூ.400க்காவது பெட்ரோல் ஊற்றியாக வேண்டும். ஆனால் நமது மின்சார ஆட்டோக்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.40 செலவு செய்தால் போதுமானது. எனவே குறைந்த கட்டணத்தில் ஆட்டோவில் ஜாலியாக பயணிக்கலாம்.
நிச்சயம் இந்தத் திட்டம் காற்று மாசுக்கு எதிராகவும், பெண்கள் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதமாகவும் இருக்கும். அதோடு, பொதுமக்களின் போக்குவரத்திற்கும் மிகக் குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான வசதியையும் இது ஏற்படுத்தித் தரும் என நம்பலாம்.