மரங்களை அழிக்காமல் இந்த 5 பொருட்களில் இருந்தும் பேப்பர் தயாரிக்கலாம் தெரியுமா?
இன்றைய டிஜிட்டல் உலகிலும் பேப்பர் பயன்பாடு குறையாத நிலையில் பேப்பர் தயாரிப்பிற்கு மரக்கூழுக்கான சிறந்த மாற்றாக விளங்கக்கூடிய 5 பொருட்களை பட்டியலிட்டுள்ளோம்.
இன்று உலகமே டிஜிட்டல்மயமாகிவிட்டது. தகவல் பரிமாற்றம் இன்று புதிய பரிமாணத்தை எட்டியிருக்கிறது. இருந்தபோதும் கைகளால் எழுதப்படும் பழக்கத்திற்கும் அச்சிடப்படும் முறைக்கும் என்றென்றும் அழிவில்லை. இதனால் பேப்பர் பயன்பாடும் முற்றிலும் தொலைந்துவிடவில்லை.
ஆனால் பேப்பர் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த பாதிப்பு நம் கற்பனைக்கும் எட்டாதது.
பேப்பர் தயாரிப்பிற்கான முக்கிய மூலப்பொருள் மரங்களில் இருந்து பெறப்படும் மரக்கூழ். எத்தனையோ நூறாண்டுகளாக இதுவே மூலப்பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் காடுகள் அழிந்துபோகிறது. இதன் விளைவாக பருவநிலையும் சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
இருப்பினும் தொழில்நுட்ப வளர்ச்சியாலும் பசுமையான மாற்றுப் பொருட்களாலும் மரங்களில் இருந்து எடுக்கக்கூடிய மரக்கூழ் பயன்பாட்டைத் தவிர்க்கமுடியும். பல நாடுகளில் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டாலும் பேப்பர் உற்பத்தித் துறையில் மாற்றத்தைக் கொண்டு சேர்க்கவேண்டிய அவசியம் நிலவுகிறது.
இந்த மாற்றத்தை சாத்தியப்படுத்த உதவும் வகையில் மரம் சாரந்த பேப்பர்களுக்கான சிறந்த, சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப்பொருட்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
கரும்பு சக்கை
பள்ளிக் குழந்தைகளிடையே மிகவும் பிரபலமான நவ்நீத் நோட்புக் நினைவிருக்கிறதா? நோட்புக் உள்ளே சிறிதாக குறிப்பு ஒன்று எழுதப்படிருக்கும். அதில் இந்தத் தயாரிப்பு கரும்பு சக்கையால் ஆனது என குறிப்பிடப்பட்டிருக்கும்.
கரும்பில் இருந்து சாறு எடுக்கப்பட்ட பிறகு மீதமுள்ள சக்கை 45 சதவீத செல்லுலோஸ், 28 சதவீத பெண்டோசன், 20 சதவீத லிக்னின், 5 சதவீத சர்க்கரை, 2 சதவீத மினரல்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இதிலுள்ள அதிகளவிலான செல்லுலோஸ் கொண்டு இழைகள் தயாரிக்கமுடியும். இது பேப்பர் துறைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தற்போது இந்தக் கரும்பு சக்கை வணிக ரீதியான பல்வேறு தயாரிப்புகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இதிலுள்ள நார்கழிவுகள் நீக்கப்பட்ட பிறகு இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தக் கழிவு செய்தித்தாள், அச்சிடுவதற்கான பேப்பர்கள், டிஷ்யூ, பேக்கேஜிங் பாக்ஸ் போன்றவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தலாம்.
மூங்கில் கூழ் பேப்பர்
மூங்கில் பேப்பர்களும் நேரடியாக செடியில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்றாலும் இது புதுப்பிக்கத்தக்கது. மூங்கில் செடி மண் வளம் குறைவாக இருந்தாலும் எளிதாக வளரக்கூடியது.
மரக்கூழ் போன்றே மூங்கிலால் ஆன தயாரிப்புகளை எளிதாக மறுசுழற்சி செய்யலாம். இதன் உறுதித்தன்மை, அச்சிடும் திறன் போன்றவை மரக்கூழ் பேப்பர் போன்றே தரமாக இருக்கும்.
மூங்கில் பேப்பர்களைப் பல இடங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம். பிளீச் செய்யப்பட்ட பேப்பர் டைப் செய்யவும் ஆஃப்செட் பிரிண்டிங்கிற்கும் பயன்படுத்தப்படும் பேப்பரைத் தயாரிக்க உதவும். அதேசமயம் பிளீச் செய்யப்படாத பேப்பர் பேக்கேஜ் செய்ய உதவும்.
கெனாஃப்
கெனாஃப் செடி தென்னமெரிக்கா மற்றும் இத்தாலியின் சில பகுதிகளில் பயிரிடப்படுகிறது. இதன் இழைகள் ஊசியிலை மரம் போலவே இருக்கும். இதனால் மரத்திற்கான சிறந்த மாற்றாக பல இடங்களில் பயன்படுகிறது.
இந்த இழைகள் நீடித்திருக்கும். பசுமையான கட்டிடங்கள் கட்டுவதற்கு உகந்தது. இந்தச் செடி வளரும் இடத்தில் மண் புதுப்பிக்கப்படும். அத்துடன் இது 100 சதவீதம் மறுசுழற்சிக்கு உகந்தது.
பேப்பருக்கான சிறந்த மாற்றாக கெனாஃப் பயன்படுத்தப்படுகிறது. இந்த வகை பேப்பர் மரக்கூழுக்கு அடுத்தப்படியாக அதிக பயன்பாட்டில் இருக்கிறது. பழங்காலத்தில் ஆடை தயாரிப்பிற்கும் இது பயன்படுத்தப்பட்டது.
கல்லில் இருந்து காகிதம்
கேட்டால் நம்பமுடியவில்லை இல்லையா? கல்லை பேப்பர் வெயிட்டாக மாற்றலாம், ஆனா பேப்பராக மாற்ற முடியுமா என்ன? உண்மைதான். கல்லில் இருந்து தயாரிக்கப்படும் காகிதங்கள் கேல்ஷியம் கார்போனேட் மற்றும் சிறியளவிலான அதிக அடர்த்தியான பாலிஎத்திலீன் ரெசின் கலவையால் தயாரிக்கப்படுகிறது.
சுண்ணாம்பு காகிதம் என்றழைக்கப்படும் இந்தப் பொருள் உறுதியானது. மக்கும்தன்மை கொண்டது. எளிதில் உரமாக்கிவிடலாம். அதேபோன்று மினரல் அதிகம் கொண்ட பேப்பராக மீண்டும் மறுசுழற்சி செய்யமுடியும்.
இன்ங், இன்ங்ஜெட் பிரிண்டர் போன்றவற்றிற்கு இந்த பேப்பர் உகந்தது. ஆனால் லேசர் பிரிண்டர்களுக்கு இது ஏற்றதல்ல. ஸ்டேஷனரி, புத்தகங்கள், பத்திரிக்கைகள், வால்பேப்பர், பேக்கேஜிங் போன்றவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தலாம்.
பருத்தி காகிதம்
மற்ற மாற்றுப் பொருட்களுடன் ஒப்பிடுகையில் பருத்தி காகிதம் விலை உயர்ந்தது. பெரும்பாலும் முக்கிய ஆவணங்கள் மட்டுமே இந்த வகை காகிதத்தில் அச்சிடப்படும். பருத்தி இழைகளை முக்கிய மூலப்பொருளாகக் கொண்டு இது தயாரிக்கப்படுகிறது. உறுதித்தன்மை மற்றும் நீடிப்புத்தன்மையைப் பொருத்தவரை மரக்கூழ் தயாரிப்புகளைக் காட்டிலும் பருத்தி காகிதம் சிறந்ததாக இருக்கும்.
பருத்தி காகிதங்கள் வெவ்வேறு தரங்களில் கிடைக்கின்றன. தரத்தின் அடிப்படையிலேயே அவற்றின் பயன்பாடு அமைகிறது. மிகச்சிறந்த தரத்திலான காகிதம் நூறாண்டுகளுக்கும் மேல் நீடித்திருக்கும். பெரும்பாலான நாடுகளில் இந்த வகை பேப்பர்கள் கரன்சி நோட்டுக்கள் அச்சிட பயன்படுத்தப்படுகின்றன.
ஆங்கில கட்டுரையாளர்: அஞ்சு அன் மேத்யூ | தமிழில்: ஸ்ரீவித்யா