Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

5 ஆண்டு உழைப்பு; 12 மணி நேரம் படிப்பு; குமரி மாவட்டத்தில் இருந்து தேர்வாகி இருக்கும் முதல் பெண் ஐபிஎஸ்!

சமீபத்தில் குடிமைப் பணியில் தேர்வாகி ஐபிஎஸ் அதிகாரியாக இருக்கிறார் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபீனா.

5 ஆண்டு உழைப்பு; 12 மணி நேரம் படிப்பு; குமரி மாவட்டத்தில் இருந்து தேர்வாகி இருக்கும் முதல் பெண் ஐபிஎஸ்!

Friday October 09, 2020 , 3 min Read

இந்திய இளைஞர்களின் உச்சபட்ச கனவு அல்லது லட்சியம் இந்திய குடிமைப் பணித் தேர்வில் வெற்றிபெற்று ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரி ஆவதாகத்தான் இருக்கும். அந்தளவுக்கு உயர்ந்த பணியாக இருக்கும் இப்பணிக்குத் தேர்ச்சி பெறுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல.


மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் தயாரானால்தான் இத்தேர்வில் தேர்ச்சி பெற முடியும். அத்தகைய தேர்வில்தான் சமீபத்தில் தேர்வாகி ஐபிஎஸ் அதிகாரியாக இருக்கிறார் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபீனா.


கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ள ஆற்றூர் மங்களநடையைச் சேர்ந்தவர் பிரபீனா. இவரின் தந்தை பிரேமசந்திரன் ஓய்வுபெற்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளர். இவரின் தாயார் ரெஜினா ஓய்வு பெற்ற தலைமையாசிரியை. பிரபீனாவின் சகோதரர் டால்பின் பிரேம், இறகுப் பந்து பயிற்சியாளர். இவ்வாறு சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்து, தனது கடின முயற்சியால் இன்று ஓர் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வாகி இருக்கிறார் பிரபீனா.

பிரபீனா1

பிரபீனா ஐபிஎஸ்.

இவரின் இந்த வெற்றியால், இவருக்கும், இவரது குடும்பத்துக்கும் மட்டுமின்றி, தனது மாவட்டத்துக்கே பெருமை தேடித்தந்துள்ளார் பிரபீனா. ஆம், குமரி மாவட்டத்தில் இருந்து ஐபிஎஸ் அதிகாரி பதவிக்குத் தேர்வாகி இருக்கும் முதல் பெண் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுகுறித்து பிரபீனா நம்மிடம் தெரிவித்ததாவது, எங்கள் பகுதியிலேயே பள்ளிப் படிப்பை முடித்த நான், மதுரை தியாகராஜர் கல்லூரியில் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்தேன். என்னோடு படித்தவர்கள் எல்லாம் பிளேஸ்மென்டில் பணி கிடைத்து செல்லும்போது, நான் மட்டும் எந்த இன்டர்வியூவிலும் கலந்து கொள்ளவில்லை.

வேலைக்குச் சென்றுவிட்டால், குடிமைப் பணித் தேர்வில் பங்கேற்று மக்கள் சேவை செய்யும் எனது கனவு நனவாகாது என்பதால், அப்போதே நான் எனது தேர்வுக்கான தயாரிப்புகளைத் தொடங்கினேன், என்றார்.

கோயம்புத்தூரில் உள்ள ஓர் அகாதெமியில் சேர்ந்து குடிமைப் பணித் தேர்வுக்கு தயாரானேன். தொடர்ந்து முதல் 3 முறை தேர்வில் தோல்வியே கிடைத்தது. அப்போது எனது பெற்றோரும், குடும்பத்தினரும் எனக்கு தொடர்ந்து ஊக்கமளித்தனர். நம்பிக்கையூட்டினர். இதனால் புத்துணர்ச்சியுடன் மனம் தளராமல் பயிற்சியைத் தொடர்ந்தேன்.


எனது முயற்சிக்கு பலன் கிடைத்தது. 4ஆம் முயற்சியில் வெற்றிபெற்று ஐ.ஆர்.டி.எஸ் (IRTS - The Indian Railway Traffic Service) தேர்வானேன். ஐ.ஆர்.டி.எஸ். பயிற்சியில் இருக்கும்போதே 5ஆவது முறையாக தேர்வு எழுதி, அதில் 445ஆவது இடம் கிடைக்க, ஐ.பி.எஸ். அதிகாரியாகத் தேர்வானேன் என தனது தொடர் போராட்டத்தை ரத்தினசுருக்கமாய் கூறினார்.

இந்த வெற்றியைப் பெற இவர் கடந்த 5 ஆண்டுகளாக உழைத்த உழைப்பு சாதாரணம் இல்லை. நாளொன்றுக்கு சுமார் 10 முதல் 12 மணி நேரம் வரை படிப்பு, மாதிரித் தேர்வுகள் என தேர்வுக்கு பயிற்சி பெற்றதோடு, தான் பயிற்சி பெற்ற அகாதெமியில் உள்ள மாணவர்களுக்கு வகுப்புகளையும் எடுத்துள்ளார்.

மேலும், தன்னுடன் பயிலும் தனது நண்பர்களுடன் இணைந்து குழுவாக படிப்பது, குழு விவாதம் என தங்களின் நேரத்தை செம்மையாக முழுமையாகப் பயன்படுத்தியுள்ளார். நாள் முழுவதும் படிப்பு, படிப்பு என இருக்காமல் மாலை வேளையில் 1 மணி நேரம் ஓதுக்கி நடைப்பயிற்சி, விளையாட்டுகள் என தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வார்களாம்.

பிரபீனா2

பெற்றோருடன் பிரபீனா

இவ்வாறு கடினமாக உழைத்து இன்று ஓர் ஐபிஎஸ் அதிகாரியாகி இருக்கும் பிரபீனா, குடிமைப் பணித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தனது அனுபவங்களைப் பகிர்கிறார்.

இத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் முதலில் ஓன்றை புரிந்து கொள்ளவேண்டும். லட்சக்கணக்கானோர் எழுதும் இத்தேர்வில் வெற்றிபெற Hardwork மட்டும் போதாது. Smart workம் அவசியம். தன்னம்பிக்கையோடு கடுமையாக போராடினால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.

முதல் முயற்சியிலேயே இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கை மிகமிக குறைவு. அதற்காக தளர்ந்து விடக்கூடாது. மீண்டும் மீண்டும் முயற்சி செய்து கொண்டே இருக்கவேண்டும். வாழ்க்கையில் தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்கவேண்டும்.

நமக்கு முன் தேர்வுக்குத் தயார் ஆனவர்கள், நமக்குப் பிறகு தயார் ஆகிறவர்கள் என அனைவரிடமும் ஏதேனும் ஓர் விஷயம் கற்றுக்கொள்ள இருக்கும். அதனை கிரகித்துக் கொள்ளவேண்டும். தவறுகளில் இருந்து பாடம் கற்கவும், எப்போதும் நேர்மறை எண்ணங்களுடன் வாழவும் கற்றுக் கொண்டாலே போதும் இத்தேர்வை எளிதில் வெல்லலாம் என்கிறார்.

பிரபீனா3

மக்கள் பணியாற்ற இறைவன் அளித்த இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனக் கூறும் பிரபீனா, இம்மாத தொடக்கத்தில் ஐபிஎஸ் பயிற்சிக்காக புறப்படுகிறார்.


வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையை இழக்காமல் விடாமுயற்சியுடன் போராடினால் லட்சியத்தை தங்குதடையின்றி கட்டாயம் அடைய முடியும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாய் விளங்குகிறார் பிரபீனா ஐபிஎஸ்.