6 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்குப் பயிற்சி, ரூ. 30 கோடி லாபம்: தளவாடத் துறையில் தடம் பதித்த இளம்பெண்
ஓர் இளம் பெண் தொழிலைத் தொடங்கி மிக குறுகிய காலத்தில் அதில் முத்திரை பதிப்பதென்பது சாதாரண விஷயமல்ல.
இன்று பெண்கள் கால்பதிக்காத துறையே இல்லை எனலாம். தங்களது கல்வி அறிவாலும், தன்னம்பிக்கையினாலும் தாங்கள் நுழைந்த துறைகளில் தங்களின் முத்திரையைப் பதித்து விடுகின்றனர். ஓர் தொழிலைத் தொடங்கி மிகக் குறுகிய காலத்தில் அதில் முத்திரை பதிப்பதென்பது சாதாரண விஷயமல்ல. அது ஓர் சாதனை.
அத்தகைய சாதனையைத்தான் நிகழ்த்தியிருக்கிறார் திவ்யாஜெயின் (35). இவர் தனது குடும்பத்தால் நடத்தப்படும் இந்தியாவின் முன்னணி தளவாட நிறுவனங்களில் ஒன்றான ’சேஃப் எக்ஸ்பிரஸ்’ல் பணிபுரிந்து வந்தார். அப்போது, இத்துறையில் திறமையான பணியாளர்கள் இல்லாதது. மேலும், அவர்கள் தங்களது பணியை முழுமூச்சுடன் ஈடுபாட்டுடன் செய்யாததைக் கண்டு மனம் வருந்தினார். இக்குறையைப் போக்க தளவாடத் துறையில் உள்ள பணியாளர்களுக்கு பயிற்சியளிக்கத் திட்டமிட்டார்.
இதற்காக அவர், 2013 இல் தில்லியைத் தளமாகக் கொண்டு 'சேஃப்டுகேட்' 'Safeducate' எனும் நிறுவனத்தைத் தெடாங்கினார். இதன் மூலம் நிறுவனத்தின் லாரி ஓட்டுநர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு தளவாடங்கள் மற்றும் அவற்றை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு முறையாக, சரியான நேரத்தில் விநியோகிப்பது போன்றவற்றில் பயிற்சி அளித்து வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது,
"பொருள்கள் மற்றும் தளவாடங்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லும் இத்துறையின் வளர்ச்சி ஆச்சரியப்படத்தக்கது. ஆனால் இந்தத் துறையில் உள்ளவர்களின் வாழ்க்கை, குறிக்கோள் போன்றவை பணம் சம்பாதிப்பதில் மட்டுமே இருப்பது மிகுந்த வேதனையளித்தது."
ஒவ்வொரு லாரி ஓட்டுநரும், தளவாட டெலிவரி நபர்களும், கிடங்கு ஆபரேட்டர்கள் மற்றும் தளவாட கணக்காளர்கள் போன்றவர்கள் இன்னும் எவ்வாறு தங்களின் பணியை செம்மையாக செய்யமுடியும் என்று கற்பனை காணவேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்கிறார். திவ்யா, ஏற்கெனவே தனது குடும்ப வியாபாரத்தில் ஈடுபட்டிருந்ததாலும், பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து வந்ததாலும் அவருக்கு இப்பணி எளிதாக இருந்தது. ஆனாலும், இந்த ஒழுங்கமைக்கப்படாத தொழிலில் திறமையான மனித வளத்தை முழுமையாகப் பயன்படுத்த விரும்பினார்.
தளவாடத் துறையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பயிற்றுவிப்பதன் மூலமும், சான்றளிப்பதன் மூலமும், தான் எதிர்பார்க்கக்கூடிய திறமையான பணியாளர்களை உருவாக்கமுடியும் என திவ்யா முடிவெடுத்தார்.
ஏறக்குறைய 6 ஆண்டுகளில், அலகாபாத், சப்ரா, மத்னாபூர், தியோகர் உள்பட இந்தியா முழுவதும் உள்ள 153 மையங்களில் இருந்து சுமார் 50,000 பேருக்கு 'சேஃப்டுகேட்' முலம் பயிற்சி அளித்துள்ளார். இதன்மூலம் இவரது நிறுவனம் ரூ. 30 கோடி வரை லாபம் ஈட்டியுள்ளது.
3 முதல் 6 மாத கால திறன் மேம்பாடு பயிற்சியை எங்களது நிறுவனம் வழங்குகிறது. இதில், இரண்டு வகையான படிப்புகள் உள்ளன. நுழைவு நிலை மற்றும் மேலாண்மை பயிற்சித் திட்டம்.
நுழைவு நிலை பாடநெறி சி.எஸ்.ஆர் மற்றும் மத்திய அரசு மூலம் நிதியுதவி மூலம் நடைபெறுகிறது, அதே நேரத்தில் பாடநெறியின் காலத்தின் அடிப்படையில் மேலாண்மை பயிற்சி தொகுதிக்கு ரூ.30,000 முதல் 50,000 வரை வசூலிக்கிறோம். நாங்கள் கிராமங்களில் உள்ள சுய உதவிக் குழுக்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கு தளவாடத் துறையில் உள்ள எதிர்கால வாய்ப்புகள் குறித்து விளக்குகிறோம். மேலும், இந்தியாவின் முதல் கொள்கலன் பள்ளிகளில் ஒன்றைத் தொடங்குவதற்கும் சேஃப்டுகேட் அங்கீகாரம் பெற்றுள்ளது.
மறுசுழற்சி செய்யப்பட்ட கப்பல் கொள்கலன்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட சேஃப்டுகேட் கொள்கலன் பள்ளியை, பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 15, 2015ஆம் தேதி திறந்துவைத்தார் எனப் பெருமிதத்துடன் கூறுகிறார் திவ்யா.
செயற்கை நுண்ணறிவு (Artificial Inteligence) போன்ற அதிநவீன தொழில்நுட்பங்கள் இந்தியாவில் முன்னேற்றமடைந்து வருவதால், தளவாடத் துறையின் வேலை வாய்ப்பிலும் அதிநவீன மாற்றங்களைக் கொண்டு வர, செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் வேலைவாய்ப்புப் போர்ட்டலை சேஃப்டுகேட் நிறுவனம் தொடங்கியுள்ளது.
இந்த போர்ட்டல் மூலம் இத்துறையில் வேலைதேடும் இளைஞர்கள் தங்களின் சுயவிவரங்களைப் பதிவேற்றலாம். இந்த விவரங்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம், அவர்களின் கல்வித் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் முறையாகப் பட்டியலிடப்பட்டு, தேவைப்படும் நிறுவனத்தின் மனித வளத் துறை மூலம் வீடியோ நேர்காணலுக்கு ஏற்பாடு செய்கிறது.
இதில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு பணியில் தேருவதற்கான பணிநியமன ஆணையும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் மாணவர்கள் தங்களது சான்றிதழ்களைத் தூக்கிக் கொண்டு தொலைதூரத்தில் உள்ள நிறுவனங்களுக்கு பணி தேடி செல்லும் சிரமம் மற்றும் அலைச்சல் குறைகிறது என்கிறார்.
மேலும், சேஃப்டுகேட், கார்ஓஜாப் என்ற மெய்நிகர் ரியாலிட்டி (virtual reality) முறையையும் அறிமுகப்படுத்தி, மாணவர்களுக்கு சில்லரை விற்பனை, உற்பத்தி, கிடங்கு போன்றவற்றில் உள்ள பல்வேறு வேலைகள் மற்றும் சவால்கள் குறித்து காட்சிகளுடன் கூடிய செயல்முறை விளக்கம் அளிக்கிறது.
இதனால் புதிதாக பணியில் சேர்பவர்களுக்கு அந்த பணி குறித்த கவலைகளை அகற்றுவதோடு மட்டுமன்றி, இந்த மெய்நிகர் ரியாலிட்டி போர்ட்டல் மூலமும் வீடியோ நேர்காணல்களுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. இதில், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணைகளும் வழங்கப்படுவது சிறப்பம்சம்.
சேஃப்டுகேட் நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர்கள் பிளிப்கார்ட் போன்ற பல பெரிய நிறுவனங்களில் நல்ல ஊதியத்தில் பணிக்குச் சென்றுள்ளதாகவும் திவ்யா குறிப்பிடுகிறார்.
தளவாடத் துறையின் பயிற்சித் திட்டங்களின் நன்மைகளை மக்களுக்குப் புரிய வைப்பதே எங்கள் நிறுவனம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று என்கிறார் திவ்யா. ஏனெனில் பெரும்பாலான மக்கள் தங்கள் வளர்ச்சிக்கு என்ன செய்யவேண்டும், என்ன பயிற்சி மேற்கொள்ளவேண்டும் என்பதை உணரவில்லை. இதனால், நாங்கள் வழங்கும் சான்றிதழ் மற்றும் பயிற்சியின் மதிப்பு பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது.
தொடக்கத்தில் மக்களை எங்கள் பயிற்சித் திட்டங்களில் சேர வைக்கவே மிகவும் கடினமாக இருந்தது. ஒரு பள்ளி, கல்லூரி கல்வியை மக்கள் புரிந்து கொண்ட அளவுக்கு கொள்கலன்களால் ஆன பள்ளிகளிலிருந்து பெறப்படும் விநியோகச் சங்கிலி மற்றும் தளவாடத் துறை குறித்த அடிப்படை கருத்துகளைப் புரிந்து கொள்வது சற்று கடினம்தான் என்கிறார் திவ்யா.
எனினும், கடந்த சில ஆண்டுகளில் இந்தச் சூழ்நிலை மாறிக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கும் அவர், தளவாடங்கள் மற்றும் விநியோக சங்கிலித் துறைகளில் திறன் வளர்ப்பு குறித்த முக்கியத்துவத்தை தொடர்ந்து மக்களுக்குக் கற்பிக்க வேண்டிய அவசியம் உள்ளது.
தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் (என்.எஸ்.டி.சி) அறிக்கையின்படி, தளவாடத் துறைக்கு 2022ஆம் ஆண்டளவில் 20 மில்லியன் பயிற்சி பெற்ற நபர்கள் தேவைப்படுவார்கள். எனவே, எங்களது சேஃப்டுகேட்டின் வளர்ச்சி வரம்பற்றதாக இருக்கும் என பெருமையுடன் கூறுகிறார் திவ்யா.
ஆங்கில கட்டுரையாளர்: பலக் அகர்வால் | தமிழில்: திவ்யாதரண்