’நாம் நிர்ணயிக்கும் இலக்கே வெற்றிக்கு முக்கியம்'– சென்னை தம்பதியின் சவாலான தொழில் பயணம்!
நாகு சிதம்பரம், கீதா நாகு தம்பதி துவங்கிய எட்டு வணிகங்களை மூடிவிட்டபோதும் மனமுடைந்து போகாமல் தோல்வியில் இருந்து கற்றுக்கொண்டு தொடர்ந்து முன்னேறலாம் என்பதே வெற்றியின் வழி காட்டியுள்ளனர்.
ஐந்து வணிக முயற்சிகளை வெற்றிகரமாக நிறுவி அனைத்தையும் திறம்பட நடத்தி வருகின்றனர் தம்பதிகளான நாகு சிதம்பரம் மற்றும் கீதா நாகு. இவர்கள் மேலும் பல வணிக முயற்சிகளில் ஈடுபடவும் ஆர்வமாக உள்ளனர்.
எஸ்எம்பிஸ்டோரி இந்த தம்பதியை அணுகியபோது அவர்களிடம் இருந்த உற்சாகமும் அவர்களைச் சூழந்துள்ள நேர்மறையான அணுகுமுறையும் புலப்பட்டது.
சென்னையில் மிகப்பிரபலமான தொழில்முனைவோர்களான இந்த ஜோடி, உருவாக்கியுள்ள ஒவ்வொரு வணிக முயற்சியையும் வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். வாகன துணைப்பொருட்கள் பிரிவில் செயல்படும் சன் இண்டஸ்ட்ரீஸ், மலிவுவிலை வில்லாக்கள் பகுதியில் செயல்படும் VNCT வென்ச்சர்ஸ், பிரபலமான கமலா தியேட்டர் போன்ற பல்வேறு வணிகங்களில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கல்வி சார்ந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவரான கீதா நாகு தனது கணவரின் வணிக முயற்சிகளுக்கு உதவுவதுடன் OCE College India என்கிற ஐடி பயிற்சி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
நாகு சிதம்பரம் மற்றும் கீதா நாகுவின் பயணம் தொழில்முனைவில் ஆர்வம் காட்டும் பலருக்கும் குடும்ப வணிகத்தில் ஈடுபட்டுள்ளோருக்கும் உந்துதலளிக்கக்கூடியதாகும்.
புதுமையான முயற்சிகள் எவ்வாறு மாறுபட்ட கண்ணோட்டத்தை வழங்குகிறது என்பதை இவ்விருவரும் எஸ்எம்பி வணிகங்களுக்கு காட்டுவதுடன் குடும்ப வணிகத்தின் முக்கிய மதிப்பை தக்கவைத்துக்கொண்டே அதை எவ்வாறு நவீனப்படுத்தி மாற்றியமைக்கலாம் என்பதையும் காட்டுகின்றனர்.
நேர்காணலில் அவர்கள் பகிர்ந்துகொண்டவற்றின் மூலம் அவர்களை தொடர்ந்து ஊக்கத்துடன் செயல்பட வைத்த விஷயங்கள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.
SMB ஸ்டோரி: உங்களது ஆரம்ப நாட்கள் குறித்தும் உங்கள் முயற்சிகள் எவ்வாறு துவங்கப்பட்டது என்பதையும் பகிர்ந்து கொள்ளுங்கள்?
நாகு சிதம்பரம்: நாங்கள் செட்டியார் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தொழில் என்பது எங்கள் ரத்தத்தில் இரண்டறக் கலந்த ஒன்று. கீதாவை என்னுடைய பள்ளி நாட்களில் இருந்தே அறிவேன். பதினோறாம் வகுப்பு படிக்கும்போதே இருவரும் திருமணம் செய்துகொள்ளத் தீர்மானித்தோம். எங்கள் குடும்பத்தினர் எங்கள் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. திருமணம் குறித்து தீர்மானிக்கும் வயது அதுவல்ல என நினைத்த அவர்கள் நாங்கள் வெவ்வேறு இடங்களில் இருப்பதே சிறந்தது என முடிவு செய்தனர். என் குடும்பத்தினர் ஈடுபட்டு வந்த வணிக நடவடிக்கைகள் சென்னையில் இருந்ததால் மதுரையில் இருந்து என்னை சென்னைக்கு அனுப்பிவைத்தனர். பட்டப்படிப்பை முடித்த பிறகு ரியல் எஸ்டேட் மற்றும் திரைப்படங்கள் தொடர்பான குடும்ப வணிகத்தில் நானும் இணைந்து கொண்டேன்.
கீதா: நாகு சிறப்பாக திட்டமிடுவார். ஆரம்பத்தில் இருந்தே எங்களுக்குத் திறன் அதிகம் உள்ள பகுதியிலேயே செயல்படவேண்டும் என நாங்கள் தீர்மானித்தோம். ஒருவரின் கருத்தை மற்றவர் முரண்படாமல் இருவரும் இணக்கமாகவே செயல்பட்டோம். இதுவே எங்களுக்கு பெரிதும் உதவியது என்று நினைக்கிறேன்.
SMB ஸ்டோரி: உங்களது பார்ட்னர்ஷிப் எவ்வாறு சிறப்பாக உருவானது?
கீதா: சிறந்த பார்ட்னர்ஷிப் வீட்டில் இருந்தே துவங்குகிறது என நம்புகிறேன். அதிர்ஷ்ட்டவசமாக எங்கள் பார்ட்னர்ஷிப் சிறப்பாகவே இருந்தது.
வணிகம் என்பது ஒரு குழந்தையை வளர்ப்பது போன்றது. ஒரு குழந்தையை வளர்க்கும்போது பெற்றோர் இருவரும் ஒரே நோக்கத்துடன் இருப்பார்கள். அதாவது குழந்தைகள் வாழ்க்கையில் வெற்றியடையவேண்டும் என்பதே அவர்களது நோக்கமாக இருக்கும். நம் ஒட்டுமொத்த ஆற்றலையும் அதை நோக்கியே செலுத்துவோம். இது வணிகத்திற்கும் பொருந்தும். ஆர்வத்துடன் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம்.
இருவரிடமும் இயற்கையாகவே சில திறன்கள் இருந்தன. அவற்றில் கவனம் செலுத்தினோம். குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி சிந்திக்கும் திறன் நாகுவிடம் இருந்தது. தெரியாத விஷயங்களைத் தேடித் தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற ஆர்வம் என்னிடம் இருந்தது.
நாம் நிர்ணயிக்கும் இலக்குதான் வெற்றிக்கு முக்கியம். விரிவான, பெரியளவிலான சிந்தனையுடன்கூடிய அணுகுமுறை அவசியம்.
SMB ஸ்டோரி: உங்களது வணிக முயற்சிகளின் பயணம் குறித்து சொல்லுங்கள்?
கீதா: நாங்கள் துவங்கிய எட்டு வணிகங்களை மூடிவிட்டோம். நாங்கள் மனமுடைந்து போகவில்லை. தோல்வியடைந்தால் தோல்வியில் இருந்து கற்றுக்கொண்டு தொடர்ந்து முன்னேறலாம் என்பதே எங்களுடைய அணுகுமுறையாக இருந்தது.
நாகு: குடும்ப வணிகம் என்பது வசதியான ஒரு பகுதியாக தோன்றினாலும் நான் அதிலிருந்து வெளியேற நினைத்தேன். ஏனெனில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு வசதி என்பதே வசதியற்றதாக தோன்றிவிடும். குடும்ப வணிகத்திற்குத் திரும்புவது எளிது என்றாலும் நாங்கள் அவ்வாறு செய்யக்கூடாது என முடிவெடுத்தோம். நானும் கீதாவும் எங்களிடம் இருப்பவற்றை நினைத்து நன்றியுணர்ச்சியோடு இருக்கும் அதே நேரம் பெரியளவில் உருவாக்கவும் விரும்பினோம்.
கீதா: வணிகத்தைப் புரிந்துகொள்ளவும் அனுபவம் பெறவும் வெற்றியை நோக்கி நகரவும் அதற்கே உரிய சுழற்சியைக் கடந்து வரவேண்டும்.
இப்படித் துவங்கியதுதான் இவர்களது வணிக முயற்சி. குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பண உதவி பெறாமல் தங்களது முயற்சியைத் துவங்கியுள்ளனர். நாகுவின் செயல்பாடுகள் குடும்ப வணிகத்தில் இருந்து வேறுபட்டிருந்தாலும் அதே பிரிவில் செயல்பட்டார். அந்த சமயத்தில்தான் குடும்ப வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வது குறித்து சிந்தித்தார்.
SMB ஸ்டோரி: குடும்ப வணிகத்தை எப்போது மறு வடிவமைப்பு செய்தீர்கள்?
நாகு: 2009-ம் ஆண்டு குடும்ப வணிகமான பொழுதுபோக்கு வணிகத்தை மீண்டும் புதிய வடிவில் அறிமுகப்படுத்துவதற்கான தேவை இருப்பதை உணர்ந்தேன். குடும்பத்தினர் ஏற்கெனவே தியேட்டரை வெற்றிகரமாக நடத்தி வந்தனர். திரைப்பட விநியோகத்திலும் ஈடுபட்டிருந்தனர். வருங்காலத்தில் சிறப்பாக செயல்படவேண்டுமானால் இன்றைய செயல்பாடுகளை மாற்றியமைக்கவேண்டிய அவசியம் இருப்பதை உணர்ந்தேன். என் மீது நம்பிக்கை இருந்தால் வணிக பொறுப்புகளை என்னிடம் ஒப்படைக்குமாறு துணிந்து என் அப்பாவிடம் கேட்டேன்.
குடும்ப நிர்வாகத்தில் பலர் ஈடுபடலாம். ஆனால் குடும்ப வணிகத்தை ஒருவர் மட்டுமே பொறுப்பேற்று நடத்துவது சிறந்தது என நாகு திடமாக நம்புகிறார்.
கீதா: வணிகம் சிறப்பாக தொடர மாற்றம் தேவை என்பதை குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் உணர்வதற்கு முன்பே நாகுவால் அதை கணிக்க முடிந்தது. ஒரு வாரத்திற்குப் பிறகு அவரது அப்பா அவருக்கு சம்மதம் தெரிவித்தார். சகோதரர்களின் சம்மதத்தையும் பெற்றுக்கொண்ட பின்னர் நாகு பொழுதுபோக்கு வணிகத்தை நவீனப்படுத்தும் முயற்சியைக் கையில் எடுத்தார்.
நாகு: லாபகரமாக செயல்பட்டு வந்த வணிகத்தை மீண்டும் உருவாக்குவது எளிதான செயல் அல்ல. நூறு நாட்களில் கமலா தியேட்டரை சிறந்த வாடிக்கையாளர் அனுபவம் வழங்கும் மையமாக உருவாக்கினோம். அந்த சமயத்தில் மற்ற திரையரங்குகள் மால்களாகவும் மண்டபங்களாகவும் மாற்றப்பட்டது. நாங்கள் எங்களது வணிக செயல்பாடுகளை மாற்ற விரும்பவில்லை. எனவே மல்டிப்ளெக்ஸ் உருவாக்கினோம். இன்று கமலா தியேட்டர் மாநிலத்தில் மிகவும் லாபகரமாக செயல்படும் திரையரங்குகளில் ஒன்றாக உள்ளது.
குடும்ப வணிகத்தை எந்த ஒரு தனிநபரும் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது. நடவடிக்கைகள் அனைத்தும் சிக்கலின்றி மேற்கொள்ளப்படும் வகையில் செயல்முறைகளை வடிவமைத்தேன்.
கீதா: சரியான நேரத்தில் செயல்படுவது முக்கியமானதாகும். நாம் பின் தங்கிவிடுவதும் சரியல்ல, விரைவாக முன்னேறிச் செல்வதும் சரியல்ல. இன்று நான்கு சகோதரர்களும் இணைந்து வணிகத்தை நிர்வகித்து வருகின்றனர். ஒவ்வொரு இரண்டாண்டிற்கும் ஒருவர் பொறுப்பேற்று வணிகத்தை நிர்வகிக்கின்றனர்.
SMB ஸ்டோரி: எது உங்களுக்குத் தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது?
நாகு: மிகப்பெரிய இலக்குகளை நிர்ணயித்து முன்னேறிச் செல்வதே அடிப்படையாகும். சாதனைகளே எங்களுக்கு உந்துதலளிக்கிறது. நாங்கள் துணிந்து கையிலெடுத்து நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இருக்கும் பெருமிதமும் நாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்திலும் எங்களுக்குள்ள ஆர்வமுமே எங்களுக்கு உந்துதலளிக்கிறது.
கீதா: டாக்டர் கலாம் எங்களுக்கு ஊக்கமளித்துள்ளார். ஏழ்மை நிலையில் இருந்து பணக்காரர்களாக மாறிய எண்ணற்ற நபர்களின் வெற்றிக்கதைகள் எங்களது மரபு குறித்தும் எவ்வாறு பெரியளவில் வளர்ச்சியடையலாம் என்பது குறித்தும் எங்களை சிந்திக்க வைத்தது. அதுவே எங்களது பயணத்தின் அடிப்படையாகும்.
மிக முக்கியமாக இந்தத் தம்பதி அனைத்து முயற்சிகளிலும் விரும்பி ஈடுபடுவதாக தெரிவிக்கின்றனர்.
SMB ஸ்டோரி: உங்களது அடுத்தடுத்தகட்ட திட்டம் என்ன?
நாகு: ஒருவர் உருவாக்கிய மரபு கவனத்துடன் அடுத்தவரிடம் கொண்டு சேர்க்கப்படவேண்டும். அதேபோல் வணிகத்தை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பதிலும் அத்தகைய ஆர்வம் இருக்கவேண்டியது அவசியம். எங்கள் மகனுக்கு ஆரம்பத்தில் பெரிதாக ஈடுபட்டு இல்லாதபோதும் தற்போது வாகனங்களுக்கான துணைப்பொருட்கள் வணிகத்தில் ஈடுபட்டுள்ளார். முக்கிய பலத்தைக் கண்டறிந்து அதற்கேற்றவாறு திட்டமிடுவது முக்கியம்.
கீதா: நம்மிடம் இருப்பவற்றை நம் குழந்தைகள் கொண்டாட கற்றுக்கொண்டுக்க வேண்டும். நம் வீட்டில் நிலவும் சூழலே அவர்களுக்கு வடிவம் கொடுக்கிறது. நாம் ஈடுபடும் அனைத்து செயல்பாடுகளிலும் சமரசமின்றி ஒழுக்கத்தை கடைபிடிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தவேண்டும்.
நாகு: குடும்ப வணிகத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் பொறுமையாக இருப்பது முக்கியம். யாரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது. ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள தகவல் பரிமாற்றம் முக்கியம்.
SMB ஸ்டோரி: வணிகத்தில் சமூக ரீதியான செயல்பாடுகள் எப்படி இணைத்துக்கொள்ளப்பட்டது?
கீதா: நாகுவின் அப்பா சிதம்பரம் செட்டியார் ஒரு கொடையாளி. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தலைமைப் பொறுப்பில் இருந்தார். குடும்பத்தில் உள்ளவர்கள் எப்போதும் கலாச்சாரத்தை பின்பற்றினார்கள். சமூக நலனில் பங்களிக்கவேண்டும் என்கிற எண்ணம் குடும்பத்தில் அனைவருக்கும் இருந்தது.
நாகு: எங்கள் சமூகத்தினர் எப்போதும் சமூக நலனில் பங்களிப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தனர். உருவாக்கவேண்டும், பாதுகாக்கவேண்டும், பகிர்ந்தளிக்கவேண்டும். இதுவே எங்களது செயல்பாடுகளின் பின்னணியாக இருக்கும். இந்த எழுதப்படாத விதி அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் எடுத்துசெல்லப்படுகிறது.
கீதா: எங்களது முந்தைய தலைமுறையினர் கோயில்களுக்கு சேவை செய்தனர். நாங்கள் சமூக நலனில் பங்களிக்கிறோம். ஒரு குழந்தையின் கல்விக்கு நாங்கள் உதவினால் பணத்தை கொடுப்பதுடன் நிறுத்திக்கொள்வதில்லை. அவர்களைக் கண்காணித்து வழிகாட்டுவதுடன் அவர்கள் பட்டப்படிப்பு முடித்ததும் வேலை வாய்ப்புகளைப் பெறவும் வழிகாட்டுகிறோம்.
SMB ஸ்டோரி: தொழில்முனைவில் ஆர்வமுள்ளவர்களுக்கு நீங்கள் சொல்லவிரும்பும் கருத்து என்ன?
நாகு: நன்றியுணர்ச்சியுடன் இருக்கவேண்டும். முந்தைய தலைமுறையினரின் செயல்பாடுகளைப் பாராட்டுங்கள். நீங்கள் பொறுப்பேற்கும்போது மாறுபட்ட வகையில் செயல்பட்டு அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லுங்கள்.
மாற்றம் என்பது தொழில்நுட்பத்தில் இருக்கவேண்டுமே தவிர முக்கிய மதிப்புகளில் இருக்கக்கூடாது.
கீதா: யாருக்கு என்ன பொறுப்பு என்பதில் தெளிவு அவசியம். ஒரே பிரிவில் இருவரும் இருக்கும் பட்சத்தில் யாருடைய ஆலோசனைகளைப் பின்பற்றுவது என்பதில் ஊழியர்களிடையே குழப்பம் ஏற்படும். முக்கியமாக பணியில் தொழில்முறை பணியாளர்களைப் போன்று நடந்துகொள்ளுங்கள். வீட்டில் இருக்கும்போது கணவன் மனைவி என்பதைத் தாண்டி நண்பர்கள் போல் நடந்துகொள்ளுங்கள். தம்பதிகள் வணிகத்தில் இணைந்து செயல்படுவது ஒரு வரமாகும்.
ஆங்கில கட்டுரையாளர்கள் : சந்தியா ராஜு, பாலசந்தர் ஆர் | தமிழில் : ஸ்ரீவித்யா