இந்தியாவின் முதல் மாற்றுத்திறனாளிகள் நடத்தும் ‘பைக் டாக்ஸி சர்வீஸ்’ நம்ம ஊர் சென்னையில்...
சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் துவங்கியுள்ள பைக் டாக்ஸி சேவை, ‘மா உலா’, பயணிகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கட்டண அடிப்படையில் அழைத்து செல்கிறது.
அனுதாபங்களை எதிர்பார்க்காமல் தங்களின் சொந்த உழைப்பில் முழு நேரமாகவும், பகுதி நேரமாகவும் பத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஒன்று சேர்ந்து இந்த ‘பைக் டாக்சி’ சர்வீசை நடத்தி வருகிறார்கள்.
சென்னை மாநிலக்கல்லூரியின் மாணவர் முகமது கடாஃபி. அரசு தந்த இருசக்கர வாகனங்களைக் கொண்டே மாற்றுத் திறனாளிகளின் வாழ்வை மேம்படுத்த இவர் எடுத்திருக்கும் முயற்சிதான் ‘மாற்றுத் திறனாளிகள் உலா’. சென்னையில் சுழன்றடிக்கும் பைக் டாக்ஸி சர்வீஸ் இது!
‘‘நானும் ஒரு மாற்றுத் திறனாளிதான் சார். பிஹெச்.டி படிச்சிருக்கேன். எங்களை மாதிரி ஆட்களுக்கு அரசு வேலைதான் குறிக்கோள். ஆனால், அது எல்லாருக்கும் கிடைக்கிறதில்லை. படிக்கக் கூட வசதியில்லாதவங்க பாடு ரொம்பக் கஷ்டம்.
ஒரு நாள் மெரினா பீச் பக்கம் ஒரு மாற்றுத் திறனாளி ஸ்கூட்டர்ல வர்றதைப் பார்த்தேன். ரோட்டோரமா பைக்க நிறுத்தி வச்சுட்டு பக்கத்துலயே உட்கார்ந்து பிச்சை எடுக்க ஆரம்பிச்சிட்டார். பதறிப் போய் அவர்கிட்ட விசாரிச்சா, ‘அரசாங்கம் வண்டியை மட்டும் கொடுத்தா நம்ம வாழ்க்கைத் தரம் மாறிடுமா சார்? வருமானத்துக்கு வழி இல்லை வயிறுனு ஒன்னு இருக்குல சார் தொடர்ந்து பிச்சை எடுத்துத்தான் ஆகணும்’னு சொன்னார்.
அவரோட குரல் உள்ளுக்குள்ள சுளீர்னு உறைச்சுது. தூக்கம் இல்லாம தவிச்ச்சேன். உடனே அவரை தேடிப் புடிச்சி வண்டியை கொஞ்சம் சர்வீஸ் பண்ணி, அதுல பைக் டாக்ஸினு ஸ்டிக்கர் ஒட்டிக் கொடுத்தேன்.
”இப்ப அவர் தினம் 500 ரூபாய் தன்மானத்தோட சம்பாதிக்கிறார். அடிக்கடி போன் பண்ணி நெகிழ்ச்சியா நன்றி சொல்வார்!’’ என்கிற கடாஃபி,
இதையே விரிவுப்படுத்தி நடத்த ஐடியா கொடுத்தது பாலாஜி எனும் அவர் நண்பர் தானாம். பக்கத்திலேயே தனது பைக் டாக்ஸியில் அமர்ந்து பேசுகிறார் பாலாஜி.
‘‘பெங்களூரு, ஐதராபாத் மாதிரி நகரங்கள்ல பைக் டாக்ஸி சர்வ சாதாரணமா இயங்கிட்டு இருக்கு. டிராஃபிக்ல சுலபமா போக முடியிறதால காருக்கு கொடுக்குற அளவுக்குப் பணத்தை இதுக்குக் கொடுக்கக் கூட மக்கள் தயாரா இருக்காங்க. நம்ம ஊர்ல இது இப்பத்தான் வந்துக்கிட்டிருக்கு.
தெரியாத ஆள் கூட பைக்ல ஏற நம்ம ஆட்கள் பயப்படுறாங்க. ஆனா, அதுவே மாற்றுத் திறனாளியா இருந்தா ஒரு தைரியமும் அனுதாபம் கலந்த நம்பிக்கையும் வரும்.
அதனால தான் இப்படி ஒரு டாக்ஸி சர்வீஸை ஆரம்பிச்சோம். மாற்றுத்திறனாளிங்கறதை சுருக்கி ‘மா உலா’னு பேர் வச்சிருக்கோம். சென்னை முழுக்க பத்து பேர் இப்ப ‘மா உலா’ மூலமா பைக் டாக்ஸி ஓட்டுறாங்க. நான் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்ல ராத்திரியில வண்டி ஓட்டுறேன்.
ஆரம்பத்துல ஆட்டோக்காரங்க சில பேர் அவங்க தொழிலைக் கெடுக்குறேன்னு பிரச்னை பண்ணுனாங்க. இப்ப எங்க நிலையைப் புரிஞ்சிக்கிட்டு அவங்களே அண்ணன்களா இருந்து உதவி செய்யறாங்க. பயணிகள் சிலர் தயங்கி நிக்கிறவங்களைக் கூட ‘சும்மா ஏறுங்க’னு ஏத்தி விடுறாங்க ஆட்டோக்கார அண்ணன்கள்!’’ என பலமாகப் புன்னகைக்கிறார் பாலாஜி.
‘‘போலீசும் எங்களுக்கு ஆதரவா இருக்காங்க சார்!’’ என ஆரம்பிக்கிறார் வட சென்னை பகுதியில் வண்டி ஓட்டும் குப்பன்.
‘‘இதுக்கு முன்னாடி நான் ஒரு கண்ணாடிக் கடையில வேலை செஞ்சேன். நல்லா இருக்குறவங்களுக்கே அங்க 6 ஆயிரம் ரூபாய்தான் சம்பளம். எனக்கு 4 ஆயிரம்தான். ரொம்ப நேரம் வேலை பார்க்க வேண்டி இருக்கும். வீட்டுல இருக்குறவங்களுக்கு இதுநாள் வரை ஒரு சுமையாதான் இருந்தேன். இப்ப என்னால மாசம் இருபது ஆயிரத்துக்கும் மேல சம்பாதிக்க முடியுது!’’ என்கிறார் அவர் மகிழ்ச்சியாக!
இடர்ப்பாடுகள் இல்லாமல் எந்தப் புது முயற்சி இருந்திருக்கிறது? அதையும் அடுக்குகிறார் கடாஃபி.
‘‘இது மாதிரி பேலன்ஸிங் வீல் வச்ச வண்டி ஓட்ட இங்கே அனுமதி இல்லையாம். இந்தியாவின் பல நகரங்கள்ல இதுக்கு தடை விதிச்சிருக்குறதா சொல்லி சிலர் தடுக்குறாங்க. தமிழக அரசுதான் இந்த வண்டியை எங்களுக்குக் கொடுத்துச்சு. அதுக்கே அனுமதி இல்லைன்னா எப்படி?
மாற்றுத் திறனாளியான எங்களுக்கு தகுதிக்கு ஏற்ப அரசு வேலை தந்தா வேண்டாம்னா சொல்லப் போறோம்? ஆனா அதுவரைக்கும் எங்க பொருளாதாரத் தேவையை சமாளிக்க எங்க கையில் இருக்குற ஒரே வழி இதுதான். வேலைவாய்ப்பைத்தான் கொடுக்கலை; கெடுக்காமலாவது இருக்கலாமே!’’ என்கிறார் அவர் உருக்கமாக!
பயணக் கட்டணம்!
முதல் இரண்டு கிலோ மீட்டருக்கு 25 ரூபாய். அப்புறம் ஒவ்வொரு கிலோமீட்டருக்கு 10 ரூபாய்னு கட்டணமும் குறைவுதான். நம்மால கிடைக்கிற சின்ன தொகை அவங்களுக்குப் பெரிய உதவியா இருக்கு. அது மனசுக்கு சந்தோஷத்தைத் தருதுனா தாரலமா பயணம் செய்யலாம் என்கிறார் பைக் டாக்ஸி பயணி கீதா!’’