6 முன்னணி அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை வழிநடத்தும் இந்தியர்கள்!
பராக் அக்ரவால் நியமனத்துக்கு குவியும் வாழ்த்து!
தொழில்நுட்ப உலகில் இந்தியர்களின் சாதனை உலகறிந்தது. உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் தலைமை பதவியை இந்தியர்கள் அலங்கரிப்பதே இதற்கு உதாரணம். தற்போது இதில் ஒரு மணிமகுடமாக ட்விட்டர் நிறுவன சிஇஓவாக இந்தியரான பராக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை தொடங்கியவர்களில் ஒருவரான ஜாக் டோர்சி நேற்று தனது சிஇஓ பதவியை ராஜினாமா செய்தார்.
அவர் ராஜினாமா செய்திகள் பரவத் தொடங்கியதில் இருந்தே அடுத்த தலைமை நிர்வாக அதிகாரி யார் என்பது குறித்து நிறைய யூகங்கள் வெளிவந்தன. ஆனால், தனது ராஜினாமா அறிக்கையில் இந்தியரான பராக் அக்ரவால் ட்விட்டர் நிறுவனத்தின் அடுத்த சிஇஒவாக இருப்பார் என்பதை ஜாக் டோர்சி வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த பராக் அக்ரவால் முன்னாள் ஐஐடி மாணவர். 2011ம் ஆண்டு ட்விட்டரில் வேலைக்குச் சேர்ந்த பராக், படிப்படியாக உயர்ந்தார். 2017ம் ஆண்டு சிடிஓவாக நியமிக்கப்பட்டவர் தற்போது சிஇஓ பதவியை பெற்றுள்ளார். இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இதன்மூலம், 6 அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் தற்போது இந்தியர்களால் வழிபடத்தப்படுகிறது என்ற பெருமை நிகழ்ந்துள்ளது. கூகுள், மைக்ரோசாப்ட், அடோப், ஐபிஎம், பாலோ ஆல்டோ நெட்வொர்க்குகள் மற்றும் ட்விட்டர் ஆகியவை இந்தியாவில் பிறந்த தலைமை நிர்வாக அதிகாரிகளால் நடத்தப்படுகின்றன.
கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா, அடோப் சிஇஓ சாந்தனு நாராயண், ஐபிஎம் சிஇஓ அரவிந்த் கிருஷ்ணா, பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ் சிஇஓ நிகேஷ் அரோரா, இதோ இப்போது ட்விட்டர் சிஇஓவாக பராக் அக்ரவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
உலகின் மூன்றாவது பெரிய யூனிகார்ன் ஸ்டார்ட்அப் நிறுவனமான ஸ்ட்ரைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி பேட்ரிக் கொலிசன் பராக் அக்ரவால் நியமனத்துக்கு பிறகு இந்தியர்கள் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்,
“தொழில்நுட்ப உலகில் இந்தியர்களின் அபாரமான வெற்றியைப் பார்ப்பது அற்புதம். கூகுள், மைக்ரோசாப்ட், அடோப், ஐபிஎம், பாலோ ஆல்டோ நெட்வொர்க் மற்றும் இப்போது ட்விட்டர் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவில் வளர்ந்த தலைமை நிர்வாக அதிகாரிகளால் வழிநடத்தப்படுகிறது," என்று கூறியுள்ளார்.
அதற்கு பதிலளித்து கமெண்ட் செய்த எலான் மஸ்க்,
“யூஎஸ்ஏ இந்திய திறமைகளால் நன்மை அடைந்துவருகிறது...” என்று பதிவிட்டார்.