1964 ஆம் ஆண்டுக்கு முன்பு ராமேசுவரத்துக்கு பஸ், இரயில் பாலம் என எதுவும் இல்லை. பாம்பன் பாலம் தான் முதல் போக்குவரத்து.
"அப்ப நான் அறிவிப்பு செய்யிறதுக்காகவே கமுதியில் இருந்து போலீஸ் ஜீப்பில் மண்டபம் கடற்கடரையில் ‘ராமேசுவரத்துக்கு இன்னும் சற்று நேரத்தில் ரயிலில் வரும்’, என நான்கு மொழிகளில் அறிவிப்பு செய்தேன்.
‘அன்பான பெரிேயார்களே... தாய்மார்களே...’’ - காற்றில் எதிரொலிக்கிறது மூர்த்தியின் குரல். ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ‘மைக் மூர்த்தி’ என்றால் அத்தனை பிரபலம். எங்கே திருவிழா நடந்தாலும், தனது சொந்தச் செலவில் அங்கே லவுட் ஸ்பீக்கரோடு ஆஜராகிவிடுகிறார்.
காணவில்லை அறிவிப்பு, காவல்துறை எச்சரிக்கைகள், போக்குவரத்து விதிமுறைகள் என மக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதிலும் உதவுவதிலும் 52 ஆண்டுகளாகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு வாழ்ந்து வருகிறார் மூர்த்தி.
‘‘சின்ன வயசுல எனக்கு குரல் ரொம்ப நல்லா இருக்கும். " ராமேசுவரத்தில் ஒரு ஹோட்டலில் 1964-இல் ஒருநாள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, எனக்குப் பக்கத்துல இருந்த சொர்ண கணபதின்னு ஒரு எஸ்.ஐ., ஆடி அமாவாசைக்கு காவல்துறை மூலமா அறிவிப்பு செய்ய வர்றீங்களான்னு கேட்டார். நானும் சரின்னு சொல்லி அறிவிப்பு செய்தேன். அப்ப ராமேசுவரம் வந்திருந்த ஐ.ஜி.அருள் என்னோட குரல் வளத்தைப் பாராட்டி ரூ.100 பரிசாகக் கொடுத்தாரு. அப்ப எஸ்.பி.யா இருந்த மோகன்தாசும் என்னைப் பாராட்டினார்.
“அப்ப ஆரம்பிச்சது. தென் மாவட்டங்கள் முழுக்க எங்கே திருவிழா நடந்தாலும் என்ன போலீஸ்காரங்க போன் பண்ணி வரச் சொல்லிடுவாங்க. இதுவரைக்கும் காணாமல் போன 48 ஆயிரம் குழந்தைகளைக் கண்டுபிடிச்சுத் தந்திருக்கேன்,” என்கிறார்.
சில வருஷங்களுக்கு முன்னாடி சிவகங்கையில நடந்த அம்மன் கோயில் திருவிழாவில் விழுப்புரத்தைச் சேர்ந்த மங்கையர்க்கரசி என்கிற அம்மா தன்னோட நகையைத் தொலைச்சிட்டாங்க. தரையில உக்காந்து, நெஞ்சுல அடிச்சுக்கிட்டு அழுதாங்க. மங்கையர்க்கரசியோட குடும்பக் கஷ்டத்தைச் சொல்லி மைக்ல அறிவிப்பு செஞ்சேன். திருடிய நபரைப் பத்தியும் அதிகம் புகழ்ந்து பேசுனேன். கொஞ்ச நேரத்துல மதுரையைச் சேர்ந்த காசி என்பவர் அந்த நகையைக் கொண்டுவந்து கொடுத்தார்.
‘இந்த நகையைக் கீழே கிடந்து எடுத்தேன். எனக்கும் நிறைய குடும்பக் கஷ்டம். இதை வச்சு என் குடும்பக் கஷ்டத்தைத் தீர்த்திருக்கலாம். ஆனா, உங்க பேச்சு என் மனசை மாத்திடுச்சு’னு அவர் சொல்ல, அந்தம்மா அவரைக் கையெடுத்துக் கும்பிட்டு அழுதாங்க. நல்ல பேச்சு நல்ல விஷயத்தைச் செய்யும்னு அப்போ புரிஞ்சுது.
‘மூணு மாசத்துக்கு முன்னாடி நாகூர்ல ‘சந்தனக் கூடு’ திருவிழா நடந்தது. இரண்டு லட்சத்துக்கும் மேல மக்கள் கூடுகிற திருவிழா அது. அப்போ சாகுல் ஹமீதுனு மூணு வயசு பையன் கூட்டத்துல காணாமல் போய்ட்டான்.
அதிகாலை 4 மணி வரைக்கும் திருவிழாவுல அனவுன்ஸ் பண்ணிக்கிட்டே இருக்கேன். சிறுவன் வந்த பாடு இல்ல. உடனே காவல்துறை வண்டியில மைக்கை கட்டிக்கிட்டு நாகூரைச் சுத்தி இருக்குற கிராமங்கள் எல்லாத்துக்கும் போய் பேசிக்கிட்டே வந்தேன். காட்டுப்பள்ளிங்கிற கிராமத்துல ஒரு குடும்பத்தார் வச்சி இருந்தாங்க. பையனுக்கு சரியா பேச்சு வரல. அதனால தகவல் தெரியாம அவங்க முழிச்சிக்கிட்டு இருந்தாங்க.
இரவு பத்து மணிக்கு மேல கூட்டிவந்து அவங்க அப்பா அம்மாகிட்ட ஒப்படைச்சேன். அவங்க ஆனந்தக்கண்ணீரோட நன்றி சொன்னது மறக்க முடியாதது. அந்தத் திருவிழாவுல மட்டும் 132 குழந்தைகளைக் கண்டுபிடிச்சி கொடுத்தேன்.
ஏதாவது ஒரு திருவிழாவுல, ‘அய்யா! எங்களை ஞாபகம் இருக்கா? ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி எங்களோட ஆறு வயசுப் பையனை சுப்ரமணிய சுவாமி கோயில் திருவிழாவில் கண்டுபிடிச்சுக் கொடுத்தீங்களே’னு கையைப் பிடிச்சு அன்பா பேசுவாங்க. அந்த நிமிஷத்துல தொண்டை கிழிய கத்துற அலுப்பு எல்லாம் மறந்துபோகும். 10 வருஷங்களுக்கு முன்னாடி, சிவகங்கை மாவட்டம் சாயமங்களம் முத்து மாரியம்மன் கோயில் திருவிழா.
புறக்காவல் நிலையத்தின் சார்பா அறிவிப்பு செஞ்சுட்டு இருந்தேன். பழங்காநத்தத்தைச் சேர்ந்த ராசுங்கிறவர் தன் மனைவியோட ஓடி வந்தார். ‘அய்யா! என் மகள் பேரு அனுஷ்யா. கோயில் குளத்தங்கரை பிள்ளையார்கிட்ட நிக்க வச்சுட்டு குளிக்கப் போனேன். வந்து பார்த்தா ஆளைக் காணலை. ஆரஞ்சு கலர் சட்டை, பாவாடை போட்டிருப்பா... அறிவிப்பு செஞ்சு கண்டுபிடிச்சுக் கொடுங்க’னு அழுதார்.
காலை 11 மணியில் இருந்து சாயங்காலம் 6 மணி வரைக்கும் விடாம அறிவிப்பு செஞ்சேன். மதியம் சாப்பிடக்கூட உக்காரல. அனுஷ்யா வந்த பாடு இல்லை. அப்போதான் ஒருத்தர் வேகமா ஓடி வந்தார், ‘குளத்துல ஒரு குட்டிப் பொண்ணு செத்து மிதக்குது’னு சொன்னார். போய்ப் பார்த்தா அனுஷ்யா.
காலையில இருந்து அனுஷ்யா பேரையே மைக்ல சொல்லிட்டு இருந்ததால, கிட்டத்தட்ட திருவிழாவுக்கு வந்த எல்லோருக்கும் அவள் பெயர் மனசுல பதிஞ்சிடுச்சு. குழந்தையும் அவ்வளவு அழகு. திருவிழாவுக்கு வந்த அத்தனை பேரும் அழுதாங்க. திருவிழாவே சோகமா முடிஞ்சது.
என் வாழ்க்கையிலயே இந்த சம்பவத்தை எப்ப நெனைச்சாலும் மனசு பதறும்’’ என்று கண் கலங்குகிறார் மூர்த்தி.
‘‘தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி, குஜராத்தி, மராட்டி, தெலுங்கு, கன்னடம்னு எட்டு மொழியில் அறிவிப்பு செய்வேன். அதனால, ராமேஸ்வரம் மாதிரியான டூரிஸ்ட் ஸ்பாட்களில் ஃபங்ஷன் நடக்கும்போது என்னை மறக்காம கூப்பிடுவாங்க.
நிறையப் பேர் பர்ஸை பறி கொடுத்திடுவாங்க. கையில காசு இல்லாம, ஊருக்குப் போக முடியாம சுத்திச் சுத்தி வருவாங்க. அந்த மாதிரி சமயங்கள்ல அவங்களோட சூழ்நிலையைச் சொல்லி, மைக்குல பேசி பொதுமக்கள்கிட்டே பணம் வசூல் பண்ணிக் கொடுப்பேன்.
நான் குழந்தையின் பெயர், நிறம், உடை, உடலமைப்பு ஆகியனவற்றை மைக்கில் சொல்லுவேன். தவறவிட்ட பெற்றோர்களும் எனது அறிவிப்பைக் கேட்டு என்னிடம் வந்து குழந்தையைப் பெற்றுக்கொண்டு நிம்மதியா போவாங்க தம்பி.
இது போன்று 1964 முதல் 2014 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 50 வருடங்களில் சுமார் எண்பதாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் தனது அறிவிப்பினால் மீட்டு தந்துள்ளார் மூர்த்தி அண்ணன்.
இத்தனை வருஷம் நல்ல விதமா போய்ட்டு இருந்த இந்த சேவை, எனக்கு பாதிப்பையும் கொடுத்திருக்கு. சில வருஷங்களுக்கு முன்னாடி பரமக்குடி கலவரம் நடந்ததே! அன்னைக்கு அங்கே காவல்துறை சார்பாக பாதுகாப்பு, எச்சரிக்கை அறிவிப்பு பண்ணிட்டு இருந்தேன். திடீர்னு போலீஸும் பொதுமக்களும் அடிச்சுக்கிட்டாங்க. அதுல சிலபேர் நான் போலீஸ்னு நினைச்சு, ஒரு பெரிய உருட்டுக் கட்டையால என் காதுல அடிச்சுட்டாங்க. மயக்கம் போட்டு விழுந்ததால, இறந்துட்டேன்னு நினைச்சு விட்டுட்டுப் போய்ட்டாங்க.
யாரோ புண்ணியவான் என்னைத் தூக்கிட்டுப் போய் ஆஸ்பத்திரியில சேர்த்திருக்காரு. அப்போது முதல் ஒரு பக்கமா காது கேட்கலை. அதைப்பத்தி நான் கவலையும் படலை. நம்ம வேலை நாலு பேருக்கு நல்லது சொல்றது... நல்லது செய்றது... அதைச் செஞ்சுட்டே இருப்போமே? இந்தப் பிறவி மட்டும் இல்லை... இன்னும் எத்தனை பிறவி எடுத்தாலும் இதே மூர்த்தியா பிறக்கணும். அதான் என் ஆசை. சரிதானே தம்பி?’’ என்கிறவர்,
தொண்டையைக் கனைத்துவிட்டு மைக்கில் பேச ஆரம்பிக்கிறார்... ‘அன்பான பெரியோர்களே... தாய்மார்களே... காது, கழுத்துல இருக்கிற நகை, இடுப்பில் இருக்கிற குழந்தை பத்திரம்!’ - காற்றில் எதிரொலிக்கிறது மூர்த்தியின் காவ(த)ல் குரல்!
64 வயதைத் தொட்டு விட்ட மைக் மூர்த்தி தனது வசீகரக் குரலால் காவல்துறையின் அறிவிப்பாளராக தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
குரல் வளத்துக்காகவும், இவரது சேவைக்காகவும் இவரைப் பாராட்டாத காவல்துறை உயர் அதிகாரிகளே இல்லை எனலாம். இவரது செயலைப் பாராட்டி ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழாக்களில் பல விருதுகளை வழங்கி கௌரவித்திருக்கிறது.
படங்கள் உதவி: பொ.சத்யா