72 ஆண்டுகால திருமண பந்தம்: நெட்டிசன்களை கவர்ந்த 100 வயது தம்பதி!
இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ!
ஹியூமன்ஸ் ஆஃப் பம்பாய் என்ற பக்கத்தில் சமீபத்தில் பகிரப்பட்ட ஒரு பதிவு நெட்டிசன்கள் பலரின் அன்பையும், வாழ்த்துக்களையும் பெற்று வருகிறது.
101 வயது தாத்தாவும், 90 வயதை எட்டிய அவரின் மனைவியும் 70 ஆண்டுகளுக்கும் மேலாக தம்பதிகளாக இணைந்து வாழும் வாழ்க்கை ரகசியத்தை பகிர்ந்து கொள்ளும் வீடியோ தான் அந்தப் பதிவு.
வயது மூத்த தம்பதிகள் இருவரும் இத்தனை வருடங்கள் திருமண உறவில் ஒன்றாக வாழ்ந்தது, சண்டை, சண்டைக்கு பின்னால் இருக்கும் அன்பு என இத்தனை வருட இல்லற வாழ்க்கை குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளனர்.
மேலும், இன்றைய காலங்களில் திருமண பந்தத்தில் ஏற்படும் சண்டை சச்சரவுகளை விடுத்து இல்லற வாழ்வில் இனிமையாக தம்பதிகள் வாழ்வது தொடர்பாகவும் பேசியிருக்கின்றனர் இருவரும்.
வீடியோவில் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் காட்டும் அன்பும், பரிவும் இணையவாசிகளை அவ்வளவு ரசிக்க வைத்துள்ளது என்பதை அவர்கள் கொடுத்த லைக்ஸ் மட்டுமே உணர்த்த வைக்கிறது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் இந்த தம்பதியின் வீடியோ சுமார் 3 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது. மூத்த தம்பதியின் வாழ்க்கை ஒவ்வொருவரையும் நெகிழவைத்துள்ளது என கூறும் நெட்டிசன்கள், விவாகரத்து முடிவெடுக்கும் எந்த தம்பதியினரும் 101 வயது தாத்தா மட்டும் 90 வயது பாட்டியின் இந்த வீடியோவைப் பார்த்தால் தாங்கள் பிரியும் முடிவுக்கு எண்ணத்துக்கு முற்றிப்புள்ளி வைப்பார்கள் எனக் கூறியிருக்கின்றனர்.
அந்த வீடியோவில் பேசிய மூத்த தம்பதிகள் இருவரும்,
“நாங்கள் ஒருவர் மீது ஒருவர் அதீத அன்பு வைத்திருக்கிறோம். தினமும் ஒரு வேளை உணவு ஒன்றாக உட்கார்ந்து அருந்துவோம். அந்த தருணத்தில், அன்றைய தினத்தில் நடந்த விஷயங்களை இருவரும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்வோம். இதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். கணவன், மனைவி உறவில் சண்டை இயல்பு என்பதை புரிந்துகொள்வது அவசியம். சண்டைகள் இல்லாத வாழ்க்கை இல்லை. எனவே தம்பதிகளுக்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வேண்டும்.
”சில நேரங்களில் நீங்கள் கொஞ்சம் காது கேளாதவராகவும், கொஞ்சம் ஊமையாகவும் நடிக்க வேண்டியிருக்கும். எதுவாக இருந்தாலும், எப்போதும் ஒருவருக்கொருவர் கைகளைப் பிடித்துக் கொள்ளுங்கள். தவறுகளை மன்னிக்கவும், மன்னிப்பு கேட்கவும், அல்லது கடந்து போகவும் பழகிக்கொள்ளுங்கள். அப்படி செய்தால் உறவில் பிரச்சனைகள் எழுவதற்கு வாய்ப்பில்லை. ஒன்றாக வாழ வேண்டும் என்று எண்ணத்தில் இருந்து கணவன் மனைவி இருவரும் ஒருபோதும் பின்வாங்கக்கூடாது," என்று கூறுகின்றனர்.
இந்தியாவில் விவகாரத்து பெறும் தம்பதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பது கவலை தரக்கூடிய செய்தி. தம்பதிகள் திருமண உறவில் இருந்து பிரிவதற்குக் காரணம் இருவருக்குள்ளும் விட்டுக்கொடுத்தல் பண்பு குறைந்துவிட்டது தான் என்கிறது ஆய்வு.
இப்படியான நிலையில் இதுபோன்ற தம்பதிகள் திருமண பந்தத்தின் புனிதத்தை வெளிப்படுத்தும் வகையில் நடந்துகொள்வது சற்று ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
தொகுப்பு: மலையரசு