அடிப்படைத் தேவைகளில் தன்னிறைவு, சுத்தமான சாலைகள், 100 சதவிகித வரி வசூல்... என்று ஆச்சர்யபட வைக்கின்றன இந்த அழகான கிராமம். அத்துடன் 850 வீடுகளில் ஒன்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த வீடுகளில் வசிக்கின்றனர்.
கோவை மாவட்டத்தின் எல்லையாக, நீலகிரி மலைக்குக் கீழே, 12 குக்கிராமங்ளை உள்ளடக்கிய பசுமையான கிராம பஞ்சாயத்து தான் ஒடந்துறை. தொட்டுவிடும் தூரத்தில் மலைப்பாதைகள், பாய்ந்து ஓடும் பவானி ஆறு, வேர்கள் விரும்பி மண்புகும் செழித்த நிலம். இப்படியெல்லாம் அள்ளி அள்ளிக் கொடுத்த இயற்கை, அதை முறையாக நிர்வகிக்க நல்ல தலைமையையும் தந்ததுதான் அந்த கிராமத்தின் சிறப்பு...
பத்து ஆண்டுகள் பஞ்சாயத்தின் தலைவராக இருந்த சண்முகம், கிராமம் முன்னேற வேண்டும் என ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செதுக்கியதன் விளைவாக, தேசிய அளவிலே முன்னோடி, முன்மாதிரி கிராமமாக திகழ்கின்றது ஓடந்துறை!
உள்ளூர் லயன்ஸ் கிளப்பில் துவங்கி, உலக வங்கி, ஜப்பான் நாட்டின் பாராட்டு. நிர்மல் புரஸ்கார் தொடங்கி, பாரத் ரத்னா ராஜீவ்காந்தி சுற்றுச்சூழல் விருது வரை. விருதுகள் குவிந்து இதுவரை 53 நாடுகளை சேர்ந்த உறுப்பினர்கள் இந்த கிராமத்தை பார்த்து ஆய்வு செய்து பாராட்டி உள்ளனர்.
‘‘1996-ல் இருந்து 2005 வரை பஞ்சாயத்து தலைவராக இருந்தேன். இங்கு வாழும் மக்களில் 20 சதவீதத்தினர் பழங்குடியினர் மற்றும் கொத்தடிமைகளாக இருந்தனர். காலம் காலமாக தனியார் தோட்டங்களில் வேலை செய்து வந்தனர். அவர்களுக்கென நிரந்தர வசிப்பிடம் கிடையாது. கிடைக்கும் இடங்களில் தார்ப்பாய்களில் வீடு போல அமைத்துக் குடி இருந்தனர். தனியார் தோட்ட நிறுவனங்களிடம் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக தரிசு நிலம் இருந்தால் அதனை அந்த கிராமப் பஞ்சாயத்து கையகப்படுத்திக் கொள்ளலாம். அப்போது தான் 6 ஏக்கர் நிலத்தை வருவாய்த்துறை தனியாரிடம் இருந்து எங்கள் பஞ்சாயத்துக்கு பெற்று தந்தது. அதில் 107 தொகுப்பு வீடுகள் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவங்கினோம். ஆனால் அந்த நிலத்தின் முதலாளிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதை எதிர்கொண்டு வாதாடினோம்,” என்று தொடக்கத்தை பகிர்ந்தார் சண்முகம்.
வழக்கைத் தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம். பிறகு கட்டிட பனிகளைத் துவங்கி ஜன்னல், சுவர் எழுப்பி கான்ங்க்ரீட் மட்டும் போடவில்லை, மீண்டும் நிலத்தின் முதலாளிகள் உச்ச நீதிமன்றத்தில் ஸ்டேய் ஆர்டர் வாங்கினார்கள்.
”வழக்கு நடத்துவதிலேயே ஆறேழு வருடங்கள் கடந்தன. டெல்லி வரை சென்று வாதாடி வெற்றி பெற்றோம். புல் புதர்கள் மண்டிய பகுதியை சுத்தப்படுத்தி 250 பழங்குடியினருக்கு வீடுகள் கட்டி தந்தோம் இப்போது அனைவரும் நிம்மதியாக வசித்து வருகின்றனர்,’’ என்று பெருமையும் பூரிப்புடனும் கூருகிறார் சண்முகம்
‘‘இவை தவிர வினோபாஜி நகரில் 101 பசுமை வீடுகள் சோலார் மின் தொழில்நுட்பத்துடன் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. ஒரே இடத்தில் 201 பசுமை வீடுகள் கட்டிக்கொடுக்கப் பட்டிருக்கும் தமிழகத்தின் ஒரே பஞ்சாயத்து ஓடந்துறை மட்டுமே. இதிலும் ஒரு சிறப்பு உண்டு.”
தமிழகம் முழுவதுமே பசுமைவீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அதில் பயன்பெற அடிப்படைத் தகுதியாக சொந்த நிலம் வைத்திருக்க வேண்டும். இங்கு நிலம் இல்லாதவர்களுக்கு நிலத்துடன் வீட்டை சொந்தமாக்கிக் தந்துள்ளோம். அத்துடன் இதுவரை 850 வீடுகளைக் கட்டி தந்துள்ளோம். 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். எங்கள் கிராமத்தில் இருந்து நகரத்திற்குச் வாழச் சென்றவர்கள் கூட இபோது இங்கேயே திரும்பி வருகின்றனர்,” என்கிறார் மகிழ்ச்சியுடன் அதன் இப்போதைய தலைவர் லிங்கமாள் சண்முகம்.
இங்கே அரசுக்குச் சொந்தமான பூமிதான நிலம் 3.22 ஏக்கர் இருந்திருக்கிறது. வருவாய் துறையிடம் பேசி, கிராம சபை தீர்மானம் மூலம் கிராமப் பஞ்சாயத்துக்கு அந்த நிலத்தை மாற்றியவர், அங்கு வீடுகளைக் கட்டியிருக்கிறார்.
“கிராமத்துல இருக்குற மொத்தப் பேருக்குமே சொந்த வீடு இருக்கு. அதுல முக்கால வாசி வீடுகள் அரசு தொகுப்பு வீடுங்க. வாடகை வீடுங்கிற கலாச்சாரமே இங்கே கெடையாதுங்க. குடிக்க தண்ணீர், செழிப்பான விவசாயாம். நிம்மதியா இருக்கோம்,” என்கிறார் கிராம வாசியான குமரன்.
பல பஞ்சாயத்துகள் முறையான நிதி வசதியில்லாமல் திண்டாடி கொண்டிருக்கும் நிலையில், இவர்கள் கோடி ரூபாய் செலவில் காற்றாலை நிறுவி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்கள்
"நூறு சதவிகிதம் வரி வசூல் பண்ணி, மிகப் பெரியத் தொகையை பஞ்சாயத்துக்குச் சேமிப்பா மாத்தினாலும் கூட, கரன்ட் பில் கட்டியே ஓட்டாண்டி ஆகிடுவோமோனு ஒரு பயம் எங்களுக்கு. காரணம், பஞ்சாயத்தோட வருவாயில நாற்பது சதவிகிதத்தை கரன்ட்டுக்கு கொடுத்துட்டிருந்தோம். தெருவிளக்குகளையெல்லாம் சோலார் சிஸ்டத்துக்கு (சூரியஒளி) மாத்தியும் பலன் இல்ல.
சரி, பவானி ஆறுதான் ஓடுதே! அதை வெச்சு சின்னதா நீர்மின்சக்தி யூனிட் போடலாமானு வல்லுநர்கள் கிட்ட பேசினோம். ஆனா, அது தகுதிக்கு நிறைய மீறுனதா இருந்துச்சு. அப்போதான் காற்றாலைத் திட்டம் எங்க கவனத்துக்கு வந்துச்சு. 'முன்னூற்று ஐம்பது கிலோவாட் மின்சாரம் தயாரிக்கக் கூடிய காற்றாலையின் விலை ஒரு கோடியே ஐம்பத்தஞ்சு லட்சம்'னு சொன்னாங்க. 2001-ம் வருஷத்துல இருந்து, 2006-ம் வருஷம் வரை பஞ்சாயத்து வருவாயில சேமிச்ச வகையில நாற்பது லட்சம் இருந்துச்சு. மீதி ஒரு கோடியே பதினைஞ்சு லட்ச ரூபாய்க்கு வங்கிக்கடன் வாங்கினோம்.
2006-ம் வருஷம் மே மாசம், ஓடந்துறை பஞ்சாயத்துக்குச் சொந்தமான காற்றாலையை உடுமலைப்பேட்டை பக்கமிருக்கற மயில்வாடியில நிறுவினோம். இது, வருஷத்துக்கு ஆறே முக்கால் லட்சம் யூனிட் மின்சாரம் தயாரிக்கக் கூடியது. எங்க தேவை நாலரை லட்சம் யூனிட். ஆக, மீதியை மின்சார வாரியத்துக்கு விக்கிறோம். அதுல கிடைக்கிற பணத்துல வங்கிக் கடனை கழிச்சுட்டு இருக்கோம். இதுவரைக்கும் நாற்பது சதவிகித கடனை அடைச்சுட்டோம். மீதியையும் கட்டிட்டா..., அதுக்குப்பிறகு, விற்கிற கரண்டுக்கான பணம்... பஞ்சாயத்தோட சேமிப்புதான்.
முப்பது வருஷம் வரைக்கும் நல்லா இயங்கக்கூடிய இந்தக் காற்றாலையை அமைச்சது மூலமா, சேமிப்பு அதிகரிக்கிறது. இந்தியாவிலேயே காற்றாலை நிறுவியிருக்கிற ஒரே பஞ்சாயத்து எங்களோடதுதான் என்கிறார் லிங்கம்மாள்.
வாஷிங்டனிலிருந்து உலக வங்கி இயக்குநர் தலைமையிலான குழு ஓடந்துறையை ஆய்வு செய்திருக்கிறது. ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ் ஆகிய வளர்ந்த நாடுகளின் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இங்கே வந்து ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து சென்றுள்ளனர். மின்சார உற்பத்தி மற்றும் தொகுப்பு வீடுகளைப் பார்வையிட்ட ஆப்பிரிக்க நாடுகளின் அமைச்சர்கள் தங்கள் நாட்டில் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறார்கள்.
ராஜிவ்காந்தி தேசிய மக்கள் பங்களிப்பு குடிநீர் திட்டம் அறிமுகமான போது முதன்முதலில் மக்கள் பங்களிப்பு நிதியைக் கொடுத்தது ஓடந்துறை பஞ்சாயத்து. அதனை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு ஓடந்துறையில் வைத்தே தேசிய அளவிலான அந்தத் திட்டத்தின் தொடக்க விழாவை நடத்தியது. தொடர்ந்து டெல்லியில் நடந்த அந்த குடிநீர் திட்ட தேசிய மாநாட்டில் உரையாற்றினார்கள்.
உலகமே வியந்து பார்க்கும் ஒரு பசுமையான கிராமம் தனது முன்னேற்றத்தை அடுத்த படிக்கு எடுத்து செல்கிறது. நாம் இன்னமும் மத்திய மாநில அரசை குறைப் பேசி வருகின்றோம். பஞ்சாயத்து ராஜியம் பற்றி யோசிக்காமல்