25,000 ரூபாய் முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய 8 ஆன்லைன் வணிகங்கள்!
சரியான வணிக யோசனை இருக்கும் பட்சத்தில் 25,000 ரூபாய் முதலீட்டில் எளிதாக ஆன்லைனில் வணிகத்தைத் தொடங்கி லாபம் ஈட்டலாம்.
குறைந்த முதலீட்டில் தொழில் முயற்சியைத் தொடங்குவது கடினம் என்பது பலரின் கருத்து. ஆனால் அது உண்மையல்ல.
ஆரம்பத்தில் குறைந்த முதலீட்டுடன் தொடங்கப்பட்ட எத்தனையோ தொழில் முயற்சி பின்னாளில் மிகப்பிரபலமான பிராண்டாக மக்களிடையே வலம் வருவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இதுபோன்ற வளர்ச்சிக் கதைகள் ஏராளம்.
குறிப்பாக இன்றைய டிஜிட்டல் உலகில் குறைந்த முதலீட்டில் ஆன்லைனில் தொழில் தொடங்கி லாபம் ஈட்ட முடியும்.
அந்த வகையில் மிகக்குறைந்த தொகையாக 25,000 ரூபாய் முதலீட்டில் ஆன்லைனில் தொடங்கி லாபம் ஈட்டக்கூடிய 8 வணிக யோசனைகள் இங்கு உங்களுக்காகத் தொகுக்கப்பட்டுள்ளன.
செயற்கை நகைகள்
சந்தை வாய்ப்பு: நகைகளை எப்போதும் மக்கள் விரும்பி வாங்குகின்றனர். கொரோனா பெருந்தொற்று சமயத்திலும்கூட செயற்கை நகைகளுக்கான தேவை குறையவில்லை.
முதலீடு: 25,000 ரூபாய் முதலீட்டில் எளிதாக செயற்கை நகை வணிகத்தைத் தொடங்கிவிடலாம்.
துறைசார் நிறுவனத்தின் மதிப்பீடு: செயற்கை நகைகள் வணிகம் மிகச்சிறந்த துறை என்றும் 15,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் முதலீட்டில் நகைகளை மொத்தமாக வாங்கிவிடலாம் என்றும் குறிப்பிடுகிறார் பெங்களூருவைச் சேர்ந்த நகைகள் பிராண்ட் Rubans நிறுவனர் சினு கலா.
“TradeIndia போன்ற தளங்கள் சிறந்த தயாரிப்பாளர்களுடன் ஒன்றிணைகிறது. இவர்கள் மூலம் நகைகளை வாங்கி ஆன்லைனில் விற்பனை செய்யலாம்,” என்கிறார் சினு.
விற்பனைக்கான வழிமுறைகள்: ஆரம்பத்தில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களுக்கு தயாரிப்புகளை கொடுத்தால் அவர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களுக்குப் பரிந்துரைப்பார்கள். இப்படி வணிகம் விரிவடையும் என யோசனை கூறுகிறார் சினு.
ஹோம் பேக்கரி
சந்தை வாய்ப்பு: வீட்டிலேயே பேக்கரி அமைத்து தொழில் செய்ய அதிக முதலீடு தேவையில்லை. பேக்கரி தயாரிப்புகளுக்கான தேவை எப்போதும் குறைவதில்லை என்பதால் இந்தத் தொழிலில் வாய்ப்பு அதிகமுள்ளது.
முதலீடு: 15,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் முதலீட்டில் ஹோம் பேக்கரி வணிகத்தைத் தொடங்கிவிடலாம்.
துறைசார் நிறுவனத்தின் மதிப்பீடு: புதுமையான சிந்தனைகள் இருந்தால் இந்தப் பிரிவில் வெற்றி நிச்சயம் என்கிறார் சிறியளவில் தொடங்கி வளர்ச்சியடைந்துள்ள Baker’s Treat நிறுவனர் மரியம் மொஹ்தீன்.
“சிறியளவில் தொடங்கும்போது பிராண்டிங் அவசியமில்லை. ஆனால் வாடிக்கையாளர்களுக்குப் பிடித்தமான சுவையில் தரமான தயாரிப்பைக் கொடுக்கவேண்டியது அவசியம்,” என்கிறார் மங்களூருவைச் சேர்ந்த Baker’s Treat நிறுவனத்தின் நிறுவனர்.
வீட்டிலேயே தயாரிக்கப்படும் மெழுகுவர்த்தி
சந்தை வாய்ப்பு: மெழுகுவர்த்திகள், குறிப்பாக நறுமணத்துடன்கூடிய மெழுகுவர்த்திகளை மக்கள் அதிகம் விரும்பி வாங்குகின்றனர். வீட்டை அலங்கரிக்கவும் பரிசளிக்கவும் அதிகளவில் வாங்கப்படுகின்றன. இதனால் இந்த சந்தையில் வாய்ப்பு அதிகமுள்ளது.
விற்பனைக்கான வழிமுறைகள்: நேரடியாகத் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டோ மற்றவர்களிடம் வாங்கியோ விற்பனை செய்து லாபம் ஈட்டலாம். Itsy Bitsy தளத்தில் பட்டியலிட்டு விற்பனை செய்யலாம். கலை மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, சில்லறை வர்த்தகம், டி2சி என முழுமையான சேவையளிக்கும் தளம் இது.
படுக்கை விரிப்பு
சந்தை வாய்ப்பு: உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக மொத்தமாக வாங்கி விற்பனை செய்ய மிகச்சிறந்த தேர்வு பெட்ஷீட் வணிகம். தேவை அதிகமிருப்பதால் குறைந்த விலையில் வாங்கி விற்பனை செய்து லாபம் ஈட்டலாம்.
விற்பனைக்கான வழிமுறைகள்: Indiamart போன்றவை மூலம் தயாரிப்பாளர்களுடன் நேரடியாக இணையலாம். பானிபட், ஜெய்ப்பூர், டெல்லி, சூரத், கொல்கத்தா போன்ற பகுதிகளில் பெட்ஷீட் தயாரிப்புகள் பிரபலம். இங்கிருந்து மொத்தமாக வாங்கி விற்பனை செய்யலாம்.
துறைசார் நிறுவனத்தின் மதிப்பீடு: டெல்லி சர்தார் பஜாரிலிருந்து பெட்ஷீட்களை வாங்கி வீட்ட்டிலிருந்தே வாட்ஸ் குழுக்கள் மூலம் விற்பனை செய்து லாபம் ஈட்டியதாக தெரிவிக்கிறார் ஜபல்பூரைச் சேர்ந்த ரேகா சபர்வால்.
பப்படம்
சந்தை வாய்ப்பு: பப்படம்/அப்பளம் இந்திய உணவில் கட்டாயம் இடம்பிடித்திருக்கும். மொறுமொறுப்பான பப்படம் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். இந்த வணிகத்தில் மிகக்குறைந்த முதலீட்டிலேயே லாபம் பார்க்க முடியும்.
விற்பனைக்கான வழிமுறைகள்: பப்படம் பல சுவைகளில் கிடைக்கின்றன. ஒவ்வொரு பகுதியிலும் எந்த சுவை விரும்பப்படுகிறது என்பதைப் புரிந்துகொண்டு விற்பனையைத் தொடங்கலாம். வீட்டிலேயே தயாரிக்கலாம் அல்லது அம்ரிஸ்தர், குருவாயூர், பிகேனிர் போன்ற பகுதிகளில் இருக்கும் பப்படம் தயாரிப்பாளர்களிடமிருந்து வாங்கி விற்பனை செய்யலாம்.
துறைசார் நிறுவனத்தின் மதிப்பீடு: 1937ம் ஆண்டு நூறு ரூபாய் முதலீட்டுடன் பப்படம் வணிகத்தைத் தொடங்கி வெற்றிகரமாக தொழில் நடத்தி வந்துள்ளார் லூதியானாவைச் சேர்ந்த தொழில்முனைவர் எஸ் அமன்பிரீத் திண்ட் அவர்களின் தாத்தா.
முதலீடு: பப்படம் வணிகம் தொடங்கி ஆன்லைனில் விற்பனை செய்ய மிகக்குறைந்த முதலீடாக 25,000 ரூபாய் போதுமானது.
டிஸ்போசபிள் கட்லெரி
சந்தை வாய்ப்பு: பிளாஸ்டிக், பாக்குமட்டை, மூங்கில் போன்றவற்றால் ஆன தட்டு, கிண்ணம், ஸ்பூன் போன்ற டிஸ்போசபிள் கட்லெரிகளுக்கான தேவை இந்தியாவில் எப்போதும் இருந்து வருகிறது. குறிப்பாக விரைவான சேவையளிக்கும் ரெஸ்டாரண்டுகள், சில்லறை வர்த்தகங்கள், நிகழ்ச்சிகள் என இவற்றின் தேவை பரந்து விரிந்திருப்பதால் தொழில் தொடங்கி லாபம் ஈட்ட சிறந்த வாய்ப்புள்ளது.
உள்ளூர் மொத்த விற்பனையாளர்கள் அல்லது தயாரிப்பாளர்களிடம் நேரடியாக வாங்கி அதிக லாபத்திற்கு விற்பனை செய்ய முடியும்.
மசாலா பொருட்கள்
சந்தை வாய்ப்பு: இந்திய மசாலாப் பொருட்களுக்கான சந்தை அளவு மிகப்பெரியது. நாடு முழுவதும் மசாலாக்களுக்கான தேவை அதிகமுள்ளது. கரம் மசாலா, சீரகப் பொடி என பல வகையான மசாலாப் பொடிகளை மக்கள் தேடி வாங்குகின்றனர்.
துறைசார் நிறுவனத்தின் மதிப்பீடு: சிறியளவில் தொடங்கப்பட்டு குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் மசாலாப் பொருட்களை விற்பனை செய்யத் தொடங்கி பிரபலமாகியுள்ளது மும்பையைச் சேர்ந்த Masala Tokri. அம்மா-மகளான ஊர்மிளா-ஆர்த்தி சமந்த் இருவரும் இணைந்து இந்நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர். இரண்டாண்டுகளில் இவர்கள் நிறுவனத்தின் டர்ன்ஓவர் 1 கோடி ரூபாய்.
பட்டன்கள்
சந்தை வாய்ப்பு: ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரின் ஆடைகளுக்கும் அழகு சேர்ப்பது பட்டன்கள். துணி, ஸ்டீல் என பல வகையான பட்டன்கள் சிறப்பாக விற்பனையாகி வருகின்றன.
விற்பனைக்கான வழிமுறைகள்: சமூக ஊடகங்களின் வழியாக விளம்பரப்படுத்தி விற்பனை செய்யலாம். MyEasyStore தளம் எளிதாகவும் விரைவாகவும் தனிப்பட்ட ஆன்லைன் ஸ்டோர் அமைக்க உதவுகிறது. இதுபோன்ற வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஆங்கில கட்டுரையாளர்: பலக் அகர்வால் | தமிழில்: ஸ்ரீவித்யா