8 நெசவு இயந்திரங்களுடன் தொடங்கி இன்று 1,300 கோடி ரூபாய் டர்ன்ஓவர் – ‘சங்கம் இந்தியா’வின் வளர்ச்சிக் கதை!
1984-களில் வெறும் எட்டு நெசவு இயந்திரங்களுடன் தொடங்கப்பட்ட சங்கம் இந்தியா நிறுவனம் இன்று இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ஸ்பிண்டில்கள், 3,000 ரோட்டார்கள் ஆகிவற்றுடன் பிவி மற்றும் டெனிம் ஆடைகள் தயாரித்து வருகிறது.
ராம் பால் சோனி பொதுப் பணித்துறையில் என்ஜினியராக பணியாற்றி வந்தார். ஜவுளித் துறையில் இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த இவர், வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.
20-25 லட்ச ரூபாய் முதலீடு செய்து
என்கிற நிறுவனத்தைத் தொடங்கினார். எட்டு நெசவு இயந்திரங்களுடன் தொழிலைத் தொடங்கினார்.பில்வாராவைச் சேர்ந்த சங்கம் இந்தியா இன்று ஜவுளித் துறையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இதன் ஆண்டு டர்ன்ஓவர் 1,363 கோடி ரூபாய்.
இந்த வணிகம் இத்தனை ஆண்டுகளாக வளர்ச்சியடைந்தது குறித்தும் பி2பி மட்டுமல்லாமல் பி2சி பிரிவில் நுழைந்தது பற்றியும் பகிர்ந்துகொண்டார் இரண்டாம் தலைமுறை தொழில்முனைவரும் சங்கம் இந்தியா இயக்குநருமான அனுராக் சோனி.
மிகப்பெரிய் ஜவுளி பிராண்ட்
ஆரம்பத்தில் அனுராக்கின் அப்பா எட்டு நெசவு இயந்திரங்களுடன் வணிகத்தைத் தொடங்கினார். சிறியளவில் உருவாக்கப்பட்ட விநியோகஸ்தர் நெட்வொர்க் மூலம் துணிகளை விற்பனை செய்ய ஆரம்பித்தார்.
1995ம் ஆண்டு வரை நெசவு வேலை மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதன் பிறகு, நூற்பாலை பணிகளும் இணைத்துக்கொள்ளப்பட்டன.
“ஆரம்பத்திலிருந்தே தொழில் லாபகரமாக இருந்து வருகிறது. சிறப்பாக வளர்ச்சியடைந்து வருகிறது. 1993ம் ஆண்டு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டோம். 2003ம் ஆண்டு என் அப்பா நிலக்கரி சார்ந்த 10.0 MW கேப்டிவ் மின் நிலையம் கட்டினார். 35,232 ஸ்பிண்டில்கள் சேர்க்கப்பட்டன,” என்கிறார் அனுராக்.
சங்கம் இந்தியா மூன்று பிரிவுகளில் கவனம் செலுத்துகிறது.
- டெனிம் தயாரிப்பிற்காக சிந்தடிக் துணிகள் உற்பத்தி செய்கிறது.
- சிந்தடிக் மற்றும் காட்டன் நூல்கள்
- ஆடை வணிகம்
இந்நிறுவனம் வருடத்திற்கு 30 மில்லியன் மீட்டர் பிவி துணிகளையும் 48 மில்லியன் மீட்டர் டெனிம் துணிகளையும் தயாரிக்கிறது. 2.8 லட்சத்திற்கும் மேற்பட்ட ஸ்பிண்டில்கள் மற்றும் 3,000 ரோட்டார்களிலிருந்து இவை தயாரிக்கப்படுகின்றன. இந்திய பாதுகாப்புப் பிரிவு, மாநில காவல் துறை போன்றவை இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள்.
“கட்டிங் மற்றும் தையல் வேலைகள் அதிகம் தேவைப்படாத சீம்லெஸ் ஆடை தயாரிப்பு தொழிற்சாலை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். இங்கு 54 பின்னலாடை இயந்திரங்கள் உள்ளன. இந்தத் தொழிற்சாலை வருடத்திற்கு ஐந்து மில்லியன் பீஸ் தயாரிக்கும் திறன் கொண்டது,” என்கிறார் அனுராக்.
2015ம் ஆண்டு சங்கம் இந்தியா பி2சி சந்தையில் செயல்பட முடிவு செய்தது. C9 Airwear என்கிற கேஷுவல் ஆடைகள் மற்றும் ஆக்டிவ்வேர் ஆடைகள் பிராண்ட் அறிமுகப்படுத்தியது.
தற்சமயம் இந்த பிராண்ட் இந்தியாவில் 1,000 மல்டி-பிராண்ட் அவுட்லெட்களில் கிடைக்கின்றன. இவைதவிர முக்கிய ஆன்லைன் சில்லறை வர்த்தக சந்தைப்பகுதிகளிலும் கிடைக்கின்றன. இந்நிறுவனத்தின் முக்கிய பிராண்ட் 'Sangam Suitings’. 10,000 சில்லறை வர்த்தகர்களின் நெட்வொர்க் மூலம் விநியோகிக்கப்படுகிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
சங்கம் இந்தியா பல்வேறு பிரிவுகளுடன் விரிவடைந்து வந்தாலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.
இந்நிறுவனம் ராஜஸ்தானில் உள்ள இதன் தொழிற்சாலைகள் முழுவதும் 5 MW சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைத்துள்ளது.
தொழிற்சாலை கழிவுகளால் நீர் மாசுபடுவதைக் குறைக்கும் வகையில் தொழிற்சாலைகளில் உற்பத்தியாகி நீர்நிலைகளில் கலக்கும் கழிவுகளுக்கென பிரத்யேகமாக 3 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களையும் (Effluent Treatment Plants) மற்ற பயன்பாடுகள் மூலம் உற்பத்தியாகும் கழிவுகளுக்கென பிரத்யேகமாக 4 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களையும் (Sewage Treatment Plants) இந்நிறுவனம் அமைத்துள்ளது.
”நாங்கள் மறுசுழற்சி செய்யப்பட்ட டன் கணக்கிலான இழைகளைப் பயன்படுத்துகிறோம். இதனால் மூலப்பொருட்களைக் குறைவாக வாங்குகிறோம். மேலும், பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் வகையில் ஆர்கானிக் காட்டன் உற்பத்தி செய்கிறோம்,” என்கிறார் அனுராக்.
சந்தை நிலவரமும் வருங்காலத் திட்டங்களும்
2020ம் ஆண்டில் இந்திய ஜவுளித் துறை மற்றும் ஆடை சந்தை 100 பில்லியன் டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. இதுவே 2021-2026 ஆண்டுகளிடையே 13.80 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்துடன் வளர்ச்சிடையும் என எதிர்பார்க்கப்படுவதாக IMARC குரூப் தெரிவிக்கிறது.
பாகிஸ்தான், இலங்கை, வங்காளம் போன்ற அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் தடையற்ற வர்த்தக உடன்பாடு இல்லாததால் உலகளாவிய சந்தையில் சிறப்பாக போட்டியிடமுடியவில்லை என்கிறார் அனுராக்.
சங்கம் இந்தியா துருக்கி, லத்தீன் அமெரிக்கா, போர்ச்சுகல் உள்ளிட்ட 58 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
உலகளவில் மிகப்பெரிய அளவில் ஜவுளி மற்றும் ஆடைகள் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா ஆறாவது இடம் வகிக்கிறது. இருப்பினும் சரக்கு ஏற்றுமதிக்கான செலவுகள் அதிகம். இந்தப் பிரச்சனைக்கு அரசாங்கம் தீர்வு காணவேண்டும் என்கிறார் அனுராக்.
LNJ Group, Siyarams, Banswara Syntex Ltd போன்ற நிறுவனங்களுடன் போட்டியிடும் இந்நிறுவனம் விரிவாக்கப் பணிகளில் தீவிர முனைப்புடன் இருப்பதாக அனுராக் சுட்டிக்காட்டுகிறார்.
137.25 கோடி ரூபாய் அளவில் பருத்தி நூல் பிரிவிலும் 157 கோடி ரூபாய் அளவில் சீம்லெஸ் ஆடைகள் பிரிவிலும் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது. இத்திட்டங்களுக்கு சமீபத்தில் சங்கம் இந்தியாவின் நிர்வாகக் குழு ஒப்புதலளித்துள்ளது.
இதுதவிர ஸ்பின்னிங் காட்டன் தொழிற்சாலையில் 32,000 ஸ்பிண்டில்களும் சீம்லெஸ் ஆடைகள் பிரிவில் 106 புதிய இயந்திரங்களும் நிறுவ இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஆங்கில கட்டுரையாளர்: பலக் அகர்வால் | தமிழில்: ஸ்ரீவித்யா