காதலர் தினத்தன்று தன் மனைவியின் இதயத்தை தானமாக அளித்த கணவர்!

உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட காதலர் தினத்தில் காதலர்கள் அன்பை பரிமாறிக்கொள்ள, தன் பிரியமான மனைவி மூளைச்சாவு அடைந்ததால் அவரின் இதயத்தை தானமாக அளித்துள்ளார் கணவர் கவுதம் ராஜ்.

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

பிப்ரவரி 14 காதலர்களின் காலண்டரில் மிக முக்கியமான நாள். ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பை வெளிப்படும் விதமாக பரிசுகள் தந்து வியப்பை ஏற்படுத்தும் நாளாக உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. பலருக்கு சந்தோஷத்தை பகிரும் நாளாக இருந்தாலும் கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியைச் சேர்ந்த கவுதமராஜிற்கு மறக்க முடியாத வடுவை ஏற்படுத்திவிட்ட நாளாக அமைந்து விட்டது 2019, பிப்ரவரி 14.

பெங்களூருவில் இன்ஜினீயராக பணியாற்றி வரும் கவுதமராஜிற்கும், திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த கோகிலாவிற்கும், கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணமான பின்னர் காதலிக்கத் தொடங்கிய இந்த தம்பதியின் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியின் அர்த்தமாக கோகிலா கர்ப்பமானார். கோகிலா ஒரு குழந்தைக்குத் தாயாகப் போவதை நினைத்து இருவரும் மகிழ்ச்சியில் குதூகலித்தனர். ஆனால் இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. கர்ப்ப காலத்தில் திடீரென கோகிலாவின் உடல் எடை குறையத் தொடங்கியுள்ளது.

8 மாத கர்ப்பிணியாக இருந்த நேரத்தில் எடைக் குறைவு கோகிலாவின் உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4-ம் தேதி, வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் கோகிலா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த கோகிலாவுக்கு, கடந்த 7-ம் தேதி திடீரென வலிப்பு ஏற்பட்டதால் மருத்துவக் குழுவினர், உடனடியாக அறுவைசிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்துள்ளனர்.

கோகிலாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. எனினும் குழந்தையின் எடை இரண்டு கிலோவிற்கும் குறைவாக இருந்ததால் குழந்தையும் மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டது. குழந்தையை வெளியே எடுத்த பின்னரும் கோகிலா சுயநினைவின்றி இருந்ததால் குடும்பத்தினர் கவலையடைந்தனர். இந்த நிலையில் தான் கோகிலா குடும்பத்தினர் மற்றும் கவுதம்ராஜ் தலையில் இடியாய் வந்து விழுந்தது மருத்துவர்கள் சொன்ன தகவல்.

பிப்ரவரி 14ம் தேதி  கோகிலாவுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. செய்வதறியாது கவுதமராஜ் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். எனினும் மனைவியின் இந்த நிலையை நினைத்து துக்கத்திலும் துணிவான ஒரு முடிவை எடுத்தார் கவுதமராஜ்.

எப்போதுமே நம்மால் முடிந்தவற்றை பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்று கணவரிடம் சொல்லி வந்திருக்கிறார் கோகிலா. இதனால் காதல் மனைவியின் விருப்பம்போலவே அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவெடுத்தார் கவுதமராஜ்.

கோகிலாவின் கணவர் மற்றும் குடும்பத்தினர்

“கோகிலா யாருக்குமே கஷ்டம் கொடுக்க நினைத்ததில்லை, நம்மால் முடிந்த 1 ரூபாயோ 2 ரூபாயோ கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று சொல்வா, இன்னைக்கு அவள் உடல் முழுவதையுமே தானமாக கொடுத்திருக்கிறாள். இதயம், கணையம், நுரையீரல், கல்லீரல், கண்கள் உள்ளிட்ட உறுப்புகள் தானம் கொடுக்கப்பட்டுள்ளது.

”என்னைப் பொறுத்தவரையில் கோகிலா இறக்கவில்லை வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறாள். காதலர் தினமான இன்று எனக்கு அவளின் இதயத்தில் வாழத் தகுதி இல்லை கோகிலாவின் இதயம் வேறு எங்கேயோ துடித்துக் கொண்டிருக்கிறது.” என்று கண்ணீர் வடிக்கிறார் கவுதமராஜ்.

திருமணம் நடந்து ஓராண்டு கூட நிறைவடையாத நிலையில் பிரியமான மனைவி இறந்த சோகத்தில் கதறி அழுத கவுதமராஜை பார்த்து மருத்துமனை வந்து சென்ற பொதுமக்களும் சோகமடைந்தனர்.

தகவல்கள் மற்றும் படங்கள் உதவி : சன் செய்திகள்

How has the coronavirus outbreak disrupted your life? And how are you dealing with it? Write to us or send us a video with subject line 'Coronavirus Disruption' to editorial@yourstory.com

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India