அனாதையாக இறந்தவர்களை சகல மரியாதையுடன் அடக்கம் செய்யும் கோவை இளைஞர்கள்...
கோவையைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மாணவர்களும் இளைஞர்களும் 'ஜீவசாந்தி' என்ற அமைப்பை உருவாக்கி, நகரைச் சுற்றி 200 கி.மீ. தூரத்துக்குள் அனாதையாக இறப்பவர்களை உரிய மரியாதையுடன் உடல் அடக்கம் செய்கின்றனர்.
இருபதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ‘ஜீவசாந்தி’ என்ற பெயர் கொண்ட அமரர் ஊர்தியில் வந்து சேர்ந்தனர். நிம்மதியான காவல்துறை சடலத்தை அவர்களிடம் ஒப்படைத்தது. பேரப் பிள்ளைகள் என்ன செய்வார்களோ, அப்படி அந்தப் பாட்டியை அந்த இளைஞர்கள் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்தனர்.
இது சின்ன சாம்பிள்தான். இப்படி எண்ணற்ற நிஜக் கதைகள் கோவை முழுக்க உலா வருகின்றன. அனைத்துக்கும் காரணம், ‘ஜீவசாந்தி’. கோவையைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மாணவர்களும் இளைஞர்களும் இந்த அமைப்பை உருவாக்கி இருக்கிறார்கள். நகரைச் சுற்றி 200 கி.மீ., தூரத்துக்குள் அனாதையாக யார் இறந்தாலும், உறவினர்களைப் போல் உரிய மரியாதையுடன் அவர்களை அடக்கம் செய்வதுதான் இந்த அமைப்பின் பணி.
கடந்த 5 வருடங்களாக இந்த சேவையைச் செய்து வருபவர்கள் இதற்காகவே தங்கள் செலவில் நான்கு இலவச அமரர் ஊர்திகளை வாங்கியுள்ளனர்.
‘இது மிகப்பெரிய தொழில் நகரம். வேலைக்காகவும், படிப்புக்காகவும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர். எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்நகரில்தான் தனக்கென யாருமேயில்லாத அனாதைகளும் ஓரமாக வாழ்ந்து வருகின்றனர்.
”வாழும்போது அவர்களுக்கு எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அட்லீஸ்ட் மரணத்துக்குப் பிறகாவது அவர்களுக்கு உரிய மரியாதையை வழங்கலாமே என்ற யோசனையின் செயல்வடிவம்தான் இது...’’
என கனிவான குரலில் பேசத் தொடங்குகிறார் ‘ஜீவசாந்தி’ அமைப்பின் உறுப்பினரான சலீம். ‘ஐந்து வருடங்களுக்கு முன் ரத்த தானம், சாலைப் பாதுகாப்பு போன்ற விழிப்புணர்வுச் செயல்களை நண்பர்களுடன் இணைந்து செய்து கொண்டிருந்தோம். இதன் வழியாக காவல்துறையுடன் எங்களுக்கு நட்பு ஏற்பட்டது. ஒரு நாள், ‘அனாதையான சடலத்தை புதைக்க வேண்டும். உதவ முடியுமா?’ என்று கேட்டார் தெரிந்த காவல்துறை அதிகாரி ஒருவர். லேசாக பதற்றம் தொற்றிக் கொண்டது.
ஜெயந்தி, சுரேஷ், சித்திக், சிவசுப்ரமணியம் என பத்து நண்பர்கள் இணைந்து கலந்துரையாடினோம். ஒருமனதாக அனைத்து சடங்குகளுடன் அடக்கம் செய்ய முடிவெடுத்தோம். அப்படியே செய்தோம். இடுகாட்டில் இருந்து வீடு திரும்பும் வரை யாரும் எதுவும் பேசவில்லை. கனத்த இதயத்தோடு மவுனமாக வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். இனம் புரியாத திருப்தியும் நிம்மதியும் எங்களைச் சூழ்ந்தது. மறுநாள் நண்பர்கள் மீண்டும் ஒன்று கூடினோம்.
”நிம்மதியானசாவு இந்த பூமியில் பிறந்த ஒவ்வொருவருக்கும் முக்கியம் என அந்த உரையாடல் சென்றது. இதை உணர்வுப்பூர்வமாக அணுக தீர்மானித்தோம். அதைத்தான் செயல்படுத்தியும் வருகிறோம்...’’
என்று சொல்லும்போதே சலீமின் விழிகளில் ஈரம் கசிகிறது. ஆறுதலாக அவரது கரங்களைப் பற்றியபடி சிவசுப்ரமணியம் தொடர்ந்தார்.
‘‘இறந்து பல நாட்களாகிப்போன சடலங்களே எங்களுக்குக் கிடைக்கும். உடல் அழுகியிருக்கும். தொடும்போதே உறுப்புகள் உடைந்து விழும். இதுவரை மனதளவிலும் சரி, உடலளவிலும் சரி, எங்களுக்கு எதுவுமே ஆகவில்லை. உண்மையான அன்போடு அணுகும்போது நல்லதே நடக்கும் என்பதற்கு நாங்களே உதாரணம்...’’ என சிவசுப்ரமணியம் முடிக்க, சித்திக் தொடர்ந்தார்.
‘‘எங்கள் அமைப்பில் உள்ள அனைவரும் மென்மையானவர்கள். பயந்த சுபாவம் கொண்டவர்கள். அதனால்தான் சடலம் விழும்போதெல்லாம் எங்கள் மனம் பதறுகிறது. இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை அடக்கம் செய்திருக்கிறோம். பிள்ளைகளால் விரட்டப்பட்ட முதியவர்களும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களும்தான் இதில் கணிசமானவர்கள்...,’’ என சித்திக் நிறுத்த சில நொடிகள் அங்கு அமைதி சூழ்ந்தது.
பெருமூச்சுடன் ஜெயந்தி பேச ஆரம்பித்தார்.
‘‘இரண்டு வருடங்களுக்கு முன்பு சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் முதியவர் ஒருவர் விஷம் அருந்தி இறந்து கிடந்தார். யார் என்று தெரியவில்லை. போஸ்ட்மார்ட்டம் முடிந்து இருபது நாட்கள் ஆகியும் அவர் உடலை வாங்க யாரும் வரவில்லை. நாங்கள்தான் அடக்கம் செய்தோம்.”
இரண்டு மாதம் கழித்து அந்த முதியவரின் உறவினர்கள் காவல் துறையின் விளம்பரத்தைப் பார்த்து, விசாரித்து எங்களைத் தேடி வந்தனர். அந்த முதியவர் கேரளாவில் ஒரு முறை எம்.பி.யாகவும், இரண்டு முறை எம்.எல்.ஏ.வாகவும் இருந்தவராம். கண்ணீர் மல்க அவர்கள் எங்களுக்கு நன்றி தெரிவித்தார்கள்...’’ என்று ஜெயந்தி முடிக்க, ‘ஜீவசாந்தி’ அமைப்பினரின் முகங்கள் அன்பால் ஒளிரத் தொடங்கின.