கார்ப்பரேட் பணியை துறந்து சாகசப் பயண நிறுவனத்தை தொடங்கிய பயண ஆர்வலர் மனோஜ் சூரியா!
“கார்ப்பரேட் வாழ்க்கையால் நிம்மதி இல்லாமல் என் வாழ்க்கையே பாழாகியது போல் உணர்ந்தேன். பயணம் செய்வதில் தான் எனக்கு அதீத ஆர்வம் இருந்தது. புது இடங்களுக்குச் செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் அதையே என் வாழ்க்கையாக, தொழிலாக மாற்றிக்கொண்டேன்,”
என்று தன் தொழில்முனைவின் தொடக்கத்தை பற்றி பகிர்ந்து கொண்டார் மனோஜ் சூரியா. இவர் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முடித்தவர். சொந்த ஊர் மதுரை என்றாலும் சென்னைக்கு குடிபெயர்ந்து வாழ்ந்து வருபவர்.
எம்பிஏ முடித்ததும் கேம்பசில் தேர்வு செய்யப்பட்டதால் 99acres.com-ல் நான்கு மாதங்கள் பணிபுரிந்தார். அதன்பிறகு ஒன்றரை வருடங்கள் BYJUS Classes நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்தார் மனோஜ். விற்பனை மற்றும் ஆபரேஷன்ஸ் துறையில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர்.
“என்னுடைய பள்ளி கல்லூரி நாட்களில் சுற்றுலா ஏற்பாட்டுகளில் நான் பொறுப்பேற்று கொள்வேன். முகாம் அமைப்பது என்பது வெளிநாடுகளில் துவான விஷயம். ஆனால் நாம் இந்த அனுபவத்தை பெற அதிகம் முனைவதில்லை. நாம் ஏன் சாகசங்கள் நிறைந்த சுற்றுலா ஸ்டார்ட்அப்பை தொடங்கக்கூடாது? இந்தக் கேள்வி என்னுள் எழுந்தது. அதிகமான ஆர்வம் காரணமாகவே இதைத் தொடங்கினேன். இப்போது இதுவே என்னுடைய தொழிலாக மாறிப்போனது, வேலையை ராஜினாமா செய்தேன். சாகசங்கள் நிறைந்த பயணங்களில் ஈடுபாடு இருப்பவர்கள் அதை நிறைவேற்றிக்கொள்ள உதவுகிறேன்.” என்றார்.
Tent N Trek ஸ்டார்ட்-அப் பின்னணி
'டெண்ட் அண்ட் ட்ரெக்' (Tent N Trek) நிறுவனத்தை 2016-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் துவங்கி நவம்பர் மாதத்தில் தனியார் நிறுவனமாக சட்டப்பூர்வமாக நிறுவினார் மனோஜ். துவங்கப்பட்ட முதல் நாளிலிருந்தே அவரது தந்தை ராமநாதன் மற்றும் அவரது நண்பர்கள் ஆதரவளித்து உதவி வருகின்றனர்.
ஆரம்பக்கட்ட முதலீட்டிற்கு மனோஜின் நண்பர்கள் 1.25 லட்ச ரூபாய் கடனாக அளித்து உதவினர். இதைக்கொண்டு நிறுவனத்தின் முதல்கட்டப் பணிகளைத் துவங்கினார். ஆனால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு நிதிப்பிரச்சனை ஏற்பட்டது. கூடாரங்கள் வாங்கவும் முகாம் அமைக்கத் தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கும், தனியார் நிறுவனமாக மாற்ற தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், வலைதளம் அமைக்க, ப்ரொமோஷன் என அனைத்திற்கும் பணம் தேவைப்பட்டது. அனைத்து சேமிப்பும் முடிந்த நிலையில் குடும்பத்தின் தரப்பிலிருந்தும் எந்தவித ஆதரவும் தர இயலாத நிலை ஏற்பட்டது. அடிப்படை தேவையான உணவு வாங்கக்கூட பணமில்லாத நாட்களையும் கடந்து வந்துள்ளார் இவர்.
“மூன்று நாட்கள் உணவு வாங்கி சாப்பிடக்கூட என்னிடம் பணம் இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் அழுதேன். ஏதாவது உதவி கிடைக்குமா என அலைந்தேன். இருந்தும் என் முயற்சியை பாதியில் விட நினைத்ததில்லை, மனம் தளரவில்லை. பல போராட்டங்களுக்குப் பிறகு வங்கியிலிருந்து ஐந்து லட்ச ரூபாய் கடன் கிடைத்தது.”
அதை தொழிலில் முதலீடு செய்தார் மனோஜ். இந்த முதலீட்டுடன் Tent N Trek வெற்றிகரமாக நடத்திவருகிறார்.
இருவருடன் தொடங்கிய சாகச பயணம்
முதல் முகாம் ஏற்பாடு செய்தபோது இருவர் மட்டுமே Tent N Trek கேம்பில் பங்கெடுத்தனர். நிறுவனம் தொடங்கப்பட்டு பத்து மாதங்கள் மட்டுமே கடந்த நிலையில் 500க்கும் மேற்பட்ட முகாம்கள், 30க்கும் மேற்பட்ட நிகழ்வுகள், பல்வேறு கார்ப்பரேட் அவுட்டிங் ஆகியவற்றை தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் தனி ஒரு ஆளாக செயல்படுத்தியுள்ளார் மனோஜ்.
சாகச பயணங்களை வடஇந்தியாவிற்கும் விரிவுபடுத்த பணிகள் நடந்து வருகிறது. இவர்களது முகாம்கள் அனைத்து இடங்களிலும் அங்கீகரிக்கப்பட்டதால், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல வாடிக்கையாளர்கள் இணைந்துகொண்டே இருப்பதால் Tent N Trek படிப்படியாக சிறப்பான வளர்ச்சியை அடைந்து வருகின்றது.
Tent N Trek செயல்பாடுகள்
டெண்ட் அண்ட் ட்ரெக் முகாம் அமைத்தல், ட்ரெக்கிங், நெடுதூர நடைப்பயணம், சைக்கிளிங், சர்ஃபிங், மவுண்டனீரிங் உள்ளிட்ட பல்வேறு சாகச நடவடிக்கைகளை ஏற்பாடு செய்யும் பயண நிறுவனம். குறுக்கும் நெடுக்குமான அடர்ந்த காடுகள், பசுமையான பள்ளத்தாக்குதல்கள், உள்ளடங்கி உள்ள குளிர் பாலைவனங்கள், அதிகம் பயணிக்காத பகுதிகள், சாகச விளையாட்டு நடவடிக்கைகள் மற்றும் பல கேளிக்கைகள் இதில் அடங்கியிருக்கும்.
டெண்ட் அண்ட் ட்ரெக்குடன் வாடிக்கையாளர்கள் பயணம் மேற்கொள்ளும்போது அடர்ந்த காட்டுக்குள் முகாமை ரசிக்கலாம். பழங்குடியினருடன் வசிக்கலாம், ஜீப்பில் பயணிக்கலாம், காட்டில் சஃபாரி மற்றும் மலை உச்சியில் ஏறும் பயணங்கள் மேற்கொள்ளலாம். பயணித்து புதிய இடங்களை கண்டறிபவர்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் பிரமிக்கத்தக்க சாகசத்தில் எப்படி ஈடுபடவேண்டும் என்று கேம்ப் வருவோருக்கு பயிற்சியளிப்பார்கள்.
பயணத்தின் மீது வலுவான விருப்பம் மற்றும் ஏக்கத்துடன் துவங்கப்பட்ட இந்நிறுவனம் படிப்படியாக ஓய்வு நிறைந்த உலகத்தையும் பயணத்தின் முக்கியத்துவத்தையும் மக்களுக்கு வெளிப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிக்கிறது.
“பயணம் மட்டுமே எங்கள் நோக்கமல்ல சர்ஃபிங், ட்ரெக்கிங், ஹைக்கிங், சைக்கிளிங், மலையேற்றம், ஸ்விம்மிங் போன்ற மற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்தி சோம்பேறித்தனைத்தை அகற்றி மனதிற்கு புத்துணர்ச்சியை அளிக்க முற்படுகிறோம்.”
தேவை மற்றும் அதற்கான தீர்வுகள்
பயணம் செய்வதோ அல்லது மலையேற்றத்தில் ஈடுபடுவதோ பலரால் இயலவில்லை என்பதே இப்படிப்பட்ட பயணம் சார்ந்த நிறுவனத்தை அமைக்க தூண்டுதலாக இருந்தது என்றார் மனோஜ். பாதுகாப்பான தங்குமிடத்தை கண்டறிவது, அதிகம் பயணிக்காத பகுதியை ஆராய்வது, மலையேற்றத்திற்கான அனுமதி பெறுவது, பெண்கள் தனியாக பயணிக்கும்போது அதிக ஆபத்துகள் நிறைந்திருப்பது என ஆபத்து காரணிகளின் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது. இப்படிப்பட்ட காரணங்களை தகர்த்து, உலகின் பல்வேறு மூலைகளிலிருந்து தனியாக பயணிப்பவர்களுக்கும், பெண்களுக்கும் ஒரு பாதுகாப்பான பயண அனுபவத்தை அளிக்கும் குழுவின் தேவை தற்போது உள்ளது.
ஒவ்வொருநாளும் அதிவேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் தொழில்நுட்ப உலகத்தில் மக்கள் தங்களை புதுப்பித்துக்கொண்டும் புத்துணர்ச்சியூட்டிக்கொண்டும் கவலைகளை மறந்து நிம்மதியாக இருக்கவும் பயணங்களையும் சாகச நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றனர். பாதுகாப்பான தங்குமிடம், சென்றடையவேண்டிய இடம், வழிகாட்டுதல், உணவு ஏற்பாடு உள்ளிட்ட பயணத்தை எளிதாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இவர்களிடம் ஆன்லைனில் புக் செய்து கொள்ளலாம்.
பயணக் கட்டணம் மற்றும் நிதி விவரம்
நிகழ்வுகள், சென்றடையவேண்டிய இடம், தேவைகள், வழங்கப்படும் பொருட்கள் ஆகியவற்றைப் பொருத்து பயணக் கட்டணம் வேறுபடும். 799 ரூபாயில் இருந்து இவரகளிடம் பயணக் கட்டணம் தொடங்குகிறது. சுய நிதியுடன் தொடங்கியுள்ள Tent N Trek வெளியிலிருந்து முதலீடோ நிதியுதவியோ இன்றி இயங்குகிறது. பணிகளை மேலும் விரிவடையச் செய்ய விரைவில் வெளியிலிருந்து நிதியை உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.
குழு விவரம் மற்றும் சந்தித்த சவால்கள்
இவர்களது முக்கிய குழுவில் 8 நபர்களும் முகாம் தலைவர்களாக 4 முதல் 6 நபர்களும் உள்ளனர். சுவாரஸ்யமற்ற பணியைத் துறந்து முகாம் மூலமாக மக்களுக்கு மகிழ்ச்சியை பரப்பும் கனவுடன் செயல்படுகிறார் நிறுவனரான மனோஜ் சூரியா. இவர் NSS மற்றும் NCC-யில் தீவிரமாக செயல்பட்டு கைட்ஸ் அண்ட் ஸ்கவுட்ஸ்-ல் மாநில விருதுகளை பெற்றுள்ளார். கார்ப்பரேட்டில் பணிபுரிந்து அந்த வாழ்க்கைப்பயணம் முழுமையற்றதாக உணர்ந்த, டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் முதுகலைப் பட்டம் பெற்ற முக்கிய குழு உறுப்பினரான (கோர் டீம் மெம்பர்) தனசூர்யா, டெண்ட் அண்ட் ட்ரெக் நிறுவனத்திற்கு ஆரம்பத்திலிருந்தே இருந்து வந்து மதிப்பைக் கூட்டி வருகிறார்.
சுற்றுச்சூழல் ஆர்வலரான சப்போர்ட் பிரிவைச் சேர்ந்த ராம்நாத் பள்ளி நாட்களிலிருந்தே இயற்கையில் ஆர்வம் கொண்டவர். தாவரவியல் வல்லுநரான இவர் தாவரங்கள் மற்றும் விலங்குகள் குறித்த விவரங்களை பகிர்ந்துகொள்கிறார். பொது மக்களால் அதிகம் பயணிக்கப்படாத பகுதிகளை ஆராயவும் உதவுகிறார். பொறியாளரான பிகே வெங்கடேஷ் வெளிப்புற பயணத்தின் போது நாள் முழுவதுமான நடவடிக்கைகள் முறையாக இயங்குவதை உறுதி செய்கிறார். பைக் பயணத்தை விரும்பும் இவர் தன்னுடைய நகைச்சுவைத் திறனால் சுற்றி இருப்பவர்களை சிரித்து மகிழவைப்பார்.
ஐந்து உறுப்பினர்களுடன் துவங்கப்பட்டு தற்போது குழுவில் பத்து உறுப்பினர்களாக உயர்ந்துள்ளது. தனிப்பட்ட வாழ்க்கைப்பயணம் எளிதானதல்ல. பல ஏற்ற இறக்கங்கள் இருந்தன. பட்டப்படிப்பு முடித்தவுடன் ஐடி நிறுவனத்தில் இணையாமல் ஸ்டார்ட் அப்பில் குறிப்பாக பயணம் சார்ந்த ஸ்டார்ட் அப்பில் ஈடுபட்டால் மிகப்பெரிய குற்றம் புரிந்ததாகவே நமது சமூகம் கருதுகிறது.
”பயணத்தில் ஈடுபட்டால் வாழ்க்கையில் முன்னேற முடியாது என்றும் பணம் சம்பாதிக்க முடியாது என்றும் பலர் கருதுகின்றனர். இப்படிப்பட்ட ஒரே மாதிரியான எண்ணங்களைத் தாண்டி ஒருவரது அதீத ஆர்வத்தை தொடர்வது மிகப்பெரிய சவாலாகும்,” என்றார் மனோஜ்.
Tent N Trek பதிவு செய்யப்பட்ட உண்மையான நிறுவனம் என்றபோதும் சில குழுக்கள் எங்களது பெயரையும் புகழையும் பயன்படுத்திக்கொள்வதை நாங்கள் கவனித்துள்ளோம். சில குழுக்கள் வெறும் கேளிக்கைக்காக சில நிகழ்வுகளைத் துவங்குவதால் பல குழப்பங்களில் முடிந்துவிடும். சிலரது இப்படிப்பட்ட செயல்கள் எங்களைப் போன்ற பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களுக்கு எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்துகிறது.”
மேலும் போட்டியாளர்கள் இவர்களது முகாமிற்கு வந்து இவர்களது செயல்பாடுகளை கற்றுக்கொண்டு அவர்களாகவே நிகழ்வுகளை ஏற்பாடு செய்யத் தொடங்குகின்றனர். இதனாலும் சில சமயம் வாடிக்கையாளர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டுவிடுகிறது என்று கருதுகிறார் மனோஜ்.
வருங்காலத்தில் பல நிகழ்வுகளை சர்வதேச அளவில் கொண்டு செல்லவும், சாகசங்களை விரும்பும் ஒவ்வொருவரிடமும் இதை கொண்டு சேர்க்கவும் திட்டமிட்டுள்ளனர். அதிகம் பயணிக்காத பகுதிகளை ஆராய்ந்து இந்த உலகம் வாழ்வதற்கு அழகான இடம் என்பதை அனைவருக்கும் உணர்த்த விரும்புகிறார் பயணக்காதலன் மனோஜ் சூரியா.