ஊரடங்கில் உங்கள் வீடு தேடி வரும் ஆவின் பால்...
இனி Zomato, Dunzo-விலும் ஆவின் பால் ஆர்டர் செய்யமுடியும்.
கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு மத்திய மற்றும் மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த ஊரடங்கு நேரத்தில் பொதுமக்களுக்குத் தேவையான பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்வதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக ஆவின் பாலகங்கள்
இந்த நெருக்கடியான சூழ்நிலையில் தொடர்ந்து பால் வழங்கும் பொருட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பால் மற்றும் பால் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைத்திட, பொது மக்களுக்குத் தேவைப்படும் இடங்களில் ஆவின் நிறுவனத்தின் மூலம் தற்காலிகமான ஆவின் கடைகள் அமைத்தும் நடமாடும் பாலகங்கள் ஏற்படுத்தியும் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.
மளிகைக் கடைகளில் ஆவின்பால்
பொதுமக்கள் தங்களின் அத்தியாவசியத் தேவையான மளிகைப் பொருட்கள் கொள்முதல் செய்யும் மளிகைக் கடைகள் சூப்பர் மார்க்கெட்டுகள் ஆகிய இடங்களில் ஆவின் பால் பொருட்கள் கிடைத்திட ஏதுவாக ஆவின் முகவர் நியமன விதிகளில் உரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி வணிக நிறுவனங்கள் தங்களின் விற்பனையை அதிகரித்துக்கொள்ள ஆவின் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளின் மூலமாக சென்னை மற்றும் தமிழகமெங்கும் தினசரி ஆவின் பால் விற்பனை 22.50 லட்சத்திலிருந்து 24.50 லட்சமாக உயர்ந்துள்ளது. அதேபோலவே பால் பொருட்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது.
வீடு தேடி வரும் ஆவின்
ஆவின் நிறுவனம் வெண்ணை, நெய், பால்கோவா, நறுமண பால் ஐஸ்கிரீம் போன்ற பால் பொருட்களை சென்னை மாநகரில் அமைந்துள்ள 50க்கும் மேற்பட்ட ஆவின் பாலகங்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.
தற்போது அதிநவீன பாலகங்களின் மூலம் நுகர்வோரின் வீடுகளைத் தேடி சென்று பால் மற்றும் பால் உபபொருட்கள் விநியோகம் செய்வதற்காக Zomato மற்றும் Dunzo நிறுவனங்களுடன் ஆவின் நிறுவனமும் இணைந்து சேவையாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் 24ஆம் தேதி ஏப்ரல் முதல் ஜோமடோ மற்றும் டன்சோ நிறுவனங்கள் மூலமாக ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் வாடிக்கையாளர்கள் வீட்டுக்கு நேரடியாக விநியோகம் செய்யப்படுகின்றன.
தற்பொழுது ஊரடங்கு நிலவி வரும் நிலையில் சென்னை மாநகர பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி எவ்வித சிரமமுமின்றி வாடிக்கையாளர்களின் வீடுகளைத் தேடிச்சென்று பால் மற்றும் பால் பொருட்கள் கிடைக்க ஆவின் நிறுவனத்தால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆகவே பொதுமக்கள் நுகர்வோர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இந்த அரிய வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு பால் மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி கேட்டுக்கொண்டுள்ளார்
தகவல்: தமிழக அரசு