‘AK Moto Ride’ - பைக் டூரிங் நிறுவனம் தொடங்கிய நடிகர் அஜித்குமார்!
பைக் பிரியரான நடிகர் அஜித்குமார் புதிதாக 'ஏகே மோட்டோ ரைடு' என்ற சுற்றுலா நிறுவனத்தை தொடங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இளசுகளின் ‘தல’ அஜித்குமார் தனிப்பட்ட வாழ்க்கை, சினிமா, ட்ரோன் டிரைவிங், மோட்டார் ரைடிங் என அனைத்திலும் யூத்களின் இன்ஸ்பிரேஷன். தனது தனித்திறமையால் ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும் ஏகே புதிதாக 'AK Motto Ride' என்ற சுற்றுலா நிறுவனத்தை தொடங்கி இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அஜித் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“வாழ்க்கை ஓர் அழகான பயணம். அதன் எதிர்பாராத தருணங்கள், திருப்பங்கள் மற்றும் திறந்த பாதைகளைக் கொண்டாடுங்கள் -இந்த மேற்கோளை நான் நீண்ட காலமாக விரும்பி வாழ்ந்து வருகிறேன்...”
மோட்டார் சைக்கிள்கள் மீதான எனது ஆர்வத்தை தொழிற்முறை முயற்சியாக மாற்றும் நோக்கில் ’ஏகே மோட்டோ ரைடு’ (AK MOTO RAID) என்ற மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை கொண்டு வந்திருக்கிறேன் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தியாவின் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகள் மட்டுமல்லாமல் சர்வதேச சாலைகளிலும் பயணம் மேற்கொள்ள ஆர்வமுள்ள ரைடர்ஸ், சாகச ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், பயண விரும்பிகளுக்கு ஏகே மோட்டோ ரைடு சுற்றுப் பயணங்களை வழங்கும். இதற்கு பாதுகாப்பு மற்றும் வசதிகளில் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் சுற்றுப் பயணங்கள் முழுவதிலும் நம்பகத்தன்மை மற்றும் செயல் திறனை உறுதி செய்து உன்னிப்பாக பராமரிக்கப்படும் சாகச சுற்றுலா சூப்பர் பைக்குகளை ‘ஏகே மோட்டோ ரைடு’ வழங்கும்.
”தொழில்முறை வழிகாட்டிகள், மோட்டார் சைக்கிள் நுணுக்கங்களை நன்கு அறிந்தவர்கள் மற்றும் உள்ளூர் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபு பற்றிய விரிவான அறிவைக் கொண்டவர்கள் தொடக்கம் முதல் இறுதி வரை ரைடர்களுக்கு தடையற்ற மற்றும் அதிவேக அனுபவத்தை வழங்குவார்கள்...” என்று அஜித் தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித்குமார் பைக் மற்றும் கார் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர். திரைப்படங்களில் கூட அஜித் பைக் ஓட்டும் காட்சிகள் என்றால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துவிடுவர்.

படப்பிடிப்பு இல்லாத காலங்களில் பைக்கில் சுற்றுலா செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார் அஜித்குமார். அண்மையில் கூட இந்தியா முழுவதும் அஜித் பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில், தற்போது சுற்றுலா பைக் நிறுவனம் தொடங்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் அஜித் மட்டுமல்ல, செக்யூரிட்டி கார்டின் பேரன் 8 பதக்கங்கள் வென்று அசத்தல்!