கிட்டப்பார்வையால் கலைந்த போலீஸ் கனவு: சரத்பாபு நடிகராக உருவான கதை!

தென்னிந்திய மொழிகளில் சுமார் 230க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஹீரோ மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்த சரத்பாபு உடல்நலக் குறைவால் காலமானது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கிட்டப்பார்வையால் கலைந்த போலீஸ் கனவு: சரத்பாபு நடிகராக உருவான கதை!

Monday May 22, 2023,

5 min Read

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் கடந்த 50 வருடங்களாக நடித்து வந்த பிரபல நடிகர் சரத்பாபு, செப்சிஸ் நோயால் பாதிக்கப்பட்டு, உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஹைதராபாத்தில் இன்று காலமானார்.

‘செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்...’ பாடலைக் கேட்பவர்கள் அனைவருக்குமே, அப்பாடல் காட்சியில் வரும் சரத்பாபுவை நிச்சயம் பிடிக்காமல் போகாது.

80-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் சரத்பாபு. ஹீரோவுக்கான முகவெட்டைக் கொண்டிருந்த போதும், ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அடம் பிடிக்காமல் ஹீரோவின் நண்பர், பாசக்கார சகோதரன், மகன், முதலாளி என தன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்ததாலேயே, அப்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக மக்கள் மத்தியில் தனக்கென தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர் சரத்பாபு.

sarath babu

நிறைவேறாத போலீஸ் கனவு

1951ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி ஆந்திர மாநிலத்தில் உள்ள அமதலவலசா என்ற ஊரில் பிறந்தவர் சரத்பாபு. பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் ’சத்யம் பாபு’ ஆகும். சினிமாவிற்காக இவரது பெயரை சரத்பாபு என மாற்றியது இயக்குநர் பாலச்சந்தர் தான்.

சரத்பாபுவின் அப்பா ஒரு உணவகத் தொழிலாளி. எனவே, தன்னுடைய தொழிலிலேயே சரத்பாபுவையும் கொண்டு வர விரும்பினார் அவர். ஆனால், சரத்பாபுவின் ஆசை வேறாக இருந்தது. சிறு வயது முதலே போலீஸாக வேண்டும் என்பதுதான் அவரது கனவு. ஆனால்,

கிட்டப்பார்வை பிரச்சினை அவரது போலீஸ் ஆசைக்கு முட்டுக்கட்டையானது. அவரது கனவு தகர்ந்தபோதும், கனவுத் தொழிற்சாலை அவரை கை நீட்டி வாரி அணைத்துக் கொண்டது.

sarath babu
“என் அம்மாவிடம், உன் மகன் அழகாக இருக்கிறான், அவன் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று என் கல்லூரி விரிவுரையாளர்கள் உட்பட நிறைய பேர் கூறினார்கள். எனவே, என் மனதிலும் அந்த ஆசை கொஞ்சம் கொஞ்சமாக உண்டாகத் தொடங்கியது. ஆனால் என் தந்தைக்கு நான் நடிகராவதில் துளியும் விருப்பமில்லை. அம்மாதான் எனக்கு ஆதரவாக இருந்தார்.”

நான் வியாபாரத்தில் ஈடுபடமாட்டேன் என்று என் மனதிற்கு நன்றாகப் புரிந்தது. ஒருவேளை நான் குடும்பத் தொழிலில் ஈடுபட்டு, அதில் தோல்வியுற்றால் உடனடியாக அதில் இருந்து பின் வாங்கி விடுவேன் என நினைத்தேன். எனவே, தொழிலில் ஈடுபடும் எண்ணம் சுத்தமாக மறைந்தது.

அப்போதுதான், ஒரு திரைப்படத்திற்கான புதுமுகத் தேர்விற்கான விளம்பரத்தை செய்தித்தாளில் பார்த்து, அதற்கு விண்ணப்பித்தேன். நான் எதிர்பார்த்ததைவிட மிக எளிதாக அதில் தேர்ச்சி பெற்றேன், என தான் சினிமாவிற்கு வந்த கதையை பேட்டியொன்றில் நினைவு கூர்ந்துள்ளார் சரத்பாபு.

1973ல் ’ராம ராஜ்யம்’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகராக வெள்ளித்திரையில் சரத்பாபு நடிகராக அறிமுகமானார். அப்படம் வெளியாகி நான்கு ஆண்டுகளுக்குப் பின், 1977ல் பட்டினப்பிரவேசம் படம் மூலம் அவரை தமிழில் அறிமுகப்படுத்தினார் இயக்குநர் கே பாலசந்தர்.

ஹைதராபாத்தில் ஒரு நிகழ்ச்சியில் சரத்பாபுவைப் பார்த்த கே.பாலசந்தர், அங்கேயே அவரை வைத்து ஃபோட்டோ ஷூட் நடத்தி தமது புதிய படத்துக்கு தேர்வு செய்தார். ஆனால், இப்படம் வெளியாவதில் சிக்கல்கள் ஏற்பட்டதால், கே.பாலசந்தரின் இயக்கத்தில் வெளியான ’நிழல் நிஜமாகிறது படமே’, சரத்பாபுவின் முதல் தமிழ்ப்படம் ஆனது. இப்படத்தில் கமலுக்கு நண்பராக, ஏறக்குறைய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சரத்பாபு.

ஜெ.வின் கடைசிப் பட ஹீரோ

நல்ல உயரம், உயரத்திற்கேற்ற உடல்வாகு, சிரித்த முகம் என்றிருந்த சரத்பாபுவை முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களுக்குப் பிடித்துப் போனது. பிறகென்ன, வட்டத்துக்குள் சதுரம், முள்ளும் மலரும், அகல் விளக்கு, நினைத்தாலே இனிக்கும், நெஞ்சத்தைக் கிள்ளாதே என அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. 1978ம் ஆண்டில் மட்டும் அவர் ஒரு தெலுங்கு படத்திலும், ஏழு தமிழ் படங்களிலும் நடித்தார்.

அதில் குறிப்பிடத்தக்க படங்கள் நிழல் நிஜமாகிறது, உயிருள்ளவரை, முள்ளும் மலரும் ஆகும். இதில் முள்ளும் மலரும் படத்தில் சரத்பாபு பாடுவது போல அமைந்திருக்கும் 'செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் உன் மீது மோதுதம்மா' என்ற பாடல் தான் சரத் பாபுவை தமிழ் ரசிகர்கள் நெஞ்சங்களில் இன்றும் அவரை நீங்காத நாயகராக வைத்திருக்கிறது என்றால் மிகையில்லை.

sarath babu with kamal

திசை மாறிய பறவைகள், பொன்னகரம், உச்சகட்டம், பாலநாகம்மா, கண்ணில் தெரியும் கதைகள், நதியை தேடிவந்த கடல், மெட்டி போன்ற திரைப்படங்கள் சரத்பாபு கதாநாயகனாக நடித்தவை. இதில் நதியைத் தேடி வந்த கடல் படம், மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா நடித்த கடைசிப்படம் ஆகும். இப்படத்தில் ஜெயலலிதாவிற்கு ஜோடியாக சரத்பாபு நடித்திருந்தார்.

ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அடம் பிடிக்காமல், தன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ளதா என்பதை மட்டுமே பார்த்ததால், பல முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பும் சரத்பாபுவிற்கு கிட்டியது. அதில், கீழ்வானம் சிவக்கும், தீர்ப்பு, இமைகள், சந்திப்பு, சிரஞ்சீவி, எழுதாத சட்டங்கள் என பல வெற்றிப் படங்களில் நடிகர் சிவாஜி கணேசனோடு இணைந்து நடித்த பெருமையும் இவருக்குண்டு.

தமிழில் சிவாஜி மட்டுமின்றி, ரஜினி, கமல் உள்ளிட்டோருடனும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் சரத்பாபு. முள்ளும் மலரும், நெற்றிக்கண், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து போன்ற படங்களில் ரஜினியின் கதாபாத்திரத்திற்கு ஏறக்குறைய இணையாக சரத்பாபுவின் கதாபாத்திரமும் அமைக்கப்பட்டிருந்தது. ரஜினியும், கமலும் தமிழ் சினிமாவில் தங்களுக்கென தனித்தனியே சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிக் கொண்டிருந்த காலகட்டம் அது. அப்போது இருவருக்குமே நெருங்கிய நண்பராக, இணை நாயகனாக படங்களில் நடித்து வந்தார் சரத்பாபு.

sarath babu with rajini

நல்ல தெளிவான உச்சரிப்பைப் பெற்றிருந்ததால், பின்னணிக் குரல் கொடுக்கும் வாய்ப்பும் சரத்பாபுவிற்கு கிடைத்தது. 1981ல் இயக்குநர் மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த “நண்டு” திரைப்படத்தில் நாயகன் சுரேஷிற்கு சரத்பாபுதான் பின்னணி குரல் கொடுத்திருந்தார்.

விருதுகளின் நாயகன்

அலைகள் ஓய்வதில்லை படத்தின் தெலுங்கு பதிப்பான, ’சீதாகோக சிலகா’ படத்தில், தமிழில் நடிகர் தியாகராஜன் நடித்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சரத்பாபு. இந்தப் படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டதோடு, அந்த ஆண்டின் சிறந்த துணை நடிகருக்கான நந்தி விருதும் அவருக்குக் கிடைத்தது.

இதுவரை ஆந்திர மாநில சினிமா விருதான நந்தி விருதை எட்டு முறை வென்றுள்ளார். இதுதவிர தமிழ்நாடு அரசு சினிமா விருது உட்பட மற்ற மொழிகளிலும் பல விருதுகளைப் பெற்றுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ஏறக்குறைய 200க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கும் சரத்பாபு, கடைசியாக தமிழில் “வசந்த முல்லை” என்ற படத்தில் நடித்தார்.

sarath babu

வயது கூடத் தொடங்கியதும், சினிமாவில் இருந்து சரத்பாபுவின் கவனம் சின்னத்திரைக்கு திரும்பியது. சீரியலிலும் தன் நடிப்பால் தனி முத்திரைப் பதித்தார். 1980-களின் கடைசியில் சிலந்தி வலை, நரேந்திரனின் விநோத வழக்கு, 1990-களில் பெண், இவளா என் மனைவி, எத்தனை மனிதர்கள், 2003ல் ராஜ் டிவியில் ஒளிபரப்பான ரெக்கை கட்டிய மனசு, 2013ல் சன் டிவியில் ஒளிபரப்பான ராஜகுமாரி போன்ற நெடுந்தொடர்கள் நடித்திருந்தார் சரத்பாபு.

தோல்வியில் முடிந்த திருமணங்கள்

1980ம் ஆண்டு தன்னைவிட சில ஆண்டுகள் வயதில் மூத்தவரான பழம்பெரும் நடிகை ரமாபிரபாவை திருமணம் செய்து கொண்டார் சரத்பாபு. ஆனால், இந்த உறவு எட்டு வருடம் மட்டுமே நீடித்தது. 1988ம் ஆண்டு ரமாபிரபாவை அவர் பிரிந்தார். பின்னர், 1990ல் சினேகா நம்பியாரை மணந்தார். இவர் மூத்த வில்லன் நடிகரான என்.எம் நம்பியாரின் மகள் ஆவார்.

இந்தத் தம்பதிக்கு கார்த்திக் என்ற மகனும், பல்லவி என்ற மகளும் உள்ளனர். ஆனால், இந்த திருமணமும் தோல்வியில் முடிய, 2011ல் சினேகாவையும் சரத்பாபு பிரிந்தார்.

இந்நிலையில்தான், கடந்த சில மாதங்களுக்கு முன்பு செப்சிஸ் தொற்றால் சரத்பாபு பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. உடல் உள்ளுறுப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக செயலிழக்க வைக்கும் இந்த நோயால், கடுமையாக பாதிக்கப்பட்ட சரத்பாபு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்து வந்தது.

sarath babu

இந்தச் சூழ்நிலையில், இன்று சிகிச்சைப் பலனின்றி சரத்பாபு உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது இந்த மறைவு தென்னிந்திய சினிமா ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சரத்பாபுவின் மறைவிற்கு திரைத் துறையைச் சேர்ந்தவர்களும், கட்சித் தலைவர்களும் நேரிலும், சமூகவலைதளப் பக்கங்கள் வாயிலாகவும் தங்களது இரங்கலைப் பதிவு செய்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில்,

“தென்னிந்திய திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்து வலம் வந்த சரத்பாபு மறைந்த செய்தி அறிந்து வருந்தினேன்,” எனத் தெரிவித்துள்ளார். இதேபோல், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும் சரத்பாபுவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல், சரத்பாபுவின் மறைவு குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில்,

“சிறந்த நடிகரும், அருமை நண்பருமான சரத்பாபு மறைந்துவிட்டார். அவருடன் இணைந்து நடித்த நாட்கள் என் மனதில் நிழலாடுகின்றன.”
”தமிழில் என் குருநாதரால் அறிமுகப்படுத்தப்பட்டவர். காலத்தால் அழியாத பல பாத்திரங்களை ஏற்று சிறப்பு செய்தவர். ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது. அவருக்கு என் அஞ்சலி,” எனத் தெரிவித்துள்ளார்.