பிளாஸ்டிக் ஒழிப்பை தீவிரமாக பிரச்சாரம் செய்யும் 16 வயது ‘இளம் இகோ ஹீரோ’
குருகிராமில் உள்ள ஸ்ரீ ராம் பள்ளியில் பதினோறாம் வகுப்பு படிக்கும் ஆதித்யா முகர்ஜி என்சிஆர் பகுதியில் வீடு வீடாகச் சென்று பிளாஸ்டிக்கால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று பொருட்கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்.
நீங்கள் அடுத்த முறை டெல்லி கான் மார்கெட் பகுதியில் உள்ள கஃபே சென்று கோல்ட் காபி அல்லது மில்க்ஷேக் ஆர்டர் செய்தால் பிளாஸ்டிக் ஸ்ட்ரா தரவில்லையே என ஆச்சரியப்படவேண்டாம்.
ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்காக ஆதித்யா முகர்ஜி மேற்கொண்டு வரும் முயற்சிகள் இதற்குக் காரணமாக இருக்கலாம். 16 வயது ஆதித்யா ஒரு பள்ளி மாணவர். மனிதனின் கண்டுபிடிப்புகளில் மிகவும் ஆபத்தானது, ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் என்பது இவரது திடமான நம்பிக்கை. இதை ஒழிப்பதற்கு தன்னால் இயன்ற வகையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
ஒருமுறை பயன்படுத்தக்கூடிய ஸ்ட்ரா, பாட்டில்கள், ராப்பர்கள், சாஷேக்கள் போன்ற பேக்கேஜிங் பொருட்கள் அனைத்துமே பாலிப்ரொப்பிலீனால் ஆனவை. இவை மக்காது. மறுசுழற்சி செய்வதும் எளிதல்ல. இதனால் சுற்றுசூழல் பாதிக்கப்படுகிறது. நிலத்தில் கழிவுகளாக கொட்டப்படும் பிளாஸ்டிக்கில் ஸ்ட்ரா அதிகம் காணப்படுகிறது.
ஆதித்யா, பிரச்சனையின் தீவிரம் குறித்து அறிந்ததும் இதற்குத் தீர்வுகாண விரும்பினார். குருகிராமில் உள்ள ஸ்ரீ ராம் பள்ளியில் பதினோறாம் வகுப்பு படிக்கும் இவர், என்சிஆர் பகுதியில் வீடு வீடாகச் சென்று பிளாஸ்டிக்கால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று பொருட்கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்.
Un-Plastic Collective (UPC) என்கிற அமைப்பு பிளாஸ்டிக் மாசு ஒழிப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பலர் தாமாக முன்வந்து இதில் பங்களித்து வருகின்றனர்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 9.46 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தியாவதாக இந்த அமைப்பு நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. இதில் மிக அதிக அளவாக 40 சதவீதம் சேகரிக்கப்படாமல் உள்ளது. மத்த மெட்ரோக்களைக் காட்டிலும் டெல்லியில் மிக அதிகமாக ஆண்டுக்கு 689 டன் பிளாஸ்டிக் உற்பத்தியாகிறது.
“பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் மோசமான விளைவுகளை நம் அன்றாட வாழ்க்கையில் கண்கூடாகப் பார்க்கமுடிகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டைப் பொறுத்தவரை மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை. இதில் அக்கறைக் காட்டுவதுமில்லை. எனவே என்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்று நினைத்தேன்,” என்று ஆதித்யா முகர்ஜி சோஷியல்ஸ்டோரி இடம் தெரிவித்தார்.
இரண்டாண்டுகளில் இவர் ஸ்ட்ரா உட்பட 28 மில்லியனுக்கும் அதிகமான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டைத் தடுத்துள்ளார். கிட்டத்தட்ட 150 வணிக நிறுவனங்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கைவிட இவரே காரணமாக இருந்துள்ளார்.
பிளாஸ்டிக் இல்லா உலகம்
குருகிராமில் பிறந்து வளர்ந்த ஆதித்யா, புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம், மாசுபாடு, வளங்கள் அழிந்துபோவது உள்ளிட்ட சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்து தெரிந்துகொண்டார். இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து இவரது பெற்றோர் அடிக்கடி சொல்வதுண்டு.
“என் பெற்றோருக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கையில் நம்பிக்கை உண்டு. அதுகுறித்த சிந்தனைகளை என் மனதில் பதிய வைத்தே வளர்த்தார்கள்,” என்று ஆதித்யா நினைவுகூர்ந்தார்.
ஆதித்யாவிற்கு 14 வயதிருக்கையில் ‘சிந்தன் என்விரான்மெண்டல் ரிசர்ச் அண்ட் ஆக்ஷன் குரூப்’ என்கிற அரசு சாரா நிறுவனத்தில் தன்னார்வப் பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். இந்நிறுவனம் தனிநபர்கள், பொதுமக்கள் அடங்கிய குழுக்கள், நிறுவனங்கள் போன்றோருடன் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த உற்பத்தி, அறிவியல் பூர்வமான கழிவு அகற்றம் போன்றவை தொடர்பான பிராஜெக்டுகளில் பணியாற்றினார். Canadian High Commission உடன் இணைந்து Plastic Upvaas நிகழ்வை 2018-ம் ஆண்டு நடத்தினார். ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் இல்லாமல் ஒரு நாள் முழுக்க செலவிட்டு, பின்னர் இதையே தொடர்ந்து பின்பற்ற மக்களை ஊக்குவிப்பதே இந்நிகழ்வின் நோக்கம்.
Chintan குழுமம் நேஷனல் ஜியோகிராஃபிக் உடன் இணைந்து “A Million Yays for the Oceans and a Million Nays for Single-use Plastics” என்கிற பிரச்சாரத்தை 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏற்பாடு செய்தது. இதற்கு இளம் ஆலோசகராக ஆதித்யா நியமிக்கப்பட்டார். டெல்லியில் உள்ள பிவிஆர் சினிமாஸ், Dastkar போன்ற இடங்களில் நடைபெற்ற, கழிவுகளை பிரித்தெடுக்கும் முயற்சிகள் மற்றும் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சாரங்களில் தீவிரமாக பங்களித்தார்.
சில மாதங்களுக்குப் பின்னர் என்ஜிஓ-க்களுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். டெல்லியைச் சுற்றியுள்ள உணவகங்கள், கஃபே, ஜூஸ் கடைகள் போன்றவற்றில் பிளாஸ்டிக் அதிகளவில் பயன்படுத்தப்படுவதை ஆதித்யா கவனித்தார்.
“இவர்கள் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை அதிகளவில் பயன்படுத்தினார்கள். பேக் செய்து வழங்கப்படும் ஃப்ரெஷ்ஷான ஜூஸ் வகைகள் ஸ்ட்ராக்களும் கொடுக்கப்பட்டது. பிளாஸ்டிக் பாக்ஸ், கட்லெரி போன்றவையும் பயன்படுத்தப்பட்டது. இதைத் தடுக்க விரும்பினேன்,” என்றார் ஆதித்யா.
இதை கவனித்த ஆதித்யா பிளாஸ்டிக்கின் கலவை, அதன் தீமைகள், சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று போன்றவை குறித்து ஆய்வு செய்து விளக்கக்காட்சி ஒன்றை தயாரித்தார்.
“மக்கள் பிளாஸ்டிக்கைத் தவிர்க்க முன்வரவேண்டும் என்று விரும்பினேன். இதற்கு அவர்களது ஒத்துழைப்பைப் பெற எண்ணினேன். எனவே குருகிராமில் உள்ள DiGhent Café சென்று அதன் மேலாளரிடமும் அங்கிருந்த மக்களிடமும் விளக்கக்காட்சியை காட்டினேன். பிளாஸ்டிக் ஸ்ட்ரா பயன்படுத்தவேண்டாம் என்று எடுத்துரைத்தேன். ஸ்டீல் அல்லது பேப்பர் கொண்டு தயாரிக்கப்படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகளை பயன்படுத்தலாம் என விவரித்தேன்,” என்றார்.
ஆதித்யா தனது முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதை கவனித்தார். இதுபோல் பல இடங்களுக்கு சென்று மக்களுக்கு விளக்கினால் பலன் கிடைக்கும் என்கிற நம்பிக்கை அவருக்குப் பிறந்தது.
பிளாஸ்டிக்கிற்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று பொருட்களை விநியோகிக்கும் விற்பனையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை உணவகங்களுக்கு பரிந்துரை செய்தார்.
இவர் மேற்கொண்ட முயற்சிகளால் இரண்டாண்டுகளில் 150க்கும் அதிகமான நிறுவனங்கள் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய முன்வந்தன. குறைந்தபட்சம் 50,000 ஸ்ட்ராக்களின் பயன்பாட்டைத் தவிர்க்கவேண்டும் என்பதே இந்த மாணவரின் இலக்காக இருந்தது. ஆனால் இவர் மேற்கொண்ட முயற்சிகள் 26 மில்லியன் ஸ்ட்ராகள், இரண்டு மில்லியன் பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவை நிலங்களில் கொட்டப்படுவதைத் தவிர்த்துள்ளது.
சமூக ஊடகங்களைப் பயன்படுத்திக்கொண்டார்
மக்களை அதிகளவில் சென்றடைவதற்கு சமூக ஊடகங்கள் மிகச்சிறந்த சாதனம் என்பதை உணர்ந்த ஆதித்யா The Alternatives என்கிற ஃபேஸ்புக் குழு ஒன்றை உருவாக்கினார். பிளாஸ்டிக்கினால் ஏற்படும் மோசமான பாதிப்புகள் குறித்தும் அவற்றின் பயன்பாட்டை குறைக்கும் விதம் பற்றியும் இதில் விவரிக்கப்பட்டது. அவர் சந்தித்த தடங்கல்கள் குறித்து கூறும்போது,
“என் படிப்பையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளையும் சமன்படுத்துவது ஆரம்பத்தில் கடினமாக இருந்தது. பள்ளி நேரம் முடிந்த பிறகும் வார இறுதி நாட்களிலும் நான் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டேன். இந்த முயற்சி சற்று கடினமாகவே இருந்தது. இருப்பினும் என்னைத் தொடர்ந்து ஊக்கப்படுத்திக்கொண்டேன்,” என்றார்.
சமீபத்தில் Forest of Hope என்கிற காடு வளர்ப்பு முயற்சியை ஆதித்யா தொடங்கியுள்ளார். பசுமைப் போர்வையை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இதற்காக தேசிய மற்றும் உலகளாவிய நிறுவனங்களுடன் இணைந்துள்ளார். இந்நிறுவனங்களின் வளாகங்களில் மரம் நடும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
Neotia பல்கலைக்கழகம், மணிப்பூர் பல்கலைக்கழகம், செயிண்ட் ஸ்டீஃபன்ஸ் கல்லூரி, சர்ச் ஆஃப் நார்த் இந்தியா, Jatin Dharmarth Sanathan Rajasthan, 1 பில்லியன் ட்ரீஸ் ஆப்பிரிக்கா, கனடாவில் உள்ள கெலோவ்னா சிட்டி கவுன்சில் ஆகிய நிறுவனங்கள் இதில் அடங்கும்.
இளைஞர்களுக்கு ஊக்கம்
ஆக்ஷன் ஃபார் நேச்சர் (AFN) உலகம் முழுவதும் உள்ள இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் 17 பேரை '2020 இண்டர்நேஷனல் யங் இகோ-ஹீரோ’ என கௌரவித்தது. இதில் 16 வயதான ஆதித்யாவும் ஒருவர்.
சமீபத்தில் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டத்தில் இண்டெர்ன் செய்வதற்கான வாய்ப்பு ஆதித்யாவிற்கு கிடைத்துள்ளாது. UN வழக்கமாக 18 வயதிற்குக் குறைவானவர்களை இண்டெர்னாக ஏற்றுக்கொள்வதில்லை. இதற்கு விதிவிலக்காக ஆதித்யாவிற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
“என் இண்டர்ன்ஷிப் முடித்தபிறகு இந்தியாவில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் என் பணிகள் குறித்தும் பிளாஸ்டிக் இல்லாத கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் முயற்சி குறித்தும் உரையாற்ற எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் நடைபெற உள்ள 'UN யூத் கிளைமேட் ஆக்ஷன் சம்மிட்’ நிகழ்வில் பங்கேற்கவும் அழைக்கப்பட்டுள்ளேன். இங்கு ஐ.நா பொது செயலாளர் ஆந்தானியோ கட்டரஸ் உடன் உரையாட வாய்ப்பு கிடைப்பதுடன் மார்ச் மாதம் கிரேட்டா தன்பெர்க் உடன் உரையாடவும் வாய்ப்பு கிடைத்துள்ளது,” என்றார்.
உலகை சுத்தமான, பசுமையான இடமாக மாற்றும் முயற்சிகளை இனி வரும் நாட்களிலும் ஆதித்யா தொடர உள்ளார். சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பதில் இளைஞர்களால் பெருமளவு பங்களிக்கமுடியும் என்பது இவரது திடமான கருத்து.
“ஆரோக்கியமான, பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக சுற்றுச்சூழல் பிரச்சனைகளைக் கையாள்வதில் இளைஞர்கள் முன்வந்து பங்களிக்கவேண்டியது அவசியம். ஒவ்வொரு சிறு முன்னெடுப்பும் மிகப்பெரியம் மாற்றத்தைக் கொண்டு சேர்க்கும்,” என்று நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார் ஆதித்யா.
ஆங்கில கட்டுரையாளர்: ரோஷ்னி பாலாஜி | தமிழில்: ஸ்ரீவித்யா