வணிகம் தொடங்க வயது தடையல்ல என்பதை நிரூபித்துள்ள நளினி!
51 வயது நளினி நாகப்பா ஷெட்டி பேப்பர் தட்டு, ஊதுபத்தி தயாரித்து விற்பனை செய்யும் தொழில் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
கர்நாடகாவின் உத்தர கன்னடா பகுதியில் அமைந்துள்ளது எல்லபூர் எனும் சிறு நகரம். இது பாக்கு சாகுபடிக்கு பெயர் போன இடம். இங்குள்ளவர்களில் 90 சதவீதம் பேர் பாக்கு மற்றும் நெல் சாகுபடியில் ஈடுபட்டிருப்பதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
நளினி நாகப்பா ஷெட்டிக்கு 51 வயதாகிறது. இவருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர். கணவருடனும் குழந்தைகளுடனும் உத்யமா நகரில் வசித்து வருகிறார். இவரது குடும்பத்தினர் பல தலைமுறைகளாகவே பாக்கு சாகுபடியில் ஈடுபட்டு வந்தனர்.
ஒரு கட்டத்தில் நளினியின் கணவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவரால் வேலைக்கு சென்று சம்பாதிக்க முடியாத சூழல் உருவானது. நளினி குடும்பச் செலவுகளை சமாளிக்க வேலை செய்ய ஆரம்பித்தார். நிலத்தில் வேலை செய்வார். மூத்த மகளின் உதவியுடன் பாக்கு அறுவடை செய்வார்.
பாக்கு அறுவடை மூலம் கிடைக்கும் பணம் குடும்ப செலவுகளுக்கு போதுமானதாக இல்லை. வருமானத்தைப் பெருக்குவதற்கான வழிகளை நளினி ஆராய்ந்தார்.
“2016-ம் ஆண்டு 'சுப்ரியா’ என்கிற சுய உதவிக் குழுவில் சேர்ந்தேன். அங்கு 'மனுவிகாசா’ என்கிற என்ஜிஓ உதவியுடன் தொழில்முனைவு திட்டங்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது. பெண்கள் தொழில் தொடங்கி வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள இத்திட்டங்கள் உதவுகின்றன,” என்கிறார் நளினி.
EdelGive Foundation உடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட தொழில்முனைவு திட்டத்தில் நளினி கலந்துகொண்டார். அதன் பின்னர் நளினி ஒரு லட்ச ரூபாய் வங்கிக்கடன் பெற மனுவிகாசா உதவியது. சுய உதவிக் குழு மூலம் சிண்டிகேட் வங்கியில் இருந்து இந்தக் கடன் தொகை வழங்கப்பட்டது.
இதைக் கொண்டு பேப்பர் பிளேட் வணிகத்தைத் தொடங்கினார் நளினி. அதுதவிர கூடுதலாக 50,000 ரூபாய் கடன் வாங்கினார். ஊதுபத்தி வணிகத்தையும் தொடங்கினார். கடனாகக் கிடைத்த தொகையைக் கொண்டு ஒரு சிறிய ஷெட் அமைத்து பேப்பர் பிளேட் தயாரிப்பதற்கான இயந்திரத்தை நிறுவினார்.
”பேப்பர் பிளேட் தயாரிப்பிற்கான மூலப்பொருட்களை பெங்களூருவில் இருந்து வாங்குகிறேன். இயந்திரங்கள் மூலம் வெவ்வேறு அளவுகளில் தட்டு தயாரிக்கிறோம்,” என்கிறார் நளினி.
பேப்பர் தட்டு வணிகம் சிறப்பாக நடந்துகொண்டிருந்த சமயத்தில் ஊதுபத்தி வணிகத்தையும் தொடங்கியுள்ளார்.
“ஓய்வு நேரம் கிடைக்கும்போது என் மகன் எனக்கு உதவி செய்கிறான்,” என்கிறார் நளினி.
நளினி ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி பேப்பர் தட்டு, ஊதுபத்தி இரண்டு தயாரிப்பையும் சந்தைப்படுத்தி ஆர்டர் பெறுகிறார்.
5 குவிண்டால் பேப்பர் பயன்படுத்தப்படுவதாக நளினி கூறுகிறார். ஒரு குவிண்டாலுக்கு 5 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்கிறார்.
“பேப்பர் பிளேட் தயாரித்த பிறகு ஒரு குவிண்டாலுக்கு 1,500 ரூபாய் நிகர லாபம் கிடைக்கும். சரியான நேரத்தில் கடன் தவணையை செலுத்திவிடுகிறேன். மாதம் 7,500 ரூபாய் வரை சம்பாதிக்கிறேன்,” என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார் நளினி.
இவரது தொழில் சிறப்பாக நடந்து வருகிறது. பேப்பர் பிளேட், ஊதுபத்தி இரண்டு தயாரிப்புகளையும் மற்ற கிராமங்களிலும் விற்பனை செய்ய விரும்புகிறார். வயது ஒரு எண்ணிக்கை மட்டுமே என்று குறிப்பிடும் நளினி தொழில்முனைவு முயற்சியைத் தொடங்க வயது ஒரு தடையே இல்லை என்பதை வலியுறுத்துகிறார்.
”தொழில் செய்வதற்கு முறையான பயிற்சி எதுவும் நான் பெறவில்லை. கிட்டத்தட்ட 50 வயதை நெருங்கும் சமயத்தில்தான் தொழில் தொடங்கினேன். மற்றவர்களும் என்னைக் கண்டு உந்துதல் பெற்று துணிந்து தொழில் முயற்சியைத் தொடங்கவேண்டும்,” என்கிறார் நளினி.
ஆங்கில கட்டுரையாளர்: தியா கோஷி ஜார்ஜ் | தமிழில்: ஸ்ரீவித்யா