உள்நாட்டு ஏவுவாகனத் தயாரிப்பு நிறுவனம் Agnikul சர்வதேச 3டி பிரின்டிங் நிறுவனத்துடன் ஒப்பந்தம்!
ராக்கெட் இஞ்சின் தயாரிப்பில் 3-டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தை மேலும் சிறப்பாக பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அக்னிகுல் நிறுவனம் இ.ஓ.எஸ் இந்தியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
சென்னையைச்சேர்ந்த விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனமான 'அக்னிகுல் காஸ்மோஸ்', 3-டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் இ.ஓ.எஸ் இந்தியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ராக்கெட் மற்றும் துணை அமைப்புகள் தயாரிப்பில் 3-டி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த இந்த ஒப்பந்தம் வழிவக்கும்.
சென்னை ஐஐடியில் உருவான Agnikul Cosmos நிறுவனம், புதிதாக அறிவிக்கப்பட்ட இன் – ஸ்பேஸ் திட்டத்தின் கீழ், விண்வெளி ஆய்வுத்துறையுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட முதல் நிறுவனமாக திகழ்கிறது. இந்நிறுவனம், இந்தியாவின் முதல் தனியார் செயற்கைகோள் ஏவுவாகனமான ‘அகின்பான்’ (Agnibaan) உருவாக்கும் திட்டத்தில் உள்ளது.
அக்னிகுல் நிறுவனம், இந்தியாவில் செயல்பாடுகளைக் கொண்ட, ஜெர்மனியைச்சேர்ந்த 3-டி பிரிண்டிங் தொழில்நுட்ப நிறுவனமான ஒ.ஒ.எஸ் – உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம், 3-டி பிரிண்டிங் மூலம் புதுமையான தயாரிப்புத் தீர்வுகளை உருவாக்க மற்றும் செலவு குறைந்த ஏவுவாகனங்களை வடிவமைர்த்து, ஏவுவதற்கான காத்திருப்பு நேரத்தை குறைக்கவும் உதவும் என நிறுவனம் ஒரு செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
மேலும், அக்னிகுல் தனது மையத்தில், EOS M400-4 பிரிண்டர் வசதியை நிறுவி முப்பரிமான ராக்கெட் மாதிரியை உருவாக்குவதில் பயன்படுத்திக்கொள்ளும். இதன் மூலம் ராக்கெட் இஞ்சின் உருவாக்க செயல்முறையை முழுவதும் தனது இடத்திலேயே மேற்கொள்ளும்.
இதற்கு ஏற்ற தொழில்நுட்ப அறிவு, பயிற்சி ஆகியவற்றை இ.ஓ.எஸ் நிறுவனம் அளிக்கும். ராக்கெட் இஞ்சினை 3-டி பிரிண்டிங்கில் உருவாக்குவது, இந்த செயல்முறையை தானியங்கிமயமாக்கி, தேவைக்கேற்ப ராக்கெட் ஏவுவதை சாத்தியமாக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போதுள்ள சிறிய செயற்கைகோள் வர்த்தகத்தில் இது மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும்.
“அக்னிகுல் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவது உற்சாகம் அளிக்கிறது. தங்கள் தயாரிப்புக்காக 3-டி பிரிண்டிங் நுட்பத்தை நிறுவனம் புதுமையாக பயன்படுத்த முற்படுகிறது. மேலும், பல நிறுவனங்கள் தங்கள் தேவையை நிறைவேற்றிக்கொள்ள 3-டி பிரிண்டிங் நுட்பத்தை நாடும் நிலையில் ஆதரவான பங்குதாரர் பாத்திரத்தை நிறைவேற்றி வருகிறோம்,” என இ.ஓ.எஸ் இந்தியா கண்ட்ரி ஹெட் ஆனந்த பிரகாசம் கூறியுள்ளார்.
அக்னிகுல் 2018 முதல் சிறிய அளவில் இஞ்சின்களை அச்சிடும் முறையில் உருவாக்குவதை சோதித்து வருகிறது. கடந்த ஆண்டு, EOS 3D பிரிண்டரில் உருவாக்கப்பட்ட முழு ராக்கெட் இஞ்சினை சோதித்து பார்த்த நிறுவனமாக விளங்குகிறோம். இந்த ஒப்பந்தம், இந்தியாவுக்காக உலகத்தரம் வாய்ந்த விண்வெளி தொழில்நுட்பத்தை உருவாக்க 3-டி பிரிண்டிங் நுட்பத்தை பயன்படுத்திக்கொள்ள உதவும்” என அக்னிகுல் இணை நிறுவனர் மற்றும் சி.ஓ.ஓ மொயின் எஸ்.பி.எம். (Moin SPM) கூறியுள்ளார்.
“முழு இஞ்சினை உருவாக்கும் நுட்பத்தை சொந்தமாகக் கொண்டிருப்பது, இஞ்சின் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் 72 மணிநேரத்தில் உருவாக்க உதவும். இத்தகைய இஞ்சின்களில் உள்ள சிக்கலான செயல்முறையையும் எளிதாக்கும்,” என்று இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ ஸ்ரீநாத் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.