ரூ.1,000 கோடி செலவில் கோலாகல திருமணம் - அம்பானி வீட்டு விசேஷத்தில் திரண்ட செலிபிரிட்டிகள்!
ஜாம் நகரில் நடந்து வரும் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி-ராதிகாவின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள்தான் தற்போது இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.
இந்தியாவின் முன்னணி கோடீஸ்வர குடும்பங்களில் ஒன்றான அம்பானி வீட்டில் சிறிய விசேசம் என்றாலும் அது ஊடகங்களில் நிச்சயம் பெரிய பேசுபொருளாகத்தான் இருக்கும். அதற்குக் காரணம் அந்த நிகழ்வின் பிரம்மாண்டம் தான். சாதாரண நிகழ்ச்சிகளே அப்படியென்றால் அம்பானி வீட்டுத் திருமணம் என்றால் கேட்கவா வேண்டும்.

அனந்த்-ராதிகா திருமணம்
முகேஷ் அம்பானி - நீதா அம்பானி ஆகியோரின் இளைய மகன் அனந்த் அம்பானிக்கும், பிரபல தொழிலதிபர் விரேன் மெர்ச்சென்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சென்ட்டிற்கு வரும் ஜூலை 12ம் தேதி மும்பையில் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகின்றன. இந்தத் திருமணத்தை ரூ.1,000 கோடி செலவில் பிரமாண்டமாக நடத்த அம்பானி குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நீதா அம்பானி, ஷ்லோகா மேத்தா, ஆகாஷ் அம்பானி மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் இந்த ஏற்பாடுகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, குஜராத் மாநிலம் ஜாம்நகரில் திருமணத்திற்கு முந்தைய விழாவை சர்வதேச மற்றும் இந்திய பிரபலங்களை அழைத்து அம்பானி குடும்பத்தினர் கொண்டாடி வருகின்றனர்.
சென்டிமெண்ட்
ஜாம் நகரில் தான் ரிலையன்ஸ் குழுமத்தின் சார்பில் சுமார் 2,500 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்ட அனந்த் அம்பானியின் யானை உள்ளிட்ட வன விலங்குகளை பராமரிக்கும் ‘வந்தாரா’ மையம் அமைந்திருக்கிறது. முகேஷ் அம்பானியும், அவரது தந்தை திருபாய் அம்பானியும் முதன் முதலில் பிசினஸை ஆரம்பித்த இடம். இதை மனதில் வைத்துதான் இந்த நிகழ்ச்சி அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அம்பானி வீட்டு விசேஷம் என்றாலே நிச்சயம் அதில் பிரபல தொழிலதிபர்கள், திரைத்துறையினர், அரசியல் பிரமுகர்கள் என பிரபலங்களின் கூட்டம் நிறைந்து காணப்படும். எனவே, அவர்களை அசர வைக்கும் விதமாக விருந்து, பரிசுப் பொருட்கள், கொண்டாட்டட்டங்கள் என பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நேற்று ஆரம்பித்த இந்த திருமணத்திற்கு முந்தைய விழா, மொத்தம் மூன்று நாட்களாக நாளை வரை நடைபெற இருக்கிறது. இந்தத் திருமணத்தைப் பற்றிய சுவாரஸ்யமான, ஆச்சர்யமடையத்தக்க, வியக்கத்தக்க பல விசயங்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.
இதோ அவற்றைப் பற்றி சுருக்கமாகப் பார்க்கலாம்...
51 ஆயிரம் பேருக்கு விருந்து

- இந்த திருமணத்திற்கு முந்தைய விழாவில் 2,500 வகை உணவுடன் தடபுட விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்திய உணவுகள் மட்டுமின்றி, தாய்லாந்து, ஜப்பான், மெக்ஸிகன் மற்றும் பர்சி என பல நாட்டு உணவு வகைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
- குஜராத் மாநிலம் ஜாம் நகரில் விழா நடைபெறுவதால், அப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 51 ஆயிரம் பேருக்கு அம்பானி குடும்பத்தினர் விருந்தளித்தளித்துள்ளனர். விருந்தில் பங்கேற்றவர்களுக்கு மணமக்கள் மற்றும் அம்பானி குடும்பத்தினரே இன்முகத்துடன் உணவு பரிமாறியுள்ளனர்.
- விருந்து நிகழ்ச்சிக்காக சிறந்த சமையல் கலைஞர்கள் 65 பேர் தலைமையிலான குழுவினர் ஜாம் நகரில் முகாமிட்டுள்ளனர். இவர்களில் 20 பெண் சமையல் கலைஞர்கள். சமையல் செய்வதற்கான பாத்திரங்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் உள்ளிட்டவை 4 லாரிகளில் கொண்டுவரப்பட்டுள்ளன.
விதவிதமான உணவுகள்
- ஒரு நாள் விருந்தில் இடம் பெரும் உணவு வகைகள் மீண்டும் மறுநாள் உணவு மெனுவில் இடம் பெறாத வகையில் பார்த்து பார்த்து உணவு பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. காலை உணவுக்கு 75 வகையான உணவுகளும் மதியத்திற்கு 225 வகை உணவுகளும் இரவு விருந்தில் 275 வகை உணவு வகைகளும் இடம் பெறுகின்றன.

- இதுதவிர நள்ளிரவில் 85 வகையான நொறுக்கு தீனிகள் உள்ளிட்ட உணவுகளும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
1000 சிறப்பு விருந்தினர்கள்
- இதில் 1000 விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் பில்கேட்ஸ், ஹிலரி கிளிண்டன், மார்க் ஜக்கர்பர்க், சுந்தர் பிச்சை உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். சர்வதேச பிரபலங்கள் வருகை புரிந்துள்ளதால் ஜாம்நகரே விழாக்கோலம் பூண்டுள்ளது.
- இவ்விழாவிற்காக அமிதாப் பச்சன், ஷாருக் கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள், உலக அளவில் இருக்கும் முன்னாள் – இந்நாள் பிரதமர்களுக்கும், தொழிலதிபர்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அந்தஸ்து
- சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் இருந்து ஜாம் நகருக்கு விமான சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச விருந்தினர்களை அழைத்து வருவதற்காக நியூயார்க், லாஸ் ஏஞ்செல்ஸ், லண்டன், பாரீஸ், இத்தாலி, கத்தார், பூட்டான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து சர்வதேச விமானங்கள் ஜாம் நகருக்கு வருகின்றன.
- இதனால் ஜாம் நகர் விமான நிலையம் 10 நாட்களுக்கு சர்வதேச விமான நிலையம் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது. வழக்கமாக நாள் ஒன்றுக்கு 6 விமானங்களை கையாளும் ஜாம்நகரில் நேற்று மட்டுமே 140 விமானங்கள் வருகை புரிந்துள்ளன.
உடை பரிந்துரை
- அதோடு, விருந்தினர்களுக்கென தனி விமானம், உயர் ரக கார்கள், உயர் வசதிகள் கொண்ட தங்கும் மாளிகைகள் என அனைத்து ஏற்படுகளும் ஜாம் நகரில் செய்யப்பட்டுள்ளன. விழாவில் கலந்து கொள்பவர்களை கவனிக்க தனிக்குழு அமைக்கப்பட்டு, அவர்கள் எதைக் கேட்டாலும் அதை மூன்று மணி நேரத்தில் கொண்டு வந்து இறக்க வேண்டுமென அம்பானி குடும்பம் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பிரபலங்களின் உடை, ஒப்பனை என அனைத்தையும் கவனித்துக் கொள்ள தனித்தனி ஒப்பனையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

- இந்தக் கொண்டாட்டத்தில் ஐந்து முக்கிய நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. - ஒவ்வொரு நிகழ்வுக்கும் விருந்தினர்கள் அணிந்து வர ஒவ்வொரு வகையான உடைகள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
ரியானாவின் இசை நிகழ்ச்சி
-பிரபல ஆங்கில பாப் பாடகி ரியானாவின் நிகழ்ச்சி நேற்று இந்த விழாவில் நடைபெற்றது.

- 2016ம் ஆண்டு நடைபெற்ற சூப்பர் பவுள் எனும் நிகழ்ச்சிக்குப் பிறகு ரியானா வேறு எந்த மேடை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை. அதற்குப் பிறகு அவர் நடத்திய பெரிய நிகழ்ச்சி இதுதான் என்பதால், அவரது ரசிகர்கள் இதனை சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இந்த இசை நிகழ்ச்சியை நடத்த, அவருக்கு 52 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு மாலை ஷோ நடத்த ஒரு பாப் பாடகருக்கு இத்தனை கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது, இந்தியாவில் இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ. 451 கோடியில் நெக்லஸ்?
- தன்னுடைய வருங்கால மருமகளுக்கு விலையுயர்ந்த பரிசுப் பொருள் ஒன்றைத் தர திட்டமிட்ட நீதா அம்பானி, பிரத்யேகமாக டிசைன் செய்யப்பட்ட பல கோடி மதிப்புள்ள முத்தும் வைரமும் பதித்த நெக்லஸ் ஒன்றை பரிசளிக்க திட்டமிட்டுள்ளார். அதன் மதிப்பு ரூ.451 கோடி எனக் கூறப்படுகிறது.

- இது தவிர, முகேஷ் அம்பானியும் நிதா அம்பானியும் இணைந்து 4.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசுக் கார் ஒன்றையும் பரிசளித்திருக்கிறார்கள்.
- அதோடு இரண்டு வெள்ளியால் செய்யப்பட்ட துளசி செடி மற்றும் வெள்ளியாலான விநாயகர் மற்றும் லட்சுமி சிலைகளைப் பரிசாகக் கொடுத்திருக்கிறார்கள்.
14 கோவில்கள்
- தங்களது இளைய மகனின் திருமணத்தையொட்டி, தற்போது கொண்டாட்டங்கள் களைகட்டி வரும் ஜாம்நகரில் பிரம்மாண்ட கோவில் வளாகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் ஆன்மிக பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் 14 கோவில்கள் கட்டப்பட்டு வருகின்றன.
- அயோத்தி ராமர் கோவிலுக்கு பிறகு இந்தியாவில் மிக பிரம்மாண்டமாக கட்டப்படும் கோவில் இது தான்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு
- இந்தத் திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற உள்ள போதிலும் இந்த திருமணத்தின் மூலம் வசதி குறைந்தவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என இரு குடும்பத்தினரும் உறுதி எடுத்துள்ளனர்.
- அதன்படி, திருமண பரிசுகளில் ஒன்றாக வழங்கப்பட உள்ள மெழுகுவர்த்திகளை மஹாபலேஷ்வரில் உள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பணிபுரியும் சூரிய உதய மெழுகுவர்த்திகள் குழுவிடம் இருந்து வாங்க உள்ளனர்.
ரூ. 1000 கோடி திட்டம்
உலகின் 11வது பெரிய பணக்காரர் மற்றும் இந்தியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரராக உள்ள முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ. 10 லட்சம் கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதில் தனது இளைய மகனின் திருமணத்திற்காக அவர் ரூ.1000 கோடி செலவு செய்ய திட்டமிட்டிருக்கிறார். இது அவரது சொத்தில் ஒரு சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.