ஷாக் அடித்து இருதயம் செயலிழந்த சிறுவன்: சாலையிலேயே சிபிஆர் செய்து உயிரைக் காப்பாற்றிய பெண் மருத்துவர்!
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில், ஷாக் அடித்ததால் இருதயம் செயலிழந்து போன 6 வயது சிறுவனை துரிதமாகச் செயல்பட்டுக் காப்பற்றிய பெண் மருத்துவருக்கு பாராட்டுகளும் நன்றிகளும் குவிந்து வருகின்றன.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில், ஷாக் அடித்ததால் இருதயம் செயலிழந்து போன 6 வயது சிறுவனை துரிதமாகச் செயல்பட்டுக் காப்பற்றிய பெண் மருத்துவருக்கு பாராட்டுகளும் நன்றிகளும் குவிந்து வருகின்றன.
ஆந்திர மாநிலம் விஜயவாடா ஐயப்ப நகரைச் சேர்ந்த 6 வயது சிறுவன் சாய். சாலையில் விளையாடிக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டார். அதனால், மாரடைப்பு ஏற்பட இருதயம் நின்றது. இதனைப் பார்த்த தந்தை பதறிப்போய் தன் மகனைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனை நோக்கி விரைந்தார்.
அப்போது பெண் மருத்துவர் ரவளிகா அந்த வழியே சென்று கொண்டிருந்தவர் இந்தக் காட்சியைப் பார்த்தார். உடனே என்ன நடந்தது என்பதைக் கேட்டறிந்த டாக்டர் ரவளிகா, சாலையில் சிறுவனைக் கிடத்தி CPR என்று அழைக்கப்படும் கார்டியோ பல்மனரி ரிசுசைட்டேஷன் என்னும் சுவாச/உயிர் மீட்பு முதலுதவி சிகிச்சையை மேற்கொண்டார்.
அதாவது, சிறுவனின் இருதயப் பகுதியில் கைகளை வைத்து அழுத்தினார் டாக்டர் ரவளிகா. நிறைய முறை அழுத்தி அழுத்திப் பார்த்தார், கடைசியில் சிறுவனின் இருதயம் செயல்படத் தொடங்கியது.
அதன் பின்னர், சிறுவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று அங்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிறுவன் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.
இந்த உயிர்மீட்பு சம்பவம் கடந்த மே மாதம் 5ம் தேதி நடந்தாலும் அப்போது அதனை வீடியோ எடுத்த சிலர் வலைத்தளத்தில் பதிவிட இப்போது வைரலாகியுள்ளது.
டாக்டர்.ரவளிகாவின் துரிதமான இந்த உடனடி முதலுதவிச் சிகிச்சை நடவடிக்கை அவருக்கு சமூகத்தின் பரவலான பாராட்டுகளையும் நன்றிகளையும் பெற்றுத் தந்துள்ளது. உயிர் பிழைத்த சிறுவனின் பெற்றோரும் டாக்டர் ரவளிகாவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இது குறித்து டாக்டர் ரவளிகா கூறும்போது,
“மருத்துவர் ஒருவரை அவரது வீட்டில் இறக்கி விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த போது சாலையில் சிறுவனைத் தூக்கிக் கொண்டு தந்தை கண்ணீர் மல்க ஓடிக்கொண்டிருந்ததைப் பார்த்தேன். உடனே காரை நிறுத்தி அவரிடம் எப்படி இது நடந்தது என்று கேட்டறிந்தேன். உடனடியாக சிபிஆர் செய்ய வேண்டும் என்பதை உணர்ந்தேன். தொடர்ந்து முயற்சித்தேன் அதன் பலனாக சிறுவன் மூச்சு விடத் தொடங்கினான். சிபிஆர் முதலுதவிச் சிகிச்சையை பலரும் கற்றுக் கொண்டால் பலரது உயிர்களைக் காப்பாற்ற முடியும்,” என்றார்.