‘இதைத் தவிர வேறு வழியில்லை’ - மிரட்டல் விடுத்த ஆப்பிள் நிறுவனத்திற்கு எலான் மஸ்க் பதிலடி!
ஆப் ஸ்டோரில் இருந்து ட்விட்டரை தடை செய்து விடுவோம் என ட்விட்டரை ஆப்பிள் நிறுவனம் எச்சரித்து வருவதாக எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
ஆப் ஸ்டோரில் இருந்து ட்விட்டரை தடை செய்து விடுவோம் என ட்விட்டரை ஆப்பிள் நிறுவனம் எச்சரித்து வருவதாக எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
ட்விட்டரை வாங்கினாலும், வாங்கினால் உலகப் பணக்காரர் என்ற அடையாளத்துடன் வலம் வந்த எலான் மஸ்க், இப்போது சர்ச்சை நாயகனாகவே மாறிவிட்டார். ட்விட்டர் நிறுவனத்திற்குள் காலடி எடுத்து வைத்த சில நாட்களிலேயே ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம், வேலை நேரம் மற்றும் விடுப்பு சம்பந்தமான பிரச்சனைகள், ப்ளூ டிக் பெற மாதம் 8 டாலர்கள் கட்டணம் என அடுத்தடுத்து பரபரப்பான செய்திகளை எலான் மஸ்க் வெளியிட்டு வருகிறார்.
போதாக்குறைக்கு ட்விட்டரில் தன்னை எதிர்த்து பேசிய ஊழியரை பணி நீக்கம் செய்தது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிவிட்டால், அது உண்மையான சுதந்திரமான கருத்துக்களை பகிரக்கூடிய தளமாக மாறிவிடும் என புகழ்ந்த பலரும், இப்போது அவரை ட்ரோல் கன்டென்ட்டாக அதே ட்விட்டரில் கலாய்த்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று ஆப்பிள் நிறுவனம் ட்விட்டரை தனது ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கிவிடுவேன் என பகிரங்க மிரட்டல் விடுப்பதாக எலான் மஸ்க் பதிவிட்டுள்ள ட்வீட் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தனது ஆப் ஸ்டோரில் இருந்து ட்விட்டரை நீக்குவதற்கான காரணத்தை ஆப்பிள் நிறுவனம் தெரிவிக்கவில்லை எனக்கூறியுள்ள எலான் மஸ்க், பேச்சு சுதந்திரத்தை ஆப்பிள் நிறுவனம் வெறுக்கிறதா? என கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் ட்விட்டரில் தனது விளம்பரங்களை பதிவிடுவதை நிறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஐபோன் தயாரிப்பாளரான ஆப்பிள் நிறுவனம், தனது ஆப் ஸ்டோரிலிருந்து ஒரு பயன்பாட்டை அகற்றுவதாக அச்சுறுத்தியது இது முதல் முறை அல்ல.
உதாரணமாக, கடந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்க கேபிடல் கட்டிடம் முன்பு நடந்த கலவரத்தை தொடர்ந்து, ட்விட்டருக்கு மாற்றாக விளக்கி வந்த ’பார்லர்’ என்ற ஆப்பை ஆப்பிள் நிறுவனம் நீக்கியுள்ளது. பார்லர் அதன் உள்ளடக்கம் மற்றும் நடைமுறைகளைப் புதுப்பித்த பிறகு, மே 2021ம் ஆண்டு மீண்டும் ஆப் ஸ்டோரில் இணைக்கப்பட்டது.
நவம்பர் 10 முதல் 16 வரை ட்விட்டர் விளம்பரங்களுக்காக ஆப்பிள் $131,600 செலவிட்டதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை பெறுவதற்கு ஒரு வாரம் முன்பு வரை, அதாவது அக்டோபர் 16 முதல் 22 வரை $220,800 ஆக இருந்தது.
எலான் மஸ்க் வந்த பிறகு கணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் ட்விட்டரில் சிறந்த விளம்பரதாரராக இருந்ததாக அறிக்கைகள் சுட்டிகாட்டுகின்றன.
"ஆப்பிள் அவர்களின் ஆப் ஸ்டோர் மூலம் நீங்கள் வாங்கும் அனைத்திற்கும் ரகசியமாக 30% வரி விதிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா," என்று மஸ்க் கூறியுள்ளார்.
ஆப்பிள் மற்றும் கூகுள் ஸ்டோர்களில் இருந்து ட்விட்டர் நீக்கப்படுவதை விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ள எலான் மஸ்க், அதற்கு பதிலாக ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களுக்கு மாற்றாக புதிய ஸ்மார்ட்போனை உருவாக்குவதை தவிர தனக்கு வேறு வழியில்லை எனத் தெரிவித்துள்ளார்.