'அப்பு எக்ஸ்பிரஸ்' - புனித் ராஜ்குமாரின் நினைவாக ஆம்புலன்ஸ் வழங்கிய பிரகாஷ் ராஜ்!
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நினைவாக நடிகர் பிரகாஷ்ராஜ் மருத்துவமனை ஒன்றிற்கு ஆம்புலன்ஸ் ஒன்றை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நினைவாக நடிகர் பிரகாஷ்ராஜ் மருத்துவமனை ஒன்றிற்கு ஆம்புலன்ஸ் ஒன்றை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
கன்னட திரையுலகின் பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் 29ம் தேதி அன்று மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ராஜ்குமாரின் இளைய மகனான புனித் ராஜ்குமாரின் திடீர் மரணம் ஒட்டுமொத்த திரையுலகையே பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சினிமா நடிகராக மட்டுமின்றி சமூக சேவையிலும் ஆர்வம் மிக்கவராக விளங்கிய புனித் ராஜ், ஏழைக் குழந்தைகளின் கல்விக்கும், ஆதரவற்றவர்களின் வாழ்க்கைக்கும் பல விஷயங்களை செய்துள்ளார். ஏழை எளிய குழந்தைகளுக்கு கல்வி கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் தனது சொந்த செலவில் நாற்பத்தி ஐந்து இலவசப் பள்ளிகளை நடத்தியுள்ளார்.
மேலும், சுமார் 1800 மாணவர்களுக்கு வேண்டிய கல்வி செலவை இவர் ஏற்றுள்ளார். இதையும் தாண்டி ஆதரவற்றோர் காப்பகம், முதியோர் இல்லம், கால்நடை பராமரிப்பு மையம் என பல்வேறு சேவைகளை நடத்தியுள்ளார். உயிருடன் இருக்கும் போது மட்டுமின்றி, இறந்த பிறகும் தனது கண்களை தானமாக கொடுத்துள்ளார். இதனால் சினிமாவில் நடிக்கும் போது மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் பலரது வாழ்க்கைக்கு உதவியதால் புனித் ராஜ்குமாரை இன்று வரை ஆயிரக்கணக்கான மக்கள் ரியல் ஹீரோவாக கொண்டாடி வருகின்றனர்.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமாரை அவரது ரசிகர்கள் ‘பவர் ஸ்டார்’, ‘அப்பு’ ஆகிய பட்டப்பெயர்களை வைத்தே அழைத்து வருகின்றனர். தற்போது புனித் ராஜ்குமார் நினைவாக நடிகர் பிரகாஷ் ராஜ் மைசூர் மிஷன் மருத்துவமனைக்கு இலவச ஆம்புலன்ஸ் ஒன்றை நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்த ஆம்புலன்ஸுக்கு புனித் ராஜ்குமாரின் செல்லப்பெயரான அப்புவுடன் சேர்த்து அப்பு எக்ஸ்பிரஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸை நன்கொடையாக கொடுத்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பிரகாஷ் ராஜ்,
“அப்புவின் பெயரையும் சேவைகளையும் நாம் எப்போதும் மறக்கக் கூடாது. அவரை எப்போதும் நம்மோடு வாழவைக்க வேண்டுமானால், அவர் செய்த நல்ல காரியங்களை தொடர்ந்து செய்ய வேண்டும். கொரோனா காலத்தில் நான் செய்து கொண்டிருந்த சேவைப் பணிகளுக்கு நன்கொடை அளித்து அப்பு எனக்கு உதவி செய்துள்ளார். ஆனால் அதைப் பற்றி எங்கும் குறிப்பிட்டது கிடையாது,” எனத் தெரிவித்துள்ளார்.
விரைவில் மைசூர் மிஷன் மருத்துவமனையில் அப்புவின் பெயரில் ரத்த வங்கி ஒன்று அமைக்கப்படும் என்றும், அதன் செயல்பாடுகளை 2 முதல் 3 மாதத்திற்குள் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்த பிரகாஷ் ராஜ், இனி மாநிலத்தின் 30 மாவட்டங்களிலும் அப்பு எக்ஸ்பிரஸ் இயக்குவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், அப்பு-வின் பெயரில் தொடர்ந்து சேவையாற்ற நண்பர்கள் உதவி புரியுமாறும் திரையுலகினருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தொகுப்பு: கனிமொழி