4000 யாசகர்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ள 26 வயது ‘அட்சயம்’ நவீன் குமார்!
உணவு, உடை, உறைவிடமின்றி சகமனிதனிடமே கையேந்திநிற்கும் யாசகர்களை மீட்டு மறுவாழ்வு அளித்து வருகின்றனர் இவர்கள்.
சவரக்கத்தியே படாத தாடி, எண்ணெய் அறியா பரட்டைத் தலை, கிழிந்த ஆடையுடன் சாலையை சரிசமமாய் பிரித்து நடுமையத்தில், தடம் மாறாமல் நடப்பார் அந்த பெரியவர். முதிர்ந்த வயதில் வரும் தளர்ந்த நடையல்ல அவரது நடை. சாலையோர மரங்கள் வீசும் வேகக்காற்றின் திசைக்கு ஏற்றவாறு கைவீசி நடக்கும் வேகநடை அவரினுடையது. மனநலம் பாதிக்கப்பட்ட அவருக்கு, நினைத்த நேரங்களில் சாலையை கடக்கும் பழக்கமுண்டு.
சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் அவரால் பல விபத்துகளும் நேர்ந்துள்ளன. எவர் அருகில் சென்றாலும், கற்களை கொண்டு எறிந்தும், குச்சியால் அடித்தும் அவரைக் கண்டாலே காண்போருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியவர் இன்று அமைதியான வாழ்க்கையில் மனநலம் குணமாகியும் வருகிறார்.
இவர் மட்டுமல்ல, சாப்பாட்டுக்காக சக மனிதனிடன் கையேந்தி நிற்கும் பல யாசகர்களும் மீண்டு புதுவாழ்வில் வாழ்வதற்கு முழுக்காரணம் ’அட்சயம்’. ‘யாசகமற்ற தாயகத்தை உருவாக்குவோம்’ என்ற முனைப்பில் 2014ம் ஆண்டு தொடங்கப்பட்ட அட்சயம் அமைப்பு, இதுவரை 310 யாசகர்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ளது.
யாசகர்களை சந்தித்து ஆலோசனை வழங்குவது, யாசகர்கள் மறுவாழ்வு முகாமிடுவது, யாசகர்களுக்கு உணவு, உடையாய் தர்மமிடுங்கள் என்று மக்களிடம் விழிப்புணர்வு செய்வது என பம்பரமாய் சுழன்று யாசகர்களுக்கு நல்வாழ்வு ஏற்படுத்தி கொடுக்கும் அட்சயத்தின் ஒற்றைத் தூண் நவீன்குமார்.
பேருந்து நிலையம், ரயில் நிலையம், கோயில்கள் மற்றும் சாலையோரம் என்று ஆங்காங்கே தென்படும் பிச்சைக்காரர்களை கண்டால் அலட்சியப் பார்வையுடன் கடந்துவிடுவோர் மத்தியில், நவீன் அவர்களது வாழ்வை மீட்டெடுக்கத் தொடங்கியவர். ஆம், காலேஜ் டாப்பரான அவர், கேம்பசில் கிடைத்த வேலையினையும் உதறித் தள்ளி யாசகர்களுக்காக நண்பர்களுடன் இணைந்து அவர் தொடங்கியதே அட்சயம் அறக்கட்டளை.
திருச்சி முசிறியை சேர்ந்த நவீன்குமார், படித்து பட்டம் பெற்றதெல்லாம் குமாரபாளையம். கல்லூரிக்கு சென்று கொண்டே கேட் நுழைவுத் தேர்வு பயிற்சிக்காக சேலத்தில் தங்கி படித்துள்ளார். லேட் நைட் படிப்புகளுக்குபின், இருக்கும் பத்து, இருபது ரூபாயை வைத்து இரவு உணவை உண்பதே அவரது வழக்கம். ஆனால், அதையும் பசிக்கிறது என்று கேட்கும் பாட்டிக்கும், ‘அண்ணா, ஊருக்கு போக காசு இல்லைன்னா’ என்று கேட்கும் தம்பிக்கும் இருந்த காசை கொடுத்துவிட்டு, பட்டினியுடன் படுப்பது பழக்கமாகியது.
தொடர்ச்சியான பல நாள் பட்டினி, யாசகர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டியுள்ளது.
ஆனால், வீடு இருக்கும் பொருளாதார நிலையோ மிக மோசம். இருப்பினும், ஏன் இவர்கள் பிச்சையெடுக்கின்றனர்? என்பதை அறிய கண்ணில்பட்ட யாசகர்களின் அருகில் அமர்ந்து அவர்களது கதையைக் கேட்டறிந்துள்ளார். அப்படி, இருமாதங்களில் அவர் கேட்டறிந்த கதைகளின் எண்ணிக்கை 200.
“அவர்கள் அனைவரும் பொதுவாக கூறியது - ‘நாங்கள் யாசகர்களாக உருவாகவில்லை; உருவாக்கப்பட்டோம்’. நாங்கள் முதன் முதலாக மீட்ட யாசகரும் அக்கதிக்கு தள்ளப்பட்டவர் தான். வீட்டைவிட்டு வெளியேறி வேலை தேடி அலைந்தவரை, இச்சமூகம் கையேந்தும் நிலைக்குத் தள்ளியது. அவரை மீட்டு காப்பகத்தில் செக்யூரிட்டி வேலை வாங்கி கொடுத்தோம்.”
நவீன், காலேஜ் டாப்பர் என்பதால் அவரின் நல்ல முயற்சிக்கு கல்லூரியும் உடன் நின்றது. நண்பர்கள் ஒன்று திரண்டு, ‘பிச்சை எடுப்பதைவிட, பிச்சை கொடுப்பதே தவறு’ என்றும், கையேந்தும் யாசகர்களுக்கு உணவு, உடையை வழங்கி உதவுமாறு மக்களிடம் விழிப்புணர்வு செய்யத் தொடங்கியுள்ளனர். 2014ம் ஆண்டு தொடங்கிய இந்த அமைப்பில் இப்போது 400 உறுப்பினர்கள் உள்ளனர். அமைப்பு தொடங்கிய முதலாண்டில் 20 யாசகர்களை மட்டுமே மனம் திருத்தி மீட்டெடுக்க முடிந்துள்ளது. அதில், பலரும் மீண்டும் கையேந்த திரும்பிவிட்டனர். ஏன் என்று சிந்தித்தார் நவீன்.
“வாரநாட்களில் ஒவ்வொரு பகுதியாய் சென்று பிச்சைக்காரர்களை சந்தித்து அவர்களது கதைகளை கேட்டு அறிந்தோம். அவர்களில் ஆயிரத்து 900 பேர் வரை பேசி அவர்களது குறைகளை பதிவு செய்து கொண்டோம். எங்களுடைய புள்ளிவிவரப்படி மனநிலை பாதிக்கப்பட்டோர், ஆதரவற்றோர், ஊனமுற்றோர், வீட்டாரால் ஒதுக்கப்பட்டோர் என்று 19 வகையான யாசகர்கள் உள்ளனர். அதில் யாரையெல்லாம் மாற்ற முடியும் என்று ஒரு கணிப்புக்கு வந்து அவர்களை மட்டும் இலக்காக கொண்டு மீட்டு வருகிறோம்” என்றார் நவீன்.
மீட்புப் பணியில் யாசகர்களிடம் வாங்கியஅடிகளும், கடிகளும் ஏராளம். அச்சமயங்களில் எல்லாம் பொறுமையின் சிகரமாய் விளங்கும் அவருடைய தந்தையை நினைத்து கொள்வாராம் நவீன்.
“அப்பா உடல் ஊனமுற்றவர். வீட்டுக்கு அருகில் துணிக்கடையில் பணிபுரிகிறார். அவருடைய உந்துதலும், ஆதரவும் இல்லையென்றால் இன்று எதுவுமே சாத்தியமில்லை. கல்லூரி படிப்பு முடிந்து, நல்ல சம்பளத்துக்கு வேலை கிடைத்தும் உனக்கு பிடித்ததை செய் என்று தோள் கொடுத்தார். இப்போது தான் இந்த அங்கீகாரம் எல்லாம்.
கல்லூரி காலத்தில் என்னை பிச்சைக்காரன் தான் கூப்பிடுவாங்க. ப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு போனா வாசல்லயே உட்காரய வச்சிருவாங்க. அதையெல்லாம் தாண்டி, இன்று 300 பேர் யாசகம் பொறுவதை நிறுத்தி உழைத்து வாழ்வதில் நம்முடைய சிறிய பங்கும் இருப்பதை எண்ணி ரொம்ப சந்தோஷம்.” எனும் நவீனின் முயற்சியை பாராட்டி, பல விருதுகளும் கிடைத்துள்ளன.
அட்சயம் அமைப்பின் நிறைவான செயல்பாடுகளுக்காக, ‘சிறந்த சமூக சேவகருக்கான’ விருது, இந்திய அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்துறை சார்பில் உத்தரப்பிரதேச மாநிலம் கவுதம புத்தா நகரில் கடந்தாண்டு நடைபெற்ற இளைஞர் திருவிழாவில், பிச்சைக்காரர்களுக்கு அளித்து வரும் சேவையை பாராட்டி 2015–16ம் ஆண்டுக்கான ‘சிறந்த இளைஞர் விருதும்’ நவீனுக்கு வழங்கப்பட்டது. நீளும் விருது பட்டியலின் சமீபத்திய வரவு விகடன் அளித்திருக்கும் ‘நம்பிக்கை விருது’.
ஆனால், நவீன் விருதாய் நினைப்பதெல்லாம் இயன்ற அளவில் யாசகர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்பதே. இதோ இந்தவார இறுதியிலும், இடுப்பு எலும்பு உடைந்து, கால் புண்களில் புழு வைத்தநிலையில் மீட்கப்பட்டு ஊக்கமூட்டும் பேச்சாளராக மாறிய வடிவேலுவின் புதிய தள்ளுவண்டி உணவகத்தினை திறக்கவுள்ளனர். இதிலே மகிழ்ச்சி காண்கிறார் அவர்.
வாழ்த்துகள் நவீன்...யாசகர்கள் அற்ற தாயகம் படைக்க முயன்றுவரும் அட்சயம் அறக்கட்டளைக்காக உங்களின் உதவி கரமும் நீண்டு கையேந்தும் கைகளை உழைக்கும் கரங்களாக மாற்றட்டும்!!