பாலக்காடு பகுதியில் 23,000 மரங்கள் நட உதவியுள்ள ஆட்டோ ஓட்டுநர்!
புத்தக வாசிப்பிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் ஆர்வம் கொண்ட ஆட்டோ ஓட்டுநரான ஷ்யாம் குமார் பாலக்காடு முழுவதும் மரங்கள் நடப்பட உதவுவதுடன் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச தனது ஆட்டோவில் தினமும் 10 லிட்டர் தண்ணீர் கொண்டு செல்கிறார்.
கேரளாவின் பாலக்காட்டில் உள்ள தென்குரிசி பகுதியைச் சேர்ந்தவர் ஷ்யாம் குமார். இவர் ஒரு ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு புத்தகங்கள் படிப்பதிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் ஆர்வம் அதிகம்.
ஒருமுறை 'வ்ருக்ஷாயுர்வேதம்’ என்கிற புத்தகத்தை இவர் படித்துள்ளார். மரங்களினால் கிடைக்கக்கூடிய பல்வேறு நன்மைகளைப் பற்றியும் குழந்தைகளின் வாழ்க்கையில் மரங்கள் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்களைப் பற்றியும் இந்தப் புத்தகத்தை படித்துத் தெரிந்துகொண்டார்.
இதுவே அதிகளவில் மரங்களை நடவேண்டும் என்கிற ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
“நான் கடந்த 18 ஆண்டுகளாக மரம் நடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். என்னுடைய மனைவியும் மகனும் என்னுடன் இணைந்து உதவி வருகிறார்கள். எங்கள் முயற்சியைக் கண்டு உந்துதல் பெற்ற பலர் மரம் நடும் பணியில் ஈடுபட்டார்கள். இத்தனை ஆண்டுகளில் 23,000-க்கும் அதிகமான மரங்கள் நடப்பட்டுள்ளன. இவற்றில் 90 சதவீதத்திற்கும் மேல் பெரிய மரமாக வளர்ந்து உயர்ந்து நிற்கின்றன. இந்த மரங்கள் இளைப்பாற நிழல் தருவதுடன் பழங்களும் தருகின்றன,” என்று ஷ்யாம் 'தி இந்து’ இடம் தெரிவித்துள்ளார்.
'ஹரிதா வியக்தி விருது’ உள்ளிட்ட 10 விருதுகள் வாங்கியுள்ளார். மேலும் பத்திரிக்கையாளர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் பிவி தம்பி அவர்களது நினைவாக 23வது பிவி தம்பி மெமோரியல் எண்டோமெண்ட் அவார்ட் ஃபார் என்விரான்மெண்ட் ப்ரொடெக்ஷன் விருதுக்கும் தேர்வாகியுள்ளார்.
ஷ்யாம் மரம் நடுவதுடன் நிறுத்திகொள்வதில்லை. சொட்டு நீர் பாசனம் மூலம் செடிகள் வளரவும் உதவுகிறார். இதற்காக ஒவ்வொரு செடியின் அடியிலும் பிளாஸ்டிக் பாட்டில் ஒன்றை வைத்துள்ளார். செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காகவே தனது ஆட்டோவில் எப்போதும் 10 லிட்டர் தண்ணீர் இருப்பு வைத்திருக்கிறார்.
மரங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் தனது ஆட்டோவின் பின்புறத்தில் 'மரம் ஒரு வரம்’ என்கிற வரிகளை எழுதியுள்ளார். இவை தவிர இவருக்கு பறவைகள் என்றால் கொள்ளை பிரியம்.
“என் வீடு பறவைகள் சரணாலயம் போன்றே இருக்கும். பாலக்காடு மிகவும் வெப்பமாக இருக்கும் பகுதி. குறிப்பாக கோடை காலங்களில் வெப்பநிலை 40 டிகிரிக்கும் கூடுதலாக இருப்பதுண்டு,” என்று 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இடம் ஷ்யாம் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறும்போது, “பறவைகள் மட்டுமல்லாது பாம்பு, கீரி போன்ற விலங்குகளும் தாகத்தை தணிக்க வருகின்றன,” என்கிறார்.
கட்டுரை: THINK CHANGE INDIA