நீர் பாசனத்தை மேம்படுத்தி விவசாயிகள் உயர்வுக்கு வழி செய்த ஆக்சிஸ் வங்கி அறக்கட்டளை!
ஆக்சிஸ் வங்கி அறக்கட்டளை மற்றும் அவர்களது குழுவினர் மதுரை மாவட்டத்தின் பல கிராமங்களில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற திட்டமிட்டு அதற்கான பணிகளில் இறங்கியுள்ளனர்.
கோயில்களின் நகரம், கவிஞர்களின் நகரம், தூங்கா நகரம் என பல்வேறு அடைமொழிகளால் புகழப்படும் மதுரைக்கு மற்றொரு பெயரும் உண்டு. அதுதான் விவசாயிகளின் நகரம்.
ஆம், மதுரை ஒரு வலுவான விவசாய பின்புலமுள்ள மாவட்டமாகும். தமிழக அரசின் 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மதுரையில் உள்ள மக்கள் தொகையில் மொத்தம் 4,01,867 விவசாயத் தொழிலாளர்கள் உள்ளனர்.
விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ’ஆக்சிஸ் வங்கி’ 2011ம் ஆண்டு ஓர் அறக்கட்டளையைத் தொடங்கியது. இதன் மூலம் கிராமவாசிகள் மற்றும் விவசாயிகளுக்கு தொட்டி நீர்ப்பாசனம் என்ற முறை மூலம் நிலையான வாழ்வாதாரத்தை ஏற்படுத்துவதுடன், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பணியிலும் ஈடுபட்டது.
ஆக்சிஸ் வங்கி அறக்கட்டளை (ஏபிஎஃப்) மற்றும் அவர்களது குழுவினர் தமிழ்நாட்டில், மதுரை மாவட்டத்தின் கொங்கம்பட்டி, வேங்கைபட்டி, கொட்டாம்பட்டி, கருங்கலகுடி மற்றும் முலையூர் கிராமங்களில் உள்ள விவசாயிகளின் வாழ்க்கை முறையை மாற்ற திட்டமிட்டு அதற்கான பணிகளில் இறங்கினர்.
ஆக்சிஸ் வங்கி அறக்கட்டளை 24,557 குடும்பங்களுடன் இணைந்து பணியாற்றியது. இதன்மூலம் 5,352 ஹெக்டேர் கூடுதல் நிலத்தை சாகுபடிக்கு உகந்ததாக மாற்றியது. இதனால் விவசாயிகளின் வருமானம் 60 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக இது குறித்து வெளிவந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
தற்போதைய செயல்திட்டத்தின்படி (மார்ச் 2022 வரை), நாங்கள் ஏற்கனவே 45,800 குடும்பங்களுடன் இணைந்துள்ளோம். இப்பகுதியில் 860 தொட்டி நீர்ப்பாசன வசதிகளை ஏற்படுத்தி, சிறப்பாக முன்னேறி வருகிறோம் என்கிறார் ஏபிஎஃப் நிர்வாக அறங்காவலரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜேக்கப் நினன்.
இந்தியாவில் மிகவும் பின்தங்கிய சில பிராந்தியங்களில் தேவைப்படும் வளர்ச்சியை உருவாக்குவதே எங்கள் அறக்கட்டளையின் நோக்கமாகும். இதற்காகவே 2006ல் இந்த அறக்கட்டளை நிறுவப்பட்டது. மேலும், இந்தியாவில் சமமான பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறியவும், நலிந்த மக்களுக்கு, உதவி தேவைப்படுவோருக்கு என அடித்தள மக்களுக்கு உதவவே இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டது.
மும்பையில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறத் தேவைகள் பற்றிய திட்டங்கள், கல்வி போன்றவை வளர்ந்து வரும் தேவையாக இருந்தது. அதேபோல் திறனை வளர்ப்பது குறித்தும் நாங்கள் திட்டமிட்டு பணியாற்றி வந்தோம் என்கிறார் கார்ப்பரேட் மையத்தின் அறங்காவலரும், நிர்வாக இயக்குநருமான ராஜேஷ் தஹியா.
இப்பணியின் முதல் கட்டமாக 2011 - 2017க்கு இடைப்பட்ட காலத்தில், பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாக வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்தியா முழுவதும் தனிநபர்களுடன் ஏபிஎஃப் பணியாற்றியது. அதன் இரண்டாம் கட்டமாக, 2018-2025 முதல், ஏபிஎஃப் இரண்டு மில்லியன் குடும்பங்களுடன் இணைந்து பெரிய அளவிலான சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறது.
இந்த அறக்கட்டளை தற்போது 30 ஒத்த எண்ணம் கொண்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. இதனால் சுமார் 5.73 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளனர். இத்திட்டங்கள் இந்தியாவில் 23 மாநிலங்கள் மற்றும் 156 மாவட்டங்களில் பரவியுள்ளன.
இந்த அறக்கட்டளை பெண்களின் முன்னேற்றம் மற்றும் அவர்களின் வாழாவாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் பாலின சமநிலை மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை செயல்படுத்த முடியும் என திட்டமிட்டு அதில் அதிகக் கவனம் செலுத்துகிறது.
2010 - 2011ஆம் ஆண்டில் நடைபெற்ற கலந்தாய்வில் முதலில் வாழ்வாதாரம், பின்னர் கிராமப்புற வாழ்வாதாரம், இறுதியாக 'நிலையான வாழ்வாதாரம்' என திட்டமிட்டோம். மேலும், இது ஒரு குறுகிய கால தீர்வாக இருக்கக்கூடாது. வாழ்நாள் முழுவதும் பொருத்தமானதாக இருக்கவேண்டும் என நாங்கள் தீர்மானித்ததால் இந்த வார்த்தைகளையே குறிக்கோளாய் தேர்ந்தெடுத்தோம்.
பெண்களே வாழ்வாதாரத்தின் மையமாக இருப்பதால், பெண்கள் அதிகாரம் பெறுவதிலும், அவர்கள் அதிகாரம் பெற்றவர்கள் என உணர வேண்டும் என்றும் நாங்கள் விரும்பினோம் என்று ராஜேஷ் தெரிவிக்கிறார்.
கிராமப்புற மக்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை வழங்குவது நீர்ப்பாசனம் ஆகும். தமிழ்நாட்டில் கிராமப்புற வாழ்வாதாரமே உணவுப் பாதுகாப்பின் முதுகெலும்பாகும். அறுபதுகள் மற்றும் எழுபதுகளின் தொடக்கத்தில் தொட்டிகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் கால்வாய்கள் போன்றவையே நீர்ப்பாசனத்தின் முக்கிய நீர் ஆதாரங்களாக இருந்தன. இவற்றை முறையாக பராமரிக்காமல் விட்டதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து இறுதியில் மாநிலத்தின் நீண்டகால நீர் பாதுகாப்பை பாதித்தது.
இதன் விளைவாக, விவசாய உற்பத்தித்திறன் குறைந்து, மக்கள் வேலை தேடி நகர்புறங்களுக்கு வருவது அதிகரித்தது. இதனை தவிர்க்கவே ஆக்ஸிஸ் வங்கி அறக்கட்டளை, மதுரை சார்ந்த என்.ஜி.ஓ. தஹான் (மனிதாபிமான செயற்பாட்டின் வளர்ச்சி) வயலகம் டேங்க் பவுண்டேஷன் (டி.வி.டி.எஃப்) ஆகியவை இணைந்து முதலில் நீர்நிலைகளை தூர்வாரி சீரமைக்கத் தொடங்கின.
இதனால் விவசாயிகள் தங்கள் விவசாய உற்பத்தியை மேம்படுத்தும் அதேவேளையில் மீண்டும் தங்களின் பாரம்பரிய விவசாய வாழ்க்கைக்கே செல்ல முடியும். இந்தத் திட்டம் பம்பர்-கோட்டகாரையர் நதிப் படுகையின் மூன்று துணைப் படுகைகளில் இயங்குகிறது. மேலும் இத்திட்டங்கள் இந்த கிராமங்களின் விவசாயிகளுக்கு நல்ல வாழ்வாதாரத்தையும் வழங்குகிறது.
இத்திட்டம் கொங்கம்பட்டி, வேங்கைபட்டி, கொட்டாம்பட்டி, கருங்கலகுடி மற்றும் முலையூர் ஆகிய ஐந்து கிராமங்களில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. காய்கனிகள், பருப்பு வகைகள், பருத்தி போன்ற பயிர்களில் அதிக விளைச்சல் கிடைத்திருக்கிறது. இதனால் கிராம மக்களிடையே வேலைவாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. மேலும் விவசாயிகளின் வருமானமும் 58 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது. ரூ.1,50,000 க்கு கீழ் வருமானம் ஈட்டிய 91.12 சதவீத மக்களின் எண்ணிக்கை தற்போது 74.35 சதவீதமாக குறைந்துள்ளது. அதேநேரத்தில் ரூ.1,50,000க்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள் 8.88 சதவீதத்திலிருந்து 25.65 சதவீதமாக உயர்ந்துள்ளனர்.
“சுமார் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, டி.வி.டி.எஃப் அறக்கட்டளையினர் எங்கள் கிராமத்துக்கு வந்து, எங்களுக்கு நிறைய உதவிகள் செய்தனர். எங்கள் கிராமப் பஞ்சாயத்தில் உள்ள சுமார் 1,000 வீடுகளுக்கு அவர்களின் உதவிகள் பெரிதும் பயனளித்துள்ளது.
எங்கள் கிராமத்தில் உள்ள பொரும்பாலானவர்கள் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளவர்கள். இந்த அறக்கட்டளையின் புதிய நீர்ப்பாசனத் திட்டத்தால் நீரின் தரம் மேம்பட்டுள்ளது. விவசாய நடவடிக்கைகள் மேம்பாடு அடைந்து இருக்கின்றன. நாங்கள் இவர்களின் திட்டங்களைத் தொடர்ந்து பின்பற்றலாம் என்றே திட்டமிட்டுள்ளோம்,” என்கிறார் கொங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பஹ்ருதீன்.
"நான் கடந்த ஏழு ஆண்டுகளாக, ஏபிஎஃப் மற்றும் டிஹான் ஃபவுண்டேஷன்களிலிருந்து கடன் பெற்று பயனடைந்துள்ளேன். எனது விவசாயத்தையும், வாழ்க்கை முறையையும் மேம்படுத்தவே அவர்கள் கடன்களை வழங்கினர். அவர்கள் முதலில் என்னை அணுகியபோது, நான் பயந்தேன், கடன் வாங்க விரும்பவில்லை. இருப்பினும், இந்த கடன் எவ்வாறு உதவும் என்பதைப் புரிந்துகொண்ட பிறகு, நான் ரூ. 10,000 கடன் வாங்கினேன். அது எனக்கு மிகுந்த பயனளித்தது. இதையடுத்து மேலும் ரூ. 30,000 கடன் பெற்றேன். இப்போதுகூட ரூ.50,000 கடன் வாங்கி கட்டி வருகின்றேன்.
தற்போது எனது வயலில் நெல் நன்றாக வளர்ந்து வருகிறது. நாங்கள் டிராக்டர்களைப் பயன்படுத்தாததால் எருதுகளை வாங்கி பயன்படுத்தி வருகிறேன். எனது குடும்பம் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தைக் கொண்டுள்ளது,” என்கிறார் வேங்கைபட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுமதி.
இந்த நீர்ப்பாசனத் திட்டத்தின் நீட்ச்சி புதுக்கோட்டை மாவட்டத்தில் 32.65 சதவீதமும், எஸ்.புதூரில் 18.26 சதவீதமும், கொட்டம்பட்டியில் 21.38 சதவீதமும் பெருகியுள்ளது. இத்திட்டத்தின் மற்றொரு பெரிய தாக்கம் என்னவென்றால், தண்ணீருக்காக பெண்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியதில்லை. நீர் எளிதாக கிடைப்பதால் குடும்ப வருமானத்தை பெருக்கிக் கொள்ள முடிகிறது.
ஒரு பருவத்தில் மட்டுமே விதைக்க முடிந்த ஒரு விவசாயி தற்போது ஆண்டுக்கு இரண்டு முறை விதைக்கிறார். நன்றாக தண்ணீர் கிடைப்பதன் மூலமும், நல்ல பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் மூலமும் சிறந்த பயிர் வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
நீர் ஒரு பொதுவான இயற்கை வளமாகும். தெளிவான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் மூலம் இந்த இயற்கை வளத்தை நாம் சரியாக நிர்வகிக்காவிட்டால், அது பல சிக்கல்களை உருவாக்கிவிடும். வயலகம் கூட்டங்களில் இது வலுவாக தெளிவுபடுத்தப்படுகிறது.
கிராமங்களில் பணிபுரிவது மிகவும் சவால்களைக் கொண்டிருந்தது. முதலில் கிராம மக்களிடம் நம்பிக்கையை பெறுவது முக்கியமானதாகும். இதற்கு சற்று காலம் ஆனது. இரண்டாவதாக உள்ளாட்சி அமைப்புகளில் அனுமதிகளைப் பெறுவதில் சிரமங்களும், தாமதங்களும் ஏற்பட்டன. ஆனாலும், விடாமுயற்சியுடன் போராடி பெற்றோம் என்கிறார் ஜேக்கப்.
நாங்கள் 2022க்குள் 70,000 குடும்பங்களுடன் இணைந்து எங்கள் பணிகளை மேற்கொண்டு, விவசாயிகளையும், நாட்டின் பொருளாதாரத்தையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம். அரசாங்கம் மற்றும் பிற நன்கொடையாளர்களுடன் இணைந்து இப்பகுதியில் தொடர்ந்து பணியாற்றுவதே எங்களின் நோக்கமாக இருக்கும் என்று ஜேக்கப் நம்பிக்கையுடன் கூறுகிறார்.
ஆங்கிலத்தில்: ஊர்வி ஜேக்கப் | தமிழில் திவ்யாதரன்