தமிழக அரசியலில் கலக்கும் டாக்டர்கள்!

  26th Sep 2017
  • +0
  Share on
  close
  • +0
  Share on
  close
  Share on
  close

  அரசியலில் சினிமா நட்சித்திரங்கள் தான் பெரும்பாலும் கலக்குகிறார்கள். சுமார்

  40 வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில் கோடம்பாக்க ஆட்சி தான் நடைபெற்று வருகின்றது. ஒரு சில போராளிகள் இதற்கு எதிராக குரல் கொடுத்தாலும், தமிழக மக்களின் சினிமா மோகம், கோடம்பாக்க ஹீரோக்களை அரியணை ஏறவைக்கின்றது.

  அது மட்டும் இல்லாமல் மற்ற துறையில் இருந்து அரசியலுக்கு வருபவர்கள் மிக குறைவு. அப்படியே வந்தாலும் அவர்களில் பெரும்பாலானோர் வழக்கறிஞர்களாக இருப்பார்கள். வழக்கறிஞர்களையும், கோடம்பாக்க பிரபலங்களையும் தாண்டி அரசியலில் நம்ம ஊரு மருத்துவர்கள் தங்களின் அறிவின் மூலதனமாக போட்டு சக்கை போடு போட்டு கொண்டு இருக்கின்றார்கள். அவர்களில் சிலரைப் பற்றி இதோ...

  image


  Dr. தமிழிசை சௌந்தரராஜன்.

  தந்தை குமரி அனந்தன் ஒரு பழுத்த காங்கிரஸ் தலைவர். சித்தப்பாவும் ஒரு முன்னணி காங்கிரஸ் தலைவர். ஆனால் இவரோ RSS பாரதீய ஜனதா கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். அடிப்படை உறுப்பினராக கட்சியில் சேர்ந்து இன்று மாநில தலைவராக வலம் வருகிறார். மகப்பேறு சிறப்பு மருத்துவரான இவரை தமிழ்நாட்டில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவர் பிரசவம் பார்த்த குழந்தைகள் இன்று அவரை விமர்சனம் செய்யும் அளவுக்கு பிரபலம். எத்தனை விமர்சனங்கள் அவர் மீது வைத்தாலும், எதற்கும் அஞ்சாமல் அசராமல் தமிழக பாரதீய ஜனதா கட்சியை இன்று அவர் வழிநடத்தி செல்கின்றார்.

  Dr. அன்புமணி ராமதாசு

  புகழ் மிக்க தந்தையின் (மருத்துவர் ராமதாசு) புகழ் மிக்க மைந்தரான அன்புமணி ஒரு எளிமையான பயிற்சி மருத்துவராக நன்னிலம் என்னும் கிராமத்தில் தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார். 2004-10 வரை இந்தியாவின் சுகாதாரத் துறை அமைச்சராக பணியாற்றிய இவர், 108 மருத்துவ அவரச உதவி தொலைநோக்கு திட்டத்தை நாட்டுக்கு தந்தார். மருத்துவர்கள் கட்டாயமாக கிராமப்புற சேவை செய்ய வேண்டும் என்ற அன்பு கட்டளையை மருத்துவர்களுக்கு விதித்தவர் தான் இந்த அன்பு உள்ளம் கொண்ட அன்புமணி அவர்கள்.

  Dr. வ. மைத்ரேயன்

  அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் டெல்லி பிரதிநிதி. கழக மருத்துவ அணியின் தலைவர் என்று கட்சியில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கும் இவர் நரம்பு மற்றும் புற்று நோய் (oncology) சிறப்பு மருத்துவர். கட்சியின் டெல்லி செயல்பாடுகள் மொத்தமும் இவர் கண்ட்ரோலில் தான். இவரின்றி ஒரு அணுவும் டெல்லியில் அசையாது. பாரதிய ஜனதா கட்சியில் தன் அரசியலை தொடங்கி பின் அதிமுக-வில் சேர்ந்து ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியானார் இவர். சுமார் 7 வருடங்களுக்கு மேலாக ராஜ்ய சபா உறுப்பினராக உள்ளார்.

  Dr. பூங்கோதை

  பலம் பெரும் திமுக உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஆலடி அருணாவின் புதல்வி தான் மருத்துவர் பூங்கோதை. மகப்பேறு சிறப்பு மருத்துவரான இவர், தந்தை மறைவுக்கு பின்னர் அரசியலுக்குள் நுழைந்த தமிழ் நாட்டின் குடும்ப நலத்துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சராக சிறப்பாக செயல்பட்டார். சமீபத்தில் நடந்த சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் மேஜை மீது ஏறி போராட்டம் நடத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

  Dr. கிருஷ்ணசாமி

  பொது மருத்துவரான மருத்துவர் கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் என்ற கட்சியை 1999 ஆண்டு நிறுவினார். தாழ்த்தப்பட்ட மக்களின் குரலாக கிருஷ்ணசாமியின் குரல் தமிழக சட்டமன்றத்தில் பல நேரம் ஒலித்தது. சமீபத்தில் நடந்த நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வுக்கு ஆதரவு குரல் கொடுக்கும் ஒரு சில அரசியல் தலைவர்களில் இவரும் ஒருவர். 

  யார் சொன்னா அரசியலில் சினிமா நட்சித்திரங்கள் மட்டும் தான் கலக்குவார்கள் என்று? நாங்களும் கலக்குவோம் என்று சொல்லும் அளவிற்கு மருத்துவர்கள் களம் இறங்கி கலக்கி வருகின்றனர். மருத்துவர்கள் அதிகமா பேசமாட்டார்கள் என்ற கருத்தை இவர்களை பார்த்த பின்பு நாம் மாற்றிக்கொள்வது தான் சரி. 

  • +0
  Share on
  close
  • +0
  Share on
  close
  Share on
  close
  Report an issue
  Authors

  Related Tags

  Latest

  Updates from around the world

  Our Partner Events

  Hustle across India