உங்களுக்குப் பிடித்த விஷயத்தில் ஈடுபட உங்களின் முழு நேர பணி அனுமதிக்கவில்லையா?
அலுவலகத்தில் உங்களது இருக்கையில் அமர்ந்தவாறே பலரைப் போலவே நீங்களும் அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டு உங்களுக்கு அதீத ஆர்வமிருக்கும் செயலில் ஈடுபடுவது குறித்து யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா?
மார்கெட்டிங்கில் பணிபுரியும் உங்களுக்கு ப்ரொஃபஷனல் கிடார் வாசிப்பாளராகவேண்டும் என்கிற கனவு உள்ளதா? வங்கியாளரான உங்களுக்கு ஃபோட்டோகிராஃபர் ஆகவேண்டும் என்கிற கனவு உள்ளதா? நாம் பெரும்பாலும் நமக்கு ஆர்வமுள்ள ஒரு விஷயத்தை ஒதுக்கிவிட்டு நமது செலவுகளை சமாளிப்பதற்காக ஒரு முழு நேர பணியை மேற்கொள்கிறோம். எனினும் உங்களுக்கு மனமிருந்தால் உங்களது முழு நேரப் பணியை மேற்கொண்டவாறே உங்களது ஆர்வத்திலும் ஈடுபடலாம்.
இதற்கு எங்கிருந்து நேரமும் ஆற்றலும் கிடைக்கும் என்று வியக்கிறீர்களா? இதை சாத்தியப்படுத்துவதற்கான நான்கு வழிகள் இதோ உங்களுக்காக:
உங்களது ஆர்வத்தை தக்கவைத்துக்கொள்ளுங்கள்
ஒரு நாள் ப்ரொஃபஷனல் ஃபோட்டோகிராஃபராகவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் ஃபோட்டோகிராஃபிக்கான உங்களது ஆர்வம் தொலைந்து போய்விடாமல் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். வார இறுதி நாட்களில் உங்களுக்கு பிடித்த காட்சிகளை படம் பிடித்து உங்கள் கேமிராவுடன் நேரம் செலவிடுங்கள். வார இறுதி நாட்களை வகுப்பிற்கும் செமினாருக்கும் பதிவுசெய்துகொள்ளுங்கள். இதனால் போட்டோகிராஃபி துறையின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து தெரிந்துகொள்ளமுடியும். ஒத்த சிந்தனையுடைய சமூகத்தினருடன் ஆன்லைனில் இணைந்துகொள்ளுங்கள். இயன்றபோதெல்லாம் அவர்களுடன் ஒருங்கிணைந்துகொள்ளுங்கள். இதனால் உங்களது ஆர்வம் தொய்ந்து போகாமல் தக்கவைத்துக்கொள்ள முடியும்.
உங்களது பணியை வீட்டிற்கு கொண்டு செல்லாதீர்கள்
உங்களது பணி சவால் நிறைந்ததாக இருக்கலாம். அதற்காக பணி நேரம் முடிந்து வீடு திரும்புகையில் அலுவலக பணிகளை வீட்டிற்கு கொண்டு செல்லாதீர்கள். அப்படிச் செய்தால் உங்களது தனிப்பட்ட வாழ்க்கை தொலைந்து போவதுடன் உங்களது ஆர்வத்திலும் ஈடுபட முடியாது. தினமும் ஒரே நேரத்தில் அலுவலகத்திலிருந்து கிளம்பிவிடுங்கள். அப்போதுதான் மாலை கிடார் வகுப்பிற்கோ அல்லது பாலே வகுப்பிற்கோ செல்லமுடியும். இது உங்கள் மனம், உடல், ஆன்மா அனைத்திற்கும் புத்துணர்ச்சியளிக்கும்
பணி, ஆர்வம் இரண்டிலும் ஈடுபட்டிருக்கும் மக்களுடன் ஒருங்கிணைந்துகொள்ளுங்கள்
முழு நேரப்பணியையும் தக்கவைத்துக்கொண்டு ஆர்வத்திலும் சிறப்பாக ஈடுபட்டிருக்கும் நபர்களை கண்டறியுங்கள். அவர்களுடன் உரையாடும்போது அதே போன்ற பாதையை நீங்களும் தேர்ந்தெடுத்தால் எவ்வாறு நிலைமையை சிறப்பாக கையாளமுடியும் என்கிற நுண்ணறிவு கிடைக்கும். மேலும் செயலில் ஈடுபடுவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வும் கிடைக்கும். மிகப்பெரிய வெற்றியாளர்களை பின்பற்ற நினைத்தால் உண்மையில் எட்ட முடியாத எதிர்பார்ப்புகளை உங்களுக்குள் திணிக்க நேரிடலாம். இரண்டு பகுதியிலும் சிறப்பாக சாதிக்க ஒரு வழிகாட்டி உங்களுக்கு உதவலாம்.
அனுபவத்தை பெற்றுக்கொள்ளுங்கள்
உங்களது முழுநேர பணியை விட்டுவிட்டு உங்களது ஆர்வத்தில் ஈடுபடுவதற்கு முன்பு அந்தத் துறையில் அனுபவத்தைப் பெற முயற்சிக்கலாம். இதனால் உங்களுக்கு உண்மையிலேயே அதில் முழு ஈடுபாடு இருக்கிறதா அல்லது அந்த யோசனை மட்டுமே உங்களை கவர்ந்ததா என்பதை தெரிந்துகொள்ளலாம். உதாரணத்திற்கு சில போட்டோகிராஃபி பணிகளை மேற்கொள்ள ஒப்புக்கொள்கிறீர்கள். ஆனால் அதை செய்யும்போது அதில் அதிக விருப்பமில்லாததை உணர்கிறீர்கள். அதற்குள்ளாகவே முழுநேர பணியை நீங்கள் ராஜினாமா செய்திருந்தால்? பணியை ராஜினாமா செய்வதற்கு முன்பு முதலில் விருப்பமான துறையில் கால்பதித்து துறையை புரிந்துகொண்டு அனுபவம் பெறுவது அவசியமாகும். நீங்கள் நினைத்தவாறே உங்களால் அந்தத் துறையை ரசிக்க முடிந்தால் இன்னும் உற்சாகத்துடன் செயலில் இறங்கலாம்.
உங்களது ஆர்வத்தில் ஈடுபட பயம் கொள்ளவேண்டாம். முழு நேர பணியுடன் உங்களது ஆர்வத்தையும் இணைத்துக்கொள்ள மேலே உள்ள குறிப்புகளை கவனத்தில் கொள்ளுங்கள்.
ஆங்கில கட்டுரையாளர் : முனிரா ரங்வாலா