பள்ளிக்கு சுவர் முதல் ஸ்மார்ட் கிளாஸ் வரை; தேசிய நல்லாசிரியர் விருது பெறும் தமிழக ஆசிரியர்!
தனித்துவமான கற்பித்தல் பாணியால் தன்னிகரற்ற ஆசிரியப் பணிக்கு மேலும் பெருமை சேர்த்து தேசிய நல்லாசிரியர் விருதுக்கு சொந்தக்காரர் ஆகி இருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர் திலீப்.
இந்தாண்டு 'தேசிய நல்லாசிரியர் விருது'க்கு நாடு முழுவதிலும் இருந்து 47 ஆசிரியர்களை மத்தியக் கல்வி அமைச்சகம் தேர்வு செய்துள்ளது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்களும் அடங்குவர். ஒருவர் சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சரஸ்வதி. மற்றொருவர் விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திலீப் ராஜு.
தன்னிகரற்ற ஆசிரியப் பணி மற்றும் தனித்துவக் கற்பித்தல் பாணி போன்ற காரணங்களுக்காக இந்த ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அளிக்கப்படுகிறது. வரும் 5ம் தேதி ஆசிரியர் தினத்தையொட்டி நடைபெற உள்ள விழாவில் இந்த விருது தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. கொரோனா பிரச்சினையால் இந்தாண்டு இந்த விருது விழா ஆன்லைனில் நடைபெற உள்ளது.
தேசிய நல்லாசிரியர் விருது என்பது ஆசிரியர்களைப் பொறுத்தவரை ஆஸ்கர் விருது போல் பார்க்கப்படுகிறது. அவர்களது ஆசிரியப் பணிக்குக் கிடைத்த மகுடமாகவே இதனை கருதுகின்றனர். பெரும்பாலும் ஓய்வு பெறும் வயதில் தான் சம்பந்தப்பட்ட ஆசிரியரின் கல்விப் பணியை ஆய்வு செய்து இந்த விருது வழங்கப்படுகிறது.
ஆனால் தனது 40வது வயதில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகி அசத்தி இருக்கிறார் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஆசிரியர் திலீப். கல்விப் பணியில் அவருக்கு இருபதாண்டு அனுபவம் உள்ளது. ஆனால் அந்த இருபது ஆண்டுகளில் அவர் செய்த கல்விப் பணிகள் நாற்பதாண்டுகளுக்குச் சமானம். மாணவர்களின் நலனை மட்டும் கருத்தில் கொள்ளாமல், அவர்களுக்கு கல்வி போதிக்கும் ஏனைய ஆசிரியர்களுக்காகவும் நேரம் காலம் பார்க்காமல் அவர் உழைத்ததன் பலன் தான் இந்த விருது.
அரசு வலியுறுத்தாமலேயே, நல்வழியில், புதுமையான முறையில் தொழில் நுட்பத்தை பயன்படுத்தியதற்காக ஏற்கனவே தேசிய ஐ.சி.டி. நல்லாசிரியர் விருது பெற்றவர்தான் திலீப். இது அவருக்கு மூன்றாவது தேசிய விருது.
தமிழ் யுவர்ஸ்டோரிக்காக திலீப்பை பேட்டி எடுத்தோம். மடை திறந்த வெள்ளம் போல் தனது கல்விப் பயணத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்றாலே தனியார் பள்ளி போல் மாணவர்களின் வளர்ச்சியில் அதிகக் கவனம் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்ற பிம்பம் உள்ளது. ஆனால் உண்மையில் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பணி மகத்தானது. அனைத்து வசதிகளும் கிடைக்கப்பெறும், கல்விக் கட்டணம் செலுத்தக்கூடிய அளவு வருமானம் உள்ள குடும்பத்தில் இருந்து வரும் மாணவனை விட, அடுத்த வேளை சாப்பாட்டுக்கே சத்துணவை நம்பி இருக்கும் மாணவனுக்கு சரியாக கல்வியைக் கொண்டு போய் சேர்ப்பது சாதாரண விசயமல்ல. அப்படிப்பட்ட உயரிய பணியைத் தான் திலீப்பும் செய்து வருகிறார்.
சத்தியமங்கலம் என்றதுமே எல்லோரும் சேலம் அருகில் இருக்கும் ஊரைத் தான் நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் திலீப் பணிபுரியும் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் எனும் கிராமத்தில். சுமார் 840 மாணவர்கள் பயிலும் அப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணி புரிந்து வருகிறார் திலீப்.
சத்தியமங்கலம் தான் திலீப்பின் சொந்த ஊர். அவரது தாத்தா விவசாயியாக இருந்த போதும், 1936ல் அங்கு ஒரு பள்ளியை ஆரம்பித்துள்ளார். விவசாயத்தோடு கல்வியின் அவசியம், குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு கல்வியின் கட்டாயம் போன்றவற்றில் தெளிவான சிந்தனையோடு இருந்துள்ளார் திலீப்பின் தாத்தா. அந்தக் காலத்திலேயே தனது மகன் மற்றும் மகள்களை நன்கு படிக்க வைத்துள்ளார். பியூசி படிக்கவே சென்னை செல்ல வேண்டும் என்றிருந்த காலகட்டத்தில், தன் மகள்களை தனியாக சென்னையில் தங்கி படிக்க வைத்துள்ளார்.
திலீப்பின் பெற்றோரும் ஆசிரியர்கள் தான். கல்வியின் முக்கியத்துவம் புரிந்த ஆசிரியர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த திலீப்பிற்கு சிறுவயதில் இருந்தே பொறியாளராக ஆக வேண்டும் என்ற ஆசை தான் இருந்து வந்துள்ளது. கணினி மீது கொண்ட ஆர்வத்தால் கணினி பொறியாளராக வேலை பார்க்க வேண்டும் என விரும்பி இருக்கிறார்.
ஆனால் பன்னிரண்டாம் வகுப்பில் அவர் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காமல் போகவே, பெற்றோரின் அறிவுறுத்தலால் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து விட்டார். அப்போதும் ஆசிரியர் பயிற்சிக்குப் பின் பொறியியல் படிக்க வேண்டும் என்ற திட்டத்தில் தான் இருந்துள்ளார். ஆனால் காலமோ அவருக்கு வேறு விதமான களத்தை தேர்வு செய்து வைத்திருந்தது. படித்து முடித்ததுமே தனது இருபது வயதில் அரசுப் பள்ளியில் ஆசிரியப் பணி கிடைத்தது.
“முதன்முதலாக, 2000ம் ஆண்டு பெரிய நொளம்பை என்னும் இடத்தில் ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். வீட்டில் இருந்து 60 கி.மீ. தொலைவில் அப்பள்ளி இருந்தது. தினமும் மூன்று பேருந்துகள் மாறி, அங்கிருந்து 3 கி.மீ. நடந்து சென்றால் தான் பள்ளியை அடைய முடியும். ஏரிக் கரையின் மிது நடந்துதான் போக முடியும். இருசக்கர வாகனமோ அல்லது சைக்கிளோ கொண்டு செல்ல முடியாது. ஆனாலும் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் தினமும் வேலைக்குச் சென்றேன்” என்கிறார் திலீப்.
சில ஆண்டுகளுக்குப் பின் அங்கிருந்து தென்பாலை என்ற ஊருக்கு மாறுதல் கிடைத்துள்ளது. அங்கு திலீப்பின் நண்பர்கள் இருவர் ஆசிரியர்களாக இருந்தனர். அவர்களுடன் திலீப்பும் சேர்ந்து கொள்ள, இளைஞர்கள் மூவரும் சேர்ந்து அப்பள்ளியின் தரத்தை உயர்த்த இரவும், பகலும் பாடுபட்டனர்.
அப்போது திலீப்பின் மாதச் சம்பளமே ரூ. 4,500 தான். ஆனால் அதில் இருந்து அவரும், அவரது மற்ற இரு நண்பர்களும் என ஆளுக்கு ரூ.4,000 போட்டு ரூ.12,000ல் தங்களது சொந்தக் காசில் அந்தப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் எழுப்பினர். அதோடு தங்கள் பள்ளிக் குழந்தைகள் படிப்பில் மட்டுமல்லாது விளையாட்டு, நடனம், பாடல் என மற்ற கலைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என முடிவு செய்தனர். எங்கு போட்டிகள் நடந்தாலும் தங்களது பள்ளி மாணவர்களை அதில் கலந்து கொள்ளச் செய்து ஊக்குவித்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் 'தென்பாலை பள்ளியா, அவர்கள் வந்தால் ஒரு பரிசைக்கூட விட்டுச் செல்ல மாட்டார்கள்' என மற்ற பள்ளி ஆசிரியர்கள் போட்டியில் இருந்து தங்களது மாணவர்களை பின்வாங்கச் சொல்கிற அளவிற்கு பெருமையை தங்களது பள்ளிக்கு தேடித்தந்தனர் திலீப்பும் அவரது நண்பர்களும்.
“தென்பாலை பள்ளியின் நான்காம் வகுப்பு மாணவன் விக்னேஷ், தமிழக மின்சார சேமிப்புக் கழகத்தில் நடத்தப்பட்ட 'மின்சார சேமிப்பு' என்னும் செயல்திட்டத்தில் சிறந்த 50 மாணவர்களில் ஒருவனாகத் தேர்வானான். அந்த 50 பேரில் விக்னேஷ் மட்டுமே அரசுப் பள்ளி மாணவன். மற்ற போட்டியாளர்கள் அனைவருமே தனியார் பள்ளி மாணவர்கள். இது மற்ற பள்ளிகள் எங்கள் பள்ளியை ஆச்சர்யத்துடன் திரும்பிப் பார்க்க வைத்தது,” என்றார் திலீப்.
2007-ல் ஆங்கில ஆசிரியராக திலீப்பிற்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது. மேல்பாப்பம்பாடியில் இருந்த அரசு நடுநிலைப்பள்ளியில் 5 வருடங்கள் வேலை பார்த்துள்ளார். ஆசிரியர் பணி ஒருபுறம் சென்று கொண்டிருந்தாலும், கணினி மீது தனக்கிருந்த ஆர்வத்தால் தனியாக கணினி பயிற்சி பெற்றுள்ளார் திலீப்.
பிஜிடிசிஏ (PGDCA) முடித்த அவர், தனது மாணவர்களுக்கும் அடிப்படைக் கணினி பயிற்சி அளிக்க முடிவு செய்தார். பள்ளிப் பாடங்கள் தவிர, கிடைத்த நேரத்தில் தனது சொந்தக் கணினி மூலம் மாணவர்களுக்கு கணினி பயிற்சி அளித்துள்ளார்.
இதனால் ஆசிரியர் திலீப்பின் மடிக்கணினியை தங்களது சொந்தக் கணினியாகப் பாவித்து உரிமையாக அதனைப் பயன்படுத்துகின்றனர் அவரது மாணவர்கள்.
“இப்போதும் தினமும் பள்ளிக்கு லேப்டாப்பை எடுத்துச் செல்வேன். மாணவர்களும் அதை அவர்களது சொந்தக் கணினி போல் உரிமையுடன் பயன்படுத்துவார்கள். நான் அதற்கு தடையேதும் சொல்ல மாட்டேன். இதனாலேயே எனது மாணவர்கள் காணொலி மற்றும் பவர்பாயிண்டுகளைத் தயாரிக்கும் அளவுக்கு வளர்ந்தார்கள். அந்தக் காலத்தில்தான் எங்கள் நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப்பள்ளியாக உயர்வு பெற்றது.”
பி.ஏ. வரலாறு படித்தவர் என்பதால் ஆரம்பத்தில் அனைத்து பாடங்களையும் எடுத்துள்ளார். பின்னர்தான் ஆங்கில ஆசிரியராக மாறியுள்ளார். வரலாறு படித்தவர் என்பதால், சமர்ச்சீர்க் கல்விக்கான 4, 5-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திட்ட ஆசிரியர் குழுவில் பணியாற்றும் வாய்ப்பு திலீப்பிற்கு கிடைத்துள்ளது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, தன்னுடைய வகுப்பறையில் பல புதுமைகளைப் புகுத்தியுள்ளார்.
தனியார் பள்ளி மாணவர்களிடம் இருந்து அரசுப் பள்ளி மாணவர்கள் பின்தங்கி நிற்பது ஆங்கிலத்தில் தான் என்பது திலீப்பிற்கு புரிந்தது. எனவே தனது மாணவர்களுக்கு புதுமையான முறையில் ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கும் சவாலான பணியில் இறங்கினார். இதற்கென தனிப்பட்ட முறையில் அவர் உழைக்கத் தொடங்கினார்.
ஒரு எழுத்து, அதில் தொடங்கும் ஒரு பழத்தின் பெயர், அதில் ஒரு வார்த்தை, ஒரு வாக்கியம், ஒரு பாரா என்று ஒவ்வொரு படியாக ஆங்கிலத்தில் மாணவர்களின் திறமையைத் தூண்டினார். இதன் மூலம் மாணவர்களின் உச்சரிப்பு, எழுத்துத் திறமை, மொழியறிவு, சிந்தனை ஆகியவை கொஞ்சம் கொஞ்சமாக மேம்படத் தொடங்கியது அவருக்கு வெளிப்படையாகத் தெரிந்தது. எனவே இந்த முறையை அனைத்து மாணவர்களுக்கும் கொண்டு செல்ல முடிவு செய்தார்.
அனுராதா பதிப்பகம் நடத்திய போட்டி ஒன்றில் 'கற்றல், கற்பித்தலில் புதிய யுக்திகள்' என்ற பெயரில் இதைக் கட்டுரையாக எழுதி அனுப்பினார் திலீப். மொத்தம் வந்த 7,000 கட்டுரைகளில், முதல் பரிசாக இது தேர்வாகவே, மலாயா பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் வாய்ப்பு திலீப்பிற்கு கிடைத்தது. அங்கு அவரைப் போலவே மாணவர்கள் நலனில் அக்கறைக் கொண்ட மேலும் பல ஆசிரியர்களின் அறிமுகம் கிடைத்தது. இணையம் மூலம் ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தனர். ஒருவரது யோசனை மற்றொருவருக்கு வழிகாட்டியாக மாறத் தொடங்கியது.
இந்த சூழ்நிலையில் தான் 2012ம் ஆண்டு தனது சொந்த ஊரான சத்தியமங்கலத்திலேயே பணி புரியும் வாய்ப்பு திலீப்பிற்கு கிடைத்தது. அங்கு 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில வகுப்பு எடுக்கத் தொடங்கினார். தான் அங்கு பணிக்கு சேர்ந்த முதல் வருடமே 180 மாணவர்களையும் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறச் செய்து, 100 சதவீத தேர்ச்சி கொடுத்தார்.
அடுத்ததாக செல்போன் மூலம் எப்படி பாடங்களை மாணவர்களுக்குக் கொண்டு செல்லலாம் என யோசித்தார். ஆனால் அது கொஞ்சம் கடினமாகவே இருந்துள்ளது. காரணம் அவரது மாணவர்களின் பெற்றோர்கள் பலரிடம் தேவையான செல்போன் வசதி இல்லை. நூற்றுக்கு இருபது குழந்தைகள் மட்டுமே செல்போனில் வீட்டுப்பாடம், வகுப்பு முதலியவற்றை பதிவு செய்து பயன்படுத்தினர்.
ஆனபோதும் ஆசிரியர் திலீப்பின் இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அரசு வலியுறுத்தாமலேயே, நல்வழியில், புதுமையான முறையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதற்காக தேசிய ஐ.சி.டி. நல்லாசிரியர் விருது அவருக்குக் கிடைத்தது. அன்றைய பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில், மறைந்த குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி அந்த விருதை திலீப்புக்கு வழங்கினார்.
அதன் தொடர்ச்சியாக மைக்ரோசாஃப்ட் தனது மென்பொருட்களை கல்வியில் சிறப்பாகப் பயன்படுத்தியதற்காக, 2015ம் ஆண்டு மைக்ரோசாப்ட்டின் புதுமையான, தலைமைத்துவ கல்வியாளர் (MIELA)விருதை வழங்கியது.
சுமார் 840 பேர் கலந்து கொண்ட இந்தப் போட்டியில், ஆசிரியர் திலீப் முதல் பரிசு பெற்றார். விருது வாங்குவதற்காக அமெரிக்கா சென்றார். அங்கு 84 நாடுகளில் இருந்து வந்திருந்த 300 கல்வியாளர்களின் அறிமுகம் அவருக்குக் கிடைத்தது.
கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என முடிவெடுத்த திலீப், விழாவில் கலந்துகொண்ட அனைத்து கல்வியாளர்களையும் இணைத்து, ஃபேஸ்புக்கில் ஒரு பக்கத்தை ஆரம்பித்தார். அவரவர் கற்றலில் புதுமையாக என்ன செய்தாலும், அது உடனுக்குடன் புகைப்படமாகவே, காணொலியாகவோ பதிவேற்றப்படுகிறது. இது மற்ற ஆசிரியர்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாகவும் இருந்து வருகிறது.
தொடர்ந்து திலீப் மாணவர்களின் முன்னேற்றத்தை மட்டுமே கருத்தில் கொண்டு பல முயற்சிகளைச் செய்து வந்துள்ளார். அப்போது ஐசிடி தமிழ்நாடு ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கு, மாவட்டத்துக்கு என்று தனித்தனியாக குழுக்கள் தொடங்கப்பட்டன. ஆசிரியர்களுக்கான தொழில்நுட்ப பயிற்சியும் அதில் அளிக்கப்பட்டது.
dhilipteacher என்ற வலைத்தளத்தில் தான் கற்றுக்கொண்ட, கண்டுபிடித்த தகவல்களைத் தொடர்ந்து பதிவேற்ற ஆரம்பித்தார் திலீப்.
“பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கு பாடமும் எடுக்க வேண்டும், அது போக கிடைத்த ஓய்வு நேரத்தில் இது போன்ற வேலைகளிலும் ஈடுபட வேண்டும் என்பது கொஞ்சம் சிரமமாக இருந்தாலும், மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க, ஆசிரியர்களும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்' என்ற எண்ணம் எனக்குள் உற்சாகத்தை விதைத்துக் கொண்டே இருக்கிறது" என்கிறார் திலீப்.
நம் வட்டார வழக்கு சார்ந்த ஆங்கிலச் சொற்கள், அடிப்படை இலக்கணம், உச்சரிப்பு ஆகியவற்றைத் தொகுத்து 'அன்றாட ஆங்கிலம்' (Everyday English) என்ற பெயரில் புத்தகம் எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் விழுப்புரத்தில் உள்ள அனைத்துப் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டிருக்கிறது.
அது போக எளிய முறையில் ஆங்கிலம் கற்பது தொடர்பான வீடியோக்களையும் யூடியூப்பில் பதிவேற்றம் செய்திருக்கிறார். dhilipteacher என இணையத்தில் தேடினாலே தனது பதிவுகளைப் பெறும்படி செய்து வைத்திருக்கிறார்.
லாக்டவுன் காலத்தில் ஆன்லைன் வகுப்புகள்
மாணவர்கள் மட்டும் என்றில்லை, ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களும் பயன்படுத்திக் கொள்ளும்படி எளிதாக இருக்கிறது இவரது கற்றல் முறைகள். கொரோனா ஊரடங்கு காலத்திலும் ஆன்லைன் வழியாக சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பயனடையும் வகையில் வகுப்புகளை எடுத்துள்ளார் திலீப்.
“இப்போது நாம் பயன்படுத்தும் அன்றாட வேலைகள் அனைத்தும் இணையமயமாக்கப் பட்டுவிட்டது. அதனால் வருங்காலத்தில், பாதுகாக்கப்பட்ட இணைய உலாவலைப் பள்ளியில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே தனது ஆசை,” என்பது என் எதிர்காலத் திட்டம்.
கடந்த சில வருடங்களுக்கு முன் ஊடகம் ஒன்றின் மூலம் கிடைத்த ஒரு லட்ச ரூபாய் பணத்தைக் கொண்டு தங்களது பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் போன்ற அமைப்பை உருவாக்கி இருக்கிறார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அரசே அப்போது தான் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் திட்டத்தை முன்னெடுத்து வரத் திட்டமிட்டிருந்தது. ஆனால் அரசுப் பள்ளிகள் வேறெதிலும் இல்லாத வண்ணம் அழகான அந்த ஆடிட்டோரியத்தை தன் உழைப்பால், திறமையால் உருவாக்கி பாராட்டுகளைப் பெற்றுள்ளார் திலீப்.
திலீப்பின் மனைவியும் ஆசிரியை தான். அவரது தாத்தா ஆரம்பித்த பள்ளியில் தற்போது தலைமை ஆசிரியையாக இருக்கிறார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். அவர்களும் தங்களது ஆரம்பக் கல்வியை அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் தான் படித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது இந்த விருதையும் தனது மாணவர்களுக்கே சமர்ப்பிப்பதாகக் கூறும் திலீப், அவர்கள் தான் தன்னை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறுகிறார். அவர்களின் தேடுதலே தன்னை மேலும் பல விசயங்களைத் தேடிப் பயணிக்க வைத்ததாகக் கூறுகிறார்.
ஆசிரியப் பணியில் பல கசப்பான சம்பவங்களைச் சந்தித்த போதும், எப்போதும் மாணவர்களுக்கு இனிமையான ஆசிரியராகவே இருந்து வருகிறார் திலீப். மாணவர்களை நோக்கி கடுஞ்சொற்களைச் சொல்லக் கூடாது, அவர்களிடம் எப்போதும் இன்முகத்துடனேயே இருக்க வேண்டும் என்பதையே தன் கொள்கையாக வைத்திருக்கிறார்.
சமயங்களில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம், மரியாதை தங்களுக்கு கிடைப்பதில்லை என்ற ஆதங்கம் உள்ள போதும், பலனை எதிர்பாராமல் உழைப்பதே தன் ஆசிரியர் பணிக்கு அழகு என்ற எண்ணத்தில் உறுதியாக உள்ளார். எழுத்தறிவிப்பன் இறைவன். அப்படிப்பட்ட இறைவன் பாராபட்சம் பார்க்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். அதனால்தான் தன் உழைப்பை மென்மேலும் பலரும் பயன்படுத்த என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்து வருகிறார்.
“பொறியியல் படித்து தொழில்நுட்பத்தில் சாதிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமாக இருந்தது. தாத்தாவின் ஆசையால்தான் நான் ஆசிரியராக மாறினேன். என்னுடைய தொழில்நுட்ப ஆர்வத்தைத் தேங்கவிடாமல், பள்ளிக்கல்வியில் அதைப் புகுத்தியதால்தான் வெற்றி என்னைத் தேடி வந்தது,” என தன் வெற்றிக்கான மந்திரத்தைச் சொல்கிறார் திலீப்.
கட்டுரையாளர்: ஜெயசித்ரா