தமிழக வீரர் மாரியப்பனுக்கு ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது’
5 விளையாட்டு வீரர்களுக்கு ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுகள்’ அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி துணைத் தலைவர் ரோஹித் சர்மா, பாராலிம்பிக்ஸ் தங்கப்பதக்க வீரர் மாரியப்பன் தங்கவேலு, ஆசிய விளையாட்டு தங்கப்பதக்க வீராங்கனை வினேஷ் போகட் உள்ளிட்ட 5 விளையாட்டு வீரர்களுக்கு ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுகள்’ அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்கிழமை கூடிய தேசிய விளையாட்டு விருதுகள் குழு, 2020க்கான ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுகள்’, ‘அர்ஜுனா விருதுகள்’ மற்றும் ‘தேசிய விளையாட்டு விருதுகள்’ பெறும் வீரர், வீராங்கனையை தேர்வு செய்து முடிவு செய்ததன் அடிப்படையில் இன்று அப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுகள்’ பெறும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில், பிரபல கிரிக்கெட் வீரரும் இந்திய அணியின் துணைக் கேப்டனும் ஆன ரோஹித் சர்மா இடம் பெற்றுள்ளார். இவர் சச்சின் டெண்டுல்கர், எம் எஸ் தோனி, விராட் கோலி ஆகியோரை அடுத்து 4வதாக இவ்விருதை பெறும் கிரிக்கெட் வீரர் ஆவார்.
அடுத்து தமிழகத்தைச் சேர்ந்த உயரம் தாண்டும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் மாரியப்பன் தங்கவேலு ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா’ விருது பட்டியலில் தேர்வாகியுள்ளார்.
ரியோ-வில் நடைப்பெற்ற ‘பாராலிம்பிக்ஸ்’ போட்டியில், உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் பெற்றார் மாரியப்பன். மாரியப்பன் ‘பாராலிம்பிக்ஸ்’-ல் உயரம் தாண்டுதல் T-42 போட்டியில், 1.86 மீட்டர் உயரத்தை தாண்டி தங்கப்பதக்கத்தை வென்றார்.
ஏழ்மை மற்றும் வறுமை நிலையிலிருந்து வாய்ப்புகளும் நம்பிக்கைகளும் நிறைந்த உலகிற்கு உயரத் தாண்டினார் மாரியப்பன். எப்படிப்பட்ட மோசமான சூழலிலும் ஒரு சாதகமான அம்சம் இருக்கும் என்பதற்கேற்ப 21 வயதில் மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்றார்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பெரியவடாகம்பட்டி என்னும் கிராமத்தில் ஒரு ஏழைக் குடும்பத்தில் ஐந்து குழந்தைகளில் ஒருவராக பிறந்தவர் மாரியப்பன். மாரியப்பனின் தந்தையின் துணையின்றி தாயார் சரோஜா வீட்டின் ஏழ்மை நிலையை சமாளித்து தனியாக குடும்பத்தை நிர்வாகிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.
சரோஜா தலையில் கல் சுமந்து தினக்கூலியாக வேலை செய்தார். பின்னர் பூ மற்றும் காய்கறிகள் விற்றார். ஐந்து வயதிருக்கும்போது மாரியப்பன் பள்ளிக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. பஸ் ஓட்டுநர் மது அருந்திவிட்டு ஓட்டியதால் ஏற்பட்ட இந்த விபத்தில் மாரியப்பனின் முழங்காலுக்கு கீழுள்ள பகுதி நசுங்கியது
“இன்னும் என்னுடைய காலுக்கு ஐந்து வயதுதான் ஆகிறது. அது வளரவும் இல்லை குணமாகவும் இல்லை,” என்று ஒரு பேட்டியில் தெரிவித்தார் மாரியப்பன்.
அவரது தாயார் தனியாக மாரியப்பனின் சிகிச்சைக்காக 3 லட்ச ரூபாய் திரட்டினார். விபத்திற்குப்பின் சிதைந்ததுபோன வலது காலில், கட்டைவிரல் மட்டுமே இருந்தது. அதனுடன் வாழ்ந்துவருகிறார் மாரியப்பன். இருப்பினும் அந்த விரலின் உதவியுடன்தான் பதக்கம் வெல்லும் அளவிற்கு அவரால் உயரம் தாண்டமுடிந்தது என்பதால் அவர் அதைக் ‘கடவுள்’ என்கிறார்.
ரோஹித் சர்மா, மாரியப்பன் தவிர, டேபிள் டென்னிஸ் வீரர் மனிகா பாத்ரா, இந்திய மல்யுத்தம் வீராங்கனை மற்றும் ஆசிய விளையாட்டு தங்கப்பதக்க வீராங்கனை வினேஷ் போகட், மற்றும் இந்திய ஹாக்கி பெண்கள் அணி கேப்டன் ரானி ராம்பால் ஆகியோர் ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா’ விருதுகளுக்கு தேர்வாகியுள்ளனர்.
தகவல் உதவி: ஏஎன்ஐ