'கிரிப்டோகரன்சி முட்டாள்கள் வாங்கும் சொத்து' - பில்கேட்ஸ் கடுமையான தாக்கு!
மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், கிரிப்டோ திட்டங்கள் மதிப்புமிக்க வெளிப்பாடு எதுவும் கொண்டிருக்கவில்லை என்பதால் அதில் முதலீடு செய்யவில்லை என ஏற்கனவே கூறியிருந்தார்.
உலக கோடீஸ்வரர்களில் ஒருவரும், மைக்ரோசாப்ட் இணை நிறுவனருமான பில் கேட்ஸ், என்.எப்.டி (NFTs) உள்ளிட்ட கிரிப்டோ திட்டங்கள் முட்டாள்கள் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட மோசடிகள் என்று கூறியுள்ளார்.
காலநிலை மாற்றத்தை மையமாகக் கொண்டு, டெக்கிரஞ்ச் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த டிஜிட்டல் சொத்துகள் தொடர்பான நிகழ்ச்சியில், கலிபோர்னியாவில் 2015ம் ஆண்டு அவர் உருவாக்கிய பிரேக்த்ரு எனர்ஜி வென்சர்ஸ் நிறுவனத்தின் சார்பாக பேசிய போது பில்கேட்ஸ் இவ்வாறு கூறினார்.
“விஷயம் என்னவென்றால், குரங்குகளின் விலை உயர்ந்த டிஜிட்டல் உருவங்கள் தானே இவ்வுலகை மிகவும் மேம்படுத்தப்போகின்றன...” என்று அவர் கூறினார். இந்த சொத்துகள் குறுகிய கால நோக்கிலோ, நீண்ட கால நோக்கிலோ வாங்குவதற்கில்லை என்றும் கூறினார்.
மகத்தான முட்டாள் கோட்பாடு படி, அதிக விலை கொண்ட சொத்துகளை, இன்னும் பெரிய முட்டாளுக்கு விற்க முடிவதால் அவற்றின் விலை உயர்வதை குறிப்பிடுகிறது. அவற்றின் மதிப்பு மிகவும் மிகைப்படுத்தப்பட்டது என்பது ஒரு பொருட்டல்ல.
பில் கேட்ஸ், கிரிப்டோ நாணயங்களை விமர்சிப்பது இது முதல் முறை அல்ல. மே மாதத்தில், கிரிப்டோ திட்டங்கள் மதிப்புமிக்க வெளிப்பாடு எதுவும் கொண்டிருக்கவில்லை என்பதால் அதில் முதலீடு செய்யவில்லை எனக் கூறியிருந்தார்.
மதிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு கொண்ட சொத்துக்களில் மட்டுமே தான் முதலீடு செய்வதாக கூறியவர் கிரிப்டோ நாணயங்களில் இது இல்லை என்று கூறினார்.
அதற்கு முன்னதாக, கிரிமினல் குழுக்கள், நடவடிக்கைகளில் பிட்காயின் உள்ளிட்ட டிஜிட்டல் சொத்துகள் பங்கு பற்றியும் பேசியிருந்தார்.
எனினும், கோடிஸ்வர தொழிலதிபர்கள், எலான் மஸ்க், மார்க் கியூபன், பாரி சில்பர்ட், மைக்கேல் சேலர் போன்றவர்கள் கிரிப்டோ துறையை ஆதரித்து வருகின்றனர்.
ஆங்கிலத்தில்: பிரதிக்ஷா | தமிழில்: சைபர் சிம்மன்