மக்கும் தன்மை கொண்ட ‘முகக் கவசம் 2.0'- கல்லூரி மாணவரின் அசத்தல் கண்டுபிடிப்பு!
சுற்றுச்சூழலுக்கு உகந்த மாஸ்க்.. காப்புரிமை பெற்ற மாணவர்!
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவரான பி மோகன் ஆதித்யா, வெறும் 15 ரூபாய் செலவாகும் மற்றும் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஒரு மக்கும் முகக் கவசத்தை கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.
மேலும், இதற்காக காப்புரிமையும் பெற்றுள்ளார். “Face Shield 2.0” என்று பெயரிட்டப்பட்டுள்ள இந்த முகக்கவசமானது 175 மைக்ரான் அளவு கொண்ட மறுபயன்பாடு செய்யக்கூடிய பிளாஸ்டிக்கால் ஒரு மெல்லிய அடுக்கு கொண்டு செய்யப்பட்டுள்ளது.
வெளிப்படையாக பார்க்கும் வகையில், அதேநேரம் 3 பிளை நெளி அட்டை அட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் அதிக நீடித்த ஹெட் பேண்டுடன் வருகிறது இந்த ஷீல்டு. ஃபேஸ் ஷீல்டு 2.0 மூக்கு, கண்கள் மற்றும் வாய் ஆகிய உறுப்புகளின் வெளிப்புற பாதுகாப்பாக செயல்படுகிறது.
இதிலிருக்கும் மக்கும் பொருள்களின் பயன்பாடு காரணமாக, முகக் கவசத்தின் விலை ரூ.15 என்று நிர்ணயித்துள்ளார். முகக் கவசம் 2.0 அட்ஜஸ்ட் செய்யக்கூடியது மற்றும் அனைத்து தலை அளவுகளுக்கும் ஏற்ற மாதிரி தயார் செய்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மோகன் ஆதித்யா தனது கண்டுபிடிப்பை கடந்த வருடமே கண்டுபிடித்துவிட்டார். இதையடுத்து ஐபிஆர் (அறிவுசார் சொத்துரிமை) இன் கீழ் தனது முகக் கவச வடிவமைப்பு குறித்து கடந்த ஆண்டு மே மாதம் கொல்கத்தாவில் உள்ள இந்திய காப்புரிமை அலுவலகத்தில் ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்திருந்தார்.
அதன்படி, இந்த ஆண்டு பதிப்புரிமை வழங்கப்பட்டது. முன்னதாக தனது முகக்கவசத்தை கொண்டுபோய் ஆந்திர மாநிலக் கல்வி அமைச்சரும், எம்.பி.யுமான ஸ்ரீ ஆதிமுலாப்பு சுரேஷ் மற்றும் மாநில காவல்துறை அதிகாரிகள், துணை மருத்துவர்கள் மற்றும் கட்டுப்பாட்டு பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள பிற முன்கள பணியாளர்களுக்கு தனது கண்டுபிடிப்பான முகக் கவசம் 2.0-வை விநியோகித்தார்.
தனது கண்டுபிடிப்பு தொடர்பாக பேசியுள்ள மோகன் ஆதித்யா,
“அதிகரித்துவரும் சுற்றுச்சூழல் சீரழிவுக்கு மத்தியில், சுற்றுசூழலுக்கு உகந்த தயாரிப்புகளை உருவாக்கி, சுற்றுச்சூழல் நட்பாக நாம் மாற வேண்டும். எனவே, மீண்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் மற்றும் அட்டைகளிலிருந்து முகக் கவசங்களை உருவாக்க நினைத்தேன். நான் கண்டுபிடித்துள்ள முகக்கவசம் எளிதில் சிதைக்கக்கூடியது.”
உலகளவில் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) வழங்குவதில் பற்றாக்குறையைக் கண்டறிந்த பிறகு, ஒரு யோசனை என் மனதைத் தாக்கியது. கோவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு தரமான உபகரணங்களை உருவாக்குவது குறித்து உடனடியாக ஆராய்ச்சி செய்யத் தொடங்கினேன். சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியில் அனைத்து சந்தேகங்களுக்கும் பதிலளிப்பதன் மூலம் கடினமான காலங்களில் என்னை ஆதரித்தவர்களுக்கு நன்றி கூறுகிறேன், என்றுள்ளார்.
தகவ ல் உதவி - edexlive | தமிழில்: மலையரசு