தங்கைக்கு மறைந்த அப்பாவின் மெழுகு சிலையை பரிசளித்து நெகிழ்ச்சியில் ஆழ்த்திய அண்ணன்!
ஐதராபாத்தில் மணப்பெண்ணான தங்கைக்கு அண்ணன் ஒருவர் மறைந்த தந்தையின் மெழுகு சிலையை பரிசளித்த சம்பவம் இணையத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
ஐதராபாத்தில் மணப்பெண்ணான தங்கைக்கு அண்ணன் ஒருவர் மறைந்த தந்தையின் மெழுகு சிலையை பரிசளித்த சம்பவம் இணையத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
ஒருவரின் மரணம் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு வாழ்நாள் துக்கமாக மாறிவிடுகிறது. பண்டிகை, பிறந்தநாள், வீட்டில் நடக்கும் விசேஷங்களில் எல்லாம் இறந்து போனவர் இல்லையே என நினைத்து ஆதங்கப்படுவதை நாம் அதிகம் பார்த்திருப்போம்.
அதே சமயத்தில் மெழுகு சிலை உருவத்தில் மரணித்தவர்களை தத்ரூபமாக கண்முன் கொண்டு வந்தது போன்ற உருக்கமான செய்திகளும் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது.
இறந்த தந்தையின் மெழுகு சிலை:
திருமணத்தின் போது தாய், தந்தை பிரியா விடை கொடுக்க புகுந்த வீட்டிற்கு ஆனந்த கண்ணீருடன் செல்ல வேண்டும் என்பதை தான் பெண்கள் விரும்புகின்றனர். ஆனால் எல்லாருக்கும் அந்த அதிர்ஷ்டம் கிடைப்பது கிடையாது.
திருமணத்திற்கு முன்பே தாய் அல்லது தந்தையை எதிர்பாராதவிதமாக பரிகொடுக்கும் சோக சம்பவங்களுக்கும் அரங்கேறுவது உண்டு. அப்படி தனது திருமணத்தில் தந்தை இல்லையே என வருத்தப்பட்ட தங்கைக்கு, அண்ணன் ஒருவர் கொடுத்த பரிசு, திருமண மண்டபத்தையே கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
ஐதராபாத்தைச் சேர்ந்த ஹனி குமார் என்ற நபர் தனது சகோதரியின் திருமணத்தில் மறைந்த தந்தையின் மெழுகு சிலையை பரிசாக அளித்துள்ளார். ஆம், மணப்பெண் திருமண மண்டபத்திற்குள் நுழையும் போது ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போய்விட்டார்.
தன் கண்முன்னே தந்தையே நேரில் அமர்ந்திருப்பது போன்ற, தத்ரூபமான அந்த மெழுகு சிலையை பார்த்த மணப்பெண்ணின் கண்களில் ஆனந்த கண்ணீர் ஊற்றெடுக்க ஆரம்பித்தது. மேடையில் இருந்த தந்தையின் மெழுகு சிலையை நோக்கிச் சென்ற மணப்பெண், அதனை இறுக்கமாக அனைத்து அன்பு முத்தமிடும் காட்சிகளும், போட்டோக்களும் சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் - ஜெயா தம்பதிக்கு சாய் என்ற மகளும், ஹனி குமார் என்ற மகனும் உள்ளனர். கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி காலமானார். குடும்பத் தலைவரின் திடீர் மறைவு, மனைவி மற்றும் பிள்ளைகளை மீளா துயரில் ஆழ்த்தியது.
‘கெட்டது நடந்த வீட்டில் உடனே ஒரு நல்ல காரியத்தை நடத்த வேண்டும்’ பெரியவர்கள் சொல்வார்கள். ஏனென்றால் துக்கம் நடந்த வீட்டில் ஏதாவது விசேஷம் நடந்தால் மீண்டும் மகிழ்ச்சி திரும்பும் என்பதால் தான்.
எனவே, சுப்பிரமணியத்தின் மகள் சாய்க்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு, மதன் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. உற்றார், உறவினர்கள் எல்லாம் சூழ்ந்துள்ள திருமண மண்டபத்தில் என் மணக்கோலத்தை கண்டு பூரிக்க அப்பா இல்லையே என மணப்பெண் சாய் மனம் வருந்தினார்.
தங்கையின் மனக்கலக்கத்தை புரிந்து கொண்ட அவரது அண்ணன் ஹனி குமார் அவருக்கு திருமணப் பரிசாக மிகப்பெரிய ஆச்சர்யத்தை கொடுத்துள்ளார். மரணமடைந்த தனது தந்தை சுப்பிரமணியனின் மெழுகுச் சிலையை அச்சில் வார்த்தது போல உருவாக்கி புத்தாடை அணிவித்து தனது தங்கைக்கு திருமண சீராக கொடுத்துள்ளார்.
இணையத்தில் கிளம்பிய சர்ச்சை:
இந்த இன்ப அதிர்ச்சியால் ஒட்டுமொத்த திருமண மண்டபமே திகைத்துப் போன வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இணையத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ 8 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த சம்பவத்தை பலரும் உணர்ச்சிப்பூர்வமாக அணுகினாலும், நெட்டிசன்கள் பலரும் சர்ச்சையான கருத்துக்களை கிளப்பி வருகின்றனர்.
வைரலாகி வரும் வீடியோவிற்கு கீழே பலரும் கடும் கண்டனங்கள், அதிருப்தியுடன் கூடிய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஒரு பயனர்,
"மிகவும் மோசமான யோசனை. இறந்தவர்களை அப்படியே விட்டுவிட வேண்டும். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இப்போது சிலைக்கு என்ன நடக்கும்? அதை ஒரு அறையில் பூட்டி விடுங்கள். பாவம் அவரது மனைவி, இத்தனை நாட்களாக அவர் பிரிவை எண்ணி தேற்றி வந்த மனதை இனி எப்படி சரி செய்வார்? என விமர்சித்துள்ளார்.
மற்றொருவர், "திருமணத்திற்குப் பிறகு அவர்கள் அதை என்ன செய்வார்கள் என்று உண்மையிலேயே ஆர்வமாக உள்ளீர்களா? அதை ஒரு அறையில் பூட்டி வைப்பார்களா? இல்லை அவர் உங்களைப் பார்த்துக் கொள்வதற்காக அதை ஹாலில் வைப்பார்களா? இல்லை மின்சாரம் போய்விட்டால் மெழுகுவர்த்தியாக பயன்படுத்துவார்களா? என சகட்டுமேனிக்கு விமர்சித்துள்ளனர்.
இறந்தவர்களை மறப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். அந்த சோகத்தில் இருந்து மெதுவாக மீண்டும் வரும் நிலையில், லட்சங்களை செலவழித்து அவர்களை மெழுகு சிலை வடிவத்தில் காட்சிப்படுத்துவது ஆறிய ரணங்களை கிளறுவதைப் போல் இருக்கும் என்பதையே நெட்டிசன்கள் பலவகையான கமெண்ட்கள் மூலமாக தெரிவித்து வருகின்றனர்.