‘இரவு நேரங்களில் பணிபுரியும் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும்’ – நிர்மலா சீதாராமன்
2021-22 நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் உரையில் இரவு நேரங்களில் பணி புரியும் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் தேயிலைத் தொழிலாளர்களுக்கு 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்படும் என பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.
“அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் பொருந்தும். இவர்கள் அனைவரும் இ.எஸ்.ஐ திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். அனைத்துத் துறைகளிலும் பெண்கள் இரவு நேரப் பணிகளை தகுந்த பாதுகாப்புடன் மேற்கொள்ளலாம். அதேசமயம் இணக்கம் சார்ந்த நடவடிக்கைகளில் பணியமர்த்துவோர் சுமையும் குறைக்கப்படும்,” என்று தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பு பொருளாதாரத்தைக் கடுமையாக பாதித்துள்ள சூழலில் 2021-22 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிகப்பு நிற புடவையில் வழக்கமான பஹி கட்டா எனப்படும் லெட்ஜர்களுக்கு பதிலாக டேப்லெட் கொண்டு வந்தார். இவர் முன்னெப்போதும் இல்லாத கொரோனா பெருந்தொற்று சூழலை சிறப்பாகக் கையாள அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பாராட்டும் விதமாக தன் உரையைத் தொடங்கினார்.
“இருள் சூழ்ந்திருக்கும்போது ஒளியின் பாடலைக் கண்டறிந்து இசைக்கத் தொடங்கிவிடுகிறது நம்பிக்கை என்னும் பறவை,” என்கிற ரவீந்திரநாத் தாகூர் வரிகளை மேற்கோள் காட்டினார்.
“பொருளாதார மீட்சியை ஊக்குவிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
பட்ஜெட்டின் ஒரு பகுதியாக நிதியமைச்சர் பல்வேறு திட்டங்களை அறிவித்தார். இவற்றில் பெண்களுக்கென பிரத்யேக கவனம் செலுத்தப்படும் திட்டங்கள் ஏதும் அதிகம் இடம்பெறவில்லை. பெண்கள் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் முக்கியப் பங்களிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று வாரகால ஊரடங்கு பிறப்பிக்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்ட 48 மணி நேரத்திற்குள்ளாகவே பிரதமர் நரேந்திர மோடி 2.76 கோடி ரூபாய் மதிப்பில் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தை அறிவித்ததை நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
இத்திட்டத்தின்கீழ் 800 மில்லியன் பேருக்கு இலவச உணவு தானியங்கள், 80 மில்லியன் குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு, 400 மில்லியன் விவசாயிகள், பெண்கள், முதியவர்கள், ஏழைகள் போன்றோருக்கு பண உதவி போன்றவை வழங்கப்பட்டதை நினைவுகூறினார்.
இத்திட்டத்தில் பெண்கள் இணைத்துக்கொள்ளப்பட்டது சரியான முன்னெடுப்பாக்கும்.
ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் மூலம் பெண்கள் கடன் பெறுவதற்கான மார்ஜின் தொகை 25 சதவீத்தில் இருந்து 15 சதவீதமாகக் குறைக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் விவசாயம் சார்ந்த மற்ற நடவடிக்கைகளுக்கும் கடன் வழங்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
அசாம் மற்றும் மேற்கு வங்கம் பகுதியில் உள்ள தேயிலைத் தொழிலாளிகள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்கான 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.
பிரதமரின் சுயசார்பு ஆரோக்கிய திட்டத்திற்கு 64,180 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும் பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ளார்.