‘சிலை’யில் மறைந்திருக்கும் பல கோடி வாய்ப்புகள்: தொழிலாக வடிவமைத்து வெற்றி கண்ட அருண் டைட்டன்!
சிலைகளுக்குள் இருக்கும் தொழில் வாய்ப்பை நன்கு அறிந்து அதனை நிறுவனமாகத் தொடங்கி 2 ஆண்டுகளில் 10000+ சிலைகளை விற்பனை செய்து அசத்தி இருக்கிறார் சென்னை இளைஞர் அருண் டைட்டன்.
’சிலை’ என்றவுடன் நம் நினைவுக்கு வருவது கடவுள் சிலைகள் தான். அதையும் தாண்டி பலவகையான சிலைகளை நாம் பார்த்திருப்போம். சிற்பிகள் மற்றும் கைவினைக் கலைஞர்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் சிலைகள் வடித்துக்கொண்டிருப்பார்கள்.
நமக்குப் பிடித்த சிலையை வாங்கிக்கொள்வோமே தவிர சிலை குறித்தோ அதில் உள்ள பிஸினஸ் வாய்ப்புகள் குறித்தோ நாம் யோசித்திருக்க மாட்டோம். வெளிப்படையாகச் சொன்னால் அதில் ஒரு பிஸினஸுக்கு வாய்ப்பு இருக்கிறது என்பதே நமக்கு புரிந்திருக்காது. ஆனால், சிலைகளில் பல கோடி ரூபாய் வாய்ப்பு இருக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறார் அருண் டைட்டன்.
ஃபைன் ஆர்ட்ஸ் கல்லூரியில் படித்த அருண் டைட்டன், ஜோஹோ நிறுவனத்தில் அனிமேஷன் பிரிவில் பணியாற்றினார். அனிமேஷன் படிக்கும்போதே ஸ்ட்ரீட் போட்டோகிராபியில் கவனம் செலுத்தினார். அதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. இதனைத் தொடர்ந்து திருமண நிகழ்ச்சிகளுக்கு போட்டோ எடுக்கத் தொங்கினார். திருமண போட்டோகிராபியில் வருமானம் கிடைக்கவே வேலையைவிட்டு விட்டு புகைப்படக்கலையை தொழிலாக மாற்றிக் கொண்டார் அருண்.
தனது புகைப்படக்கலை தொழில் பற்றி பகிர்ந்த அருண், சில ஆண்டுகளுக்கு முன்பு கம்போடியாவில் ஸ்ட்ரீட் புகைப்படக் காரர்களுக்காக ஒரு வொர்க் ஷாப் நடந்தது. 1,500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். அதில் 30 நபர்கள் மட்டுமே தேர்வானார்கள். ஆசிய அளவில் பலர் கலந்துகொண்டனர்.
“அங்கு பலருடன் கிடைத்த அனுபவம் பயனுள்ளதாக இருந்தது. போட்டோகிராபியை பற்றி டெக்னிக்கலாக எப்படியும் கற்றுக்கொள்ள முடியும். ஆனால் அனுபவம் வழியாக மட்டுமே கலையை புரிந்துகொள்ள முடியும் என்பதால் ’விதை’ என்னும் அமைப்பை தொடங்கினேன்,” என்றார்.
இதில் பறை இசைக் கலைஞர்கள், சிலை வடிவமைப்பாளர்கள், தியேட்டர் ஆர்டிஸ்ட்கள் என பலரும் தங்களது அனுபவத்தை பகிர்ந்துகொண்டனர். அப்போது கல்லூரியின் பேராசிரியர் சந்துரு விதை அமைப்பில் உரையாடினார். சிலைகள் குறித்து அந்த நிகழ்ச்சியில் உரையாடினார். இதனைத் தொடர்ந்து அவரை சந்திக்கச் சென்றேன். அப்போதும் உரையாடல் சிலைகள் குறித்தே இருந்ததும் முடிவில் ஒரு பெரியார் சிலை கொடுத்து அனுப்பி வைத்தார்.
“இப்படித்தான் சிலைகளுக்கு பெரிய வாய்ப்பு இருக்கிறது எனப் புரிந்து கொண்டு, சிலைகள் குறித்து நிறைய தேடத்தொடங்கினேன் என ‘சிலை’ ’Silaii'நிறுவனத்தின் ஆரம்பக் காலத்தை,” கூறினார் அருண்.
வாய்ப்புகள் என்ன?
சிலை பற்றி ஆராய்ந்தபோது, நாங்கள் எதிர்பார்த்தை விட அதிக வாய்ப்புகள் சிலைகளுக்கு இருந்தது தெரிந்தது. சில சிலைகளை செய்து சென்னை புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்க்கு வைத்தோம். நாங்கள் எதிர்பார்த்தைவிட அதிக அளவுக்கு விற்பனை நடந்தது சொல்லப்போனால் எங்களால் போதுமான அளவுக்கு கொண்டுவரமுடியவில்லை. அதனைத் தொடர்ந்து சிலை உற்பத்தியை அதிகப்படுத்தினோம்.
தற்போது பலவகையான சிலைகளை நேரடியாக மற்றும் இணையம் மூலமும் விற்கிறோம், பூம்புகார், ஒடிசி உள்ளிட்ட கிப்ட் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளிலும் எங்களுடைய சிலைகள் கிடைக்கிறது, என்றார்.
சிலைகளை யார் வாங்குகிறார்கள், எப்எம்சிஜி பொருட்கள் போல விற்பனை இருக்குமா எனக் கேட்டதற்கு விரிவான பதில் அளித்தார் அருண்.
“எம்.எம்.சி.ஜி பொருட்கள் போன்று தொடர்ச்சியான விற்பனை இருக்காது. ஆனால், சிலைகளுக்கான தேவை இருந்துகொண்டே இருக்கும். தற்போது புத்தகங்களை பரிசு வழங்கும் பழக்கம் உருவாகி இருக்கிறது. அதுபோல சிலைகளை பரிசாக வழங்கும் பழக்கமும் உருவாகி வருகிறது. அதனால் ஒருவர் எங்களுடைய சிலைகளை பரிசளிக்கத் தொடங்கினால் தொடர்ந்து ஆர்டர் கொடுத்து வருவார்.”
மேலும், அரசு விழாக்கள், நிகழ்ச்சிகள், பொதுநிகழ்ச்சிகளுக்க்கும் சிலை பரிசளிக்கும் பழக்கமும் உருவாகி வருகிறது. தவிர சிலை கலெக்ஷனில் ஆர்வம் உடையவர்களும் உண்டு என்பதால் தேவைக்கு சிக்கல் இல்லை, உற்பத்திதான் சவாலாக இருக்கிறது. தீடிரென ஒரு பொது நிகழ்ச்சி நடக்கும், 100 சிலைகள் தேவை என்று கேட்பார்கள். அதனால் எங்களுக்கு போதுமான தேவை இருக்கிறது.
யார்? யார் சிலைகள்?
2019ல் தொடங்கப்பட்ட ‘Silaii' அண்ணா, அம்பேத்கர், பெரியார், கருணாநிதி, ஜெயலலிதா, அப்துல் கலாம், திருவள்ளுவர், பாரதியார் என அரசியல் கட்சித் தலைவர்கள், சிந்தனையாளர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் என பலரின் சிலைகளை தத்ரூபமாக தயாரித்துவருகிறார்கள் Silaii குழுவினர். தற்போது தமிழ்நாடு மற்றும் தேசியத் தலைவர்களை தயாரித்துவருகிறோம். அடுத்தகட்டமாக இதர மாநிலங்களில் உள்ள தலைவர்களின் சிலைகளையும் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறோம், என்றார் அருண்.
இதுபோன்ற சிலைகளுக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் தேவை இருக்கிறது. உதாரணத்துக்கு வெளிநாடுகளில் உள்ள அமைப்புகளுக்கு திருவள்ளுவர் சிலைகளை கொடுத்திருக்கிறோம். மேலும் தனிநபர்களை விட நிறுவனங்கள் அமைப்புகளுக்கு இதுபோன்ற சிலைகளுக்கு தேவை அதிகமாகவே இருக்கிறது.
”அதேபோல, தனிநபர்களின் சிலையையும் உருவாக்கிக் கொடுக்கிறோம். பலரின் தந்தை அல்லது தாய் உறவினர்கள் இறந்துவிடுவார்கள். அவர்களின் நினைவாக அவர்களுக்கு சிலை உருவாக்கித் தருகிறோம். ஆனால் மற்ற சிலைகளுடன் ஒப்பிடும்போது இந்த சிலைகளின் விலை கொஞ்சம் அதிகமாக இருக்கும். முதல் சிலை செய்வதற்கு அதிக செலவாகும். அடுத்தடுத்து செய்வதற்கு குறைந்த செலவாகும் என்பதால் பிரபலமானவர்களை விட தனிநபர்களுக்கு கூடுதல் செலவாகும்.”
இதனை அடுத்து முக்கியமான சந்தையாக சினிமா இருக்கிறது. சமீபத்தில் மாஸ்டர் படத்துக்காக சிலைகளை செய்தோம். இதற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. வெளிநாடுகளில் இதுபோல முக்கியமான படங்கள் வரும்போது அந்த படத்தின் சிலைகளையும் வெளியிடுவார்கள். சீனா, அமெரிக்கா நாடுகளில் இது மிகப்பெரிய சந்தை. ஆனால், இந்தியாவில் தற்போதுதான் இதற்கான சந்தை வளர்ந்து வருகிறது. அதனால் மாஸ்டர் தொடர்ந்து மற்ற திரைப்படங்களில் இதே போல நடிகர் சிலைகளை உருவாக்குவதற்கு திட்டமிட்டுவருகிறோம், என்று செயல்பாடுகளை விவரித்தார் அருண் டைட்டன்.
நிதிசார்ந்த தகவல்கள்
தலைவர்கள், சிந்தனையாளர்கள், தனிநபர்கள் மற்றும் சினிமா / விளையாட்டு சிலைகள் என பல வகையான தேவைகள் இருக்கிறது. தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்ய முடியவில்லை. தற்போது ரூ.250 முதல் ரூ.6,00,000 லட்சம் வரை சிலைகளின் அளவிற்கேற்ப வடிவமைக்கப்பட்டு விற்கப்படுவதாக அருண் பகிர்ந்தார்.
“கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 10000+ சிலைகள் சுமார் 1 கோடி அளவுக்கு விற்பனை ஆகியிருக்கிறது. (நிதி திரட்டும் நடவடிக்கையில் இருப்பதால் முழுமையான தொகையை எங்களால் அறிவிக்கமுடியவில்லை). நாங்கள் இன்னும் திட்டமிட்டு போதுமான அளவுக்கு உற்பத்தி மற்றும் மார்க்கெட்டிங்குக்கு கூடுதல் தொகையை ஒதுக்கீடு செய்திருந்தால் இன்னும் மேலும் சில கோடிகள் அளவுக்கு விற்பனையை நாங்கள் எட்டி இருப்போம்,” என்கிறார்.
இந்த உற்பத்தித் திறனை எட்டுவதற்கு நிதி தேவைப்படுகிறது. நிதி இருக்கும் பட்சத்தில் ஆலையை விரிவுபடுத்தலாம். பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த முடியும். சேல்ஸ் மற்றும் மார்கெட்டிங்க்கு அதிகம் செலவு செய்ய முடியும்.
போட்டியாளர்கள் யார் எனக் கேட்டதற்கு, இதுவரை முறைப்படுத்தப்பட்ட போட்டியாளர்கள் என பெரிதாக யாரும் இங்கு இல்லை. ஆங்காங்கே தனித்தனியாக சிலை தயாரிக்கப்படுகிறதே தவிர நிறுவனமாக தயாரிப்பதுபோல தெரியவில்லை. இதனை முறைப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறோம் என அருண் டைட்டன் தெரிவித்தார்.
அனிமேஷனில் தொடங்கி, ஸ்ட்ரீட் போட்டோகிராபி, செலிபிரட்டி போட்டோகிராபி (ஏ.ஆர்.ரஹ்மான், விஜய் அவார்ட்ஸ்), ஈவண்ட் போட்டோகிராபி என இருந்த அருண், தற்போது பெரும்பாலான நேரத்தை ‘சிலை’க்காக செலவிடுகிறார்.
பல தொழில்களுக்கு இங்கு வாய்ப்பு இருக்கிறது என்பது நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் தொழில் தொடங்காமல் இருப்பதற்கு ஆயிரம் காரணங்களை நமக்கு நாமே சொல்லிக்கொள்வோம். ஆனால், இப்படி ஒரு தொழில் இருக்கிறது என்பதே நம் கண்களுக்கு தெரியாது. ஆனால், ’விண்ணைத் தாண்டி வருவாயா’ கார்த்திக் போல, அருண் கண்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு தெரிந்திருக்கிறது...
சரி மக்களிடையே எந்த ‘சிலை’-க்கு அதிக டிமாண்ட் இருக்கிறது என்று அருணிடம் கேட்டதற்கு,
‘தமிழ்நாட்டில்- பெரியார் சிலை; இந்திய அளவில்- அம்பேத்கர் சிலை’ என பதிலளித்தார்.